மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ஆல்ஃபிரட் நோபல்

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

அந்தச் சிறுவனுக்கு அப்போது வயது ஆறு. காணாமல்போன அவனை ஊரே தேடிக்கொண்டிருந்தது.

''உங்கள் பெயர் என்ன?'' - காவலர் அம்மாவைக் கேட்டார். ''கரோலினா... என் மகனின் பெயர் ஆல்ஃபிரட்'' என்ற அம்மாவுக்குக் கண்கள் குளமாயின.

சுட்டி நாயகன் - ஆல்ஃபிரட் நோபல்

அவரது எட்டு குழந்தைகளில் ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் இறந்துபோனதால், ஆல்ஃபிரட் பற்றிய கவலை இடியாக இறங்கியது. அப்பா இமானுவேல் ஒரு பொறியாளர். சுவீடனில்  ஸ்டாக்ஹோம் நகரில் பெரிய பட்டறையில் வேலைபார்த்தார். அவருக்கு தகவல் சொல்ல அண்ணன் சார்லஸ் விரைந்தான். பல மணி நேரம் அவர்கள் பதற்றத்தோடு தேடினார்கள்.

ஆல்ஃபிரட் எங்கே இருந்தான்?

தந்தை இமானுவேல் தனது ஆய்வக வேலையில் சந்தித்த ஒரு நெருக்கடி பற்றியும், வேலை செய்யாத பொறி வெடிமருந்து பற்றியும் தனது மனைவியுடன் பேசியிருந்தார். அதைக் கேட்ட ஆல்ஃபிரட், அந்தப் பிரச்னையின் தீர்வோடு அப்பாவின் பட்டறைக்கு மூன்று மைல் நடந்துசென்று அங்கே விளக்கிக்கொண்டிருந்தான்.

ஏழ்மையில் அவர்கள் தவித்த நாட்களில் பழுதடைந்த ஜட்கா வண்டிகள், எழுதாத பேனா, ஓடாத மோட்டார் எனப் பழுது நீக்கி, அவன் சம்பாதித்தபோது, அவன் வயது 10.

தொழிலில் நஷ்டமாகி, அப்பா குடும்பத்துடன் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ் பெர்க் நகருக்கு சென்றார். அங்கே அப்பாவோடு இரவுபகலாக உழைத்தான் ஆல்ஃபிரட். அப்போது 'பிளைவுட்’ எனும் செயற்கை மரப்பட்டைகளைக் கண்டுபிடித்தான். சட்டப்படி உரிமம் பெறவில்லை என்றாலும், அவனது முதல் கண்டுபிடிப்பு அதுதான். அப்போது அவன் வயது 12.

சுட்டி நாயகன் - ஆல்ஃபிரட் நோபல்

ஓரளவுக்கு வசதி வந்ததும், 'ஸ்டாக்ஹோமின் ஜேக்கப் அப்போலோஜிஸ்டிக்’ என்ற பள்ளியில் ஆல்ஃபிரட் சேர்க்கப்பட்டான். அவன் கல்வி கற்ற ஒரே கல்விக்கூடம் அதுதான். அங்கே 11 வருட பள்ளிப் படிப்பை, மூன்றே வருடங்களில் அவன் முடித்தான். அப்போது அதற்கு வசதியும் இருந்தது.

மேலும், அந்தப் பள்ளியில் யாருமே செய்யாத புதிய சாதனை ஒன்றையும் ஆல்ஃபிரட் நிகழ்த்தி இருந்தான். ஆங்கிலம், ஃப்ரெஞ்சு, ஜெர்மன், ஸ்வீடிஷ் மொழியையும் சமமான வல்லமையுடன் பேச, எழுத, மொழியாக்கம் செய்ய அவனால் முடிந்தது.

17 வயதில் ஆல்ஃபிரட் பாரீஸில் இருந்தான். ஜான் எரிக்ஸன் என்கிற பிரபல விஞ்ஞானியுடன் தனது விருப்பப் பாடமான வேதியியலை சரளமாக விவாதித்த ஆல்ஃபிரட், பிறகு அடுத்த சில நாட்களில் வாயுக்களில் அளவைக் கண்டு சொல்லும் வாயுமானியைக் கண்டுபிடித்து அடுத்த சாதனையை நிகழ்த்தினான்.

தான் கண்டுபிடித்த அந்தக் கருவிக்குக் கிடைத்த ஊதியத்தை, எரிக்ஸனை நேரில் சந்தித்து, தன் பரிசாக வழங்கி அவரை வியக்க வைத்தான். பின்னாட்களில் தான் கண்டுபிடித்த அணுகுண்டுகளால் உலகில் நிகழ்ந்த துயரங்களை நினைத்து வருந்தி, நோபல் பரிசுகளை ஏற்படுத்தி அறிவியல் முன்னேற்றத்துக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்த ஆல்ஃபிரட் நோபல், ஒரு சுட்டி நாயகன்தானே!