Published:Updated:

சிறுவனின் வாயில் 526 பற்கள்... மருத்துவர்களையே மிரள வைத்த மிராக்கிள் ஆபரேஷன்..!

526 பற்கள்

சிறுவனின் வாயில் 526 பற்கள் முளைத்ததெப்படி? - மருத்துவர்கள் விளக்கம்!

Published:Updated:

சிறுவனின் வாயில் 526 பற்கள்... மருத்துவர்களையே மிரள வைத்த மிராக்கிள் ஆபரேஷன்..!

சிறுவனின் வாயில் 526 பற்கள் முளைத்ததெப்படி? - மருத்துவர்கள் விளக்கம்!

526 பற்கள்

மரபு, உடல் சார்ந்த பாதிப்புகள், அதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் ஆகியவற்றின் காரணமாக சிலருக்குப் பற்களின் எண்ணிக்கையில் ஒன்றிரண்டு குறைவாகவோ, அதிகமாகவோ வாய்ப்புள்ளது. அப்படி இருந்தாலும், 'அதிகபட்சம் 36 பற்கள் வரை காணப்படலாம்' என்கின்றனர் மருத்துவர்கள். ஆனால், 'ஏழு வயது ஆண் குழந்தைக்கு 500 பற்களுக்கும் மேல் காணப்பட்டன' என்று சொன்னால் நம்பமுடிகிறதா? 'நம்பித்தான் ஆக வேண்டும்' என்று கூறி மலைக்க வைக்கின்றனர் சென்னை சவிதா பல் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள்.

சிறுவனின் பற்கள்
சிறுவனின் பற்கள்
ANI

சென்னையை அடுத்த புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பிரபுதாஸ். அவரது மூன்றாவது மகனின் வாயிலிருந்துதான் 526 பற்கள் நீக்கப்பட்டுள்ளன. ஏழு வயதுக் குழந்தையின் வாயில் எப்படி இத்தனை பற்கள் இருந்தன என்று தந்தை பிரபுதாஸிடம் கேட்டோம்.

"மூணு வயசுலருந்தே, அவனுடைய கீழ்த் தாடைப் பகுதியில வீக்கம் இருந்துச்சு. நாலு வயசு இருக்கும்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில சேர்த்தோம். அந்த வயசுல குழந்தையால சிகிச்சைக்கு முழுமையா ஒத்துழைக்க முடியல. டாக்டர்களும், மேற்கொண்டு சிகிச்சை கொடுக்கத் தடுமாறிட்டாங்க. அதனால சிகிச்சையை பாதியிலேயே நிறுத்திட்டு வீடு திரும்பிட்டோம்.

குழந்தையோட வாய் உள்புற சதைப்பகுதியை நிறைய தடவை ஆய்வுக்கு உட்படுத்துவாங்க. அப்போல்லாம் வலியால குழந்தை நிறைய கஷ்டப்படுவான்.
சிறுவனின் தந்தை பிரபு

பையன் வளர வளர வீக்கம் தன்னால குறைஞ்சுடும்னு நினைச்சு விட்டுட்டோம். ஆனா, ஒவ்வொரு நாளும் வீக்கம் அதிகரிச்சதே தவிர குறையல. வீக்கம் இருந்தாலும் வலி எதுவும் இல்லை. அதனால நாங்களும் இதை பெரிய விஷயமாவோ பிரச்னையாவோ நினைக்கல. ஆனா பள்ளிக்கூடத்துல அவன் கூட படிக்கிற பசங்க அவனோட முக அமைப்பை கேலி பண்ணியிருக்காங்க. சிலர், 'குரங்கு மாதிரி முகம் இருக்குது'னு சொல்லியிருக்காங்க. சொன்ன குழந்தைக்கும் அந்த வார்த்தையோட வீரியம் முழுசா புரிஞ்சிருக்காது. கேட்ட என் புள்ளைக்கும் புரியல. ஆனா பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடனே எங்ககிட்ட வந்து 'படபட'னு எல்லாத்தையும் சொல்லிட்டான்.

சொல்லி முடிச்சதும், 'ஏன்ப்பா எனக்கு இப்படியிருக்குது'னு கேட்டான். அப்போதான் எனக்குள்ள இருந்த எல்லா மெத்தனத்தையும் தூக்கிப் போட்டுட்டு, குழந்தைக்கு என்ன பிரச்னைனு பார்த்து அதைச் சரி பண்ணணும்னு முடிவெடுத்தேன். சொந்தக்காரர் ஒருத்தரோட உதவியால இந்த மருத்துவமனைக்கு வந்தோம்.

அதிக பற்கள் முளைக்கும் இந்தப் பிரச்னை, மருத்துவத்தில் 'காம்பவுண்ட் கம்போஸைட் ஓடன்டோம்' (Compound Composite Odontome) எனப்படும்.
பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதன்

நிறைய தடவை குழந்தையோட வாய் உள்புற சதைப்பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தினாங்க. அப்போல்லாம் வலியால குழந்தை நிறைய கஷ்டப்படுவான். பண்ணாத ஸ்கேனும் இல்ல, பார்க்காத ஆய்வகமும் இல்லன்னே சொல்லலாம். 'வாயில ஏதோவொரு கட்டி இருக்கு'னுதான் மொதல்ல சொல்லியிருந்தாங்க. அது 'பற்கள்தான்'னு அப்போ தெரியல.

`வாய் முழுக்க நிறைய கட்டிகள் இருக்கிறதால, ஆபரேஷன் முடிவுல தாடைப் பகுதியில 90 சதவிகிதம் எலும்பு முறிவு ஏற்படலாம்'னு சொல்லியிருந்தாங்க. 'பையன் எப்படி சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறாங்கிறதைப் பொறுத்துதான் எல்லாம்'னும் சொல்லியிருந்தாங்க.

மருத்துவர்களுடன் சிறுவன்
மருத்துவர்களுடன் சிறுவன்

அதுக்காக அவனுக்கு சில மனநல ஆலோசனைகள் எல்லாம் கொடுத்தாங்க. அறுவை சிகிச்சையில எந்த எலும்பு முறிவும் ஏற்படாம, வெளியில எந்தத் தழும்பும் இல்லாம அவன் குணமாகிட்டான். 'உலகத்துலயே இதுவரைக்கும் யாருக்கும் இத்தனை பற்கள் இருந்ததில்லை'னு டாக்டருங்க சொன்னாங்க. நம்பவே முடியல..." எனக்கூறி சிலிர்க்கிறார் அவர்.

சிறுவனுக்கு சிகிச்சை அளித்த பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதனிடம் பேசினோம்.

பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதன்
பல் மற்றும் முகச்சீரமைப்பு மருத்துவர் செந்தில்நாதன்

"அதிக பற்கள் முளைக்கும் பிரச்னையை மருத்துவத்தில் 'காம்பவுண்ட் கம்போஸைட் ஓடன்டோம்' (Compound Composite Odontome) என்று கூறுவோம். சிறுவன் சிகிச்சைக்கு வந்தபோது, வாயில் இருப்பது புற்றுநோய்க் கட்டியாக இருக்குமோ என்றுதான் முதலில் சந்தேகப்பட்டோம். அதற்கான பரிசோதனைகளையும் மேற்கொண்டோம். பரிசோதனை முடிவுகள் நெகடிவ்வாக வந்ததால், தொடர்ந்து ரேடியோகிராஃப், சி.டி.ஸ்கேன், எக்ஸ்-ரே, மைக்ரோஸ்கோப் போன்றவற்றின் உதவியுடன் கட்டிகளைக் கண்காணித்தோம். என்ன கட்டி என்பது அப்போதும் தெரியவரவில்லை. ஆனால் 'இனியும் தாமதிக்கக் கூடாது' என்ற எண்ணத்தில், 'புற்றுநோய் இல்லாத கட்டி' என்ற அடிப்படையில் அறுவை சிகிச்சை தொடங்கினோம். ஏறத்தாழ 5 மணி நேரம் அறுவை சிகிச்சை நீடித்தது.

ஏற்கெனவே எக்ஸ்ரே எடுத்திருந்ததால், அளவுக்கதிகமான கட்டிகள் வாயின் உள்ளே இருக்கிறது என நினைத்தோம். அனைத்துக் கட்டிகளையும் ஒரே நேரத்தில் எடுக்கப்போகிறோம் என்பதால், அவற்றை தாங்கிப்பிடித்துக் கொண்டிருந்த தாடைப்பகுதி வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்த்தோம். ஒருவேளை தாடை வலுவிழந்தால் எலும்பு முறிவு ஏற்படும் என்பதால், அதற்கான சிகிச்சைகளுக்கும் தயாராகவே இருந்தோம்.

சிறுவனின் பற்கள்
சிறுவனின் பற்கள்

அறுவை சிகிச்சை செய்து நீக்கிய பிறகும் அது என்னவென்று தெரியவில்லை. அதற்குப் பிறகு வாய் நோய்க்குறியியல் ஆய்வகத்துக்கு அனுப்பிய பிறகுதான் அவை பற்கள் என்றே தெரியவந்தன. மொத்தம் 526 பற்கள் இருந்தன. சிகிச்சைக்குப் பிறகு அதிர்ஷ்டவசமாகச் சிறுவனின் தாடையில் எந்தப் பிரச்னையும் இல்லை. பற்கள் இருந்த பகுதியில், இனி இயல்பாகவே எலும்புகள் உருவாகத்தொடங்கிவிடும்.

நீக்கப்பட்ட பற்கள் அனைத்தும் முறையற்ற அளவுகளில் இருந்தன. முதலில் நீக்கிய பல், 4 * 3.5 செ.மீ. அளவும் 200 கிராம் எடையிலும் இருந்தது. ஒவ்வொரு பல்லும் வெவ்வேறு அளவில் இருந்தது. ஒரு சென்டிமீட்டருக்கும் குறைவான அளவில்கூட பற்கள் இருந்தன. 18 வயது வரை சிறுவன் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருக்கவேண்டும்" என்றார் அவர்.

சிறுவனின் பற்கள்
சிறுவனின் பற்கள்

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவன் இப்போது பூரண நலத்துடன் ஓய்வு எடுத்துவருகிறான். அடுத்த சில வாரங்களில், தன் பள்ளிக்கல்வியை மீண்டும் தொடரவிருக்கிறான்.