மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சர் வீட்டில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். விடுமுறை நாட்கள் என்பதால் விளையாடிவிட்டு சுட்டிகள் டீச்சர் வீட்டிற்கு வந்தார்கள்.

டீச்சர் பேப்பரைப் படித்துக்கொண்டே ''போச்சுடா... சென்னையிலும் மின்சார வெட்டு அமல்படுத்தப் போறாங்களாம்'' என்றபடி அங்கிருந்த சுட்டிகளைப் பார்த்தார்.

''லீவுல ஜாலியா நாள் முழுக்க டி.வி. பார்க்கலாம்னு நினைச்சா... இப்படி பண்றாங்களே?'' என அலுத்துக் கொண்டான் பிரசன்னா.

''டீச்சர் இந்த கரண்ட கட் தொல்லை இல்லாமல் தவிர்க்க முடியாதா?'' என்றாள் சரண்யா.

##~##

''முடியும்.  நாம் அனைவரும் மின்சாரத்தைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. அதேபோல விளக்கு, மின்விசிறி ஆகியவற்றை தேவை இல்லாமல் உபயோகிக்கக்கூடாது. நாம் உபயோகிக்காத மின்சாரமும் ஒரு சேமிப்புதான்'' என்றார் மாயா டீச்சர்.

''டீச்சர், நான் திருநெல்வேலியில் உள்ள எங்க மாமா வீட்டுக்குப் போயிருந்தப்போ அங்கே நிறைய காற்றாலைகளைப் பார்த்தேன். அதே மாதிரி இங்கேயும் நிறைய காற்றாலைகள வைக்கலாமே?'' என்றான் கணேஷ்.

உடனே, ''டீச்சர்... காற்றாலைகள் எப்படி செயல்படுது, எப்படி அதில் இருந்து நமக்கு கரன்ட் கிடைக்கும் என்று கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்றாள் மது.

''சரி, இதைப் பற்றி தெரியவேண்டும் என்றால் முதலில் நாம் லண்டனில்  உள்ள சர்ரே பகுதிக்குச் செல்வோம். அங்குள்ள பழைமை வாய்ந்த காற்றாலைப் பற்றிப் பார்ப்போம்'' என்றபடி, சுருண்டிருந்த மந்திரக் கம்பளத்தை விரியச் செய்தார் மாயா டீச்சர்.

சற்று நேரத்தில் அவர்கள் அங்குப் போய்ச் சேர்ந்ததும், சுட்டிகள் அந்த பழைமை வாய்ந்த காற்றாலையை அதிசயமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். அப்போது டீச்சர் பேச ஆரம்பித்தார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''முதலாம் நூற்றாண்டிலேயே காற்றைப் பயன்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் சக்தியைக்கொண்டு இயந்திரங்களை இயக்ககலாம் என்று கண்டுபிடித்தனர். ஹீரோன் என்ற அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த கிரேக்க கட்டடக்கலை வல்லுனர் காற்றாலையை முதல் முதலில் நிறுவினார். அதன் விசிறிகள் பெரிய துடுப்பு போல இருந்ததால் காற்றாலையை நிலத்தில் பயன் படும் துடுப்பு என்றனர்.

முன் காலத்தில் காற்றாலைகளை மாவு அரைக்கும் இயந்திரங்களை இயக்கவும், நதியில் ஓடும் தண்ணீரை விவசாயத்துக்கு உபயோகிக்கவும் நிறுவினார்கள். பிறகு, நிலத்தின் அடியில் இருக்கும் நீரை மேலேற்றவும் பயன்படுத்தினார்கள். கி.மு. 500-களில் பெர்ஷியாவிலும் காற்றாலைகள் பயன்படுத்தப்பட்டன. நான்காம் நூற்றாண்டின்போது சீனாவிலும் காற்றாலைகள் அமைக்கப்பட்டன. வெகு காலத்துக்குப் பின்பு காற்றாலைகள் அமைத்து மரங்களை அறுக்கத் தொடங்கினர். இதன் மூலம் பெரிய பெரிய மரங்களை எளிதாகத் துண்டுபோட காற்றாலைகள் உதவின. தொழிற்சாலைகள் வளர வளர காற்றாலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.  

விஞ்ஞானிகள், தம் முன்னோடிகள் கண்டு பிடித்ததை மேலும் மேலும் நவீனமாகவும், அதை வெவ்வேறு விதங்களில் எப்படி மேம்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டே இருந்ததால், காற்றாலைகள் தற்போதைய 'விண்ட் டர்பைன்கள்’ வரை வளர்ச்சி அடைந்திருக்கின்றன. இயந்திரங்களை எளிதில் இயக்க பற்சக்கர அமைப்புகள், கிராங்க் ஷாஃப்ட் போன்றவற்றைக் கண்டுபிடித்ததும் காற்றாலை  களில் அவற்றைப் பயன்படுத்தி அதன் இயக்கத்தை எளிமைப்படுத்தினர்.

முதன் முதலாக காற்றாலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யலாம் என்று 1887-ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த பேராசியர் 'ஜேம்ஸ் ப்ளைத்’ கண்டுபிடித்தார். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளில் காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது பரவியது.  

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

காற்றின் வீச்சு அதிகமாக இருக்கும் இடங்களில் இந்தக் காற்றாலைகள் நிறுவப்பட்டன. டென்மார்க் நிறுவனமான குரியன்ட் இதில் முன்னோடியாகத் திகழ்ந்தது'' என்று சொல்லி கொஞ்சம் இடைவெளி விட்டார் மாயா டீச்சர்.

''டீச்சர்... இது எப்படி இயங்குது? காற்றை எப்படி மின்சாரமா மாத்து துன்னு சொல்லுங்க?'' என்று கேட்டாள் மது.

''வாங்க ஒரு டர்பைன் உள்ளேயே போய்ப் பார்க்கலாம்'' என்ற மாயா டீச்சர், சுட்டிகளை குட்டியாக்கி, விண்ட் டர்பைனின் முகப் பகுதிக்குள் அழைத்துச் சென்றார்.

''நம் வீட்டில் பயன்படுத்தும் மின்விசிறியின் மெகா மாடல்தான் இந்தக் காற்றாலைகள். இவை, காற்றை நேரடியாக மின்சாரமா மாற்றாது. காற்றின் வேகத்துக்கு ஏற்ப அதன் விசிறிகள் சுழலுகின்றன. விசிறிகளுடன் (ஙிறீணீபீமீs) இணைக்கப்பட்ட ஜெனரேட்டர்கள் இயக்கம் பெற்று, அவற்றில் உள்ள செப்புக் கம்பிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் காந்தப் பட்டைகள் மின்னூட்டம் பெறுகின்றன. இதன் மூலம் மின்சாரம் உருவாகிறது. நாம் இப்போ நிற்கிறோம் இல்லையா? இந்த இடம்தான் விசிறிகளையும் ஜெனரேட்டரையும் இணைக்கும் ரோடார் ஷாஃப்ட் (ஸிஷீtஷீக்ஷீ sலீணீயீt) பகுதி. நமக்கு வலது பக்கத்தில் பெரிய வளையம் மாதிரி இருக்குதே.. அதுதான் ஜெனரேட்டர். இதில் இருக்கும் காந்தப் பட்டையின் அளவு 20 அடி விட்டம் கொண்டது. இந்த விட்டத்தின் அளவை அதிகமாக்கினால் மின்சார உற்பத்தியும் அதிகமாகும். இந்த விசிறிகள் முன்பு மரத்தாலும் உலோகத்தாலும் உருவாக்கப்பட்டன. இப்போது கார்பன் பைபர் எனப்படும் பிளாஸ்டிக் கலவையால் உருவாக்கப்படுகின்றன. இதனால், விசிறிகள் நீண்ட நாட்களுக்குப் பயன்படும். முன்பெல்லாம் விசிறிகள் பட்டையாக இருக்கும். இப்போது அவை இன்னும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு, அவற்றின் முனைகளை சற்று வளைத்து, காற்றின் போக்கில் இன்னும் எளிதாகச் சுழலும்படி அமைக்கப்பட்டுள்ளன.

காற்றாலையின் முகப் பகுதியில் அமைக்கப் பட்டு இருக்கும் சென்சார் அமைப்பு, காற்றின் போக்கை அறிந்து, அதற்கேற்ப விசிறிகளின் திசையைத் தானாகவே திருப்பும். இதன் மூலம் காற்றோட்டத்தின் போக்குக்கு ஏற்ப காற்றாலை தொடர்ந்து இயங்கும்.

காற்றாலைகள் பொதுவாக கடற்கரைப் பகுதிகளில் நிறுவப்பட்டன. அல்லது மலைத்தொடர்களுக்கு நடுவே பெரும் காற்றோட்டம் உள்ள சமவெளிப் பகுதிகளில் நிறுவப்பட்டு இருக்கின்றன. காற்றாலையின் உயரம் 400 அடிகளுக்கும் மேல் இருக்கும். இவற்றின் விசிறிகளின் நீளம் 300 அடிகளுக்குக் குறையாது'' என்றார் மாயா டீச்சர்.

''நம்ம ஊர்லயும் காற்றாலைகள் இருக்கா டீச்சர்?'' என்றாள் சரசு.

''அதான் திருநெல்வேலிக்குப் போயிருந்தப்போ நிறையப் பார்த்தேன்னு கணேஷ் சொன்னானே. நாம அங்கேயே போய்ப் பார்ப்போம்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை தமிழகத்தின் பக்கம் திருப்பினார்.

கம்பளத்தில் பறந்தபடியே சுட்டிகளிடம் பேச்சு கொடுத்தார் டீச்சர். ''சரி, காற்றாலைகள் மூலமா மின்சாரம் எடுப்பதாலே என்னென்ன நன்மைகள்னு சொல்லுங்க பார்ப்போம்'' என்றார்.

''நான் சொல் றேன்'' என்று ஆரம்பித்தான் பிரசன்னா. ''எரிபொருள் நிறைய செலவு ஏற்படாது, அடுத்து சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது. ரொம்ப பெரிய ஏரியாத் தேவைப்படாது. பொதுவா, ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருப்பதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது'' என்று லிஸ்ட் போட் டான்.

''எல்லாத்துக்கும் மேல முக்கியத் தேவையான காற்று, இயற்கையாகவே இலவசமாக, வற்றாமல் கிடைத்துக்கொண்டே இருக்கும்'' என்று முடித்தார் மாயா டீச்சர்.

''அட ஆமாம் இல்ல...'' என்றாள் மது.

''ஆமாவா? இல்லையா?'' என்று அவளை கேலி செய்தான் பிரசன்னா.

''சரி, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 1990-களில்தான் தமிழ்நாட்டில் காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்தன. அதுவும் ஆரல்வாய் மொழி மற்றும் முப்பந்தல் ஆகிய இடங்களில் கணிசமான அளவு காற்றாலைகள் அமைக்கப் பட்டு இருக்கின்றன. தமிழகத்தில் மொத்தம் பத்து மையங்களில் காற்றாலைகள் அமைக்கப் பட்டு இருக்கின்றன.  

தனியார் நிறுவனங்கள் காற்றாலைகள் மூலம், ஓரிடத்தில் தயாரித்து தரும் மின்சாரத் துக்கு இணையான மின்சாரத்தை, தமிழகத்தின் வேறு ஒரு பகுதியில் பெற்றுக் கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஆரல்வாய் மொழியில் அமைத்துள்ள காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சாரத்தை அந்த நிறுவனம், தமிழ்நாடு அரசு மின்வாரியத்துக்கு அந்த மாவட்டத்தில் கொடுத்து விட்டு, அதற்கு சமமான மின்சாரத்தை சென்னையில் இயங்கும்  தொழிற்சாலைக்கு இங்கு பெற்றுக் கொள்ளலாம்.

இந்தியாவிலேயே காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் நம்ம தமிழ்நாட்டுக்குத் தான் முதல் இடமாம். அதுவும் தவிர, உலகத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

இதுபோன்று காற்றாலைகள் அமைக்க நிறைய முதலீடு தேவை. இருந்தாலும் ஒருமுறை அமைத்து விட்டால் அதன் பிறகு, முறையான பராமரிப்பு மட்டும் செய்து வந்தால், நீண்ட நெடுங்காலத்துக்கு மின்சாரத்தை உருவாக்க முடியும்'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து, ''உலகின் மிகப் பரந்த பெரிய அளவிலான காற்றாலைகள் அமைக்கப்  பட்டு உள்ள இடம், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம். இங்கு ஒரே பகுதியில் மொத்தம் 421 காற்றாலைகள் அமைக்கப் பட்டு உள்ளன. இங்கு தயாரிக்கப்படும்  மின்சாரத்தைக் வைத்து 2,20,0000 வீடுகளுக்கு ஆண்டு முழுவதும் மின்சாரம் அளிக்கப் படுகிறதாம்'' என்று சொல்லி முடித்த மாயா டீச்சர், சுட்டிகளுடன் மந்திரக் கம்பளத்தில் வீடு திரும்பினார்.