மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.கணேசன்

மாயா டீச்சர், வீட்டின் மாடியில் வந்தமர்ந்த பறவைகளுக்கு தானியங்களைப் போட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரம் கும்பலாய் அங்கு வந்து சேர்ந்த சுட்டிகளைப் பார்த்ததும் பறவைகள் சற்று மேலெழுந்தன. மாயா டீச்சர் சுட்டிகளைப் பார்த்து அமைதியாக வரும்படி சைகை செய்தார். பறவைகள் பதற்றம் குறைந்து தங்கள் உணவைக் கொறிக்க ஆரம்பித்தன.

''டீச்சர், இவை நம்மைப் பார்த்து பயப்படாதா?'' என்று கேட்டான் பிரசன்னா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
##~##

''ஏன் பயப்படணும்? நாம் அவற்றுக்கு உதவிதானே செய்கிறோம்'' என்றார் டீச்சர்.

''இந்தப் பறவைகள் எல்லாம் எங்கே இருந்து வருது டீச்சர்?'' என்றாள் மது.

''முட்டையில் இருந்துதான்'' என்று தமாஷ் செய்தான் கணேஷ்.

''டேய்... இதெல்லாம் பழைய கடி. லேட்டஸ்டா யோசி என்ன?'' என்று அவனை மடக்கினாள் சரண்யா.

''இந்த மாதிரி கோடைக்காலங்களில் பறவைகள் உணவுக்காகவும் இனப் பெருக்கத்துக்காகவும் இடம்விட்டு இடம் பெயரும். அப்படி வரும் பறவைகளுக்கு நம்மால் ஆன சின்ன உதவிதான் இது'' என்றார் டீச்சர்.

''ஆமாம் டீச்சர்... என்னோட அப்பாவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது. அதில் 'இந்தக் கோடைக்காலத்தில் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் அகலமான பாத்திரத்தில் தண்ணீரும், தானியங்களும் போட்டு வையுங்கள். தாகத்துடன் உங்கள் வீடு தேடி வரும் பறவை நண்பர்களுக்காக’ அப்படீன்னு இருந்தது. நாங்க அதேபோல் செஞ்சிருக்கோம்'' என்றாள் சரசு பெருமையாக.

''சரி, நம்மைத் தேடி நிறைய வெளிநாட்டு விருந்தாளிகள் வேடந்தாங்கலுக்கு வந்திருக் காங்களாம், அவர்களைப் பார்க்கப் போகலாமா?'' என்று கேட்டார் மாயா டீச்சர்.

எல்லோரும் ஒரே குரலில் உற்சாகமாக ''நாங்க ரெடி!'' என்றார்கள்.

வேடந்தாங்கல் சென்னைக்குப் பக்கம் என்பதால், மந்திரக் கம்பளத் துக்கு வேலை கொடுக்காமல், அதைப் பையில் சுருட்டி வைத்துக்கொண்ட டீச்சர், சுட்டிகளுடன் பஸ்ஸில் பயணமானார்.

வேடந்தாங்கலை பஸ் நெருங்க ஆரம்பித்ததும் பறவைகளின் கீச்சொலி கடல் அலை சத்தம்போல கேட்டுக் கொண்டே இருந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''நாம இப்ப வேடந்தாங்கலை நெருங்கி விட்டோம்'' என்றார் மாயா டீச்சர்.

பஸ்ஸை விட்டு இறங்கிய சுட்டிகள், ஆவலுடன் பறவைகள் சரணாலயத்தினுள் நுழைந்தார்கள். அங்கிருந்த பார்வை மேடையில் எல்லோரும் ஏறி நின்று, பல நாடுகளில் இருந்து வந்திருக்கும் ஆயிரக் கணக்கான பறவைகளைப் பார்த்தனர். எல்லோருடைய முகத்திலும் வியப்பும் மகிழ்ச்சியும் தோன்றியது.

''அம்மாடியோவ்! எத்தனை பறவைகள்... சரி டீச்சர், இதெல்லாம் எங்கேர்ந்து வந்திருக்கு?'' என்று கேட்டாள் மது.

''இந்தப் பறவைகள் எல்லாம் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாட்டைச் சேர்ந்தவை. ஒவ்வொரு ஆண்டும் இதே மாதங்களில் இவை கூட்டமாக இங்கு வந்து சேரும். இரண்டு அல்லது மூன்று மாதங்கள் வரை இங்கேயே தங்கும். பின், தங்கள்  ஊருக்குச் சென்றுவிடும்'' என்ற டீச்சர் தொடர்ந்து... ''இந்தப் பறவைகள் சரணாலயம் இந்தியாவில் இருக்கும் பழமையான சரணாலயங்களில் ஒன்று. இருநூறு ஆண்டு களுக்கும் மேலாக இங்கு பறவைகள் வந்து செல்கின்றன'' என்று முடித்தார்.

மெதுவாக பிரசன்னா... ''டீச்சர், நான் வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே, ஆயிரம் வாட்டி எங்க அம்மா... 'பார்த்துப் போடா. எங்கேயாவது காணாமப் போயிடப் போறே’ என்பாங்க. ஆனா, பறவைங்க  மட்டும் எப்படி ஒவ்வொரு ஆண்டும் வழி தவறாம வந்துட்டுப் போகுது?'' என்றான்.

''பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் பருவ நிலை மாற்றத்துக்கு ஏற்ப, அவை இருக்கும் பகுதியில் வசிக்கமுடியாது. அதனால், அவை அங்கிருந்து இடம் பெயர்கின்றன. பறவைகள் இடப்பெயர்ச்சி செய்வதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்ததில், பொதுவாக பனி மற்றும் உணவுக்காகவே பறவைகள் இடம்பெயருகின்றன என்று ஒப்புக் கொள்கின்றனர். மேலும், இவை வாழும் இடத்தில் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். அதுவும் தவிர, போதுமான உணவும் கிடைக்காது. ஆகவே, இவை கிடைக்கும் இடத்துக்கு இடம்பெயர்கின்றன. சில பறவைகள் தங்கள் இனப்பெருக்கத்துக்கு ஏற்ற சூழ்நிலை இருக்கும் இடங்களுக்குச் செல்கின்றன. அப்படி இவை பல்லாயிரக் கணக்கான கிலோ மீட்டர்கள் பயணிக்கும். இவை ஓவ்வொரு வருடமும் குறிப்பிட்ட காலத்தில்தான் இடப்பெயர்ச்சி செய்யும். அதேபோல, இவை வரவேண்டிய இடமும் காலமும் அவற்றின் உடலியல் கூறுகளிலேயே இயல்பாய் அமைத்திருக்கும். எனவே, அவை தன் முன்னோர்களின் வழிகாட்டுதலில் இயற்கையாவே வந்து செல் கின்றன.'' என்ற டீச்சர், ''இதில் சுவாரசிய மான விஷயம் கலிஃபோர்னியா, கேபிஸ்ட்ரானோ பகுதியைச் சேர்ந்த ஒருவகை தூக்கணாங் குருவி, டைம் டேபிள் போட்ட மாதிரி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 23-ல் இடப்பெயர்ச்சி செய்து, மார்ச்9-ஆம் தேதி தன் இருப் பிடத்துக்குத் திரும்புமாம். இதை பல்வேறு ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அப்போது அங்கிருந்து பறக்க எத்தனித்த பறவையைப் பார்த்த பிரசன்னா, ''டீச்சர் உங்க மந்திரக் கம்பளத்தின் சக்தியால என்னையும் பறக்க வைங்க. நானும் அதோட பறந்துட்டு வரேன்'' என்றான்.

பிரசன்னா சொன்ன பறவையை உற்றுப் பார்த்த டீச்சர், தனக்குள் சிரித்தபடியே அவனைப் பறக்க வைத்தார். பிரசன்னாவும் பறவையைத் தொடர்ந்து பறக்க ஆரம்பித்தான்.

''ஏன் டீச்சர் அந்தப் பறவையைப் பார்த்துட்டு சிரிச்சீங்க?'' என்று கேட்டாள் சரண்யா.

''பின்னே, இப்போ பறக்கப் போயிருக்கானே, அந்தப் பறவையோட பேர் 'அமெரிக்கன் கோல்டன் போல்வார்.’ இது பொதுவா அட்லாண்டிக் மற்றும் கரீபியன் கடல் பகுதியில் காணப்படும். அதிக தூரம் இடப் பெயர்ச்சி செய்யும் பறவைகளில் முக்கியமானது. இருபத்தி ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் வரை இவை இடப்பெயர்ச்சி செய்யும். அப்படி பறக்கும்போது கடலுக்கு மேலேயே பறக்கும். தவிர, ஓய்வே எடுக்காமல், எங்கேயும் நிற்காமல்  ஒரே முறையில் 2400 கிலோ மீட்டர்கள் தூரம் வரைக்கும் இவை பறக்கும். உணவுக்காகவோ, தண்ணீருக்கா கவோ இவை எங்கும் நிற்காது. அந்தப் பறவையோடு பறக்க ஆசைப்பட்டானே என்பதற்குத்தான் சிரிச்சேன்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரும் சுட்டிகளும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தபோது களைப்புடன் வந்து இறங்கினான் பிரசன்னா. ''டீச்சர்... நீங்க அப்ப சிரிச்சப்பவே நான் உஷாராகி இருந்திருக்கணும். அது பறக்குது... பறக்குது... பறந்துக்கிட்டே இருக்கு. எங்கேயும் நிக்கிறா மாதிரி தெரியலை. அதான் நைசா திரும்பி வந்துட்டேன்'' என்றான்.

சோகமான பிரசன்னாவை சுட்டிகள், ''நீ ஒண்ணும் சாதாரணப் பறவையோடு பறக்கல'' என்று கோல்டன் போலவரைப் பற்றி டீச்சர் சொன்னதைச் சொல்லி அவனை உற்சாகப்படுத்தினார்கள்.

''இது என்ன பிரமாதம் 'ஆர்க்டிக் டெர்ன்’ என்ற சிறிய கடல் பறவை ஆர்க்டிக்கிலிருந்து கிளம்பி அண்டார்க்டிகா வந்து திரும்புமாம். இப்படி இவை முப்பத்தி ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் வரை இடப்பெயர்ச்சி செய்யுமாம்'' என்றார் டீச்சர்.    

வீடு திரும்பலாமா என யோசித்தபடியே மாயா டீச்சர் சுட்டிகளுடன் நடந்து கொண்டிருந்தார். அப்போது வானத்தில் பறவைகள் கூட்டமாகப் பறப்பதைப் பார்த்த மது, தன் கை நகங்களை ஒன்றோடு ஒன்று உரசிவிட்டு நகங்களில் பூ விழுந்திருக்கிறதா எனப் பார்த்தாள். அப்போது மாயா டீச்சர் பறவைகளைக் காட்டி, ''இவை இப்படி கூட்டமாக 'க்ஷி’ ஷேப்பில் பறக்க என்ன காரணம் தெரியுமா?'' என்றார்.

''தொலைஞ்சுடாம இருக்கத்தானே டீச்சர்?'' என்றான் கணேஷ்.

''என்னடா வந்ததில் இருந்து பேசவே இல்லையேனு பார்த்தேன்'' என்றாள் சரசு.

''நீங்க ஸ்கூல் பிரேயருக்கு, வேற க்ளாஸ் ரூமுக்குப் போறப்ப எல்லாம் எப்படி போவீங்க? உயரப்படி வரிசையா நின்னுதானே போவீங்க? அதுபோல பறவைகள் இப்படி போகக் காரணம் ஒண்ணை ஒண்ணு மறைக்காமப் பறக்கறத்துக்காகவாம். அதுவும் தவிர, முன்னால் பறக்கும் பறவையினால் காற்றில் ஏற்படும் சலனம், பின்னால் வரும் பறவைகளுக்கு பறப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கிறதாம். அதனால், முன்னால் பறக்கும் பறவை கொஞ்ச நேரம் பறந்துவிட்டு பின்னால் வந்து விடுமாம். இப்படியே பறவைகள் மாறி மாறி அலுப்பில்லாமல் நீண்ட தூரம் பறக்குமாம். இதை, நீண்ட காலம் ஆராய்ச்சி செய்து நிரூபித்து இருக்கிறார்கள்!'' என்றார் மாயா டீச்சர்.

''இனிமே பறவைகள் பறப்பதைப் பார்த்தால், அதில் இருக்கும் விஞ்ஞான உண்மைகளை நினைத்துக்கொள்வேன் டீச்சர்'' என்றாள் மது.

மாயா டீச்சரும் சுட்டிகளும் வீட்டுக்கு பஸ்ஸில் ஏறிப் பறந்தார்கள்.