எம்.ராதாகிருஷ்ணன் படங்கள் : எஸ்.தேவராஜன்
##~## |
''நம்மைச் சுற்றி இருக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டால்தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். இதை, வளரும் பருவத்திலேயே ஒவ்வொரு மாணவரின் மனதிலும் பதியச்செய்து விட்டால், வருங்காலத்தில் நம் நாடு ஆரோக்கியத்தில் சிறந்து விளங்கும்'' என்கிறார் பழனிவேல்.
சிதம்பரத்துக்கு அருகே உள்ள கவரப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியராக பழனிவேல் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில், இவர் செய்திருக்கும் பணிகள் ஏராளம்.
வகுப்பு அறையைத் தூய்மையாக வைத்துக்கொள்வதை வலியுறுத்தும் வகையில் சுழற்கோப்பை ஒன்றை ஏற்படுத்தியிருக்கிறார். அதன்படி ஒவ்வொரு மாதமும் தூய்மையான வகுப்பு அறை ஒன்றைத் தேர்வுசெய்கிறார். அந்த வகுப்பு மாணவர்களுக்கு சுழற்கோப்பையை வழங்கி, அதைப் புகைப்படமும் எடுத்து, அறிவிப்புப் பலகையில் ஒட்டுகிறார்.
''இதைப் பார்க்கும் மாணவர்களுக்கு 'அடுத்த முறை நமது வகுப்பின் புகைப்படம் வரவேண்டும்’ என்ற ஆர்வம் ஏற்படுகிறது. அதனால், வகுப்பு அறையைத் தூய்மையாக வெச்சுக்கிறாங்க'' என்கிறார் பழனிவேல்.
வகுப்பறை தூய்மையாக இருந்தால் போதுமா? ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்துக்கொண்டால்தானே, அவர்களுக்கு இதுபோன்ற விஷயங்கள் மீது அக்கறை ஏற்படும்.

''இந்தப் பள்ளியில் தையல் மெஷின் ஒன்று இருக்கு. எங்களோட சட்டையில் தையல் பிரிந்து இருந்தாலோ, பொத்தான் இல்லாமல் இருந்தாலோ, அதைக் கவனிச்சு இங்கேயே தைத்துக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்கார். எங்களோட சைக்கிள் பங்சர் ஆனாலும் கவலை இல்லை. அதுக்கும் இங்கேயே காற்றடிக்கும் பம்ப், பங்சர் ஒட்டுறதுக்கான பேஸ்ட் எல்லாமே இருக்கு'' என்கிறார்கள் மாணவர்கள்.
மாணவிகளுக்கு நாப்கின்கள் வழங்கவும் ஆசிரியைகள் மூலம் ஏற்பாடு செய்திருக்கிறார். ''இப்படி எங்கள் மீது அக்கறை காட்டும் தலைமை ஆசிரியருக்கு நன்றி செலுத்தணும். அதுக்கு ஒரே வழி நல்லாப் படிச்சு, சிறந்த மதிப்பெண்கள் எடுத்து, அவருக்குப் பெருமை சேர்க்கணும்னு நினைக்கிறோம்'' என்கிறார்கள் மாணவிகள்.
படிப்பிலும் மாணவர்களை உற்சாகப்படுத்த வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கிறார்.
''மாணவர்களின் படிப்பு பற்றி, பெற்றோர்களிடம் ஒவ்வொரு வாரமும் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறோம். கடந்த ஆண்டில், முதல் மதிப்பெண் எடுத்த மாணவரின் புகைப்படம், இந்த ஆண்டு மாணவர்களின் ரேங்க் கார்டுகளில் ஒட்டியிருப்போம். அதைப் பார்த்து, மற்ற மாணவர்களுக்கும் முதல் மதிப்பெண் எடுக்கும் ஆர்வம் ஏற்படுகிறது'' என்கிறார் பழனிவேல்.
மேலும் பள்ளிக்கு இணையதள முகவரி ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார். ''நம் நாட்டின் எதிர்காலம் மாணவர்களின் கையில்தான் உள்ளது. எனவே, அவர்களுக்கான அடித்தளம் சரியாக அமைந்தால்தான் 'நாட்டின் வளர்ச்சி’ என்ற கட்டடம் கம்பீரமாக நிற்கும்'' என்கிறார் பழனிவேல்.