மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

அந்தச் சிறுவனை 'ஸ்டீவ்’ என்று அழைத்தார்கள். அவனைச் சுற்றி துயரக் கதை ஒன்று இருந்ததை, அவனது தாய் க்ளாரா கரோல் மட்டுமே அறிவார். உண்மையில் க்ளாரா, அவனது பெற்ற தாய் அல்ல. ஸ்டீவ், பெற்றோரால் கைவிடப்பட்ட ஒரு குழந்தை. கிளாராவும் அவரது கணவர் பால் ஜாப்ஸ்ஸும் ஸ்டீவைத் தத்தெடுத்து வளர்த்தனர். ஸ்டீவ், மிகுந்த அறிவுடன் துறுதுறுவென இருந்தான்.

பால் ஜாப்ஸ் ஒரு தச்சர். அதே சமயம், கருவி பழுது நீக்கும் மெக்கானிக்காகவும் இருந்தார். ஸ்டீவ், நான்கு வயதிலேயே அப்பாவின் பட்டறைக்கு சென்று அங்கே வேடிக்கை பார்ப்பான். பழைய ரேடியோவைக் கழற்றி பார்ப்பது, புதிதாக சந்தையில் அறிமுகமான டி.வி. பெட்டியைப் பற்றி அறிந்துகொள்வது என எல்லா எலெக்ட்ரானிக் வேலைகளையும் பழகினான். எழுதுவது, படிப்பது... என அந்தச் சின்ன வயதிலேயே அவனால் பெரியவர்களைப் போலவே வேகமாக செய்ய முடிந்தது.

ஆர்மீனியாவில் இருந்து கலிஃபோர்னியாவுக்கு அவனது குடும்பம் குடிபெயர்ந்தபோது ஸ்டீவுக்கு வயது ஐந்து. அங்கிருந்த 'ஹோம்ஸ்டெட்’ பள்ளியில் அவனைச் சேர்த்தார்கள். அங்கே எந்த ஆசிரியர் பாடம் நடத்த வந்தாலும் அந்தப் பாடம் அவனுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது.

அதனால், ஆசிரியர்கள் அவனது அம்மா, க்ளாரவை வரவழைத்து விஷயத்தைச் சொன்னார்கள். ஸ்டீவுக்குச் சிறப்புத் தேர்வு நடத்தினார்கள். ஒன்றாம் வகுப்பில் படித்துவந்த ஸ்டீவ், நான்காம் வகுப்புப் பாடக் கேள்விகளுக்கும் எளிதாகப் பதில் அளித்தான். இதனால், அவனை உடனடியாக நான்காம் வகுப்பில் சேர்த்துக்கொள்ள பள்ளி நிர்வாகம் ஒப்புக்கொண்டது.

ஆனால், ஸ்டீவ் அப்படி வகுப்புத் தாவிப் படிக்க மறுத்தான். இருந்தாலும், அரையாண்டுத் தேர்வு முடிந்ததுமே அவனை இரண்டாம் வகுப்புக்கு மாற்றினார்கள்.

சுட்டி நாயகன் - ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவுக்கு ஒரு விசித்திரப் பழக்கம் இருந்தது. எந்த இடத்துக்குச் சென்றாலும் நடந்தே செல்வான்.  ஒருமுறை, தான் புதிதாகக் கண்டுபிடித்த தானியங்கி கை விசிறியை செயல்படுத்திக் காட்டுவதற்காக மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருந்த நண்பன் வீடு வரை நடந்தே சென்றான் ஸ்டீவ். அப்போது அவன் படித்துக்கொண்டிருந்தது ஆறாம் வகுப்பு.

விரைவிலேயே ஒன்றிரண்டு மின்னணு சாதனங்களைத் தயார்செய்யும் அளவுக்கு ஸ்டீவ் திறமைசாலியாக இருந்தான். 'வோஸ்னாய்க்’ என்கிற தனது நண்பனுடன்  சேர்ந்து ஒரு குட்டி கம்ப்யூட்டரை வடிவமைத்தபோது, ஸ்டீவ் ஒன்பதாம் வகுப்பு மாணவன்.

அப்போதெல்லாம் சாப்பிட கையில் பணம் இருக்காது. அவ்வப்போது சோடா மட்டுமே குடித்து பசியை சமாளிப்பான். அதன் காரணமாக அவன் கண்டுபிடித்த குட்டி கம்ப்யூட்டருக்கு 'க்ரீம் சோடா கம்ப்யூட்டர்’ என்றே பெயர் வைத்தான்.

விரைவிலேயே தன் அம்மாவின் நிறுவனத்துக்கு கம்ப்யூட்டர்கள் உருவாக்கிக் கொடுக்கும் அளவுக்கு  நிபுணத்துவம் பெற்றான். நண்பர்களுடன் சேர்ந்து  'ஆப்பிள்’ என்ற கணினி நிறுவனத்தைத் தொடங்கினான். பத்தே ஆண்டுகளில் 4,000 பேர் வேலை செய்யும் அளவுக்கு அந்த நிறுவனம் வளர்ந்தது.

ஐ-பாட், பாக்கெட் கம்ப்யூட்டர்... என பல்வேறு சாதனங்களை உருவாக்கி, உலகையே பிரமிப்புடன் பார்க்கவைத்த 'சுட்டி நாயகன்’ ஸ்டீவ், 'உலக நாயகன்’ ஸ்டீவ் ஜாப்ஸாக உயர்ந்தார்.