மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

கே.யுவராஜன் பிள்ளை

##~##

'டீச்சர்’, என்று அழைத்தவாறு மொட்டை மாடிக்கு வந்த கயலை 'உஷ்’ என அடக்கி, ஓர் இடத்தைக் காட்டினார் மாயா டீச்சர். அங்கே அணில் ஒன்று, டீச்சர் போட்ட வேர்க்கடலையைத் தின்றுகொண்டிருந்தது.

தனது இரண்டு முன்னங்கால்களால் வேர்க்கடலையை எடுப்பதும், தலையை உயர்த்தி அப்படியும் இப்படியுமாகப் பார்ப்பதும், பிறகு கடலையைக் கொறிப்பதும் பார்க்கவே அழகாக இருந்தது. சில நிமிடங்களில் அத்தனை வேர்க்கடலைகளையும் தின்றுவிட்டு, தாவிக் குதித்து ஓடியது.

''டேய் அருண், வேர்க்கடலையை வேகமாக் காலி பண்றதுல நீதான் எக்ஸ்பர்ட்னு நினைச்சேன். இந்த அணில் உன்னை ஓவர்டேக் பண்ணிருச்சுடா'' என்றான் கதிர்.

''பாலூட்டிகளில் 'கொறிணி’ (Rodent) என்ற பிரிவைச் சேர்ந்தது அணில். இந்தக் கொறிணிகளில்... உலகம் முழுக்க 2,000 வகைகள் இருக்கின்றன. பாலூட்டிப் பிரிவுகளில் அதிக வகைகள் இருப்பது கொறிணிகள்தான்'' என்றார் டீச்சர்.

''எலியும் கொறிணிதானே டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஆமாம். உருவில் சிறிதாக இருந்தாலும் பற்கள்தான் இவற்றின் பலமான ஆயுதம். நம்ம வீடுகளில் புத்தகம், மரச் சாமான்களை எல்லாம் எலிகள் கடிச்சு சேதம் பண்றதைப் பார்த்திருப்பீங்க. 'நீர் எலி’ என்று ஒரு வகை இருக்கு. இது, நீர்நிலைக்கு அருகில் இருக்கும் மரங்களைப் பற்களால் கடிச்சே சாய்ச்சுரும்'' என்றார் டீச்சர்.

''நீர் எலியா... அது எங்கே இருக்கு?'' என்று கேட்டான் அருண்.

''தென் அமெரிக்காவிலும் ஐரோப்பியப் பகுதிகளிலும் இருக்கும். அது செய்யும் வேலையை நேரில் பார்த்தால், அசந்துருவீங்க!'' என்றார் டீச்சர்.

''அப்படின்னா, மந்திரக் கம்பளத்துக்கு வேலை வந்தாச்சு. நான் போய் எடுத்து வர்றேன்'' என்ற கயல், அணிலைப் போலவே தாவித் தாவி ஓடினாள்.

சில நிமிடங்களில் மந்திரக் கம்பளத்துடன் வந்தாள். ''வெளிநாட்டு விருந்தாளிகளைப் பார்க்கிறதுக்கு முன்னாடி, நம் மண்ணின் மைந்தர்கள் சிலரைப் பார்த்துடலாம்'' என்றார் டீச்சர்.

அவர்கள், மந்திரக் கம்பளத்தில் பறக்க ஆரம்பித்தார்கள். டீச்சர் தொடர்ந்தார். ''கொறிணிகளின் ஒரு வகைக்கு, நம்ம ஊரின் பெயர் இருக்கு. அதுதான், மெட்ராஸ் ட்ரீஷ்ரிவ் (Madras treeshrew). தமிழில், 'மூங்கில் அணத்தான்’ என்பார்கள். இதன் அறிவியல் பெயர், 'அணத்தானா எல்லியாட்டி’ (Anathana Ellioti). இதில் 'அணத்தானா’ என்பது தமிழ்ச் சொல்'' என்றார் டீச்சர்.

''அப்போ எலியாட்டி?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''1820-களில் சென்னையில் பணியாற்றிய ஆங்கிலேய அதிகாரி, 'சர் வால்டர் எல்லியாட்’ என்பவரின் நினைவாக, 'எல்லியாட்’ சேர்க்கப்பட்டது. இந்த அணாத்தான்கள், சேர்வராயன் மலைப் பகுதிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் காணப்படும். பூச்சிகள் மற்றும் விதைகள்தான் இவற்றின் முக்கியமான உணவு. பார்க்க அணில் மாதியே இருந்தாலும் அணத்தான்களுக்கு சில வேறுபாடுகள் உள்ளன'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், சேர்வராயன் மலைப் பகுதியில் ஒரு மரத்தின் அருகே இறங்கியது. அருகே இருந்த பாறை மீது, மூங்கில் அணத்தான்கள் சில காணப்பட்டன. அணிலைவிட ஒல்லியான தோற்றம். மூஞ்சூறு போன்ற நீளமான முகம். வாலைத் தூக்கியபடி அழகாக நடந்தன. மரத்தின் மீது தாவிய அணத்தான் ஒன்று, அப்படியே தலைகீழாகச் சறுக்க ஆரம்பித்தது.

''அட, சர்க்கஸ் எல்லாம் செய்யுது!'' என்று சிரித்தாள் ஷாலினி.

''இவற்றின் தொண்டையில் ஒரு வகை வாசனை சுரப்பி இருக்கு. மரக் கிளைகளில் இப்படிச் சறுக்கும்போது, அந்த வாசனையை வெளிப்படுத்தும். அதன் இணையைக் கண்டுபிடிக்க இந்த வாசனை உதவுகிறதாம். சில கொறிணி வகைகளுக்குக் காணப்படும் அதிகமான வாசனைத் தன்மையே, சில நேரம் அவற்றுக்கு ஆபத்தாகவும் முடியும். அதில் ஒன்றுதான் நாம முன்பு பேசிய 'பீவெர்’ (Beaver) என்கிற நீர் எலி'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மந்திரக் கம்பளம், அவர்களைத் தென் அமெரிக்காவின் காட்டுப் பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் இறக்கியது. அங்கே, அவர்கள் கண்ட காட்சி வியக்கவைத்தது. ஆற்றின் ஒரு பகுதியில் மரத் துண்டுகளால் பாலம் போல அமைத்து, இடையிடையே கூண்டுகளைப் போல அமைந்திருந்தன.

''இவைதான் நீர் எலிகளின் வீடுகள். மரங்களின் அடிப் பகுதியில் தனது பற்களால் அரித்துச்  சாய்க்கும். அதைத் துண்டுகளாக்கி, கைதேர்ந்த தச்சர்களைப் போல  வீடுகளை உருவாக்கித் தங்கும். வீடு கட்டுவதில் இதன் சுறுசுறுப்பைப் பார்த்தால், அவ்வளவு ஆச்சர்யமாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

'' டீச்சர், 'ஓப்பன் சீஸன்’ என்ற அனிமேஷன் படத்தில் இந்த மாதிரி பார்த்திருக்கேன். அதை ஏதோ, 'கற்பனை’னு நினைச்சேன்'' என்று வியந்தான் கதிர்.

''பீவெரை, 'அரை நீர்வாழ்வி’ (Semi-Aquaticr) என்பார்கள். தனது வாழ்நாள் முழுவதும் வளரும் பிராணி இந்த நீர் எலி. முதிர்ந்த நீர் எலிகள் 25 கிலோ எடை இருக்கும். இது, கனடாவின் தேசிய விலங்கு. ஆரம்பத்தில், இதன் உரோமத்துக்காகவும், வாசனைத் திரவியம் செய்யவும் நிறைய வேட்டையாடப்பட்டு, அழியும் நிலைக்குப் போயிருச்சு. அதன் பிறகு அரசும் தன்னார்வ நிறுவனங்களும் மேற்கொண்ட முயற்சியினால், இதன் எண்ணிக்கை பெருகியிருக்கு'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களைச் சுமந்துகொண்டு மேலே எழும்பியது. ''அடுத்து நாம பார்க்கப்போகிற கொறிணி, கினியா பிக் (Guinea pig). இதை 'கினியா எலி’ என்றும் சொல்வார்கள். இதை நீங்க நிறைய ஆங்கிலப் படங்களில் பார்த்திருப்பீங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''ஆமாம். வால்ட் டிஸ்னியின் 'ஜி-ஃபோர்ஸ்’ படத்தில் துப்பறியும் கினியா பன்றிகள், உளவாளிகளாக அட்டகாசம் செய்யும்'' என்றாள் ஷாலினி.

''அதேதான். பார்க்கவே ரொம்ப க்யூட்டாக இருக்கும். பன்றிக்கும் இதற்கும் உருவத்தில் கொஞ்சமும் சம்பந்தம் கிடையாது. இது எழுப்பும் ஒலிகளில் சில, பன்றி மாதிரியே இருக்கும். அதனால் இந்தப் பெயர் வந்திருக்கலாம். முள்ளம்பன்றியும் கொறிணி வகைதான். ஆனால், அதுவும் பன்றி இனம் கிடையாது. இது தோன்றிய இடம், ஆண்டஸ் மலைப் பகுதி'' என்றார் டீச்சர்.

இப்போது மந்திரக் கம்பளம், உலகின் நீளமான மலைத் தொடரான, ஆண்டஸ் மலைப் பகுதியில் இறங்கியது. அங்கே, ஒரு குகைப் பகுதியில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்த கினியா பன்றிகளைப் பார்த்தார்கள். அதில் ஒன்றை, கயல் தூக்கினாள். பழகிய நாய்க்குட்டியைப் போல அது கயலுடன் ஒட்டிக்கொண்டது. முகத்தைத் தூக்கி அவர்களைத் தைரியமாகப் பார்த்தது.

''கி.மு.5000-ம் ஆண்டுகளில்... இந்தப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள், இந்தக் கினியா பன்றிகளை உணவுக்காக வளர்த்தார்கள். பிறகு, அவர்களின் இறை வழிபாடு, சமயம் சார்ந்த விஷயங்களிலும் பயன்படுத்தப்பட்டன. கினியா பன்றிகளுக்கு சிலைகள் வடித்திருக்கிறார்கள், ஓவியங்களாகத் தீட்டியிருக்கிறார்கள், நாட்டு மருத்துவத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.

டச்சு மற்றும் ஆங்கிலேய வியாபாரிகள் மூலம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்டு, நாளடைவில், வீட்டு விலங்காக மாறியது. இதில் கலப்பினங்களை ஏற்படுத்தி, இளம் ஊதா, செம்மஞ்சள், வெள்ளை... எனப் பல வண்ணங்களில் உருவாக்கியிருக்கிறார்கள். அதோடு, மருத்துவ ஆராய்ச்சியிலும் எலி, முயல்களைப் போல பரிசோதனை விலங்காக அதிகம் பயன்படுத்தப்பட்டது. சமீப காலங்களில்தான் அப்படிப் பயன்படுத்துவது குறைந்திருக்கிறது'' என்றார் மாயா டீச்சர்.

''இது என்ன சாப்பிடும் டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''காய்ந்த புற்கள்தான் கினியா பன்றிக்கு விருப்பமான உணவு. பச்சைப் புற்களையும் சாப்பிடும். புது வகையான உணவைக் கொடுத்தால் சாப்பிடாது. பட்டினியாகவே இருக்கும்'' என்றார் டீச்சர்.

''இது எத்தனை ஆண்டுகள் உயிர் வாழும்?''

''சுமார் எட்டு ஆண்டுகள் வாழும். இவற்றுக்கு, பீவெர் மாதிரி கூடு கட்டவோ, எலிகள் மாதிரி வளை தோண்டவோ தெரியாது. கூட்டம் கூட்டமாக ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு நகர்ந்துகொண்டே, புற்களைச் சாப்பிடும். சூரிய உதயம் மற்றும் சூரியன் மறையும்போது மட்டுமே வெளிப்படும். மற்ற நேரங்களில் பாறை இடுக்குகளில் எங்காவது பதுங்கியிருக்கும்.

வீட்டில் செல்லப் பிராணியாக வளர்த்தாலும் அங்கே இருக்கிற முயல், வெள்ளை எலி போன்ற மற்ற விலங்கினங்களோடு சேராது. அவற்றுடன் ஒரே கூண்டில் போட்டால், பயங்கரமாகக் கத்தி, கலாட்டா பண்ணிவிடும். அதேநேரம், தனியாகவும் இதை வளர்க்கக் கூடாது. கூடவே இன்னொரு கினியா பன்றியைச் சேர்த்து வளர்க்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இல்லைன்னா, தனிமையில் வாடி, சீக்கிரமே இறந்துவிடும். ஸ்வீடன் நாட்டில், 'ஒற்றைக் கினியா பன்றியை விற்கவோ, வளர்க்கவோ கூடாது’ எனச் சட்டமே இருக்கு'' என்றார் மாயா டீச்சர்.

''நாய் மாதிரியோ, பூனை மாதிரியோ நாம சொல்றதைப் புரிஞ்சுக்குமா?'' என்று கேட்டாள் கயல்.

''அந்த அளவுக்கு நுணுக்கம் கிடையாது. ஆனால்,  நன்றாகப் பழகிவிட்டால், அதை வளர்ப்பவர் அருகில் வரும்போது, விசில் அடிப்பது போல் ஒலி எழுப்பும். அது மட்டுமல்ல, அதன் உணவு இருக்கிற பிளாஸ்டிக் பையையோ, பெட்டியையோ கொஞ்சம் தூரத்தில் வெச்சுக்கிட்டுத் திறந்தாலும் அந்தச் சத்தத்தைக் கவனிச்சு, விசில் அடிக்கும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்... கினியா பன்றிகளை வளர்ப்பவர்களின் சங்கமும் இருக்கு. இதை வைத்து ரேஸ் நடத்துவது, விதவிதமான ஆடைகளைப் போட்டு ஃபேஷன் ஷோ மாதிரி நடத்துவதும் உண்டு. அதே நேரம்...'' என்று தயங்கினார் டீச்சர்.

''என்ன டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.

''ஒரு பக்கம் இதை, விதவிதமாக சமைச்சுச் சாப்பிடுறாங்க.  பல நாடுகளின் ஹோட்டல்களில் இவை ஸ்பெஷல் உணவாகத் தயாரிக்கப்படுகிறது. பெரு நாட்டில் ஆண்டுக்கு சுமார் 65 மில்லியன் கினியா பன்றிகள் இறைச்சியாகுது'' என்றார்.

''ஓகோ... 'ஒரு பக்கம் தூக்கிவெச்சுகிட்டு கொஞ்சுறாங்க. இன்னொரு பக்கம் வெரைட்டியா சமைச்சும் சாப்பிடறாங்க. இந்த மனுஷங்களைப் புரிஞ்சுக்கவே முடியலையே’னு நினைச்சு மனசு நொந்துபோகுமில்லே?'' என்றாள் ஷாலினி.

''அதுதான் மனிதர்கள்!'' என்ற மாயா டீச்சர் மந்திரக் கம்பளத்தை வீட்டை நோக்கித் திருப்பினார்.