மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

கே.கணேசன்

 மாயா டீச்சர் தன் வீட்டுக்கு பெயின்ட் அடிக்கலாம் என அதற்கான ஆரம்ப வேலைகளில் ஈடுபட்டிருந்தார். பெயின்ட் டின்களும் ஏணியுமாக டீச்சர் வீடே  பெயின்ட் மணத்துடன் இருந்தது.

பள்ளியில் டீச்சர்கள் கொடுத்த அசைன்மென்ட்களைச் செய்ய மாயா டீச்சரின் வீட்டுக்கு வந்த சுட்டிகள், இந்தக் கோலத்தைக் கண்டார்கள்.    

''என்ன டீச்சர் வீட்டுக்குப் பெயின்ட் அடிக்கத்தான் போன வாரம் ஒட்டடை  அடிச்சீங்களா?'' என்றான் பிரசன்னா.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்
##~##

''அதெல்லாம் ஒண்ணும் இல்லை, ஒட்டடை அடிச்சதுல வீடு சுத்தமாச்சு. வீட்டை இன்னும் கொஞ்சம் அழகுபடுத்த இந்த பெயின்டிங் வேலை.'' என்றார் டீச்சர்.

இந்த முறை சுட்டி களுக்கு இதுவரை தொடாத சப்ஜெக்ட் கிடைத்ததில் கொஞ்சம் குஷியானார்கள்.

''டீச்சர், நாம ஏன் வீட்டுக்குப் பெயின்ட் அடிக்கிறோம்?'' என்ற மதுவின் கேள்விக்கு பதில் அளிக்க ஆரம்பித்தார் டீச்சர்...

''முன்பு எல்லாம் வீடு மற்றும் கட்டடங்கள் அவற்றின் மூலப் பொருளான கற்கள், களிமண் ஆகிய இயற்கையான வண்ணத்தைக் கொண்டதாக இருந்தன. காலப்போக்கில் தான் வாழும் இடத்தை அழகுபடுத்தும் நோக்கத்தில் கட்டடங்களுக்கு வெள்ளை அடித்து வந்தார்கள்.  அதிலும் பெரிதாக திருப்தி ஏற்படவில்லை. இன்னும் அழகுபடுத்த விரும்பினார்கள். அதற்காக இயற்கையில் இருந்த வண்ணங்களைச் செயற்கையாக உருவாக்க ஆரம்பித்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

பெயின்ட்டைக் கொண்டு பல உருவங்களை வரைந்து, சுவர்களை அலங்கரித்தனர். பெயின்ட் கண்டுபிடிக்கப்பட்டு நாற்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நமது மூதாதையர்களான 'ஹோமோ செஸ்பியன்’ காலத்திலேயே பெயின்ட்டைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். கி.மு.1500-களில் எகிப்தியர்கள் வண்ணங்களைத் தாயாரிப்பதில் சிறந்து விளங்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர் களுக்கு இந்தக் கலை பரவியது. அந்தச் சமயத்தில் இந்தியர்களும் சீனர்களும்கூட வண்ணங்களை உருவாக்குவதில் தேர்ச்சி பெற்று இருந்தார்கள்.  பொதுவாக, மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களைக் கொண்டுதான் சுவரோவியங்கள் வரையப்பட்டன. இவற்றுக்கான மூலப் பொருளை தாவரங்கள், மூலிகைச் செடிகள், இவற்றுடன் முட்டையின் உட்கரு என இயற்கையில் கிடைத்தவற்றைக் கொண்டு பெயின்ட்டைத் தயாரித்தார்கள். முட்டையைச் சேர்த்து தயாரிக்கப்பட்ட வண்ணத்தால்  வரைந்த சுவர் ஓவியங்கள், அவற்றின் ஈரப்பதம் உலர்ந்ததும் சுவரில் கெட்டியாக ஒட்டிக்கொண்டதாம். அப்போது, வண்ணங்களுக்கு தங்கத்தைவிட மதிப்பு அதிகமாக இருந்தது.'' என்று டீச்சர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது...

''டீச்சர், நான் இந்தப் பெயின்ட்டில் நீச்சல் அடிக்கட்டுமா?'' என கணேஷ் நச்சரித்தான். அவன் தொல்லை தாங்காமல், மந்திரக் கம்பளத்தின் உதவியால் அவனையும் மதுவையும் குட்டியாக்கினார் மாயா டீச்சர். நீச்சல் குளத்தில் குதிப்பதுபோல குதித்து மதுவும், கணேஷ§ம் அதகளம் பண்ணினார்கள்.

''வண்ணங்களில் சேர்க்கப்படும் நிறமிகள்(Pigment) தான் அவற்றுக்கு வண்ணங்களைக் கொடுக்கின்றன. நிறமிகளில் இயற்கையானவை, செயற்கையானவை என ரெண்டு வகைகள் உண்டு. இயற்கையிலேயே கிடைப்பவை சுண்ணாம்பு மற்றும் களிமண் ஆகியவை. செயற்கை சிலிக்கான் போன்றவை செயற்கை வகை நிறமிகள். டைட்டானிய டை-ஆக்சைடு, சிவப்பு இரும்பு ஆக்சைடு போன்ற கண்களுக்குப் புலப்படாத நிறமிகளும் உண்டு!'' என்றார் மாயா டீச்சர். தொடர்ந்து...

''பெயின்ட்களைப் பொதுவாக தண்ணீர் மற்றும் எண்ணெய் ஆகிய ரெண்டு விதமான கலவைகளை அடிப்படை யாகக் கொண்டு பிரிக்கிறார்கள். தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட பெயின்ட்கள், கொஞ்சம் கடினத் தன்மை வாய்ந்ததாக இருக்கும். எண்ணெயை அடிப்படையாகக் கொண்ட வண்ணங்கள் பூசுவதற்கு எளிதாகவும் சுத்தம் செய்ய வசதி யாகவும் இருக்கும்.'' என்றார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்

''டீச்சர், பெயின்ட்டை எல்லா இடத்திலும் பூச முடியுமா?'' என்று சரண்யா கேட்டதற்கு... ''இடத்துக்கு ஏற்றாற்போல பெயின்ட் வகைகள் இருக்கு. சுவருக்குப் பூச,  கண்ணாடியில் வரைய, உலோகங்களில் வரைய என நிறைய வகைகள். சில உலோகங்களில் திரவ நிலையில் பெயின்ட்டைப் பூச முடியாது. அதனால், பெயின்ட்டை நுண்ணிய பவுடராக மாற்றி, அத்துடன் ஒட்டுவதற்கான கெமிக்கலையும் சேர்த்து, குறிப்பிட்ட உயர்நிலை வெப்பத்தில் வைத்து, உலோகத்தின் மீது  ஸ்ப்ரே செய்வார்கள். பெயின்ட் அப்படியே ஒட்டிக்கொள்ளும். இதைப் பவுடர் கோட்டிங் என்பார்கள்.'' என்றார் மாயா டீச்சர்.

''பெயின்ட்கள் கட்டடங்களுக்கு அழகைக் கொடுப்பது மட்டுமல்லாமல், வெயிலில் இருந்தும் மழையில் இருந்தும் சுவர்களைப் பாதுகாக்கின்றன.'' என்ற மாயா டீச்சரை, ''நான் ரெயின் கோட் போட்டுக் கொள்வது மாதிரிதானே டீச்சர்?'' என்றாள் சரசு.

''கரெக்டா சொன்னே'' என்ற மாயா டீச்சர் தொடர்ந்து...  

''பெயின்ட் கேன்களை ஒரு முறை நாம் திறந்துவிட்டால் அதை முழுதாகப் பயன்படுத்திவிட வேண்டும். இல்லை எனில் அதைக் கெட்டிப்படாமல் பாதுகாப்பது மிகவும் கடினம். அதனால், பெயின்ட் மீதி இருக்கும் கேனை இறுக்கமாக மூடி, தலைகீழாக வைத்தால், நீண்ட நாட்களுக்கு பெயின்ட் கட்டியாகாமல் இருக்கும்'' என்றார்.

''ஆமாம் டீச்சர்! எங்க வீட்டுக்கு வாங்கின பெயின்ட் டப்பாவுல பாதி இப்படிதான் வேஸ்ட்டா போயிடுச்சு.'' என்று வருத்தப்பட்டான் கணேஷ்.

''அதுக்குத்தான் பெயின்ட்டை இளக வைக்க டர்பைன்டைன் அல்லது தின்னர் யூஸ் பண்ணுவாங்க. இருந்தாலும் பெயின்ட்டோட தரம்தான் அதோட தன்மையை முடிவு செய்யும்’'

'கறை நல்லது’ என்று கிண்டல் செய்தவாறே கணேஷ், எல்லோர் மேலேயும் பெயின்ட்டைப் பூசி, ஒரு மினி ஹோலிப் பண்டிகையே கொண்டாடி விட்டான்.

சுட்டிகள் அனைவரும் மந்திரக் கம்பளம் இருப்பதால், தங்கள் டிரெஸ் எல்லாம் பெயின்ட்டால் கறை ஆனதைப் பற்றி கவலை இல்லாமல் உற்சாகக் கோஷம் போட்டார்கள்.

''டீச்சர், பெயின்ட் சுற்றுச் சூழலுக்குக் கெடுதலா?'' என்று கேட்டாள் சரசு.

''பொதுவா பெயின்ட் கெமிக்கல் சம்பந்தப்பட்டது. கண்டிப்பா கெடுதல்தான். ஆனா, நாம் பயப்படற அளவுக்கு இல்லை. பெயின்ட்டை நாம் ரீசைக்கிள் முறையில் பிரைமர் அடிக்க, இடைவெளியை நிரப்ப என மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். ஆனால், ஈயம் கலந்த பெயின்டுகள் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.'' என்றார் மாயா டீச்சர்.

''பெயின்ட் அடிக்க எது சிறந்த முறை டீச்சர்?'' என்று கேட்டான் பிரசன்னா.

''எந்தப் பொருளுக்கும் பெயின்ட் அடிப்பதற்கு முன்னால், பிரைமர் எனப்படும் கோட்டிங் செய்யணும். அப்போதுதான் பெயின்ட் நன்றாக ஒட்டும். அதுவும் தவிர, பெயின்ட்டின் தேய்மானமும் குறையும். நீண்ட நாட்களுக்கு பளபளப்பாகவும் இருக்கும். பெயின்ட் அடிக்க பொதுவாக நாம் பிரஷ்களை உபயோகிக்கிறோம். ஸ்ப்ரே கன் மூலமும் அடிக்கலாம். ஸ்ப்ரே கன் மூலம் பெயின்ட் அடித்தால், தக்க பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டும். கார் தொழிற்சாலைகளில் பெரிய தொட்டிகளில் பெயின்ட் இருக்கும். அதில் பெயின்ட் செய்ய வேண்டிய பாகத்தை மூழ்கச்செய்து பெயின்ட் அடிப்பார்கள். பெயின்ட் அடிப்பதற்கு சிறந்த வழி, ரோலர்களைப் பயன்படுத்துவதுதான். இப்படிச் செய்வதன் மூலம் பெயின்ட்டும் குறைவாகச் செலவாகும், அடிப்பதற்கும் மிக எளிதாக இருக்கும்.'' என்றார் டீச்சர்.

''டீச்சர், முதல்ல சொன்னீங்களே ஆதிகாலத்து மனிதன், அப்பவே பெயின்ட்டைப் பயன்படுத்தி ஓவியங்களை வரைந்தான்னு...'' என நினைவூட்டினாள் மது.

''அதை நேரிலே போய்ப்   பார்க்கலாம் வாங்க'' என்ற மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தின் உதவியுடன் சுட்டிகளை ஃப்ரான்ஸ்சின் க்ரோட்டே சாவ்வெட்(நிக்ஷீஷீttமீ சிலீணீuஸ்மீt) ஓவியக் குகைகளுக்கு அழைத்துச் சென்றார்.

அவர்கள் போய் இறங்கிய குகையின் சுவர்களில் வரையப்பட்டு இருந்த ஓவியங்களுக்கு வயது முப்பத்தி ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். தொல்லியல் ஆய்வாளர்கள் தங்களுக்குக் கிடைத்த மிகவும் பழமையான வண்ணப் பூச்சுகள் என இதைப் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆதிகாலத்து மனிதர்கள் தாங்கள் பார்த்தவற்றை ஓவியக் காட்சிகளாக வரைந்து இருக்கிறார்கள். இதன் மூலம் நாம் அப்போது வாழ்ந்த விலங்குகள், பறவைகள் மற்றும் இயற்கை நிகழ்வுகளை அறிந்துகொள்ள இயலும்.

''மொழிகள், எழுத்து வடிவங்கள் ஆவதற்கு முன், மனிதர்கள் ஓவியங்கள் மூலமாகத்தான் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொண்டார்கள். எந்த ஒரு நவீன வசதி வாய்ப்பும் இல்லாத காலகட்டத்தில், இயற்கையில் கிடைத்த வண்ணங்களை வைத்து அவர்கள் வரைந்த ஓவியங்கள், எவ்வளவோ இயற்கை இடர்களைத் தாங்கி காலம் கடந்தும் மெருகு குலையாமல் இருப்பது மிகவும் வியப்பான விஷயம்'' என்ற டீச்சர், சுட்டிகளுடன் வீடு திரும்பினார்.