இயற்கையின் தீபாவளி !
கே.யுவராஜன் ஓவியம் : பிள்ளை
##~## |
'டம்... டமால்’ என வெளியே பட்டாசு சத்தம் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தது.
நாளை நடக்கப்போகும் நிகழ்ச்சி ஒன்றில் பேசுவதற்காக கணினியில் முக்கியமான தகவல்களைத் தேடிக்கொண்டிருந்தார் மாயா டீச்சர். சத்தம் காட்டாமல் அவர் பின்னால் வந்த கயலும் அருணும், டீச்சரின் காதருகே குனிந்து, 'டமால்’ எனக் கத்தினார்கள்.
டீச்சர் அசரவில்லை. ''பசங்களா, இப்போ நீங்க நிஜமான சரவெடியைக் கொளுத்திப் போட்டாலும் நான் அசைய மாட்டேன். அரை மணி நேரம் பொறுங்க... வந்திடுறேன்'' என்றார்.
அப்போது, ஷாலினியும் கதிரும் வந்தார்கள். நான்கு பேரும் தங்கள் வீட்டுத் தீபாவளி அனுபவங்களைப் பேசிக்கொண்டார்கள். சொன்னபடி அரை மணி நேரத்தில் மாயா டீச்சர் அவர்களிடம் வந்தார். ''ஆச்சர்யமா இருக்கு. தீபாவளி பிஸியில் என்னை மறந்திருப்பீங்கனு நினைச்சேன்'' என்றார்.
''வாங்கின பட்டாசு எல்லாம் தீர்ந்துபோச்சு. அதான் இப்படி வந்துட்டோம். ஆமா, நாளைக்கு உங்களுக்கு என்ன நிகழ்ச்சி?'' என்று கேட்டான் கதிர்.
''இதுவும் வெடிக்கிற விஷயம்தான். உலகம் முழுக்க இயற்கை நடத்தும் தீபாவளி. எரிமலைகள் பற்றிய அறிவியல் கருத்தரங்கு'' என்றார் டீச்சர்.
''த்ரில்லான விஷயமா இருக்கே. எங்களுக்கும் இயற்கையின் தீபாவளியைப் பார்க்க ஆசையா இருக்கு டீச்சர்'' என்றாள் கயல்.

''சரி, வாங்க. இந்த வருட தீபாவளியை வித்தியாசமாக் கொண்டாடுவோம்'' என்ற மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்துவந்தார்.
வானில் ஆங்காங்கே தெறித்த வர்ணஜாலங்களுக்கு இடையே கம்பளம் புகுந்து புறப்பட்டது. ''எரிமலையை ஆங்கிலத்தில் வால்கனோ (க்ஷிஷீறீநீணீஸீஷீ) என்பார்கள். இது இத்தாலியச் சொல். ரோமானிய நெருப்புக் கடவுளின் பெயர் வால்கன். இதிலிருந்துதான் வால்கனோ வந்தது.
பழங்கால மக்களிடம், எரிமலை பற்றிய மூடநம்பிக்கைகள் இருந்தன. கடவுளின் கோபம்தான் இப்படி நடப்பதாக நினைத்தார்கள். 17-ம் நூற்றாண்டில் வாழ்ந்த வானியல் அறிஞர் ஜோகன்ஸ் கெப்லர் என்பவர்கூட, 'இது பூமியின் கண்ணீர்க் கசிவு’ என்று தன்னுடைய நூலில் குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு வந்த விஞ்ஞானிகளின் தொடர் ஆராய்ச்சியில், இது பூமியின் உட்பகுதியில் நடக்கும் மாற்றத்தால் கற்குழம்பு, வாயுக்கள் போன்றவை வெளியேறும் ஒரு நிகழ்வு என்பதைக் கண்டறிந்தார்கள்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், புகையைக் கக்கும் ஓர் எரிமலையை நெருங்கியது. அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, பாதுகாப்பு ஆடைகளையும் அளித்தது.
''டீச்சர், இந்த மாதிரி எரிமலைகள் எப்படி உருவாகிறது?'' என்று கேட்டாள் ஷாலினி.
''பூகம்பம், நிலநடுக்கம் போன்றவை எப்படி ஏற்படுகின்றன தெரியுமா?'' என்று கேட்டார் டீச்சர்.
''ஓ... பூமியின் உட்பகுதியில் பாறைத் தட்டுகள் இருக்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று மோதும்போதோ, ஒன்றிலிருந்து ஒன்று விலகும்போதோ அல்லது ஒன்றின் மீது ஒன்று ஏறும்போதோ, பூமியின் மேற்பகுதியில் ஏற்படும் அதிர்வுதான் நிலநடுக்கம்'' என்றான் அருண்.
''அதே விஷயம்தான் இங்கேயும் கொஞ்சம் மாற்றத்துடன் நடக்குது. புவியியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கோட்பாடுதான், 'தட்டுப் புவிப்பொறை கட்டமைப்பு’ (Volcano). அதாவது, கண்டங்கள் இடப்பெயர்ச்சிக் கோட்பாடு. இந்த பூமி, ஆரம்பத்தில் நிலமாகத்தான் இருந்தது. இப்போது கண்டங்களாகப் பிரிந்திருக்கக் காரணம், பாறைத் தட்டுக்களின் நகர்வுகள்தான்.
பூமியின் உட்பகுதி கற்கோளம், மென்பாறைக்கோளம் என்ற அடுக்குகளாக இருக்கின்றது. இதில், 'கற்கோளம்’ என்பது குளிர்ந்து கெட்டியான பாறைகளாக இருக்கும். 'மென்பாறைக்கோளம்’ என்பது வெப்பத்துடன் திரவ நிலையில் மென்மையாக இருக்கும். இந்தத் திரவ அடுக்கின் மீது கற்கோள அடுக்கு மிதந்துகொண்டிருக்கும். இவை ஒன்றோடு ஒன்று மோதும்போதோ, விலகும்போதோ வெளிப்படும் கற்குழம்பும் வாயுக்களும்தான் எரிமலை வெடிப்பு. இதை நேரில் பார்க்கலாம் வாங்க'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் அவர்களை ஓர் எரிமலையின் உட்பகுதி வழியாக பூமியின் ஆழத்துக்கு அழைத்துச் சென்றது. கற்கோளங்கள் மற்றும் மென்பாறைக் கோளங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தார்கள். ''இந்தக் கற்குழம்பு, 650 முதல் 1,200 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலை வரை இருக்கும்'' என்றார் டீச்சர்.
பிறகு, மேலே அழைத்துவந்த கம்பளம் மீண்டும் வானில் பறந்தது. டீச்சர் தொடர்ந்தார்.
''எரிமலை என்றதும், கூம்பு போன்ற அமைப்பும் அதன் உச்சியிலிருந்து புகை வெளிப்படும் காட்சியும்தான் நமக்கு ஞாபகம் வரும். எரிமலைகளில் அது ஒரு வகைதான். இதைச் 'சுழல் எரிமலைகள்’ அல்லது 'கலப்பு எரிமலைகள்’ என்பார்கள். இது தவிர, தட்டையான எரிமலைகள், ஆழ்கடல் எரிமலைகள், உறைபனி எரிமலைகள், புதைச்சேற்று எரிமலைகள் எனப் பல வகைகள் இருக்கின்றன.
தட்டையான எரிமலை என்பது, பூமியின் நிலப்பரப்பில் பிளவு ஏற்பட்டுக் கற்குழம்புகள் வெளிப்படுவது. கடலுக்குள் ஏற்படும் எரிமலைகளை, 'ஆழக்கடல் எரிமலை’ என்றும், பனிப்பிரதேசங்களில் உண்டாகும் எரிமலைகளை, 'உறைபனி எரிமலைகள்’ என்றும் சொல்வார்கள். மேலும், எரிமலையிலிருந்து வெளிப்படும் 'மாக்மா’ எனப்படும் கற்குழம்பில் இருக்கும் சிலிக்கான், சல்ஃபர், வாயுக்கள் ஆகியவற்றின் தன்மையைப் பொறுத்தும் வகைகளைப் பிரித்திருக்கிறார்கள்'' என்றார் டீச்சர்.

''ஆழ்கடலிலும் உறைபனியிலும் எப்படி எரிமலைகள் செயல்படுகின்றன?'' என்று வியப்புடன் கேட்டாள் கயல்.
''அதையும் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம், அவர்களை ஆழ்கடலுக்குள் அழைத்துச் சென்றது. அங்கிருந்த எரிமலைப் பாறைகளைக் கண்டார்கள். ''தரையில் இருக்கும் எரிமலைகளைப் போலவே இவையும் கற்குழம்பு மற்றும் வாயுக்களை வெளிப்படுத்தும். ஆனால், தண்ணீரின் எடை காரணமாக அவை பெரிய அளவில் வெடிக்காது. இந்த எரிமலையிலிருந்து வெளிப்படும் கனிமப் பொருட்களால் கடலுக்கு நன்மையும் ஏற்படுகின்றன. இந்த எரிமலைப் பாறைகள் ஒன்றுசேர்ந்து பெரிதாகி, சிறிய தீவுகள் உருவாகவும் வாய்ப்பு இருக்கு'' என்றார் டீச்சர்.
அடுத்து அவர்கள் சென்ற இடம், ஐஸ்லாந்து. அங்கே, உறைபனி எரிமலைகளைக் கண்டார்கள். ''உறைபனிகள் உருகும்போது, அதன் உச்சியிலிருக்கும் எரிமலையின் குழம்பும் உருகி வடியும். இந்த வகை எரிமலைகளை, 'டுயாக்கள்’ அல்லது 'மொபர்க்’ என்பார்கள். புதைச்சேறுகள் நிறைந்த இடத்திலும் எரிமலைகள் உள்ளன'' என்றார் டீச்சர்.
''பூமியில் இருப்பது போலவே மற்ற கிரகங்களிலும் எரிமலைகள் இருக்குமா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.
''ஆமாம். வீனஸ் கோளில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதற்கான அடையாளங்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதேபோல, நெப்டியூனின் நிலவான 'டிரைடான்’ மற்றும் சனிக் கோளின் நிலவான, 'டைட்டன்’ ஆகியவற்றில் எரிமலை நிகழ்வு நடந்திருப்பதற்கான ஆதாரங்களைச் செயற்கைக்கோள்கள் மூலம் அறியமுடிகிறது. மார்ஸ் கோளில், அழிந்துவிட்ட பல்வேறு எரிமலைகள் இருக்கின்றன'' என்றார் டீச்சர்.
''அழிந்துவிட்ட எரிமலை என்றதும் ஞாபகம் வருது டீச்சர். எரிமலைகளை வகைப்படுத்தும்போது உறங்கும் எரிமலை, உயிர்த்துடிப்புள்ள எரிமலை, அழிந்துவிட்ட எரிமலை என்றும் பிரிப்பார்கள் இல்லையா?'' என்று கேட்டான் அருண்.
''ஆமாம் அருண். அடிக்கடி உமிழும் எரிமலைகளை, 'உயிர்த்துடிப்புள்ள எரிமலைகள்’ என்பார்கள். பல நூற்றாண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, பிறகு வெடிக்கும் எரிமலையை, 'உறங்கும் எரிமலை’ என்றும் உமிழ்வதற்கு எரிமலைக் குமிழ்வு இல்லாதவை 'அழிந்த எரிமலை’ என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இப்படிப் பிரிப்பதில் விஞ்ஞானிகளிடம் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. அழிந்துவிட்டவை என்று நினைத்த சில எரிமலைகள், பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகும் எரிமலைக் குழம்பை வெளிப்படுத்தி இருக்கின்றன'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம், அவர்களை மேலும் சில எரிமலைப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்று காண்பித்துவிட்டு, டீச்சரின் வீட்டில் இறக்கியது.
''ஓ.கே, பசங்களா, வீட்டுக்குப்போய் உங்க தீபாவளி கொண்டாட்டத்தைக் கன்டினியூ பண்ணுங்க. நானும் என் வேலையைக் கன்டினியூ பண்றேன்'' என்று சொல்லி, உள்ளே சென்றார் மாயா டீச்சர்.