மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ஸ்டீபன் ஹாக்கிங்

சுட்டி நாயகன் - ஸ்டீபன் ஹாக்கிங்

##~##

இரண்டாவது உலகப் போர் உக்கிரமாக நடந்த நேரம்... ஜனவரி 8, 1942-ல் லண்டன் நகரின் மீது எதிரிப் படைகளின் போர் விமானங்கள், குண்டு வீசிய நாளில் ஸ்டீபன் பிறந்தான்.

ஸ்டீபனின் அப்பா, 'பிராங்க் ஹாக்கிங்’  மருத்துவப் பேராசிரியர். ஸ்டீபன் முதலில் படித்தது, ஹைகேட் பகுதியில் உள்ள 'பைரன் ஹவுஸ் ஸ்கூல்’ என்ற பள்ளியில். தினமும் பள்ளிக்குச் செல்லும்போது அடம்பிடிப்பான். அம்மா, 'இஸபெல் ஹாக்கிங்’ கவலைப்பட்டார். பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது உண்மை தெரிந்தது.

ஸ்டீபன் படிப்பதில் ஆர்வமாகவே இருந்தான்.ஆனால், பாடப் புத்தகத்தைவிட நூலகத்தில் நிறையப் புத்தகங்களைப் படிக்க விரும்பினான். இதை, பள்ளிக்கூடம் அனுமதிக்கவில்லை. எனவே,  பள்ளிக்கூடத்திலிருந்து நிறுத்தப்பட்டு, கொஞ்ச நாள் வீட்டிலேயே அப்பாவின் புத்தகங்களைப் படித்தான்.

இங்கிலாந்தில் உள்ள 'செயின்ட் ஆல்பென்ஸ்’ நகரின் மருத்துவக்கழகம், அவன் அப்பாவுக்கு உயர் பதவி அளித்தது. அதே ஊரில் இருந்த ஆல்பென்ஸ் ஹை ஸ்கூலில் ஸ்டீபன் சேர்ந்தான். அவனது வருகைப் பதிவை மட்டும், ஆசிரியைகள் பள்ளி நூலகத்துக்குச் சென்று எடுப்பார்கள். அப்போது, ஸ்டீபனுக்கு ஏழு வயது.

வகுப்பில் எந்தப் பாடம் நடத்தப்பட்டாலும் அதை ஒட்டிய வேறு புத்தகங்களையும் அன்றே விரிவாக வாசித்துவிடுவான். அடுத்த நாள், விதவிதமாகச் செய்திகளை எழுதி வகுப்பு முழுவதும் ஒட்டுவான்.

'உன் திறமைக்கு பிரபலமான வெஸ்ட் மின்ஸ்டர் பள்ளியில் படிக்க வேண்டும். எப்படியாவது அங்கே சேர்ந்துவிடு’ என்று பலரும் அவனைத் தூண்டினார்கள். ஸ்டீபன் அதற்கான முயற்சியில் இறங்கினான். ஆனால், நுழைவுத்தேர்வு நாளில், கடும் காய்ச்சல். ஸ்டீபன் வருந்தவில்லை. ''அந்தப் பள்ளிக்குள் நுழைய எனக்கு வேறு வழிகளும் தெரியும்'' என்று தெளிவாகவும் நம்பிக்கையுடனும் சொன்னான்.

சுட்டி நாயகன் -  ஸ்டீபன் ஹாக்கிங்

செயின்ட் ஆல்பென்ஸ் பள்ளியில் படித்துக்கொண்டே, வெஸ்ட் மின்ஸ்டர் பள்ளி நடத்திய அறிவியல் ஆய்வுப் போட்டி ஒன்றில், அழகான தானியங்கி விமான மாடல் ஒன்றைச் செய்து அசத்தினான் ஸ்டீபன். வெஸ்ட் மின்ஸ்டர் பள்ளியின் வாசல் அருகே இன்றும் அவனது புகைப்படத்துடன் அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டீபன், தன்னைப்போலவே மருத்துவராக வேண்டும் என்று அப்பா விரும்பினார். ஆனால், ஸ்டீபனின் கவனம் கணக்கிலும் இயற்பியலிலும் இருந்தது. பள்ளியில் அவனை எல்லோரும் 'ஐன்ஸ்டீன்’ என்றே அழைத்தனர். பல சிறுவர்கள் ஸ்டீபன் சொந்தமாகத் தயாரித்திருந்த, 'ஹாக்கிங் நோட்ஸ்’ எனும் கணித என்சைக்ளோபீடியாவைப் பயன்படுத்தி பரீட்சைக்குப் படித்தார்கள்.

அந்தச் சமயத்தில் ஓர் அதிர்ச்சி. 21-வது வயதில் 'அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லேரோசிஸ்’ (Amyotrophic lateral sclerosis) என்ற நரம்பு நோயால் ஸ்டீபன் பாதிக்கப்பட்டார். உடல் தசைகளின் இயக்கம் படிப்படியாகக் குறைந்தது. பேசவும் முடியவில்லை. ஆனாலும் ஸ்டீபனின் தன்னம்பிக்கை பாதிக்கவில்லை. ஐன்ஸ்டீனின் மறைவுக்குப் பிறகு வானவியலில் இருந்த பல சவால்களை எதிர்கொண்டார்.

எந்த எழுதுகோலும் காகிதமும் இன்றி பல ஆயிரம் வரி கணிதத்தைச் செய்யும் அளவுக்கு அவர் கணித ஆற்றலையும் பெற்றிருந்தார். விண்வெளியின் தோற்றம் - பெரு வெடிப்பு (Big Bang) கோட்பாடு, விரிவடையும் அண்டம் என ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்தார். நமது விஞ்ஞானி சந்திரசேகரின் 'சந்திர சேகர் எல்லை’ என்கிற கணித வரையறைக்கு உட்படுத்தி, நட்சத்திரங்களின் எதிர்காலம் என்பது அவை கருங்குழிகள் ஆவதே என்று நிறுவினார்.

இவர் வெளியிட்ட, பிரபஞ்சமே இழைகளால் ஆனது என்பதை நிரூபிக்கும் 'இழைக் கோட்பாடு’ (Stirng Theory) மற்றும் தியரி ஆஃப் எவ்ரிதிங் (The Theory of Everything) ஆகிய கோட்பாடுகள், இதுவரை வந்த இயற்பியல் கோட்பாடுகளின் முரண்பாடுகளை சீர்செய்ய வழிவகுத்தது.

'ஐன்ஸ்டீனுக்குப் பிறகு இயற்பியலில் மிகச் சிறந்த பேரறிஞர், ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்’ என்று உலகமே கொண்டாடும் அளவுக்கு உயர்ந்திருக்கும் இவர் ஒரு சுட்டி நாயகன் என்பதில் சந்தேகம் இல்லை.