ஆயிஷா இரா.நடராசன் ஓவியம்: பாரதிராஜா
##~## |
கல்பனா என்றால், 'கற்பனை’ என்று பொருள். ஹரியானாவில் உள்ள 'கர்னல்’ எனும் குட்டி நகரத்தில் அந்தச் சிறுமி வாழ்ந்தாள். அப்பா, பானர்தாஸ் சாவ்லாவின் வாழ்க்கை, சோதனை மிக்கது. இந்திய - பாகிஸ்தான் பிரிவினை நடந்தபோது, பாகிஸ்தானில் இருந்து அவர் இந்தியாவுக்குக் கட்டாயமாக அனுப்பப்பட்டார்.
ஹரியானாவில் கிடைத்த வேலைகளை எல்லாம் பார்க்கும் நிலைமை. மூன்று குழந்தைகளில்... கல்பனா கடைசிப் பெண். கல்பனா தன் பெயருக்கு ஏற்ப சிறுவயது முதலே கற்பனை செய்வதில் வித்தியாசமாக இருந்தாள். கல்பனாவின் அம்மா மொட்டைமாடியில் அமர்ந்து கதை சொல்வார். அப்போது, நிலாவைப் பற்றியும் நட்சத்திரங்களைப் பற்றியும் கல்பனா கேட்கும் கேள்விகளுக்கு, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.
ஊரில் நடைபெற்ற சுதந்திர தின ஓவியப் போட்டியில், கல்பனாவின் ஓவியம் பெரிய குழந்தைகளின் படங்களை எல்லாம் வென்று, முதல் பரிசு பெற்றது. நட்சத்திரங்களுக்கு நடுவே நமது மூவர்ண தேசியக் கொடியின் நிறத்தில் பறக்கும் தட்டை வரைந்து அசத்தியிருந்தாள் கல்பனா. மூன்றரை வயதில் மற்றவர்கள் பார்பி பொம்மையுடன் விளையாடியபோது... கல்பனா, தன் அண்ணனின் விமானப் பொம்மைகளை உடைத்து, 'உள்ளே எப்படி இருக்கும்’ என்று ஆராய்வாள்.

கர்னலில் உள்ள தாகூர் பாலா நிகேதன் சீனியர் செகண்டரி பள்ளியில் சேர்ந்தாள் கல்பனா. அங்கே பாட்டு, நடனம் செஸ் மற்றும் ஓட்டப் பந்தயம் அனைத்திலும் முதல் இடம் பிடித்தாள். பள்ளியில் பெண்களுக்கான கால்பந்து அணி ஒன்று உருவாகப் போராடி, அனுமதியும் பெற்றாள். கணிதம், அறிவியலில் எப்போதும் நூற்றுக்கு நூறுதான். ஒருமுறை பள்ளிக்கு விஜயம் செய்த அதிகாரி ''நீங்கள் வீட்டுக்கு எந்த வாகனத்தில் திருப்பிப் போக விரும்புகிறீர்கள்?'' என்று மாணவர்களிடம் கேட்டார். அதற்கு கல்பனா அளித்த பதில், ஹெலிகாப்டர்.
பள்ளி இறுதிப் படிப்பில், மாவட்ட அளவில் சாதனை மதிப்பெண் பெற்றாள் கல்பனா. பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் (வானூர்தியியல்) படிக்க விரும்புவதாகக் கூறி, அப்பாவை அதிரவைத்தாள். ஏனெனில், அங்கே பெண்கள் படிக்க முடியாது. அண்ணன் சஞ்சயோடு அங்கு சென்று, பல்கலைக்கழத்தில் பேசினாள். அந்தக் கல்லூரியின் ஏரோனாடிக்கல் துறையின் முதல் மாணவியாகச் சேர, கல்பனா நடத்திய போராட்டங்கள் ஏராளம்.
அங்கிருந்து அமெரிக்காவின் டெக்ஸாஸ் சென்று, உயர் கல்வியிலும் முதல் இடம் பிடித்தார். 'இந்தியாவின் முதல் பெண் விண்வெளி வீரர் கல்பனா சாவ்லா’ என்ற பெயரைப் பெற்றார். நாசா மூலம் வெற்றிகரமாக விண்ணில் பறந்து உலக சாதனை படைத்த கல்பனா சாவ்லா, விண்வெளி விபத்தில் மறைந்துவிட்டாலும்... நம் மனங்களில் சுட்டி நாயகியாக வாழ்கிறார்!