மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

குளிர் கால கொண்டாட்டம் !கே.யுவராஜன் ஓவியம்: பிள்ளை

##~##

''குட் ஈவ்னிங் டீச்சர்'' என்றவாறு வந்து நின்ற ஷாலினியைப் பார்த்து அனைவரும் திகைத்தனர். வாய், மூக்கு, கண்கள் மட்டுமே தெரிய, மற்ற பகுதிகளை ஸ்வெட்டர், குல்லா, கையுறை போன்றவற்றால் மூடியிருந்தாள்.

அவர்கள் எல்லோரும் சினிமாவுக்குச் செல்வதற்காக மாயா டீச்சர் வீட்டுக்கு வந்திருந்தார்கள். ''என்ன ஷாலினி... நாம இமயமலைக்குப் போறோமா?'' என்று கேட்டான் கதிர்.

''குளிர்காலம் ஆரம்பிச்சுடுச்சே, எனக்குக் குளிர் சரிவராது. ஈவ்னிங் ஆறு மணி ஆனதும் வீட்டிலேயே ஸ்வெட்டர் போட்டுட்டுதான் திரிவேன்'' என்றாள் ஷாலினி.

''குளிர்காலத்தில் வெளியே போகும்போது, இப்படிப் போட்டுக்கிறது நல்லதுதான். குளிரினால் தோல் வறட்சி ஆகாமல் தடுக்க, காலையில் குளிக்கிறதுக்கு முன்னாடி, உடம்பில் தேங்காய் எண்ணெயைத் தேய்ச்சுக்க ஷாலினி. குளிக்கிற தண்ணியிலும் கொஞ்சம் எண்ணெயை விட்டுக்கலாம்'' என்றார் டீச்சர்.

''எதுக்கு டீச்சர்? தண்ணியைக் காய்ச்சிக் குளிச்சா குளிர் ஓடிடப்போகுது'' என்றான் அருண்.

''தப்பு அருண். ரொம்ப சூடான நீரில் குளிக்கிறப்ப, தோலின் மேல் பகுதியில் எண்ணெய்ப் பசை குறைஞ்சு, தோல் வறட்சி ஏற்படும். மிதமான சூட்டில் குளிக்கிறதுதான் நல்லது'' என்றார் டீச்சர்.

''காபி, பஜ்ஜி, போண்டாவை வெளுத்துக் கட்டுவதும் தப்புதானே டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''எண்ணெயில் பொரித்ததைச் சாப்பிடுறது எப்பவுமே கெடுதல்தான் கதிர். அதுக்குப் பதில், சூடான சுண்டல் வகைகளைச் சாப்பிடலாம். பனங்கற்கண்டுப் பால் குடிக்கலாம். உடம்புக்கும் ஆரோக்கியம்... குளிருக்கும் இதமாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

''குளிர்காலத்தில் பலருக்கு உடம்பு முடியாமல் போயிடுதே ஏன் டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''அதுக்குக் காரணம், உடலின் வெப்பக் குறைவு. நம் உடம்புக்குள் குறிப்பிட்ட அளவுக்கு வெப்பசக்தி இருந்தால்தான், ரத்த ஓட்டம் சீராக நடந்து, எல்லா உறுப்புகளும் சுறுசுறுப்போடு இருக்கும். வெப்பம் குறையும்போது, ரத்த ஓட்டமும் குறைஞ்சு, பாதிப்புகளை ஏற்படுத்தும். சுவாசக் கோளாறு உள்ளவர்கள், இதயம் மற்றும் சர்க்கரை நோயாளிகள், குளிர் காலத்தில் ரொம்பவும் கவனமா இருக்கணும்'' என்றார் டீச்சர்.

''இருங்க... இருங்க... ஆளாளுக்கு டிப்ஸ் கேட்டு,  டீச்சரை டாக்டரா மாத்திடுவீங்க போல இருக்கே. பாருங்க... நம்ம மந்திரக் கம்பளமும் கோவிச்சுக்கிட்டு உள்ளே போயிருச்சு'' என்றாள் ஷாலினி.

''இப்போ என்ன செய்யணும்னு சொல்றே?'' என்று கேட்டான் அருண்.

''குளிர்காலத்தில், உலகில் உள்ள வித்தியாசமான இடங்கள், வித்தியாசமான விஷயங்களை ஒரு ரவுண்டு பார்த்துட்டு வரலாமே'' என்றாள் ஷாலினி.

''சினிமாவுக்குப் போறதுக்கே விண்வெளி வீராங்கனை மாதிரி வந்துட்டு, பேச்சைப் பாரு... சரி போகலாம்''    என்றார் டீச்சர்.

அவர்கள் உற்சாகத்துடன் மந்திரக் கம்பளத்தில் ஏறினார்கள். அடுத்த நொடி, அத்தனை பேருமே ஸ்வெட்டர், குல்லா காஸ்ட்யூமுக்கு மாறிவிட்டார்கள்!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''என்னைக் கிண்டல் செய்தீங்க... இப்போ, நீங்களும் விண்வெளி வீரர்கள்தான்'' என்று சிரித்தாள் ஷாலினி.

முதலில், மந்திரக் கம்பளம் அவர்களை ஒரு பள்ளத்தாக்கு நகரில் இறக்கியது. இருள் சூழ்ந்த அந்த நகரின் மையப் பகுதியில் 'பளீர்’ வெளிச்சத்தில் ஒளிவட்டம் தெரிந்தது.

''இது, நார்வே நாட்டில் இருக்கிற 'ருஜகான்’ என்கிற இடம். இந்த நகரம் பள்ளத்தாக்கில் இருப்பதால், குளிர்காலத்தில் சூரிய வெளிச்சமே விழாது. இங்கே இருக்கிற மக்கள், மலை உச்சிக்கு ஒரு கேபிள் காரில்  போய், சூரியனுக்கு ஹாய் சொல்லிட்டு வருவாங்க. 100 வருஷமா இப்படியே போச்சு. இந்த வருஷம் ஜூலை மாதம், சூரிய வெளிச்சத்தை நகரத்துக்கு உள்ளே வரவெச்சுட்டாங்க'' என்றார் டீச்சர்.

எல்லோரும் வெளிச்சம் வரும் திசையைப் பார்த்தார்கள். 450 மீட்டர் உயரமான மலையின் உச்சியில் மூன்று பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டு, அதில் சூரியக் கதிர்கள் பட்டு, நகருக்குள் பிரதிபலித்துக்கொண்டிருந்தது.

''சூரியனைப் பார்க்க இங்கே இப்படி ஒரு ஐடியா செஞ்சிருக்காங்க. இதேபோல உலகம் முழுவதும் குளிர்காலத்தை வரவேற்று நடக்கும் கொண்டாட்டங்கள் பல உண்டு. கனடாவில் உள்ள க்யூபெக் (னிuமீதீமீநீ) நகரில் நடக்கும் பனித் திருவிழா ரொம்பவே பிரபலம். இந்த வருஷம் பிப்ரவரி 1 முதல் 17 வரை நடந்தது. நாம அந்த டைமுக்கே போய்ப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

அந்தப் பனி நகரில் பிரமாண்டமான பனிச் சிற்பங்கள், பனி மாளிகைகளை உருவாக்கி இருந்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அடுத்து சென்ற இடம், ஜப்பான். ''இதுவும் பிப்ரவரி மாதத்தில் ஒரு வாரத்துக்கு நடந்த விழாதான். ஜப்பானின் நான்காவது பெரிய நகரம் இந்த சப்போரோ. இங்கே ஒவ்வொரு வருஷமும் 'சப்போரோ பனித் திருவிழா’ (ஷிணீஜீஜீஷீக்ஷீஷீ ஷிஸீஷீஷ் திமீstவீஸ்ணீறீ) நடக்கும். 1950-ல் இதே பூங்காவில், ஆறு ஸ்கூல் பசங்க சில பனிச் சிற்பங்களை உருவாக்கினாங்க. இப்போ இந்தத் திரு விழாவுக்கு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சிற்பக் கலைஞர்கள் வர்றாங்க. இதைப் பார்க்க  சராசரியாக ஆண்டுக்கு இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் வர்றாங்க'' என்றார் டீச்சர்.

பல்வேறு நாட்டுக் கலைஞர்கள், தங்கள் நாட்டின் சிறப்பான இடங்களைப் பனியில் உருவாக்கி, அங்கே தங்களது தேசியக் கொடியையும் வைத்திருந்தார்கள். ''அட... நம்ம தாஜ்மஹால்கூட இருக்கே'' என்ற கயல், நமது தேசியக் கொடிக்கு சல்யூட் வைத்தாள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

ஸ்பெயின், மெக்ஸிகோ, ரியோ-டி-ஜெனிரோ எனப் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச்சென்ற மந்திரக் கம்பளம், அங்கே நடக்கும் குளிர்காலத் திருவிழாக் களைச் சுற்றிக் காண்பித்துவிட்டு வீடு திரும்பியது.

''இப்போ சினிமாவுக்குப் போகலாமா?'' என்று கேட்டதும், ஸ்வெட்டரைக் கழற்றிவிட்டு வந்தாள் ஷாலினி.

''இங்கே பாரேன்... மைனஸ் டிகிரி குளிர் எடுக்கிற இடங்களுக்குப் போய்ட்டுவந்ததில், ஷாலினிக்கு குளிர் விட்டுப்போச்சு!'' என்றான் கதிர்.