மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

ஆலும் வேலும் ஆரம்பித்த இடம் !கே.யுவராஜன் ஓவியம்: பிள்ளை

##~##

''டீச்சர்... டீச்சர்'' என்று அழைக்கும் குரலைக் கேட்டு கண் விழித்தார் மாயா டீச்சர்.

அவரது கட்டிலைச் சுற்றி கயல், ஷாலினி, கதிர் மற்றும் அருண் நின்றிருந்தனர். ''ஹாய் பசங்களா... என்ன அதிகாலையிலே?'' என்று கொட்டாவியுடன் கேட்டார் டீச்சர்.

''இப்போ மணி ஒன்பது'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சர், சட்டென எழுந்து அமர்ந்தார். ''ஓ... ஸாரி! நேத்து ஊருக்குப் போய்ட்டு ராத்திரி ஒரு மணிக்குதான் வந்தேன். அந்த அசதியில் தூங்கிட்டேன். இன்னிக்கி நாம கதிர் பிறந்த நாளைக் கொண்டாட வெளியே போறதா பிளான் பண்ணினோமே... அரை மணி நேரத்தில் கிளம்பிடலாம். 'ஹேப்பி பர்த்டே’ கதிர்'' என்று கதிரின் கையைக் குலுக்கினார்.

''தேங்க் யூ டீச்சர்'' என்றான் புத்தாடையில் இருந்த கதிர்.

மாயா டீச்சர் வாஷ்பேசின் அருகே சென்று, பேஸ்ட் மற்றும் பிரஷை எடுத்தார். ''டீச்சர், இன்னிக்கி  கதிருக்காக பல் துலக்காமல் விட்டுருங்களேன். அவன் பல நாட்கள் பல் துலக்காமல் இருந்திருக்கான்'' என்று கிண்டலுடன் சொன்னான் அருண்.

''பிறந்தநாள் அதுவுமா, ஆளாளுக்கு அவனைக் கலாய்க்காதீங்கப்பா. உலகத்துக்கே பல் துலக்கச் சொல்லிக்கொடுத்தது கதிர்தான்'' என்றார் டீச்சர்.

''எங்களைச் சொல்லிட்டு நீங்க கலாய்க்கிறீங்களே'' என்றாள் ஷாலினி.

''இல்லை ஷாலினி, நிஜமாத்தான் சொல்றேன்.  'நாங்க ரொம்ப நாகரிகமானவங்க’ என்று சொல்லிக்கொள்ளும் இங்கிலாந்து, அமெரிக்க மக்களிடம் 18-ம் நூற்றாண்டில்தான் பல் துலக்கும் பழக்கம் வந்தது. ஆனால், சிந்து சமவெளியில் வாழ்ந்த இந்தியர்களாகிய நாம், நான்காயிரம் வருடங்களுக்கு முன்பே பல் துலக்க ஆரம்பிச்சுட்டோம்னு வரலாற்றுப் பதிவுகள் சொல்கின்றன. கதிரும் இந்தியன்தானே... அதனால்தான் அப்படிச் சொன்னேன்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''அப்படினா பேஸ்ட்டைக் கண்டுபிடிச்சது நான்தானா?'' என்று குறும்புடன் கேட்டான் கதிர்.

''அதுதான் இல்லை. நாம எதற்கும் ஆரம்பமாக இருப்போம். மத்தவங்க அதை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துட்டுப்போய், காப்பிரைட்டும் வாங்கி, நம்மகிட்டேயே வித்துடுவாங்க. பற்பசை விஷயத்திலும் அப்படித்தான் நடந்திருக்கு. நான் குளிச்சுட்டு வர்றேன். மற்றதை அப்புறம் பேசுவோம்'' என்று சொல்லிவிட்டு, குளியல் அறைக்குள் சென்றார் மாயா டீச்சர்.

அவர் திரும்பி வந்ததும்... ''டீச்சர், இப்போ நாங்க சொல்றோம். இந்தியர்கள் குறுமணலையும், மரங்களின் எரிந்த சாம்பலையும் பல் துலக்கப் பயன்படுத்தினாங்க. சீனா மற்றும் எகிப்தில் இருந்து வியாபாரம் செய்ய வந்த வணிகர்கள், இதைப் பார்த்து, 'இது என்னடா கெட்ட பழக்கம்’னு தயக்கத்தோடு பல் துலக்க ஆரம்பிச்சு... அதன் அருமை புரிஞ்சதும், தங்கள் நாட்டிலும் பல் துலக்கும் பழக்கத்தைப் பரப்பினாங்க'' என்றான் அருண்.

''கௌதம புத்தர் காலத்தில் சாம்பலுக்கு அடுத்தக் கட்டமாக வேப்பங் குச்சி, ஆலம் குச்சிகளால் பல் துலக்க ஆரம்பிச்சாங்க. எகிப்தியர்கள், பல் துலக்க ஒரு பொடியை உருவாக்கினாங்க. புதினா இலை, மிளகு மற்றும் 20 வகையான தானியங்களைச் சேர்த்து அவங்க தயாரிச்சதுதான் உலகின் முதல் பல்பொடி.  இதை, அரசர்களும் பிரபுக்களும் பயன்படுத்தினாங்க'' என்றாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''தங்களின் பல்பொடித் தயாரிப்புக் குறிப்புகளை பாப்பிரஸ் தாளில் எழுதினாங்க. அந்தத் தாள்களில் சில, இப்பவும் ஆஸ்திரேலியாவின் வியன்னா அருங்காட்சியகத்தில் இருக்கின்றன'' என்றான் கதிர்.

''அதுக்குள்ளே இதை எல்லாம் யார் சொன்னது?'' என்று வியப்புடன் கேட்டார் மாயா டீச்சர்.

''வேற யாரு... நம்ம மந்திரக் கம்பளம்தான்'' என்றபடி நான்கு பேரும் விலகி நின்றார்கள். அங்கே மந்திரக் கம்பளம் ஒரு வெண்திரையாக மாறி, பழங்காலத்தை காட்டிக்கொண்டிருந்தது.

''இனி, திரையில் பார்க்கிறதுக்குப் பதிலாக நேரிலேயே போவோம். கதிரின் பிறந்தநாளுக்காக வித்தியாசமான இடங்களுக்குப் போன மாதிரியும் இருக்கும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் பெரிய டூத் பிரஷாக மாறியது. அதில் வரிசையாக ஏறிக்கொண்டதும் விண்ணில் கிளம்பியது. சற்று நேரத்தில், ஒரு கட்டடத்தின் சுவரைத் துளைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தது. அங்கே ஒருவர் இருந்தார்.

''உஷ்... சத்தம் வராமல் கவனிங்க'' என்றார் டீச்சர்.

இவர்களுக்கு முதுகைக் காட்டியபடி இருந்த அந்த மனிதர், ஒரு பாத்திரத்தில் பொடி ஒன்றைத் தயாரித்தார். பிறகு, அதை எடுத்துக்கொண்டு அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

''யார் இவர்?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இவர் பெயர், ஷிர்யாப் (Ziryab). ஈரான் நாட்டுக்காரர். கவிதை எழுதுவது, இசை அமைப்பது, பாடுவது என சகலகலா வல்லவர். இவர்தான், எகிப்தியர்களின் பல்பொடிக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து, 9-ம் நூற்றாண்டில் புதிய பல்பொடியைக் கண்டுபிடிச்சார். நறுமணப் பொருட்களைச் சேர்த்து, பொது மக்களிடம் விற்றார். 'சுவாசப் புத்துணர்ச்சி, நறுமணம்’னு இப்போ, விளம்பரங்களில் வரும் வாசகங்களுக்கு முன்னோடியாக, இவரது பல்பொடி இருந்தது. இந்தப் பல்பொடி, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, ஸ்பெயின் மக்கள் போட்டி போட்டு வாங்கினாங்க'' என்றார் டீச்சர்.

''அது சரி, எதுக்கு உஷ்... புஷ்னு சொன்னீங்க?'' என்று கேட்டாள் ஷாலினி.

''இவர், தன்னுடைய பல்பொடியில் என்ன மாதிரியான பொருட்களைச் சேர்த்தார் என்பதை கடைசி வரைக்கும் யாருக்குமே சொல்லலை. இதனால், அடுத்த 10 நூற்றாண்டுகள் வரை மற்ற நாடுகளில் சாம்பலும் மரக் குச்சிகளுமே பல் துலக்கப் பயன்படுத்தப்பட்டன. 1800-ம் ஆண்டுக்குப் பிறகுதான், இதில் மாற்றம் ஏற்பட்டது'' என்றார் டீச்சர்.

ஈரானில் இருந்து கிளம்பிய மந்திரக் கம்பளம், நூற்றாண்டுகளைக் கடந்து, கோல்கேட் என்ற நிறுவனத்தின் வாசலில் இறங்கியது. ''ஆகா... நியூயார்க் நகருக்கு வந்துட்டோம்'' என்றான் அருண்.

அவர்கள் அந்த நிறுவனத்தைச் சுற்றிப் பார்த்தவாறு பேச ஆரம்பித்தார்கள், ''நவீன பல்பொடியின் ஆரம்பம் இங்கிலாந்தில் தொடங்கியது. உப்பு, படிகாரம், லவங்கப்பட்டை ஆகியவற்றைப் பொடியாக்கி பல்பொடியைத் தயாரித்தார்கள். 1850-ம் ஆண்டு இங்கிலாந்தின் பல் மருத்துவர், ஜான் ஹாரிஸ் (Dr. John Harris), 'பல்பொடியில் சுண்ணாம்பையும் சேர்க்கலாம்’ என்றார்.

இந்த நேரத்தில், பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் நியூயார்க்கின் புகழ்பெற்ற நிறுவனமாக இருந்தது கோல்கேட் அண்ட் கம்பெனி. இதன் நிறுவனர், வில்லியம் கோல்கேட். இவர் பல்பொடியைத் தயாரிக்க முடிவுசெய்தார். உப்பு, படிகாரம், சுண்ணாம்பு எனப் பல்வேறு பொருட்களைச் சேர்த்து, 1873-ல் சின்னச் சின்ன டின்களில் அடைத்து, கோல்கேட் பல்பொடியை விற்பனைக்கு அனுப்பினார். இது, உலகம் முழுக்க வரவேற்பைப் பெற்றது. இதுக்கு அப்புறம்தான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து மக்களிடம், 'தினமும் காலையில் பல் துலக்க வேண்டும்’ என்ற பழக்கம் வந்தது'' என்றார் டீச்சர்.

''எங்க தாத்தா, காலியான பழைய கோல்கேட் டின்னை கலெக்ஷன்ல வெச்சிருக்கார்'' என்றாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆனால், கொஞ்ச நாளிலேயே சுண்ணாம்பு கலந்த பல்பொடி உடம்புக்கு  கெடுதல்களை ஏற்படுத்துவதாகத் தெரியவந்தது. 'எதுக்குடா வம்பு?’ என்று நிறைய பேர் பழையபடி சாம்பலை யூஸ் பண்ண ஆரம்பிச்சாங்க. அப்போது இங்கிலாந்தின் பல் மருத்துவர், வாஷிங்டன் வென்ட்வொர்த் ஷெஃப்பில்ட் (Washington Wentworth Sheffield) புதிய விஷயத்தைக் கண்டுபிடிச்சார். அதுதான், கால்சியம் ஃப்ளோரைடு. 'இது பற்களைச் சுத்தம் செய்வதுடன், உடம்புக்கு எந்தக் கெடுதலையும் ஏற்படுத்தாது’ என்று சொன்னார். இங்கேதான், பல்பொடியில் இருந்து பற்பசை என்ற கட்டம் வந்தது. டியூப்களில் அடைத்து விற்க ஆரம்பிச்சாங்க. ஷெஃப்பில்ட் கண்டுபிடிச்ச டியூப் டிசைனைத்தான் இன்றைக்கு நாம பயன்படுத்துறோம். சரி, மற்றதைப் போய்க்கிட்டே பேசலாம்'' என்றார் டீச்சர்.

இப்போது, மந்திரக் கம்பளம் டூத் பேஸ்ட் டியூப்பாக மாறி, அவர்களைச் சுமந்தது.

''சில வருடங்களுக்குப் பிறகு, மறுபடியும் பிரச்னை ஆரம்பிச்சது. கால்சியம் ஃப்ளோரைடும் உடம்புக்கு நல்லது கிடையாதுனு சொல்லி, அமெரிக்கப் பல் பாதுகாப்புச் சங்கம் 1937-ல் இந்தப் பற்பசைக்குத் தடை போட்டது. பல்வேறு மருத்துவக் குழுக்களின் விவாதம், ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தாங்க. அதாவது, கால்சியம் ஃப்ளோரைடு ஓகேதான். ஆனால், 'பெரியவர்களுக்கு ஓர் அளவும் சிறியவர்களுக்கு ஓர் அளவும் இருக்கணும்’னு நிபந்தனை போட்டாங்க. மறுபடியும் பற்பசைகள் விற்பனைக்கு வந்தது'' என்றார் மாயா டீச்சர்.

அப்போது, மந்திரக் கம்பளம் அவர்களை வீட்டில் இறக்கியது. ''அப்படின்னா எங்களை மாதிரி சின்னப் பசங்க, டூத் பிரஷ் மாதிரிதான் டூத் பேஸ்ட்டையும் தனியாப் பயன்படுத்தணுமா?'' என்று கேட்டான் கதிர்.

''நியாயமாக அப்படித்தான் செய்யணும். ஆனால், இந்தியா மாதிரி வளரும் நாடுகளில் இதற்கான விழிப்பு உணர்வு இல்லை. அதனால், இருவருக்குமே பொருந்துகிற மாதிரி தயாரிக்கிறாங்க. இன்றைய பற்பசைகளில் சோடியம் ஃப்ளோரைடு, சோடியம் மோனோஃப்ளோரோபாஸ்பேட் மற்றும் ஸ்டென்னஸ் ஃப்ளோரைடு போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஸ்டென்னஸ் ஃப்ளோரைடு அதிகம் இருக்கும் பற்பசை, ஈறுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. முக்கியமான விஷயம்... பற்களைச் சுத்தம் செய்வதில் பற்பசையின் பங்கு கொஞ்சம்தான். பிரஷ் மூலம் நாம பற்களை எப்படித் தேய்க்கிறோம் என்பதில்தான் பற்களின் சுத்தம் இருக்கு'' என்றார் டீச்சர்.

''புரிஞ்சுதா கதிர்... அடுத்த 'பர்த் டே’வுக்காவது பல் துலக்கு'' என்று கோரஸாகச் சொன்ன அருண், ஷாலினி மற்றும் கயலை துரத்த ஆரம்பித்தான் கதிர்.