மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ஹென்றி ஃபோர்டு !

சுட்டி நாயகன் - ஹென்றி ஃபோர்டு !

ஆயிஷா இரா.நடராசன் ஓவியம்: பாரதிராஜா

##~##

அவனுக்கு அப்போது நான்கு வயது. அம்மா மேரி, பண்ணைக்குச் செல்லும்போதெல்லாம், அவனும் ஒட்டிக்கொள்வான்.

''ஹென்றி, இதைத் தொடாதே... ஹென்றி, அதை உடைத்துவிடாதே... ஹென்றி, அதை ஏன் நோண்டுகிறாய்'' இப்படி நாள் முழுதும் 'ஹென்றி... ஹென்றி’ என அம்மா விரட்டிக்கொண்டே இருப்பார். அப்படி ஒரு குறும்புத்தனம் அவனிடம். ஹென்றிக்கு இரண்டு அண்ணன்கள் இருந்தார்கள். மார்கரெட் என்பது தங்கையின் பெயர்.

ஒருநாள், பண்ணை மேற்பார்வையாளரின் கைக் கடிகாரம் சரியாக ஓடவில்லை. அதை, அப்படியும் இப்படியும் ஆட்டிக்கொண்டிருந்தார். அங்கே வந்த  ஹென்றி, கைக் கடிகாரத்தை வாங்கி, பகுதி பகுதியாகக் கழட்டிப் போட்டான். அம்மா, புத்தகம் படிக்கும்போது பயன்படுத்தும் பூதக் கண்ணாடியை எடுத்துக்கொண்டான். கடிகாரத்தை ஆராய்ந்தான். சற்று நேரத்தில், அந்தக் கைக் கடிகாரம் ஓட ஆரம்பித்தது. கொஞ்ச நாட்களில் 'வாட்ச் பாய்’ என அந்த வட்டாரத்தில் பலரும் புகழும் அளவுக்கு, கைக் கடிகாரங்களுடன் புகுந்து விளையாடினான் ஹென்றி.

ஆறு வயதில் மிக்சிகன் நகர தேவாலயப் பள்ளியில் சேர்க்கப்பட்டபோது, ஹென்றியிடம் பாக்கெட் வாட்ச் ஒன்று இருந்தது. அது, பெரியப்பா அவனுக்குக் கொடுத்தது. விரைவில் அந்தப் பள்ளியில் பெரிய வகுப்பு படிக்கும் மாணவர்களே அசந்துபோகும் அளவுக்குப் பல சாதனைகள் படைத்தான். அப்போது, ஆசிரியர்கள் பலர் சைக்கிளில் வருவார்கள். எந்த சைக்கிளாக இருந்தாலும் அக்கு அக்காகப் பிரித்து, எண்ணெய் இட்டு, மறுபடியும் இணைத்துத் தருவான். விரைவிலேயே, பெடல் பின்நோக்கியும் சுழலும் ஒரு புதுவகை பல்சக்கர அமைப்பை உருவாக்கினான். 'வாட்ச் பாய்’ பெயர் மாறி, அவனுக்கு 'சைக்கிள் பாய்’ என்ற பெயர் வந்தது.

சுட்டி நாயகன் - ஹென்றி ஃபோர்டு !

அம்மாவுக்கு, ஹென்றியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் கொஞ்சம் பயமாக இருந்தது. காரணம், பள்ளியில் அவனைப் பற்றி நிறையப் புகார்கள். 'படிப்பில் கவனம் செலுத்துவது இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு கருவியைக் கழட்டிப் போட்டு உட்கார்ந்துவிடுகிறான்’ என்று சொன்னார்கள். அம்மாவுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஊரில், அப்போது அறிமுகமாகி இருந்த மின் இணைப்புடன்கூடிய நீர் இறைக்கும் மோட்டார்தான் ஹென்றிக்கு பெரிய ஈர்ப்பாக இருந்தது. அவனுக்கு அதன் செயல்பாடுகள் அத்துபடி. அதனால், எந்த நீர் இறைக்கும் மோட்டார் பழுது என்றாலும் பள்ளிக்கே சென்று ஹென்றியை அழைத்துச் செல்வார்கள். இதுவும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. முன்பு வாட்ச் பாய்... பிறகு, சைக்கிள் பாய்... இப்போது 'மோட்டார் பாய்’ ஆகி இருந்தான் ஹென்றி.

ஆனால், அம்மாவின் பயமும் கவலையும் விரைவில் நீங்கியது. ஹென்றியின் புகழ் எங்கும் பரவியது. அவனை அழைத்து, தாமஸ் ஆல்வா எடிசன் தனது மோட்டார் கண்டுபிடிப்பைச் சரிபார்க்கச் சொன்னார். ஹென்றிக்கு வேலையும் தர எடிசன் முன்வந்தபோது, ஊரே அசந்து நின்றது.

பிற்காலத்தில், ஹென்றி உருவாக்கிய கார்கள் ஊரெங்கும் ஓட ஆரம்பித்தன. ஃபோர்டு காரை கண்டுபிடித்தார். 'ஹென்றி ஃபோர்டு’ என்று புகழ்பெற்ற ஹென்றி ஒரு சுட்டி நாயகன் அல்லவா!