மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

செஞ்சுரி அடிக்கும் கவச வீரர்கள்!

''ஹேப்பி நியூ இயர்''

##~##

புத்தாண்டு தினத்தில், உயிரியல் பூங்காவுக்கு மாயா டீச்சருடன் வந்திருந்த சுட்டிகள், தண்ணீர்த் தொட்டிக்குள் 'தேமே’ என இருந்த ஆமைகளுக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.

திடீரெனத் திரும்பிய கயல், ''ஏன் டீச்சர் ஆமைகளுக்குக் காது கேட்குமா?'' என்று சந்தேகத்தைக் கிளப்பினாள்.

''ஓ... மனிதர்களின் காது கேட்கும் திறன், 20 முதல் 20,000 அதிர்வெண்கள். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் ஆமைகளால் 200 முதல் 800 அதிர்வெண்களில் கேட்க முடியும். ஸோ, உங்க நியூ இயர் வாழ்த்தை இந்த ஆமைகள் கேட்டிருக்கும். 'பதிலுக்குச் சொல்ல முடியலையே’னு வருத்தப்பட்டிருக்கும்'' என்று சிரித்தார் டீச்சர்.

''நீண்ட கால உயிரினங்களில் ஆமையும் ஒன்றுதானே டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''ஆமா கதிர், கிட்டத்தட்ட 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, டைனோசர் காலத்திலிருந்தே ஆமைகள் இருக்கின்றன.

அதிக ஆண்டுகள் உயிர்வாழும் விலங்குகளில் முக்கியமானது ஆமைகள்தான். அதுக்கான காரணங்களில் ஹார்ட் பீட்டும் ஒன்று. ஆமைகளுக்கு இதயத் துடிப்பு ஒரு நிமிடத்துக்கு 20 முறைதான். இதுவே நமக்கு 70 முதல் 100 முறை துடிக்குது. இதனால், ஆமைகளின் வளர்ச்சி மெதுவாக இருக்கும். அதேசமயம், நீண்ட ஆயுள் இருக்கும்'' என்றார் டீச்சர்.

அவர்கள் பேசிக்கொண்டே மரங்கள் அடர்ந்த ஓர் இடத்தில் உட்கார்ந்தார்கள். பிஸ்கட் பாக்கெட்டைப் பிரித்து, சாப்பிட ஆரம்பித்தார்கள். ''அப்படினா ஆமைகளின் ஆயுள் எவ்வளவு டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''சராசரியாக 150 ஆண்டுகள் வாழும். இதைத் தாண்டி டபுள் செஞ்சுரி அடிச்ச ஆமைகளும் இருக்கு ஷாலினி. ஆனாலும், பதிவு செய்யப்பட்ட விவரங்களின்படி அதிக ஆண்டுகள் வாழ்ந்த ஆமையின் பெயர், டுயி மாலிலா. இது, நியூஸிலாந்துக்கு அருகில் உள்ள டாங்கா என்ற தீவு நாட்டில் அரச குடும்பத்தில் வளர்க்கப்பட்டது. 1777-ம் ஆண்டு பிறந்த இந்த ஆமையை, கேப்டன் குக் என்ற பிரிட்டிஷ் ஆய்வாளர், டாங்கா அரசருக்குப் பரிசாகக் கொடுத்தார். 188 ஆண்டுகள் வாழ்ந்த இந்த ஆமை, 1965, மே 19-ம் தேதி இறந்தது. ஆஸ்திரேலிய உயிரியல் பூங்காவில் இருந்த ஹாரியெட் என்ற ஆமை 2006-ம் ஆண்டு இறந்தபோது, அதன் வயது 176. நம் இந்தியாவின் அலிப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்த 'அல்டாப்ரா’ (கிறீபீணீதீக்ஷீணீ ரீவீணீஸீt tஷீக்ஷீtஷீவீsமீ) என்ற பெரிய வகை ஆமையும் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்தது. 1875-ம் ஆண்டு அலிப்பூர் பூங்காவைத் தொடங்கியபோது, லார்ட் வெல்லெஸ்லி (லிஷீக்ஷீபீ கீமீறீறீமீsறீமீஹ்) என்பவர், இந்த ஆமையைக் கொடுத்தார். அதற்கு 'அத்வைதா’ என்று பெயர் வைத்தார்கள். 2006 மார்ச் 23-ம் தேதி இறந்தபோது, 'இதன் வயது 200-க்கு மேல் இருக்கலாம்’னு சொல்றாங்க'' என்றார் டீச்சர்.

''அடேங்கப்பா... ஆமைகள் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து என்ன சாதிக்குமோ'' என்றான் அருண்.

''பல தடைகளைத் தாண்டி இந்த நிலைக்கு வர்றதே பெரிய சாதனைதான் அருண். ஆமை என்றதும் ஓடு நினைவுக்கு வரும். எலும்புகள் பல அடுக்குகளாகச் சேர்ந்து உருவாவதுதான் இந்த ஓடு. இந்த உறுதியான ஓடு உருவாவதற்குள், முட்டைக்குள் இருக்கும்போதே அதுக்கு பிரச்னைகள் ஆரம்பிச்சுடும். அதை நேரில் பார்த்தால் புரியும்'' என்ற மாயா டீச்சர், தன் ஷோல்டர் பேகில் இருந்து மந்திரக் கம்பளத்தை எடுத்தார்.

''இப்படி எங்காவது கிளம்புவோம்னு தெரிஞ்சுதான் மந்திரக் கம்பளத்தைக் கையோடு கொண்டுவந்தீங்களா?'' என்றாள் கயல்.

கம்பளம், ஆமை வடிவத்துக்கு மாறியது. எல்லோரும் ஏறிக்கொண்டார்கள். ''ஆமை மாதிரி மெதுவாப் போகுமோ'' என்றான் கதிர். ஆனால், ராக்கெட் போல சீறிக் கிளம்பியதும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆமைகளைப் பொதுவாக கடல் ஆமைகள், நில ஆமைகள் என இரண்டு வகைகளாகப் பிரிப்பார்கள். ஆங்கிலத்தில் நில ஆமைகளை ஜிஷீக்ஷீtஷீவீsமீs என்றும், கடல் ஆமைகளை ஜிuக்ஷீtறீமீ என்றும் சொல்வார்கள். நாடுகளுக்கு நாடு இந்தப் பெயரில் சில வித்தியாசங்கள் இருக்கும்.  இந்த இரண்டிலும் சேர்த்து, கிட்டத்தட்ட 300 இனங்கள் இருந்தன. அதில், பல இனங்கள் அழிந்துவிட்டன. சில, அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இதற்குக் காரணம், இயற்கை எதிரிகளான சில உயிரினங்கள் மற்றும் மனிதர்களின் சுயநலம்தான்'' என்றார் டீச்சர்.

''கேள்விப்பட்டிருக்கோம் டீச்சர். ஆமைகளின் ஓடுகள் மூலம் அலங்காரப் பொருட்களும், முட்டையில் வாசனைத் திரவியங்களும் தயாரிக்கிறாங்களாம். இதன் ரத்தம், மூலநோய்க்கு மருந்தாகப் பயன்படுகிறதாம். இறைச்சியாகவும் சாப்பிடுறாங்க. இதனால், நிறைய ஆமைகள் வேட்டையாடப்படுகின்றன'' என்றாள் ஷாலினி.

''அது மட்டுமா? அதிர்ஷ்டம், வாஸ்து என சில மூடநம்பிக்கையாலும் ஆமைகள் நாடுவிட்டு நாடு, கப்பல் மற்றும் விமானங்களில் கடத்தப்படுவதையும் பரிசோதனையில் சிக்குவதையும் அடிக்கடி நியூஸில் பார்க்கிறோமே'' என்றான் அருண்.

''வெள்ளை ஆமை, நட்சத்திர ஆமை என சில அபூர்வமான ஆமைகள் லட்சங்களில் விற்கப்படுகின்றன. பனி சூழ்ந்த நிலப்பகுதியிலும் வெப்பம் மிகுந்த இடங்களிலும் சமாளித்து வாழும் திறமை மிக்க ஆமைக்கு மனிதர்களிடம் இருந்து தன்னைக் காத்துக்கொள்வது பெரிய சவாலாக இருக்கு'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அவர்களுக்கு சில நிலத்து ஆமைகள் சிலவற்றைக் காட்டிய மந்திரக் கம்பளம், கடலுக்குள் அழைத்துச் சென்றது. அங்கே ஒரு பெரிய ஆமை நீந்தியபடி மேல் நோக்கி வந்துகொண்டிருந்தது. ''அடேங்கப்பா... எவ்வளவு பெரிய ஆமை'' என்று வியந்தாள் கயல்.

''கடல் ஆமைகளில், இது 'பேராமை’  என்ற வகையைச் சேர்ந்தது. சராசரியாக 500 கிலோ இருக்கும். 'தோல்முதுகு ஆமை’ என்று ஒரு வகையும் இருந்தது. இது 900 கிலோ வரை வளரும். 110 மில்லிமீட்டரே உடைய சிறிய ஆமை வகைகளும் இருக்கு. நம் இந்தியக் கடல் பகுதியில் பேராமை, சித்தாமை, அழுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐந்து வகைகள் இருக்கு. ஆண் ஆமைகளைவிட, பெண் ஆமைகள் உருவத்தில் பெரிதாக இருக்கும். கடலில் வாழும் ஆமைகளுக்குக் கால்களே துடுப்பாகச் செயல்படும். கடற்பாசிகள், ஜெல்லி மீன்கள், நண்டுகளை உணவாகச் சாப்பிடும். நிலத்தில் வாழும் ஆமைகள், தாவர உண்ணிகள். புற்கள், பழங்கள், விதைகள், பூக்களைச் சாப்பிடும். முட்டைகளைப் பொரிக்க சூரிய வெப்பம் தேவைப்படுவதால், ஆழ்கடலில் வசிக்கும் ஆமைகளும் முட்டைகளை இடுவதற்குக் கடற்கரைக்குத்தான் வந்தாகணும். இப்போ, இந்தப் பெண் ஆமையும் முட்டை இடுவதற்குத்தான் போகுது'' என்றார் டீச்சர்.

''இது, 'பெண் ஆமை’னு எப்படிக் கண்டுபிடிச்சீங்க?'' என்று கேட்டான் கதிர்.

''அதன் வால் பகுதியைக் கவனிங்க.  நுனி கீழ் நோக்கி வளைந்திருக்கு. ஆணுக்கு மேல் நோக்கி இருக்கும். பொதுவாக, இதை வைத்துதான் அடையாளம் கண்டுபிடிப்பாங்க'' என்றார் மாயா டீச்சர்.

அந்த ஆமையுடன் சேர்ந்து கடற்கரைக்கு வந்தார்கள். ''ஆமைகள், ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக 70 மீட்டர்தான் நடக்குமாம். இந்த வேகத்தில் பின் தொடர்ந்தால், நாம் எப்போ போய்ச் சேர்வது?'' என்றான் அருண்.

''அதுவும் சரிதான்! ஏற்கெனவே இருக்கிற முட்டைகளைப் போய்ப் பார்ப்போம். தமிழகம், ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரைப் பகுதிகளில் நவம்பர் முதல் ஏப்ரல் வரை லட்சக்கணக்கான சித்தாமைகள், முட்டைகள் இடுவதற்காக வரிசையாக வரும்.'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

அந்தக் கடற்கரையின் சற்றுத் தொலைவில் பாறைகள் இருந்த இடத்துக்குச் சென்றார்கள். ஓர் இடத்தில் தோண்டினார் மாயா டீச்சர். அங்கே சிறு சிறு கிண்ணங்கள் போன்று குழிகள் இருந்தன. நிறைய முட்டைகள் இருந்தன. ''இதுக்கு கூட்டு வளைகள் என்று பெயர். இப்படி கூட்டு வளைகளை உருவாக்கும் ஆமை, ஒருமுறைக்கு 200 முட்டைகள் வரை இடும். பெரும்பாலும் இரவில்தான் முட்டை இடும். மண்ணில் புதைத்துவிட்டு, கடலுக்குக் கிளம்பிடும். அடைகாக்கும் வேலை எல்லாம் கிடையாது. ஆமைகளின் வகையைப் பொருத்து 60 முதல் 100 நாட்களில் முட்டையை உடைச்சுக்கிட்டு குஞ்சுகள் தானாக வெளியே வரும். ஆமைகளுக்குப் பற்கள் கிடையாது. தாடை அருகே 'முட்டைப் பல்’ என்கிற கூர்மையான கொம்பு மாதிரியான அமைப்பு இருக்கும். இதன் மூலம் முட்டையை உடைச்சுக்கிட்டு குஞ்சு வெளியே வரும். பிறகு, மெதுவாக கடலை நோக்கி நடக்க ஆரம்பிக்கும்'' என்றார் டீச்சர்.

சற்றுத் தொலைவில் முட்டைகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்த ஆமைக் குஞ்சுகள், மெதுவாக ஊர்ந்துகொண்டிருந்தன. அப்போது வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த ஒரு கழுகு, வேகமாக கீழே வந்தது. நொடியில் ஒரு ஆமைக் குஞ்சை கவ்விக்கொண்டு மேலே பறந்தது.

''அடடா... அந்த ஆமைக் குஞ்சு அவ்வளவுதானா?'' என்று பதறினாள் ஷாலினி.

''ஆமாம்! முட்டையாக இருக்கும்போதே நரிகள், ஓநாய்கள் குழிகளைத் தோண்டி முட்டைகளைச் சாப்பிட்டுவிடும். அதையும் மீறி இப்படி வெளியே வந்த குஞ்சுகளை, கடல் பறவைகள் இரையாக்கிக்கொள்ளும். இதை எல்லாம் தாண்டி, சில ஆமைகள் கடலுக்கு வந்து சேரும். அப்போ, மீனவர்களின் வலையில் சிக்கினால், முடிஞ்சது கதை. அதையும் மீறி, ஆமையின் ஓடும் நன்கு வளர்ச்சி பெற்று, பாதுகாப்பான நிலையை அடையணும். 1,000 ஆமை முட்டைகளில் ஒன்றுதான் இந்த நிலைக்கு வந்து வயதில் செஞ்சுரி அடிக்கும்'' என்றார் டீச்சர்.

''போராடினால்தான் நிலைக்க முடியும் என்பதற்கு ஆமையின் வாழ்க்கை ஒரு எடுத்துகாட்டுனு சொல்லுங்க'' என்றாள் கயல்.

''சரியாச் சொன்னே'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு வீட்டுக்குக் கிளம்பியது.