பொள்ளாச்சி நசன் பா.காளிமுத்து
##~## |
இனிதாகக் கற்றுவரும் தமிழ்த் தொடரின் இறுதிப் பகுதிக்கு வந்துவிட்டோம். உங்களிடம் கற்பவர், தன்னம்பிக்கையோடு வார்த்தைகளைப் படிக்கிறாரா? அப்படி என்றால், நீங்கள் மிகச் சிறப்பாக அவருக்கு கற்றுத்தந்துள்ளீர்கள் வாழ்த்துகள்.
இந்தக் கடைசிப் பகுதி உங்களுக்கு விளையாட்டைப் போல மகிழ்ச்சி தருவதாக அமையும்.
சொல் விளையாட்டு!
உங்கள் நண்பரை இந்த விளையாட்டுக்கு அழைத்துக்கொள்ளுங்கள். தமிழ் எழுத்துகளில் ஏதாவது ஓர் எழுத்தைச் சொல்லுங்கள். உங்களது நண்பர், அதில் தொடங்கும் சொல்லைக் கூற வேண்டும். நண்பர் சரியாகச் சொல்லிவிட்டால், மதிப்பெண் அவருக்கு. அவரால் சொல்ல முடியாமல் போனால், அந்தச் சொல்லை நீங்கள் கூறி, மதிப்பெண்ணை உங்களுடையது ஆக்குங்கள். பிறகு, அதே எழுத்தில் தொடங்கும் வேறு சொல்லைக் கூற வேண்டும். இத்தனை நொடிகளுக்குள் பதில் சொல்ல வேண்டும் என்று நேரத்தையும் வைத்துக்கொண்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். இப்படியே ஒருவர் மாற்றி ஒருவர் சொற்களைச் சொல்ல வேண்டும்.
இப்படி நண்பர்களோடு விளையாடும்போது, புதிய புதிய சொற்கள் மனதில் ஆழமாகப் பதியும். சொற்கள் இணைந்து உருவாவதுதான் தொடர்கள். ஒரு தொடரில் பெரிய சொற்கள் இருந்தால், அந்தச் சொற்களை இரண்டு இரண்டு எழுத்துகளாகப் பிரித்துப் படித்து, எளிமையாகப் புரிந்துகொள்ளலாம்.

கதை படிப்போம்!
எளிய தொடரில் அமைந்த ஒரு கதையைப் படிப்போம்.
அன்பன், தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பில் படிப்பவன். அவனது வீடு, புதுத் தெருவில் உள்ளது. அவன் வீட்டில் அம்மா, அப்பா, தாத்தா உள்ளனர். அவன் அனைவரிடமும் அன்பாக இருப்பான்.
ஒருநாள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும்போது, நாய்க்குட்டி ஒன்று அடிபட்டுக்கிடந்ததை அன்பன் பார்த்தான். அந்த நாய்க்குட்டியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
அன்பன், அதன் அருகில் சென்றான். நாய்க்குட்டி எழுந்து ஓட முயன்றது. காலில் அடிபட்டதால், அதனால் ஓட முடியவில்லை. அதன் கண்களில் பசி மயக்கம்.

அன்பன், தன் பையில் இருந்த தின்பண்டத்தை எடுத்துப் போட்டான். நாய்க்குட்டி அதைச் சாப்பிட்டது. நன்றியோடு பார்த்தது. வாலை ஆட்டியது.
அந்தக் குட்டி நாய் அழகாக இருந்தது. அன்பன், அதை வீட்டுக்கு எடுத்துச் சென்றான். அன்பனின் தாத்தா, அதன் காயத்துக்கு மருந்து தடவினார். நாய்க்குட்டி அந்த வீட்டிலேயே மகிழ்வாக இருந்தது. அன்பன் எங்கு சென்றாலும் வாலை ஆட்டிக்கொண்டு பின்னாலேயே செல்லும். இருவரும் நண்பர்களாக இருந்தனர்.
அவ்வளவுதான் கதை. இனி, கதையில் உள்ள ஒவ்வொரு தொடருக்கும் ஒரு கேள்வி கேட்க முடிகிறதா என்று பாருங்கள். எடுத்துக் காட்டாக, முதல் தொடருக்குரிய வினா, அன்பன் எந்த வகுப்பு படிக்கிறான்? இரண்டாவது தொடருக் குரிய வினா, அன்பனின் வீடு எங்கே உள்ளது?
இப்படி ஒவ்வொரு தொடருக்கும் ஒரு வினா கேட்டு, அந்த வினாவுக்கு உரிய விடையையும் நீங்களே சொல்லிப் பழகுங்கள். இந்தப் பயிற்சி, படிப்பதை நுட்பமாகப் புரிந்துகொள்வதற்கு அடித்தளம் அமைக்கும்.
படம் பார்த்து எழுதிப் பழகுவோம்!
மேலே உள்ள படத்தைப் பார்த்து என்ன புரிந்துகொண்டீர்கள் என்பதை, நீங்களும் உங்கள் நண்பரும் தனித்தனியே எழுதுங்கள். எழுதி முடித்ததும் நீங்கள் எழுதியதை நண்பரும், அவர் எழுதியதை நீங்களும் மாற்றிக்கொண்டு படித்துப் பாருங்கள்.
ஒரு மொழியை நுட்பமாகக் கற்பதற்கு அடித்தளமாக இருப்பவை, அந்த மொழியில் உள்ள எழுத்துகளை அறிந்துகொள்ளுதல், எழுத்தை இணைத்துப் படித்தல், சொற்களைப் படித்தல், சொற்களைப் புரிந்துகொள்ளுதல், தொடர்களைப் படித்தல், தொடர்களைப் புரிந்துகொள்ளுதல், தான் பார்க்கும் பொருளைப் பற்றி சொந்தமாக எழுதுதல் போன்ற படிநிலைகளில்தான் அமைந்துள்ளது.
இந்தப் படிநிலைகளை விரிவாகவும் ஆழமாகவும் பயிற்சி செய்தால், உங்களது மொழிப் புலமை சிறப்பாக அமையும். தமிழில் அற்புதமாகப் பேசலாம்... எழுதலாம். வருங்காலத்தில் நீங்கள் சிறந்த பேச்சாளராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் உருவாகலாம்.
வாழ்த்துகள்!