மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - ஜி.டி.நாயுடு !

ஆயிஷா இரா.நடராசன் பாரதிராஜா

##~##

அந்தச் சிறிய ஊரின் பெயர் கலங்கல். கோவைக்கு அருகில் உள்ளது. அங்கே அந்தப் பையன் இருந்தான். அவன் பெயர் துரைசாமி. 'அறுந்த வாலு’ என்று சொன்னால்தான் எல்லோருக்கும் தெரியும். அந்த அளவுக்கு அவன் 'வால்த்தனம்’ பிரபலம்.

அப்பா கோபால்சாமி அவனின் சுட்டித்தனத்தை நிறுத்த முடியாமல் திணறினார். ஓணான், உடும்பு என கண்ணில்பட்ட விலங்குகளைப் பிடித்து 'உள்ளே எப்படி உள்ளது’ என அறுத்துப் பார்ப்பான். ஒரு செடியைத் தலைகீழாக நட்டால் என்ன ஆகும்? என்று ஐந்து வயதில்  சிந்திக்க ஆரம்பித்தபோது, லட்சுமிநாயக்கன் பாளையத்தில் உள்ள மாமா வீட்டுக்குப் படிப்புக்காக அனுப்பப்பட்டான்.

அவனுக்குப் பள்ளிக்கூடம் ஒரு சிறை போல இருந்தது. ஒரே இடத்தில் உட்காருவது வெறுப்பாக இருந்தது. வீட்டுப் பாடம் எழுத, வீட்டில் இருந்தால்தானே! அவன் வீட்டில் தங்குவதே கிடையாது. 'இரவுப் பறவையான ஆந்தைக்கு எப்படி கண் தெரிகிறது?’ என்பது போன்ற பலவித ஆராய்ச்சிகளில் ஈடுபட்டான். அவனை எல்லாரும் ஜி.டி. என அழைக்கத் தொடங்கினார்கள். ஆராய்ச்சி எனச் சொல்லி, சுடுகாட்டுக்கு தைரியமாகச் செல்வான்.

ஒருநாள் வீட்டுப் பாடம் எழுதாமல், ஆசிரியரோடு ஏற்பட்ட விவாதத்தில், பாதி வகுப்பில் ஜி.டி. வெளியேறினான். அன்று ஓர் ஆங்கிலேயர் மோட்டார் பைக்கில் செல்வதைப் பார்த்து, பின்னாலேயே ஓடினான். நில அளவை அலுவலரான அந்த வெள்ளைக்காரத் துரையிடம் சென்று, அந்த மோட்டார் பைக்கை ஓட்டிப்பார்க்கக் கேட்டான்.

சுட்டி நாயகன் - ஜி.டி.நாயுடு !

அந்த 1909-ல் உலகில் மொத்தமே 25 மோட்டார் பைக்குகள்தான் இருந்திருக்கும். ''இதன் விலையைக் கொடுத்தால் தருகிறேன். உன்னிடம் சுயமாகச் சம்பாதித்த பணம் உள்ளதா?'' என்று கேட்டார் அவர். ஆனாலும்  சிறுவனின் ஆர்வம் கண்டு அவனைப் பாராட்டினார்.

வீடு திரும்பிய சிறுவன் ஜி.டி. உடனே செயலில் இறங்கினான். மோட்டார்களின் செயல்பாடுகளில் முழு ஈடுபாடு கொண்டான். தினமும் அந்தத் துரையின் வீட்டுக்கு, அலுவலகத்துக்குச் செல்வான். ஒரு வாரத்தில், அந்த பைக்கை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப்போட்டு, பிறகு திரும்ப முழுமையாக மாட்டினான். அப்போது அவன் வயது 12.

மேலும், வீட்டுக்குத் தெரியாமல் விடுதிகளில், ஹோட்டல்களில் பல்வேறு வேலைகள் பார்த்தான். மூன்று வருடங்களில் 400 ரூபாய் சேமித்து, அதே வெள்ளைத் துரையின் முன்னால் போய் அவன் நின்றான். '' உங்கள் பைக் என்ன விலை?'' எனக் கேட்டபோது, அவரால் நம்ப முடியவில்லை. சுயமாகச் சம்பாதித்தது என அவன் காட்டிய பணம் எவ்வளவு என்றுகூடப் பார்க்காமல், தனது மோட்டார் பைக்கை அவனிடம் கொடுத்துவிட்டார்.

விரைவில் ஜி.டி. தனது மாமாவின் விவசாயப் பண்ணையில் பருத்திச் செடிகளில் ஆராய்ச்சி செய்தான். மேட்டில் இருந்து, பள்ளத்தை நோக்கி விதைத்தால், புகையிலைத் தோட்டம் சிறப்புப் பலன் தரும் என்பது உட்பட பலருக்கு வேளாண் குறிப்புகளை அளித்தான். வேப்ப எண்ணெய் தயாரிப்பில் புதிய உத்தியைக் குறித்து 'பார்க் டேவிஸ்’ எனும் மருந்து கம்பெனிக்கு ஆய்வினைக் கொடுத்தபோது அவனுக்கு வயது 16.

காய்கனித் தோட்டம் அமைப்பது, உயர்ரக வாழை, ஒட்டு மாங்கனி எனத் தாவரவியலில் அவனது ஆலோசனையைக் கேட்க, தூரத்து ஊர்களில் இருந்து யார் யாரோ வருவதைப் பார்த்து அப்பாவும் மாமாவும் அசந்துபோனார்கள்.

விவசாயம், சைக்கிள், பேனாக்கள் வரை எந்தக் கருவி பழுதானாலும் ஜி.டி.யைத் தேடி வந்தார்கள். பிற்காலத்தில் நீர் இறைக்கும் மோட்டார், மாவு அரைக்கும் கிரைண்டர்,  முகச் சவர பிளேடு உட்பட பல கருவிகளை உருவாக்கினார். 1936-ல் ஜெர்மனியில் நடைபெற்ற பிளேடு வடிவமைப்புப் போட்டியில் மூன்றாம் பரிசைப் பெற்றார். 1937-ல் ஒரு மோட்டார் வாகனத்தை வாங்கி, அதில் சில மாறுதல்கள் செய்து, பொள்ளாச்சிக்கும் பழநிக்கும் இடையே பயணிகள் பேருந்தை இயக்கினார்.

இந்தியாவின் எடிசன் எனப் புகழ்பெற்ற ஜி.டி.நாயுடு, ஒரு சுட்டி நாயகனாக மிளிந்தார்!