மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

சத்தான தினை... முத்தான கம்பு!கே.யுவராஜன், ஓவியம்: பிள்ளை

##~##

பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய உற்சாகத்துடன் மாலையில் மாயா டீச்சர் வீட்டுக்கு வந்தார்கள் சுட்டிகள்.

''வாங்க, உங்களைத்தான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்'' என்ற டீச்சர், ஒரு தட்டில் பொன் நிறத்தில் சில உருண்டைகளை எடுத்துவந்து கொடுத்தார்.

''என்ன டீச்சர் இது?'' என்று கேட்டான் கதிர்.

''தினை உருண்டை. என்னோட பாட்டி அடிக்கடி     செஞ்சுகொடுப்பாங்க. அவங்க நினைவாக, பொங்கல் பண்டிகையின்போது இதைச் செஞ்சு, அவங்களுக்குப் படைப்பேன்'' என்றார் டீச்சர்.

ஒரு விள்ளலை எடுத்து வாயில் போட்டுக்கொண்ட கயல், ''சூப்பரா இருக்கு டீச்சர்'' என்றாள்.

''சுவை மட்டும் இல்லே கயல், உடம்புக்கு ரொம்ப சத்தானதும்கூட. தமிழர்களின் பாரம்பரியப் பயிர்களில் முக்கியமானது இந்தத் தினை'' என்றார் டீச்சர்.

''பாரம்பரிய உணவுனு சொன்னதும் நம்மாழ்வார் தாத்தா ஞாபகம் வருது. அவரை, போன வருஷம் எங்க ஸ்கூலில் நடந்த பொங்கல் நிகழ்ச்சியில் சந்திச்சேன். இயற்கை விவசாயம் பற்றியும் உணவு வகைகள் பற்றியும் நிறைய சொன்னார். இந்தப் பொங்கலுக்கு அவர் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு'' என்றாள் ஷாலினி.

''அவர் நம்மைவிட்டுப் போனாலும் அவர் ஏற்படுத்திய விழிப்பு உணர்வைப் பின்பற்றி நிறையப் பேர் இயற்கை விவசாயம் செய்துட்டு இருக்காங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''ஏன் டீச்சர், இப்போ இந்தத் தினை மாதிரியான உணவுகளை அதிகமாகப் பயிரிடுவது இல்லையோ?'' என்று கேட்டான் அருண்.

''யார் சொன்னது? இப்பவும் உலக அளவில் அதிகமாகப் பயிராகும் தானியங்களில் தினை இருக்கு. இதைப் பயிர் செய்வதில் சீனா முதல் இடத்திலும் இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கு. இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் டன்னுக்கும் மேலாகப் பயிரிடப்படுகிறது'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''நிஜமாவா? ஆனா, நான் தினையில் செஞ்ச உணவை இப்பத்தான் முதல்முறையாச் சாப்பிடுறேன். அந்தப் பயிர் எப்படி இருக்கும்னுகூடத் தெரியாது'' என்றான் கதிர்.

''அதுதான் வேதனை. இப்போ, நகரத்தில் இருக்கிற நிறையப் பேருக்கு தினை, கம்பு போன்றவை எப்படி இருக்கும்னே தெரியாது. இந்தத் தானியங்களைப் பற்றி நீங்க அவசியம் தெரிஞ்சுக்கணும். பொங்கல் பண்டிகையின் நினைவாகவும், நம்மாழ்வார் தாத்தாவுக்கு மரியாதை செய்யும் விதமாகவும் இந்தப் பயிர்களைப் பார்த்துட்டு வரலாம்'' என்றார் மாயா டீச்சர்.

சுட்டிகள் உற்சாகமாக மந்திரக் கம்பளத்தை எடுத்துவந்தார்கள். அவர்கள் ஏறிக்கொண்டதுமே, படுவேகமாகவும் உற்சாகமாகவும் பறந்தது கம்பளம்.

''மந்திரக் கம்பளத்துக்கும் தினை உருண்டையைக் கொடுத்தீங்களோ... இவ்வளவு வேகமாப் போகுது'' என்று சிரித்தாள் கயல்.

சில நொடிகளிலேயே... அவர்கள் ஒரு பரந்த வயல்வெளிக்கு வந்திருந்தார்கள். ''இதுதான் தினைப் பயிரா?'' என்ற ஷாலினி, முற்றிய ஒரு தினைக்கதிரைத் தடவிப் பார்த்தாள்.

''இதை ஆங்கிலத்தில் 'ஃபாக்ஸ்டெய்ல் மில்லட்’ (Foxtail Millet) என்பார்கள். நன்கு முற்றிய தினைக்கதிர், பூமியை நோக்கி வளைந்து, பார்க்க நரியின் வால் மாதிரியே இருப்பதால், இந்தப் பெயர். 'இத்தாலியன் மில்லெட்’ என்றும் சொல்வார்கள். ஆதி காலத்தில், மனிதர்களால் பயிர் செய்யப்பட்ட முதல் தானியம் இதுதான் என்கிறார்கள். சீனாவில் கி.மு.6000-ம் ஆண்டுகளிலேயே தினை பயிரிடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன. நமது புராணங்களிலும் தினை பற்றிய தகவல் இருக்கு'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''எனக்குத் தெரியும். தமிழ் கடவுள் முருகரின் மனைவி வள்ளி, தினைப் பயிரைக் காவல் காப்பது போலவும் அங்கே சென்று, முருகர் தினை மாவு உருண்டை சாப்பிடுற மாதிரியும் ஒரு படக்கதையில் படிச்சிருக்கேன்'' என்றான் அருண்.

''அதேதான். உங்களுக்கு சாக்லேட் எவ்வளவு பிடிக்குமோ, அந்த அளவுக்கு தினை என்றால் கிளிகளுக்கும் சில பறவைகளுக்கும் உயிர். தினை விளைந்ததும் அவற்றைத் தின்னக் கூட்டம் கூட்டமாக வரும் பறவைகளை விரட்டுவதற்காக வயல்வெளியில் ஒரு பரணை அமைப்பாங்க. அதில் நின்றுகொண்டு கவணில் கல்லை வெச்சு சுத்துவாங்க. பறை அடிச்சும் விரட்டுவாங்க. அந்தச் சத்தத்தில் பறவைகள் ஓடிடும். இந்தக் காவல் காக்கும் வேலையை அந்தக் காலத்தில் பெண்களும் செய்வாங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''இதைப் பயிர் செய்றது ரொம்பக் கஷ்டமா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''இல்லை கதிர். பயிர் செய்ய ஆரம்பிச்ச மூன்று மாதங்களில் அறுவடை செய்துடலாம். நெல் மாதிரி தினையைப் பூச்சிகள் தாக்காது. பெரிய அளவுக்கு உரமும் தேவை இல்லை. ஓர் ஏக்கருக்கு 800 கிலோ தினையை அறுவடை செய்யலாம். தினையில் செய்த உணவைத் தொடர்ந்து சாப்பிட்டால், இதயத்துக்கு அவ்வளவு நல்லது. அடுத்து, தினையைவிட சத்தான இன்னொரு தானியம் இருக்கு. அதைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

ஆளுக்கு ஒரு தினைக்கதிரைப் பறித்துக்கொண்டார்கள். மந்திரக் கம்பளம் அவர்களை வேறு ஒரு வயல்வெளிக்கு அழைத்துவந்தது. அங்கே விளைந்திருந்த பயிரைப் பார்த்த கயல், ''இது கம்புதானே? ஆங்கிலத்தில் 'பேர்ல் மில்லெட்’  (Pearl Millet)னு சொல்வாங்க'' என்றாள்.

''கரெக்ட்! முத்து மாதிரி வெண்மை நிறத்தில் உருண்டையாக இருக்கும். உலக அளவில் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் பயிர். இதன் தாயகம் ஆப்பிரிக்கா. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. தானிய வகைகளில் அதிகப் புரதச்சத்து உள்ளது கம்பு. பீட்டாகரோட்டின் அதிகம் உள்ள தானியமும் இதுதான். கால்சியம், இரும்புச்சத்து, தீங்கு செய்யாத கொழுப்பு என கம்பில் இல்லாத சத்துகள் கிடையாது. கண்பார்வைக் கோளாறு, தோல் நோய், எலும்பு நோய், நரம்புத் தளர்ச்சி போன்றவற்றைத் தடுக்கும். கம்பங்களி, கம்பங்கூழ் எனப் பல வகைகளில் பயன்படுத்தலாம்'' என்றார் டீச்சர்.

''வீட்டுக்குப் போனதும் அப்பாகிட்டே, கம்பு மாவு வாங்கிவரச் சொல்லணும்'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''பார்த்து ஷாலினி... ஆரம்பத்திலேயே நிறைய யூஸ் பண்ணிடாதே. இருமல், இரைப்பைப் பிரச்னை வரலாம். அளவாகப் பயன்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். கம்பு பற்றி தெரிஞ்சுக்கிட்ட நீங்க, அதன் அண்ணனான கேழ்வரகு (Finger Millet) பற்றியும் தெரிஞ்சுக்கணும்'' என்றார் டீச்சர்.

கம்புக்கதிர்களில் ஆளுக்கு ஒன்று பறித்துக்கொண்டதும் மந்திரக் கம்பளம் அவர்களை கேழ்வரகு விளையும் இடத்துக்கு அழைத்துவந்தது. ''இதை எனக்குத் தெரியுமே... என் வீட்டில் ராகி ரொட்டி, தோசைனு அடிக்கடி செய்வாங்க'' என்றான் அருண்.

''இது இந்தியாவில் தோன்றியது என்றும் எத்தியோப்பியாவில் தோன்றியது என்றும் வெவ்வேறு கருத்துகள் இருக்கு. 4,000 வருடங்களுக்கு முன்னாடியே இந்தியாவில் பயிர் செய்திருக்காங்க. இப்போ, தமிழ்நாட்டிலும் கர்நாடகாவிலும் மிக அதிகமாகப் பயிர் செய்றாங்க. இதில் உள்ள அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள்  பல நன்மைகளைச் செய்யுது. ரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா போன்றவற்றுக்கு எதிரி, கேழ்வரகு. இதே மாதிரி பண்டையப் பயிர் வகைகளில் ஒன்று... வரகு. இப்போ, நமக்கு அரிசி மாதிரி அந்தக் காலத்தில் தமிழர்கள் அதிகம் சாப்பிட்ட உணவுப் பயிர். அரிசியைவிட பல மடங்கு நார்ச் சத்து, புரதம், கால்சியம் கொண்ட உணவாக இருந்தது. ஆனால், இந்தப் பயிர் இப்போ ரொம்பவே அரிதாக இருக்கு. விலையும் அதிகம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களை அழைத்துக்கொண்டு வீடு திரும்பியது. ''டீச்சர், தினை உருண்டை இன்னும் இருந்தால் கொடுங்க. இந்தப் பொங்கல் நாளில் இருந்து வாரத்துக்கு ஒருநாளாவது தினை, கம்பு மற்றும் கேழ்வரகில் செய்த உணவைச் சாப்பிடுறதுனு முடிவு செய்துட்டோம்'' என்றான் கதிர்.

''வெரிகுட்! அப்பா, அம்மாகிட்டே எது எதுக்கோ அடம்பிடிக்கிறீங்க. இதுக்கு அடம்பிடிச்சா, தப்பே இல்லை'' என்றபடி அவர்களை அனுப்பிவைத்தார் மாயா டீச்சர்.