மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - சார்லஸ் டிக்கன்ஸ்

ஆயிஷா இரா.நடராசன், ஓவியம்: பாரதிராஜா

##~##

'சார்லஸ்’ என்ற சிறுவனின் அப்பா ஜான் டிக்கன்ஸின் குடும்பம் பெரியது. அவரது தாய் வழி உறவினர்களுக்கு எல்லாமே அவர்தான். அவர்கள் அப்போது, இங்கிலாந்தின் ப்ளூம்ஸ்பரி (Bloomsbury) பகுதியில் வசித்தார்கள். அங்கே, கடற்படை அலுவலகத்தில்  எழுத்தராக இருந்தார் ஜான் டிக்கன்ஸ்.

சார்லஸ், மற்ற பையன்களைப் போல இல்லை. நான்கு வயதிலேயே அம்மா எலிசபெத் மூலம் எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்றுக்கொண்டான். சதா புத்தகங்களுடன்தான் இருப்பான். அந்த 1,800-களின் தொடக்கத்தில், ஹென்றி பீல்டிஸ் போன்றோர் எழுதிய நாவல்களைக்கூட அவன் விடவில்லை. அவனது வாசிப்பு வேகத்தை அறிந்து, சுற்று வட்டாரத்தில் பாராட்டாதவர்களே இல்லை.

விரைவில் சார்லஸ் குடும்பம் ப்ளூம்ஸ்பரியில் இருந்து  'கென்ட்’ என்னும் ஊருக்கு மாறியது. அங்கே மாற்றுக் கிறிஸ்துவ அமைப்புகள் நடத்திய டேம்ஸ் பள்ளியில் அவனைச் சேர்த்தார்கள். அவனது வாசிப்பும் உச்சரிப்பும் மிகவும் ரசிக்கும்படி இருந்ததால், பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. ஆசிரியர்கள், வகுப்புவாரியாக  சார்லஸை அழைத்துச் சென்று, சத்தமாக வாசிக்கச் சொல்வார்கள். பெரிய வயதுச் சிறுவர்களையும் அப்படிப் படிக்கத் தூண்டினார்கள்.

சுட்டி நாயகன் - சார்லஸ் டிக்கன்ஸ்

ஆனால், சார்லஸ் குடும்பத்தைத் துன்பம் சூழ்ந்தது.  அப்பா, கடன் சுமையால் தவித்தார். முழுக் குடும்பமும் கைது செய்யப்பட்டு, லண்டனின் மார்ஷால்சியா கடனாளிகள் சிறைக்கு அனுப்பப்பட்டது. சார்லஸ், அவனது அக்கா, தம்பிகள் ஐந்து பேரும் குழந்தைத் தொழிலாளிகள் ஆனார்கள்.

அந்த நாட்களில்... குழந்தைகளை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்கிற சட்டம் இல்லை. சார்லஸ், ஷூ தயாரிக்கும் தொழிற்சாலையில் பாலிஷ் போட அனுப்பப்பட்டான். ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை. ஏழு வருடங்கள் அங்கே இருந்தான். அந்தப் பிஞ்சு வயதில் அவன் சந்தித்த சோதனைகள், வினோத மனிதர்கள், சம்பவங்கள் பற்றி அவனது குட்டி டைரியில் பழுப்பேறிய கைகளால், கண்ணீர் மல்க இரவில் வெகுநேரம் விழித்திருந்து பதிவுசெய்வான். அதற்காக, குட்டியான பென்சிலை  வைத்திருந்தான் சார்லஸ்.

அந்தக் கடினமான சூழ்நிலையிலும் யார் யாரிடமோ கெஞ்சி, புத்தகங்களை இரவல் வாங்குவான். அதிகாலை நேரத்தை ஒதுக்கி, தனது வாசிப்புப் பழக்கத்தைத் தொடர்ந்தான்.

அப்பா விடுதலை செய்யப்பட்டார். அவர்கள், வெலிங்டன் பகுதிக்கு இடம் மாறினார்கள். அங்கே, பள்ளியில் சார்லஸ் சேர்க்கப்பட்டான். 'சிறையில் இருந்து வந்தவன்’ என ஆசிரியர்கள் சிலரும் மாணவர்களும் கேலி செய்து, பல வகையில் அவமானப்படுத்தினார்கள்.  எல்லா அவமானங்களையும் அமைதியாக ஏற்றபடியே செயலில் இறங்கினான் சார்லஸ். அவனது வாசிப்பும் டைரிக் குறிப்புகளும் குட்டிக் கதைகளாகப் படைப்பாக்கம் பெற்றபோது, அவனது வயது 13.

பள்ளிக்கூட ஆயாக்கள், மணி அடிக்கும் வேலையாள், கிளர்க்குகள் போன்ற எளியவர்களே... சார்லஸின் நண்பர்கள். அவன், கிளர்க்குகள் மூலம் சுருக்கெழுத்து முறையைக் கற்றான். ஆயாக்கள் மூலம் பாட்டுப் பாடக் கற்றான். மணி அடிக்கும் வேலைக்காரத் தோழர்களிடம் இருந்து வாழ்க்கையைக் கற்றான்.

சுட்டி நாயகன் - சார்லஸ் டிக்கன்ஸ்

அப்பாவோடு அடிக்கடி வழக்கு மன்றத்தில் ஆஜர் ஆனதால், வெளியே போய்வர நன்கு தெரிந்தது. தனது 15 வயதிலேயே பத்திரிகையாளன் ஆனான். அவனது எழுத்துத் திறமையைப் பாராட்டாத பத்திரிகைகளே இல்லை. தனது 16 வயதில் முதல் நாவலை எழுதினான்.

'சார்லஸ் டிக்கன்ஸ்’ என்ற பெயர் உலகம் முழுவதும் பரவியது. ஆலிவர் ட்விஸ்ட், டேவிட் காப்பர் ஃபீல்டு போன்ற பிரபலமான படைப்புகளை உருவாக்கி, உலக வாசகர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தார், சுட்டி நாயகன் சார்லஸ் டிக்கன்ஸ்.