மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - சத்யேந்திரநாத் போஸ்

ஆயிஷா இரா.நடராசன் படங்கள் :பாரதிராஜா

##~##

அந்தச் சிறுவனுக்கு கண் பார்வையில் சிறு பிரச்னை இருந்தது. எனவே, மற்ற சிறுவர்கள் நான்கு வயதிலேயே பள்ளிக்குச் சென்றபோது, அவன் வேடிக்கை மட்டுமே பார்த்தான். ஐந்து வயதில்தான் பள்ளியில் சேர்க்கப்பட்டான். அவனது தந்தை சுரேந்தர்நாத் போஸ், கிழக்கிந்தியக் கம்பெனி நடத்திய ரயில்வே துறையில் கணக்கராக இருந்தார். வீட்டில் இருக்கும்போதும் எந்த நேரமும் கணக்கு கணக்கு என்றே இருப்பார். அதனால், சிறுவன் சத்யேந்திரனுக்கு இயல்பாகவே கணிதம் மீது ஆர்வம் ஏற்பட்டது. எத்தகைய புதிரையும் மனக்கணக்கிலேயே நிமிடத்தில் விடுவித்துவிடுவான். எண்கள்தான் அவனது பால்ய கால நண்பர்கள்.

முதலில் 'தி நியூ இந்தியன் ஸ்கூல்’ என்ற பள்ளியில் சேர்க்கப்பட்டான் சத்யேந்திரன். எடுத்த எடுப்பிலேயே லார்டு டென்னிஸன், தாகூரின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பித்தான். பள்ளி முதல்வர் குதிராம் போஸ், (இவர் ஒரு பிரபலக் கல்வியாளர்) பள்ளி நூலகத்தைத் திறந்துவிட்டு, சத்யேந்திரனுக்குப் பல வகையில் ஊக்கம் அளித்தார்.

பள்ளியில் காளிதாசர் விழா நடந்தபோது, காளிதாசர் எழுதிய பிரமாண்ட சமஸ்கிருதக் காவியமான, 'மேகதூதம்’ முழுவதையும் ஏழு வயதிலேயே மேடையில் ஒப்புவித்தான் சத்யேந்திரன்.

சுட்டி நாயகன் - சத்யேந்திரநாத் போஸ்

அவனது திறமையால், பள்ளி இறுதி ஆண்டில் கல்கத்தாவின் தலைசிறந்த பள்ளியான தி இந்து ஸ்கூலில் அவனுக்கு இடம் கிடைத்தது. அந்தப் பள்ளி, ராஜாராம் மோகன் ராய் உருவாக்கியது. 1900-களின் ஆரம்பத்தில், கல்கத்தாவில் தி இந்து பள்ளியும், டேவிட் ஹேர் எனும் ஆங்கிலேயக் கல்வியாளர் பெயரில் செயல்பட்ட ஹேர் பள்ளியும் மிகவும் பிரபலமாக இருந்தன. இரண்டுக்கும் கடும் போட்டியும் இருந்தது. சத்யேந்திரனின் வருகை, தி இந்து பள்ளியின் புகழை உயர்த்தியது என்றே சொல்லலாம்.

குறிப்பாக, சத்யேந்திரனின் கணிதம் சார்ந்த திறமை, ஆசிரியர்களின் உடனடிக் கவனத்தைப் பெற்றது. பாடப் புத்தகத்தின் எல்லாக் கணக்குகளையும் போட்டு முடித்துவிட்டு, நூலகத்துக்குச் செல்வான். கண்ணில்பட்ட கணிதம் சம்பந்தமான புத்தகங்களை எடுத்துக்கொள்வான். அதில் யாராலும் கவனிக்கப்படாமல் அடைபட்டு இருக்கும் கணக்குகளையும் ஒன்றுவிடாமல் போட்டுவிட்டு, ''வேறு புத்தகம் இருந்தால் கொடுக்க முடியுமா?'' என்று கேட்டு வியக்கவைப்பான்.

அந்த நாட்களில், கணித ஆசிரியர் உபேந்திரநாத் பக்ஷி பற்றிக் கேள்விப்படாதவரே இருக்க முடியாது. கணிதப் புத்தகங்களின் ஆசிரியர் அவர். அவர், சத்யேந்திரன் எழுதிய ஒரு பரீட்சையில் நூற்றுக்கு 110 மதிப்பெண்களை வழங்கி, சத்யேந்திரனின் திறமைக்கு புதிய அத்தியாயம் எழுதினார்.

ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தபோது, சத்யேந்திரனின் வயது 13. அந்தச் சமயத்தில் நாடே ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிக்கொண்டிருந்தது. சுதேசி இயக்கம் சத்யேந்திரனை ஈர்த்தது. மாலை நேரங்களில் அவனும் அவனது நண்பர்களும் இணைந்து, ஏழை இந்தியக் குழந்தைகளுக்கான இரவு நேரப் பள்ளிகளைக் கட்டமைத்தனர். அப்போது அவனுக்கு வயது 14.

பள்ளி இறுதி ஆண்டிலேயே பல்வேறு சாதனைகளுடன் மிளிர்ந்தான் சத்யேந்திரன். பிற்காலத்தில் அணுத்துகளுக்கு தனது பெயரை வைக்கும் அளவுக்கு உலகே போற்றும் ஒப்பற்ற இயற்பியலாளராக, சத்யேந்திரநாத் போஸாக உருவெடுத்தார்.

ஐன்ஸ்டீன் காலம் முதல் தற்போதைய 'கடவுள் துகள்’ எனும் ஹிக்ஸ்போஸான் காலம் வரை அழியாத புகழ்பெற்ற அந்தச் சிறுவன், நம் சுட்டி நாயகன்!