மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஜன்
பிள்ளை

##~##

''டீச்சர், இந்த அருண் பயலைக் கொஞ்சம் கண்டியுங்க. அவன் மாமா மலையேற்றத்துக்குக் கூட்டிட்டுப்போறதாச் சொன்னதிலிருந்து அலம்பல் தாங்கலை. ரோட்டில் நடந்து வரும்போதுகூட மலையில் ஏறும் எஃபெக்ட்ல வர்றான்''

மாயா டீச்சரின் வீட்டுக்குள் நுழைந்ததும் நொந்துபோன குரலில் சொன்னாள் கயல். பின்னாலே வந்த கதிரும் ஷாலினியும் ''ஆமாம் டீச்சர். இப்போகூட மாடிக்கு சைடு கம்பியைப் பிடிச்சுக்கிட்டு, உடம்பைச் சாய்ச்சுக்கிட்டு ஏறி வந்துட்டு இருக்கான்'' என்றார்கள்.

''ஓகோ... அவன் என்ன இமயமலையா ஏறப்போறான்?'' என்று கேட்டார் டீச்சர்.

அப்போது உள்ளே நுழைந்த அருண், ''இல்லே டீச்சர், சேர்வராயன் மலை. என் மாமா அடிக்கடி மலையேற்றம் போவார். அடுத்த மாதம் என்னையும் கூட்டிப்போறதாச் சொன்னார்'' என்றான்.

''மலையேற்றம் நல்ல விஷயம்தான். ஆனால், நீ இப்படி சாலையில், மாடியில் எல்லாம் ஏடாகூடமா ஏறி, கையைக் காலைச் சுளுக்கிக்கிட்டா அப்புறம் மலையேற முடியாது'' என்றார் டீச்சர்.

''நல்லாச் சொல்லுங்க டீச்சர்'' என்ற கதிர், ''இந்த மலைகள் எப்படி உருவாகுது?'' என்று கேட்டான்.

''அருண், மலைதானே ஏறப்போறான். நாம அந்த மலையோடு சேர்ந்தே ஏறுவோம். அதாவது, ஒரு மலை எப்படி உருவாகுது எனப் பார்க்கலாம்'' என்றார் மாயா டீச்சர்.

அடுத்து என்ன? வழக்கம்போலதான். மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு கிளம்பியது. ஆனால், மேலே செல்லாமல், பூமிக்குக் கீழே சென்றது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''மலைகளை... மடிப்பு மலைகள், எரிமலைகள், பகுதி மலைகள் அல்லது கற்பாளம் என்று மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றும் உருவாவதற்கான அடிப்படை, புவித் தட்டுகள். இந்தப் புவித்தட்டுகளின் மேல் பகுதியை புவி மேல் ஓடுகள் என்பார்கள். இவைதான் பாறைகளாக மாறும். முதல்ல, பகுதி மலை உருவாவதைப் பார்ப்போம். இதை, ஆங்கிலத்தில் ஙிறீஷீநீளீ னீஷீuஸீtணீவீஸீs என்பார்கள். அதாவது, பாறைகளின் தவறான நகர்வினால் உருவாகும் மலைகள்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், பூமியின் ஆழப் பகுதியில், ஓர் இடத்தில் நின்றது. அங்கே கம்ப்யூட்டரில் பார்க்கும் கிராஃபிக் காட்சியைப் போல பாறைகள் நகர்ந்துகொண்டு இருந்தன. அப்படி நகரும்போது, ஒன்றின் மீது ஒன்று இடித்துக்கொள்ள, ஒரு பகுதி உடைந்து, மேலே எழும்பியது.

''இப்படித்தான் பாறைகள் ஒன்றோடு ஒன்று மோதி, உடைந்து மேலே எழும்பும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் இப்படி நிகழும்போது, இந்த அமைப்பு அப்படியே பூமியின் மேல் பகுதிக்கு வரும். அதுதான் நிலப்பரப்பில் சிறிய மலைகளாகவும் பள்ளத்தாக்குகளாகவும் மாறும். கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் இதுபோன்ற பகுதி மலைகள் அதிகமாக இருக்கு'' என்றார்.

''எவ்வளவு உயரம் இருந்தால், அதை மலை என்று சொல்லலாம்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அதுக்கான சரியான வரைவிலக்கணம் எதுவும் கிடையாது ஷாலினி. அந்தந்தப் பகுதியைச் சார்ந்தவர்கள் ஒரு வரைமுறையை வெச்சிருக்காங்க. நிலப்பரப்பில் இருந்து 1,000 மீட்டர் முதல் 2,500 மீட்டர் வரை உயர்ந்து இருப்பதை மலை என்று சொன்னாலும், சான்ஃப்ரான்சிஸ்கோவில் 300 மீட்டர் உயரமே இருப்பதை, அவங்க 'டேவிட்சன் மலை’ என்றுதான் சொல்றாங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''300 மீட்டரே இருந்தால், அது குன்று'' என்றான் அருண்.

''அப்படி இல்லை அருண். அருகில் உள்ள சமவெளிப் பகுதியில் இருந்து உயர்ந்து, ஓர் உச்சியை மட்டும் கொண்டிருப்பதையே குன்று என்பார்கள். அப்படி 1,000 மீட்டர் உயரக் குன்றுகளும் இருக்கு'' என்றார் டீச்சர்.

பேசிக்கொண்டே வந்ததில், திடீரென ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை முதலில் கதிர்தான் கவனித்தான். ''என்ன டீச்சர், இந்த இடம் வெப்பமாக இருக்கு?'' எனக் கேட்டான்.

''இப்போ, நாம பூமியின் மேற்பரப்பில் இருந்து 100 கிலோமீட்டர் கீழே எரிமலைகள் உருவாகும் இடத்துக்கு வந்திருக்கோம். புவித் தட்டில் இருந்து பிரிந்த பாறைகள் இங்கே மிதந்துகொண்டிருக்கும். அப்போது ஏற்படும் உயர் வெப்ப அழுத்தத்தின் காரணமாக, பாறைகள் உருகும். அது, பூமியின் மேற்பரப்புக்கு தள்ளப்பட்டு, அதன் மேல் பகுதி குளிர்ந்து பாறைகளாகப் படியும். அதுதான் எரிமலைகள்'' என்றார் டீச்சர்.

''அருண், உன் மலையேற்றத்தை ஒரு எரிமலையில் வெச்சுக்கோயேன், ரொம்ப த்ரில்லா இருக்கும்'' என்று சிரித்தாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அடுத்து, நாம மடிப்பு மலைகளைப் பார்ப்போம். புவித்தட்டின் மேற்பரப்பில் இருக்கும் பாறைகள் வரிசையாக நகரும்போது, பிரட் துண்டுகளை அடுக்குகிற மாதிரி, ஒன்றின் மீது ஒன்றாகப் படிந்து, நிலப்பரப்புக்கு மேலே வரும். இப்படி லட்சக்கணக்கான ஆண்டுகள் நிகழும்போது, பிரமாண்டமான மலைகளாக உருவாகும்'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம் நின்ற இடத்தில், பாறைகள் அடுக்குகளாகப் படிவதைப் பார்த்தார்கள். அதுனுடன் சேர்ந்து நிலப்பரப்புக்கு வந்துசேர்ந்தார்கள்.

''அப்போ, மலைகள் வளர்ந்துகொண்டே இருக்குமா?'' என்று கேட்டாள் கயல்.

''உயிரினங்களுக்கு பிறப்பு, இறப்பு இருக்கிற மாதிரி மலைகளுக்கும் உண்டு. இப்போ, நாம் பூமியின் அடிப் பகுதியில் பார்த்த நிகழ்வுகள் உலகம் முழுக்க நடந்துகொண்டே இருக்கும். இதனால், சில, ஆயிரம் ஆண்டுகள் கழித்து, புதிய புதிய மலைகள் உருவாகி இருக்கும். லட்சக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, அவற்றில் சில, உயரமான மலையாகி இருக்கும். உலகின் உயரமான மலை என்ற பெயருடன் இப்போது கம்பீரமாக நிற்பது, நமது இமயமலை. ஆனால், சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டிலும், அமெரிக்கப் பகுதியிலும் இருந்த மலைகள்தான் உயரமானதாக இருந்தன. பனி மற்றும் ஆறுகளின் அரிப்புகளால் அவை தேய்ந்துவிட்டன'' என்றார் டீச்சர்.

''அப்போ, நம்ம இமயமலையும் தேயுமா?'' என்று கேட்டான் கதிர்.

''ஆமாம் கதிர். 'எல்லாச் சாதனைகளும் முறியடிக்கப்படும்’ என்ற சொல், மனிதர்களுக்கு மட்டும் இல்லை. பூமியில் உள்ள எல்லாவற்றுக்கும் பொருந்தும். முறியடிக்கப்படும் கால இடைவெளியில்தான் வித்தியாசம் இருக்கும். இப்போது வரை இமயமலை வளர்ந்துகொண்டுதான் இருக்கு. சில லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு தேய்ந்து குட்டையாகலாம். அப்போது உலகின் உயரமான மலை, உயரமான சிகரமாக வேறு இருக்கும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மந்திரக் கம்பளம், அவர்களை இமயமலைக்கு மேல் தூக்கிச்சென்று இறக்கியது. மலையின் அழகை ரசித்தவாறு மெள்ள நடந்தார்கள். ''மலைகளில் அதிகமான குளிர்ச்சி, பனி இருக்கிறது ஏன் டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''சிம்பிள் ஷாலினி. நிலப்பரப்பில் இருந்து மேலே செல்லச் செல்ல காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும். அதனால், குளிர்க்காற்று பனியாக, மலையை மூடிக்கொள்கிறது. பூமியின் 24 சதவிகிதம் மலைப் பகுதியாக இருக்கு. அதில் ஆசியாவில் 64 சதவிகிதம் மலைப் பகுதிதான். உலகின் 10 சதவிகித மக்கள் மலைகளில் வாழ்கிறார்கள். காற்றுக்கு அடுத்து, உயிரினங்களின் ஆதாரத் தேவையான தண்ணீர்  மலைகளில் உருவாகும் ஆறுகள் மூலமே கிடைக்குது'' என்றார் டீச்சர்.

''விடுமுறையைக் கழிக்க பொழுதுபோக்கான, தூய்மையான இடமும் மலைகள்தான்'' என்றான் அருண்.

''அந்தத் தூய்மை நிலைப்பது நம்ம கையில்தான் இருக்கு அருண். 'தூய்மையான காற்றைத் தேடி வர்றேன்’னு  மலைப்பிரதேசங்களை வாகனப் புகையால் நிரப்புகிறோம். கட்டடங்களைக் கட்டி, பிளாஸ்டிக் கழிவுகளைக் கொட்டி, அசுத்தம் செய்கிறோம். இது ஒரு பக்கம் இருக்க, கனிம வளங்களுக்காக மலைகளை வெட்டித் தள்ளுறாங்க. லட்சக்கணக்கான ஆண்டுகளில் இயற்கை உருவாக்கும் ஒரு மலையை, மனிதர்கள் சில 100 ஆண்டுகளிலேயே சாகடிச்சுடுறாங்க. அருண், மலையேற்றம் என்பது வெறும் சாகசத்துக்கு மட்டும் இல்லை. இதுபோன்ற விஷயங்களில் விழிப்பு உணர்வு பெற்று அதைக் காப்பாற்ற நம்மால் முடிந்ததைச் செய்வதும்தான்'' என்றார் டீச்சர்.

''புரிஞ்சது டீச்சர். இந்தப் பிரமாண்டமான மலை நண்பர்களைக் காப்பாற்ற, எங்களால் முடிந்ததை நாங்களும் செய்வோம்'' என்றாள் ஷாலினி.

சற்று நேரம் அங்கே இருந்துவிட்டு, மந்திரக் கம்பளத்தில் கிளம்பினார்கள்.