மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஜன் ஓவியம் : பிள்ளை

##~##

மொட்டைமாடியில், புறாக்களுக்குத் தானியத்தைப் போட்டுக்கொண்டிருந்தார் மாயா டீச்சர். 'தபதப’வென ஓடிவந்த சுட்டிகளின் களேபரத்தில், கலைந்து பறந்தன புறாக்கள்.

''ஓ... ஸாரி... ஸாரி'' என்றான் கதிர். அவை, மீண்டும் திரும்பிவந்து தானியத்தைக் கொத்தின.

''டீச்சர், இந்தப் புறாக்கள் எங்கே இருந்து வருதுங்க?'' என்று கேட்டாள் ஷாலினி.

''அதோ, அந்தக் கோயில்ல இருந்துதான். தினமும் சரியா இந்த நேரத்துக்கு வந்துடும்'' என்றார் டீச்சர்.

''டீச்சர், அந்தக் கோயில்ல நான் ஒரு பறவை சிலையைப் பார்த்திருக்கேன். வாத்து மாதிரியே ரொம்ப அழகா இருக்குமே...'' என்று அருண் சொல்ல, ''அது அன்னம். அது நம்ம இலக்கியங்களில் வந்த ஒரு கற்பனைப் பறவை'' என்றாள் கயல்.

''அன்னம் கற்பனை இல்லை கயல், நிஜம்தான்.அழிந்துவரும் பறவை இனங்களில் ஒன்று'' என்றார் மாயா டீச்சர்.

''அப்போ, பாலில் தண்ணீர் கலந்திருந்தால்,  பிரிச்சுக் குடிக்கும்னு சொல்றது?'' என்று கேட்டாள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அது கற்பனைதான். அன்னம் ரொம்ப அழகான, மென்மையான பறவை. நாம் கையெடுத்துக் கும்பிட்டால் எப்படி இருக்குமோ, அந்த மாதிரி அதனுடைய கால்களின் அமைப்பு இருக்கும். கழுத்தையும் அழகாக வளைக்கும். அதனால், கோயில் சிற்பங்களிலும் மங்களகரமான பொருட்களிலும் அன்னத்தின் உருவத்தைப் பொறிச்சாங்க. கதைகள், பாடல்கள் மூலம் அதை உயர்ந்த குணம்கொண்ட பறவையாக இந்தியர்கள் எழுதினாங்க. அதனால், அந்தப் பறவையே கற்பனை என்கிற மாதிரி ஆகிடுச்சு. அன்னப் பறவை, இந்தியாவில் கிட்டத்தட்ட அழிந்து விட்டாலும், ஐரோப்பா போன்ற குளிர் பிரதேச நாடுகளில் இருக்கு'' என்றார் டீச்சர்.

''அழகான பறவைனு சொன்னதும் எனக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஃப்ளமிங்கோ (Flamingo) என்கிற பூநாரை ஞாபகம் வருது. உயிரியல் பூங்காவில் பார்த்திருக்கேன். ஒண்ணு, ரெண்டு இருக்கும்போதே அவ்வளவு அழகாக இருக்கும். வெளிநாடுகளில், ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கில் இருக்குமாமே... நிஜமா டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''நிஜம்தான் ஷாலினி. உயிரியல் பூங்காவைவிட இயற்கையான சூழலில் சுதந்திரமாக இருக்கும் பூநாரைகள் இன்னும் அழகு. ஆயிரக்கணக்கான பூநாரைகளைப் பார்க்க வெளிநாட்டுக்குப் போக வேண்டியது இல்லை. இந்தச் சமயத்தில் நம்ம குஜராத் மாநிலத்திலேயே பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அப்படினா, இப்பவே போகலாம் டீச்சர்'' என்று குதித்தார்கள் கதிரும் அருணும்.

குஷியுடன் மந்திரக் கம்பளத்தைத் தூக்கிவந்தாள் கயல். அது, பெரிய பூநாரையாக மாறியது. அதன் கழுத்துப் பகுதியில் வரிசையாக அமர்ந்துகொண்டதும் வானில் சிறகடித்துப் பறந்தது.

''பூநாரைகளில் ஆறு வகைகள் இருக்கு. பெரிய பூநாரை எனப்படும் Greater Flamingo, Lesser Flamingo, Chilean Flamingo, James’s Flamingo, Andean Flamingo, American Flamingo. ஒவ்வொரு வகையும் கண்ணைப் பறிக்கும் அழகில் இருக்கும். இதில் பெரிய பூநாரைகள், ஒன்றரை மீட்டர் உயரம் இருக்கும். சராசரியாக 60 வயது வாழும். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு, உயிரியல் பூங்காவில் பெரிய பூநாரை ஒன்று, 83 வயது வரைக்கும் வாழ்ந்து,  இந்த ஜனவரி 30-ம் தேதிதான் இறந்தது'' என்றார் டீச்சர்.

''அங்கே பாருங்க'' என்று உற்சாகமாகக் கூச்சலிட்டாள் கயல்.

அவர்களுக்கு சற்றுத் தள்ளி, பெரிய பூநாரைகள் பறந்துகொண்டிருந்தன. வில்லில் பூட்டிய அம்பு போல, நீண்ட கழுத்தை முன்னால் நீட்டிக்கொண்டும், கால்களை விறைப்பாகப் பின்னால் வைத்துக்கொண்டும் இறக்கையை விரித்துப் பறந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அவற்றின் இளஞ்சிவப்பான உடல் மீது, கதிரவனின் ஒளி பட்டுச் சிதறியது, கூடுதல் அழகு.

''நாம இப்போ வந்திருக்கிறது, குஜராத் மாநிலத்தின் கட்ச் (Kutch) வளைகுடா பகுதிக்கு. அக்டோபர் முதல் மார்ச் வரை ஒரு லட்சத்துக்கும் அதிகமான பெரிய பூநாரைகள் இங்கே சந்திக்கும். முட்டைகள் இட்டுக் குஞ்சு பொரிக்கும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

தலையைத் தாழ்த்திப் பார்த்தால், அங்கிருந்த ஏரிக்கரை முழுவதும் பூநாரைகள். தனது நீண்ட கால்களைத் தூக்கிவைத்து நடப்பதும், தண்ணீருக்குள் கழுத்தை ஆழ்த்துவதுமாக இருந்தன.

''தண்ணீருக்குள் கழுத்தை நுழைச்சு என்ன செய்துங்க?'' என்று கேட்டான் கதிர்.

''இரையைப் பிடிக்குது. பூநாரைகள் இரையைப் பிடிக்கிறதே டெக்னிக்கலாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

பூநாரை உருவத்தில் அவர்களைச் சுமந்துவந்த மந்திரக் கம்பளம், சரேலென ஏரிக்குள் இறங்கியது. அவர்கள், குட்டி உருவங்களாக தண்ணீருக்குள் சென்றார்கள். ஒரு பூநாரை தனது கழுத்தை வளைத்து, தலையின் மேல் பகுதி, தண்ணீரின் அடிப்பகுதியைத் தொடுவது போல வைத்துக்கொண்டது.

இவை, தலையுடன் கழுத்துப் பகுதி முழுவதையும் தண்ணீருக்குள் செலுத்தி, வாயைத் திறக்கும். அப்போது மேல் பகுதி அலகு, கிண்ணம் போல குவியும். அதில் சேகரமாகும் தண்ணீரை தனது நாக்கினால் அலசும். தண்ணீர், வடிகட்டியில் இருந்து வெளியேறுவது மாதிரி அலகின் இரு

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

பக்கங்களிலும் வெளியேறும். புழு, பூச்சிகள், சிறு சிறு நண்டுகள், மீன்கள் எல்லாம் வாயின் ஓரங்களில் ஒட்டிக்கும்'' என்றார் டீச்சர்.

அந்தப் பூநாரை தலையை மேலே உயர்த்தியபோது, அதன் வாய் நிறைய இரை. ''சரியான வேட்டைதான்,''  என்றான் அருண்.

''இவற்றின் அழகான நிறத்துக்குக் காரணமே சாப்பாடுதான் அருண். இது, 'கூனி இறால்’ வகை உணவைத் தொடர்ந்து சாப்பிடும்போது ஏற்படும் வேதி மாற்றம்தான், உடலை இளஞ்சிவப்புக்கு மாற்றுகிறது. உயிரியல் பூங்காவிலேயே பிறந்து வளரும் பூநாரைகளின் உடல், பெரும்பாலும் வெள்ளையாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

அவர்கள் சராசரி உருவத்துக்கு மாறினார்கள். ஏரிக்கரை ஒரமாக நடந்து வந்தார்கள். ''அந்தப் பூநாரையைப் பாருங்க... கால்களை மடக்கி வாட்டசாட்டமா உட்கார்ந்திருக்கு'' என்றாள் கயல்.

''அது அடை காக்குது. அந்த மேடுதான் பூநாரையின் கூடு. சராசரியாக 30 சென்டிமீட்டர் உயரத்துக்கு களிமண்ணைக் குழைச்சு, கிண்ணம் மாதிரி அமைக்கும். இது, சூரிய வெப்பத்தில் காய்ந்து கெட்டியாக மாறியதும், அதில் முட்டையை இடும். ஒருமுறைக்கு, ஒன்று அல்லது இரண்டு முட்டைகள். ஆண், பெண் இரண்டுமே மாறி மாறி அடைகாக்கும்'' என்றார் டீச்சர்.

பிறகு, அங்கே இருந்து கிளம்பினார்கள். அமெரிக்கா, சிலி, பெரு, மெக்ஸிகோ போன்ற நாடுகளில் இருக்கும் மற்ற வகைப் பூநாரைகளையும் பார்த்தார்கள். ''இதை எல்லாம் பார்க்கப் பார்க்க நாமும் ஒரு பூநாரையாக மாறி, இங்கேயே தங்கிடலாம்னு தோணுது'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''சரிதான். உன் அம்மா, அப்பாவுக்கு யார் பதில் சொல்றது. அப்புறம், 2014-ம் ஆண்டிலும் ஒரு சூனியக்காரினு பத்திரிகைகளில் நியூஸ் போட்டு, என்னை உள்ளே தள்ளிடுவாங்க. கிளம்பு... கிளம்பு'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளமும் எதுக்குடா வம்பு என, இரையை விழுங்குவது போல எல்லோரையும் வாரிச்சுருட்டிக்கொண்டு கிளம்பியது.