மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - சர்தார் வல்லபபாய் பட்டேல்

ஆயிஷா இரா.நடராசன் ஓவியம் : பாரதிராஜா

##~##

அவன், தனது தந்தையோடு வயல் வேலைகள் செய்யச் சென்றபோது, வயது நான்குதான். அப்போது, குஜராத்தின் கரம்சத் பகுதியில் எல்லாருமே விவசாயிகள். எருமை மாடுகளைக் குளிப்பாட்டுவது, வயலில் உழவு செய்தல் போன்ற வேலைகளில் அப்பாவுக்கு உதவிகள் செய்வான். குளிர், மழை, தகிக்கும் கோடை என எதையும் பொருட்படுத்த மாட்டான்.

சிறுவன் பட்டேலின் தந்தை ஜாவர்பாய், கடும் உழைப்பாளி. பட்டேலை, வல்லபபாய் என்றும் அழைப்பார். சோமாபாய், நார்பாய், வித்தல் பாய் எனும் அண்ணாக்களும் காஷிபாய் எனும் தம்பியும் பட்டேலுக்கு இருந்தனர். கடைசியாகப் பிறந்த தங்கை தாஹிபா மீது வல்லபபாய்க்கு மிகுந்த அன்பு.

வயல் வேலைகளின்போது, அங்கே வேலை செய்யும் கூலி விவசாயிகளிடமும் நட்புடன் இருப்பான் வல்லபபாய். அந்த இளம் கூட்டாளியை அவர்கள், சர்தார் (தலைவா) என்று அழைத்தார்கள்.

ஒருநாள், வீட்டுக்கு வந்ததும் அம்மாவிடம் ஓடினான். ''அம்மா, கூலி விவசாயிகளில் பலர் சாப்பிடுவதே இல்லை'' என்று வேதனைப்பட்டான்.  ''ஆமாம் வல்லபபாய்! நம் நாட்டில் எத்தனையோ ஏழைகள் ஒரு வேளைகூட சாப்பிட முடியாமல் பட்டினி கிடக்கிறார்கள்'' என்றார் அம்மா.

மறுநாள் முழுவதும் வல்லபபாய் எதுவும் சாப்பிடவில்லை. அதிலிருந்து மாதம் இரண்டு நாட்கள் தண்ணீர்கூட அருந்தாமல் இருப்பதைத் தனது வழக்கங்களில் ஒன்றாக்கிக்கொண்டான். வளர வளர நல்ல விஷயங்களில் பிடிவாதக்காரனாகவும் அச்சமற்றவனாகவும் அறியப்பட்டான். அவன் ஊருக்கு அருகே, 'நாடியாட்’ எனும் சிறு நகரம் இருந்தது.  பள்ளிக்கூடம் போக வேண்டும் என்றால், அங்கேதான் சென்று படிக்க வேண்டும். வல்லபபாயும் அதே பள்ளியில் சேர்ந்து படித்தான்.

சுட்டி நாயகன் - சர்தார் வல்லபபாய் பட்டேல்

வல்லபபாயின் வலது கன்னத்தில் மூக்குக்கு அருகே ஒரு மரு தோன்றி இருந்தது. அப்போதெல்லாம், மரு போன்ற சிக்கல்களுக்கு முடி திருத்தம் செய்பவர்களிடம்தான் மருத்துவத்துக்கும் செல்வார்கள். அப்படித்தான் அவனும் அழைத்துச் செல்லப்பட்டான். அப்போது, அவனுக்கு வயது ஏழு.

முடி திருத்தம் செய்பவர், வல்லபபாயின் கன்னத்து மருவைப் பார்த்துத் தயங்கினார். மருவை நீக்கும்போது காயம் ஏற்படுமோ என்று பயந்தார். உடனே, சிறுவன் வல்லபபாய் அவரிடமிருந்த கத்தியை வாங்கினான். கண்ணாடியைப் பார்த்து, தனக்குத்தானே அறுவை சிகிச்சை செய்துகொண்டான். அவனது துணிச்சலைப் பார்த்து, அங்கிருந்தவர்கள் அதிசயித்தார்கள்.

பள்ளியில், நண்பனுக்கு பிளேக் நோய் தாக்கியபோதும் அப்படித்தான். 'அது தமக்கும் பரவிவிடுமோ’ என்று அஞ்சி, எல்லோரும் ஒதுங்கினர். அந்தப் பையனின் குடும்பமே  பணி விடைகள் செய்யத் தயங்கியபோது, கொஞ்சமும் அச்சமின்றி நண்பனுக்குக் கைகொடுத்து உதவினான் வல்லபபாய். நோய் குணமாகும் வரை அவனுடனேயே தங்கி, சேவை செய்தான்.

பிரிட்டிஷ் ஆட்சியில், ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க  அரசு முயற்சி செய்தது. அதற்கு எதிராகப் பலபேர்  வழக்குமன்றம் போக முடிவெடுத்தார்கள். அந்த நாட்களில், தானும் ஒரு வழக்குரைஞராக வேண்டும் என முடிவுசெய்து படித்தான்.

பெரியவனான வல்லபபாய், ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களில் அச்சமின்றிப் பங்கேற்றார். மகாத்மா காந்தியின் வலது கை எனச் சொல்லும் வகையில் பெயரெடுத்தார். சுதந்திர இந்தியாவின் துணைப் பிரதமராகி, ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.

'இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபபாய் பட்டேல் எனப் பெயரெடுத்த அவர், ஒரு சுட்டி நாயகராகத் திகழ்ந்தார்.