ஆயிஷா இரா.நடராசன் ஓவியம் : பாரதிராஜா
பாட்டியாலா எனும் ஊர், பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது. கார் இன மக்கள் அங்கு வசிக்கிறார்கள். அவர்களில், திண்டுமோன் என்ற சிறு வியாபாரி ஒருவரின் மகன் ராகேஷ். சிந்துச் சமவெளியின் பிரதான மையங்களில் ஒன்றாக விளங்கிய பாட்டியாலாவில், அருங்காட்சியகம் அருகே வசித்தான், சிறுவன் ராகேஷ். அருங்காட்சியகத்துக்கு வருகை புரிபவர்களுக்கு, அங்கு உள்ள காட்சிப் பொருட்களை எளிமையாக விளக்கி அசத்துகிறவனாக இருந்தான். அப்போது அவனுக்கு வயது ஐந்து.
ஒருமுறை அந்த அருங்காட்சியகத்தில், சிறுவர் சிறுமியருக்கான ஓவியப் போட்டி நடந்தது. பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஏராளமான சீக்கிய இளைஞர்கள், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தனர். அவர்களில் ஓர் உயர் அதிகாரி, பரிசு வழங்க வந்திருந்தார். ராகேஷ் வரைந்திருந்த ஓவியத்தைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம். ஒரு விமானம் வானில் பறப்பது போல வரைந்திருந்தான். இது எல்லோரும் செய்வதுதானே என்று நினைக்கலாம். ஆனால், விமானம் ஓட்டும் பைலட்டை வரைந்து, தனது பெயரை எழுதி இருந்தான் ராகேஷ். அதுதான் ராணுவ அதிகாரியை மிகவும் கவர்ந்தது.
'நான் வானில் பறப்பேன்’ - பரிசு வாங்கிய அன்று, தன் அம்மாவிடம் தீர்மானமாகத் தனது கனவை முன்மொழிந்தான் ராகேஷ்.
விரைவிலேயே அவனது தந்தை, வியாபாரத்தை பாட்டியாலாவில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றினார். குடும்பத்தையும் அங்கே அழைத்துச்சென்று நிரந்தரமாகக் குடியமர்த்தினார். அங்கே, 'செயின்ட் ஜார்ஜ் கிராமர் ஸ்கூல்’ என்ற பள்ளியில் ராகேஷை சேர்த்தார்கள். அது, வரலாற்றுச் சிறப்பு மிக்க பள்ளி. இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்பட்ட சரோஜினி நாயுடு படித்த பள்ளி.

அபிட் சாலையில் இருந்த அந்தப் பள்ளிக்கு அருகில் வீடு கிடைக்காததால், ராகேஷ் பல வீதிகளைக் கடந்து, நடந்தே பள்ளிக்குச் சென்றான். ஹைதராபாத் விமான நிலையம் அருகில்தான் இருந்தது. காலையில் வீட்டில் இருந்து கிளம்பி, பள்ளி வந்து சேர்வதற்குள் மூன்று விமானங்கள் கிளம்பும். இரண்டு, தரை இறங்கும். அவற்றின் நேரத்தை மிகத் துல்லியமாக அறிந்திருந்தான்.
''இன்று இந்த விமானம் 10 நிமிடங்கள் லேட். இது, தரை இறங்கத் திணறியது'' போன்ற தகவல்களைத் தனது நண்பர்களுடன் பகிர்ந்தான். ''எங்கே சுற்றுலா போகலாம்?'' என்று வகுப்பில் ஆசிரியை கேட்டபோது, 'விமான நிலையம்’ என்று வகுப்பையே ஒரே குரலில் முழங்கவைத்தபோது, ராகேஷ் படித்தது மூன்றாம் வகுப்பு.
செயின்ட் ஜார்ஜ் பள்ளியில்... ஒழுக்கம், கட்டுப்பாடு, சிறந்த தலைமைப் பண்பு உடைய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, 'பெர்ஃபெக்ட்’ (Perfect) என்ற குழுவாக்கி, பிற மாணவர்களின் ஒழுக்கத்தை ஒழுங்கு செய்யும் அமைப்பு இருந்தது. 'ஹானர் டியூட்டி’ (Honour Duty) என்று அதற்குப் பெயர். ராகேஷ், பள்ளியின் தலைமை பெர்ஃபெக்டாகத் தேர்வானான். அதற்கு, யாராலும் முடியாத ஒன்றை அவன் செய்துகாட்டினான். ஓர் அறிவியல் கண்காட்சியின்போது, பள்ளிக் கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்து, பாராசூட்டில் குதித்துக் காட்டி, வானில் பறக்கும் தனது கனவுக்கு வடிவம் கொடுத்தான்.
பின் நாட்களில், இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக விண்ணில் பறந்து, சோவியத் விண்கலத்தில் புவியை வலம்வந்து, நமது நாட்டின் புகழை உலக அளவில் உயர்த்திய 'ஸ்குவாட்ரன் லீடர்’ ராகேஷ் சர்மாவாக உயர்ந்தான், அந்தச் சுட்டி நாயகன்!