மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

பரீட்சைக்காக குரூப் ஸ்டடி முடித்து, புத்தகப் பைகளுடன் மாயா டீச்சரின் வீட்டுக்கு வந்தார்கள் நமது நண்பர்கள். ''ஆஹா... வாசலில் கால் வைக்கிறப்பவே வாசனை பலமா வரவேற்குதே'' என்றபடி முதல் ஆளாக உள்ளே நுழைந்தான் அருண்.

ஹாலின் தரையில் அமர்ந்து, பெரிய பலாப்பழத்தைப் பிளந்துகொண்டிருந்த டீச்சர், ''உங்களைத்தான் நினைச்சுக்கிட்டேன். சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க'' என்றார்.

''டீச்சர், இவ்வளவு பெரிய பழத்தை நீங்க ஒருத்தரே பிளக்குறீங்களே'' என்று வியந்தாள் கயல்.

''இதுக்காக ஆளா வைப்பாங்க. என்னால் கம்ப்யூட்டர் கீ போர்டையும் தட்ட முடியும். பலாப்பழத்தையும் பிளக்க முடியும். என் சொந்தக்காரர், ஊரில் இருந்து கொண்டுவந்தார்'' என்றபடி பலாச்சுளைகளைக் கொடுத்தார் டீச்சர்.

''சூப்பர் டேஸ்ட்டா இருக்கு. சும்மாவா? முக்கனிகளில் ஒன்றாச்சே'' என்றான் கதிர்.

''சுவையோடு, மருத்துவக் குணங்களும் சத்துகளும் நிறைந்த பழம். உடம்பு சோர்வா இருக்கும்போது, ரெண்டு பலாச்சுளைகளை எடுத்து வாயில் போட்டுக்கிட்டா குபீர் புத்துணர்ச்சி வரும். எக்ஸாமுக்கு படிச்சு, சோர்வா இருக்கிற இந்த நேரத்தில் உங்களுக்கு இது அவசியம்'' என்றார் டீச்சர்.

''ரத்த ஓட்டத்துக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் பலாப்பழம் நல்லதுனு படிச்சிருக்கேன் டீச்சர். குறிப்பாக, புற்றுநோய் எதிர்ப்புசக்தி பலாப்பழத்தில் இருக்காமே...'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''ஆமாம் ஷாலினி. செரிமானப் பிரச்னை, மலச்சிக்கல், பார்வைக் குறைபாடு எனப் பலவற்றுக்கும் நல்லது. வேர்ப் பலா எனப் பெருமையாகச் சொல்லும் பலா மரத்தின் வேரை வேகவைத்து, சாறு எடுத்துக் குடிச்சா, ஆஸ்துமா அலறியடிச்சு ஓடும்'' என்றார் டீச்சர்.

''பலாவில் இவ்வளவு இருக்கா? நான் டேஸ்ட்டை மட்டும்தான் நினைச்சுட்டிருந்தேன்'' என்றான் கதிர்.

''பல வகை உணவு வகைகளாகப் பலா பயன்படுகிறது. அது பற்றி தெரிஞ்சுக்க, ஒரு பலாத் தோப்புக்கு நேரில் போனால் சரியாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

''பலா என்றதும் பண்ருட்டியும் கடலூரும் ஞாபகம் வருது. அங்கே போவோம்'' என்றான் அருண்.

''அதுக்கு பஸ் போதுமே... மந்திரக் கம்பளத்தை யூஸ் பண்றதில் ஒரு கெத்து வேணாமா? கடல் கடந்து போவோம்'' என்றாள் ஷாலினி.

மந்திரக் கம்பளம் சில நொடிகளில் கடல் மீது பறந்தது. கையோடு கொண்டுவந்த பலாச்சுளைகளைச் சுவைத்தவாறு வந்தார்கள். டீச்சர் தொடர்ந்தார்.

''பலா மரம் முதன்முதலில் எங்கே தோன்றியது என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை. இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உருவாகி இருக்கலாம். பிறகு, இலங்கை, சீனா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்குப் பரவி இருக்கலாம் என்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பலா மரங்கள் இருக்கின்றன.  பெரும்பாலும் துணைப் பயிராக, மற்ற பழத்

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

தோட்டங்களின் ஒரு பகுதியாக வளர்க்கப்படுகிறது. தென்னிந்தியாவில் வாழை, மாம்பழங்களுக்கு அடுத்து அதிகமாக மக்கள் பயன்படுத்துவது பலாப்பழம்தான்'' என்றார் டீச்சர்.

திடீரென பலாவின் நறுமணம் காற்றில் கலந்து வர, அவர்கள் இலங்கையின் பலாத் தோப்பு ஒன்றில் இறங்கினார்கள். ''அடேங்கப்பா... பலா மரம் இவ்வளவு உயரமா?'' என்று தலையைத் தூக்கிப் பார்த்தாள் கயல்.

''நன்கு வளர்ந்த ஒரு பலா மரம் 21 மீட்டர் உயரம் இருக்கும். ஆண் பூ, பெண் பூ என இரண்டு வகையான பூக்கள் பூக்கும். பூக்கள் பிஞ்சாகி, காய் கனியாகி, மார்ச் முதல் ஆகஸ்ட் வரை சீஸன் களைகட்டும். இதில் கூழச்சக்கா, கூழன், வருகன் எனப் பல ரகங்கள் இருக்கு. இங்கே நாம் பார்க்கிறது தேன் பலா என்கிற சுவையான ரகம். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு சுமார், 100 முதல் 150 பழங்கள் கிடைக்கும். ஒரு பழம் அதிகபட்சம் 40 கிலோ இருக்கும்'' என்றார்.

''பூ முதல் வேர் வரை பயன்படும்னு சொன்னீங்களே'' என்று நினைவுபடுத்தினான் அருண்.

''சொல்றேன், பலாவைப் பழமாக மட்டும் இல்லாமல், காய் நிலையில் சாப்பிடுவதும் உண்டு. சிங்களரின் உணவில் பலாக்காய் முக்கியமான உணவு'' என்றவர், அங்கே லாரியில் ஏற்றுவதற்காக வைத்திருந்த ஒரு சிறிய பலாவைக் கையில் எடுத்தார்.

''இது இளம் காயாக இருக்கும்போது பறிச்சது. 'பொலஸ்’ என்பார்கள். உள்ளே சுளைகளே உருவாகி இருக்காது. இதைச் சிறு துண்டுகளாக வெட்டி சமைப்பார்கள். சிக்கன், மட்டன் மாதிரி டேஸ்ட்டா இருக்கும். கொழும்புக்குப் போனால், ஸ்டார் ஹோட்டலில்கூட இந்த உணவு ஃபேமஸ். இதையே  சில நாட்கள் மரத்தில் வளரவிட்டுப் பறிக்கும்போது, உள்ளே சுளைகள் பிஞ்சாக உருவாகி இருக்கும். அந்த நிலையில் சின்னச் சின்னத் துண்டுகளாகக் கொத்தி, 'கொத்துக் கறி’ என்கிற பெயரில் சமைப்பாங்க. அது ஒரு தனிச் சுவை'' என்றார் டீச்சர்.

''கேட்கும்போதே சாப்பிடத் தோணுது டீச்சர். ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாமா?'' என்று கேட்டான் கதிர்.

''பாஸ்போர்ட் இல்லாமல் எதுக்கு வம்பு! சமையலை இங்கேயே வரவைப்போம்'' என்றாள் ஷாலினி.

இவ்வளவு நேரம் காணாமல் போயிருந்த மந்திரக் கம்பளம், பறந்து வந்தது. அதில் ஏறிக்கொள்ள, அங்கே பலாக்காய் சமையல் வகைகள் மணத்தன. ''ஒண்ணு தெரியுமா? 1977-ல் இலங்கையில் பஞ்சம் ஏற்பட்டுச்சு. அப்போ, நிறையப் பேர் வீடுகளில் மூன்று வேளையும் பலாக்காய்தான் சாப்பாடு. 'வீட்டுக்கு முன்னாடி ஒரு பலா மரம் இருந்தால், அது பஞ்சம் இல்லாத வீடு’னு ஒரு சொலவடை இலங்கையில் உண்டு'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''டீச்சர், எனக்கு ஒரு டவுட்டு... பலா மாதிரியே பெரிய சைஸில், முட்களோடு 'துரியன்’னு ஒரு பழத்தைப் பற்றி படிச்சிருக்கேன். ரெண்டும் ஒண்ணுதானா?'' என்று கேட்டாள் கயல்.

''இல்லை கயல், தமிழில் முள்நாறிப் பழம் என்று சொல்வாங்க. மேலே முட்களோடு, தோற்றம் ஒரே மாதிரி இருந்தாலும் இரண்டும் வேற வேற. பலா, 'ஆர்ட்டோகார்பஸ்’(Artocarpus)என்ற பேரினத்தில், 'மொராஸெ’ (Moraceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது. முள்நாறிப் பழம், டுரியோ (Durio) என்ற பேரினத்தில் 'மால்வலெஸ்’ (Malvales) என்ற குடும்பத்தைச் சேர்ந்தது'' என்றார் டீச்சர்.

''ஆச்சர்யம்தான். அது எங்கே விளையுது?'' என்று கேட்டான் கதிர்.

''மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், சீனா, இந்தோனேஷியாவில் அதிகம் விளையும். இலங்கைச் சொல்லில் துரியன், மலாய் மொழியில் டுரியான். 'டுரி’ என்றால், 'முள்’ என்று அர்த்தம். இலங்கையில், பலாவைப் 'பழங்களின் அரசன்’ என்று சொல்வாங்க. மலேசியாவில், முள்நாறிப் பழத்தைப் 'பழங்களின் அரசன்’ என்று கொண்டாடுவாங்க. பலா அளவுக்கு பெருசு கிடையாது. பலாச்சுளை மாதிரியே உள்ளே மஞ்சள் நிறத்தில் பெரிய சுளைகள் இருக்கும். இளம் மஞ்சள் மற்றும் நீலநிறத்திலும் சில ரகங்கள் இருக்கு. ஆனால், அது ரொம்ப அபூர்வமாகத்தான் கிடைக்கும். இந்தோனேஷியாவில் மட்டும் 55 வகையான முள்நாறி ரகங்கள் இருக்கு. இதனுடைய வாசனை, பெயருக்கு ஏற்பக் கொஞ்சம் நாற்றமுடையதாக இருக்கும்.'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அப்படினா முள்நாறி பற்றிய விஷயத்தையும் காதுக்கு விருந்தாக் கேட்டுட்டு, அதையும் டேஸ்ட் பண்ணிடுவோமே'' என்றான் அருண்.

சிரித்துக்கொண்ட மந்திரக் கம்பளம், மலேசியாவுக்குப் பறந்து, ஒரு தோட்டத்தில் இறங்கியது. ''கவனமா வாங்க. 'எச்சரிக்கை முள்நாறி மரங்கள் இருக்கிறது’ என போர்டு வைக்காத குறையாக நடந்துக்கணும்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

ஏன்னா, பலா மரத்தைவிட முள்நாறிப் பழத்தின் வெளித்தோலில் முட்கள் பெரிதாக இருக்கும். மரமும் 50 மீட்டர் உயரம். அவ்வளவு உயரத்தில் இருந்து, ஒரு பழம் கீழே இருக்கிறவங்க மேலே விழுந்தா என்ன ஆகும்னு யோசிங்க. அப்படி விழுந்து, அடிப்பட்ட தொழிலாளிகள் நிறையப் பேர்'' என்றார் டீச்சர்.

''ஆத்தீ'' என்றபடி பயத்துடன் மேலே பார்த்தாள் ஷாலினி.

''நன்கு வளர்ந்த ஒரு முள்நாறி மரம், நான்கு அல்லது ஐந்து வருடங்கள் பழங்களைக் கொடுக்கும். பலாப்பழத்தை உரிக்கிற மாதிரி இதை உரிக்கிறதும் சவாலான வேலை. இந்தப் பழத்தின் காம்புக்கு நேர் அடிப்பாகத்தில் சுழி மாதிரி ஒரு வட்டம் இருக்கும். அதில் கத்தியால் குத்தும்போது, துண்டுகளாக மேல் தோல் பிளந்துக்கும். முள் இல்லாத பழங்களும் விற்கப்படுகிறது. ஆனால், அது இயற்கையாக அப்படி இருப்பது இல்லை. தோப்பிலேயே முட்களைச் சுரண்டிடுவாங்க. முள்நாறிப் பழத்தை உரிக்காமல் வைத்திருந்தால், ஒரு மாதம்கூட நல்லா இருக்கும். ஆனா, தோலைப் பிளந்து சுளையை வெளியே எடுத்துட்டா சீக்கிரமே சாப்பிட்டுடணும். இல்லைன்னா, கொஞ்ச நேரத்தில் பிசுபிசுப்பு அதிகமாகி சாப்பிடவே தோணாது'' என்றார் டீச்சர்.

அங்கே இருந்த ஒரு பழத்தை மந்திரக் கம்பளம் பிளந்துகொடுக்க, ஆளுக்கு ஒரு துண்டு எடுத்துச் சாப்பிட்டார்கள். ''ம்ம்ம்... டேஸ்ட் பிரமாதம்'' என்றான் கதிர்.

''சுவையாக இருந்தாலும் இதை அதிகம் சாப்பிட முடியாது. ஏன்னா, உடலில் சூட்டைக் கிளப்பிடும். பயமுறுத்துறதா நினைக்காதீங்க. அதிகமாச் சாப்பிட்டு, மூக்கில் ரத்தம் வந்தவங்களும் இருக்காங்க. ஒரு துண்டு பழம் சாப்பிட்டாலும் உடனே தண்ணீரைக் குடிக்கணும்''

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

என்றார் டீச்சர்.

''பரீட்சை நேரத்தில் ரிஸ்க் வேணாம் சாமி'' என்ற கயல், கையில் எடுத்த இன்னொரு பழத் துண்டை வைத்துவிட்டாள்.

''பரீட்சை, பள்ளிக்கூடம் என்பதும் இந்தப் பலா, முள்நாறிப் பழங்கள் மாதிரிதான். வெளியே முள்மாதிரித் தெரிஞ்சாலும் உள்ளே சுவையான சுளைகள் இருக்கும். இந்த வயதில் நல்லாப் படிச்சுட்டோம்னா, பெரியவர்கள் ஆனதும் வாழ்க்கை சுவையாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

''ஓகோ... இதுதான் பரீட்சை சீஸனுக்கு ஏற்ற அறிவுரையா?'' என்று கோரஸாகக் கத்தினார்கள் நான்கு பேரும்.

''நாள் முழுக்க சுத்திக் காட்டினாலும், சின்ன தத்துவம் கூட சொல்ல விடமாட்டீங்களே'' என்று செல்லமாக அலுத்துகொண்ட  டீச்சர், மந்திரக் கம்பளத்தைக் கிளப்பினார்.