மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஜன் படங்கள் : பிள்ளை

ஞாயிற்றுக்கிழமையின் மாலை நேரம்... கடற்கரை முழுவதும் குழந்தைகளும் பெரியவர்களும் நிறைந்து காணப்பட்டார்கள்.

''பார்த்தியா ஷாலினி, 'எக்ஸாம் டைம்ல கடற்கரைக்கு யார் வரப்போறாங்க?’னு சொன்னியே, கூட்டத்தைப் பார்'' என்றான் கதிர்.

''மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க ஆரம்பிச்சுடுச்சே.. அதான்'' என்றாள் ஷாலினி.

''வாங்க டீச்சர், அலையில் நின்னுட்டு வரலாம்'' என்று கயல் அழைக்க, ''என் கைகளைப் பிடிச்சுக்கிட்டுதான் நிற்கணும்'' என்றார் மாயா டீச்சர்.

அவர்கள், உற்சாகத் துள்ளல் போட்டார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீலக் கடல் விரிந்திருந்தது. ''டீச்சர், இந்தக் கடல் எவ்வளவு தூரத்துக்கு இருக்கும்?'' என்று கேட்டான் அருண்.

''இது, இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியான வங்காள விரிகுடா. இந்தியா, சீனா, பங்களாதேஷ், அந்தமான் தீவுகள் ஆகியவற்றின் எல்லைகளைத் தொட்டுக்கிட்டு, முக்கோண வடிவில் விரிந்திருக்கு. இதன் நீளம், 2,090 கிலோ மீட்டர். அகலம் 1,610 கிலோமீட்டர். மொத்த இந்தியப் பெருங்கடலின் அகலம் 10,000 கிலோமீட்டர் இருக்கும். அதாவது, பூமியின் மொத்தப் பரப்பளவில் இந்தியப் பெருங்கடல் மட்டும் 20 சதவிகிதம் பரவி இருக்கு'' என்றார் டீச்சர்.

''அப்போ, மத்த கடல்களையும் சேர்த்தால்?''

''பூமியின் மொத்தப் பரப்பளவில் 70 சதவிகிதம் கடல்தான். பூமியின் மிக சக்தி வாய்ந்த விஷயங்களில் முதன்மையானது கடல்தான். இப்போ இருக்கிற நவீன இயந்திரங்கள் மூலம் ஒரு காட்டை அழிச்சுடலாம். ஒரு மலையைத் தரைமட்டம் செய்துடலாம். ஆனால், ஒரு கடலை அப்படிச் செய்திட முடியாது'' என்றார் டீச்சர்.

அவர்கள் மணல் பகுதிக்கு வந்தார்கள். சுட்ட மக்காச்சோளத்தை வாங்கிக் கொறித்தவாறு நடந்தார்கள். ''இந்தத் தண்ணீர் எப்படி டீச்சர் உருவாச்சு?'' என்று கேட்டாள் கயல்.

''எனக்குத் தெரியுமே... ஆறுகள் எல்லாம் சேர்ந்து உருவானதுதான் கடல்'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

புன்னகைத்த டீச்சர், ''தப்பு ஷாலினி. நான்கு குழந்தைகள் சேர்ந்து தாய், தந்தையை உருவாக்கினதா சொல்ல முடியுமா? அப்படித்தான் இதுவும். நீர்நிலைகளுக்கு எல்லாம் தாய், கடல்தான்'' என்றார்.

''அது எப்படி?'' என்று கேட்டான் அருண்.

அவர்கள், ஒரு படகின் அருகில் உட்கார்ந்துகொண்டார்கள். ''பூமி, ஒரு பெரிய நெருப்புக்கோளமாக இருந்தபோது, அதாவது 40 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, எரிமலைகள் உருகி... பாறைகளில் இருந்து வெளிப்பட்டதுதான் கடல் நீர் என்பது ஒரு கருத்து. நெருப்புக் கோளமான பூமியைப்போலவே நிறைய விண்கற்கள் வான்வெளியில் இருந்து தொடர்ச்சியாக விழுந்து, அதிலிருந்து வெளிப்பட்டதுதான் நீர் என்றும் ஒரு கருத்து இருக்கு. எப்படிப் பார்த்தாலும் இந்தப் பூமிக்கே தாய், கடல்தான்'' என்றார் டீச்சர்.

''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்க டீச்சர்'' என்றான் கதிர்.

அப்போது, மாயா டீச்சரின் கைப் பையில் இருந்து அலை அடிப்பதுபோல சத்தம் கேட்டது. திறந்து பார்த்தால், நம்ம மந்திரக் கம்பளம்.

''பார்த்தீங்களா... 'என்னைக் கண்டுக்காமல் நீங்களே பேசிட்டு இருக்கீங்களே...’னு சொல்லுது. விளக்கமாகப் பேச, ஒரு காட்சியை நேரில் பார்த்தால் புரியும்'' என்றார் டீச்சர்.

அவர்கள், மந்திரக் கம்பளத்தில் ஏறிக்கொண்டார்கள். அது, அவர்களைக் கவசம்போல மூடிக்கொண்டு, 40 லட்சம் வருடங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றது. அங்கே திரும்பிய திசை முழுவதும் மழை கொட்டிக்கொண்டிருந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''பூமி தோன்றிய சமயத்தில், எரிமலைப் பாறைகள் அல்லது விண்கற்கள், பாறைகளில் இருந்து நீர் வெளிப்பட்டது. அப்போ, பூமிப் பந்தின் கடும் வெப்பத்தின் காரணமாக, நீர் உடனடியாக ஆவியாகி மேலே செல்லும். உடனடியாகக் குளிர்ந்து, பூமியில் மழையாகக் கொட்டும். கடல் நீர் ஆவியாதல், மழையாக வருதல், மீண்டும் ஆவியாதல், மழை... இந்த ரெண்டு நிகழ்ச்சி மட்டுமே லட்சக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்தன. இதனால், பூமிப் பந்து  குளிர்ந்துச்சு. அதன் பிறகு உருவானதுதான் மலைகள், சமவெளிகள் மற்றும் தாவரங்கள்'' என்றார் டீச்சர்.

இப்போது, மந்திரக் கம்பளம் ஆண்டுகளைக் கடந்து ஒரு மலைப் பகுதிக்கு வந்தது. அங்கும் மழைதான். ஆனால், முதலில் பார்த்ததுபோலப் பேய் மழை கிடையாது.

''எனக்குப் புரிஞ்சுபோச்சு. மலைகள் தோன்றிய பிறகு, அந்தப் பகுதியில் பெய்த மழைதான் ஆறுகளாக மாறி, சமவெளிகள் மூலம் கடலுக்குப் போச்சு. காவிரி, கங்கை, யமுனை எல்லாம் கடலின் கொள்ளுப் பேத்திகள்'' என்றான் அருண்.

''ஆக, கடலில் இப்போ இருக்கிற தண்ணீரின் அளவில் ஆறுகளின் பங்கு கொஞ்சம்தான்'' என்றார் டீச்சர்.

''கடல் நீர் உப்புக் கரிக்குது. ஆனால், ஆற்று நீர் உப்புக் கரிப்பது இல்லை. அது ஏன்?'' என்று கேட்டாள் கயல்.

''ஆரம்பத்தில் ஆறுகள் கொண்டுவந்து சேர்த்ததுதான் கடல் உப்புனு நினைச்சாங்க. ஆனால், ஆற்று நீரில் இருப்பது, பைகார்பனேட் என்ற உப்பு. இது, சமவெளிகளில் இருக்கும் பாறைகளிலும் மணல்களிலும் இருக்கும். இதை எல்லாம் ஆற்று நீர் அடித்துக்கொண்டுவந்து கடலில் சேர்க்குது. ஆனால், கடலில் அதிகமாக இருப்பது சோடியம் குளோரைடு என்கிற வேறு வகை உப்பு. இதைத்தான் நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். இந்த சோடியம் குளோரைடு எப்படி உருவாகுது என்று புதிராக இருந்துச்சு. 1970-க்குப் பிறகுதான் விடை தெரிஞ்சது. அதுவும் வியாழன் கோள் மூலமாக'' என்றார் டீச்சர்.

இப்போது, மந்திரக் கம்பளம் வேறு கிரகத்துக்கு அவர்களைத் தூக்கிச்சென்றது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''இது, வியாழன் கோளின் துணைக் கோளான இயோல். நம் பூமியில் இருப்பதைவிட பெரிய பெரிய எரிமலைகள் இங்கே இருக்கு. அதோ, அந்த எரிமலையைப் பாருங்க. அதிலிருந்து பீய்ச்சி அடிச்சுட்டு இருக்கும் வாயுக்கள், மேகங்களாக மேலே தங்கியிருக்கு. இதை, 1974-ல் ஒரு செயற்கைக்கோள் மூலம் ஆய்வு செய்தாங்க. சோடியம் குளோரைடு அதில் இருப்பது தெரிஞ்சது. நமது கடல் உருவானதும் எரிமலைப் பாறைகளில் இருந்துதானே! ஸோ, சோடியம் குளோரைடு உப்பு, கடல் தோன்றியபோதே இருந்திருக்கு. பிறகு, ஆறுகளால் அடித்துவரப்பட்ட உப்புகள் சேர்ந்து, கடலில் உப்புத்தன்மை அதிகம் ஆகியிருக்கு என்று ஆய்வு முடிவை வெளியிட்டாங்க'' என்றார் டீச்சர்.

''அப்போ, எனக்கு ஒரு டவுட் டீச்சர்! ஆறுகள் உருவாகியும் லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்கு. அவை, கடலில் கலப்பதும் தொடர்ந்து நடக்குது. அப்படினா, கடல் நீரில் உப்புத்தன்மை அதிகமாகிட்டே போகுதா?'' என்று கேட்டாள் ஷாலினி.

''இல்லை ஷாலினி. கடலில் உப்பு அதிகம் சேரும்போது, அவை அடி ஆழத்துக்கு வந்து பாறைகளாக மாறிடுது. அதனால், மேல் பகுதியில் இருக்கும் தண்ணீர், தொடர்ந்து அதே உப்புத்தன்மையோடுதான் இருக்கும். பல லட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த இடத்தில் இருக்கும் தண்ணீர் இடம் மாறி, சமவெளி தோன்றும்போது... இந்த உப்பு தங்கிடும். சுரங்கங்களில் எடுக்கப்படும் உப்புகள் இப்படி உருவானதுதான்'' என்றார் டீச்சர்.

''கொஞ்ச நேரத்தில் பூமி, விண்வெளி, கடலின் ஆழம்னு பார்த்துட்டோம். வீட்டுக்குப் போகலாம். பரீட்சை இருக்கே'' என்றான் கதிர்.

''சரி, கடைசியா நீர்த்தாரைகளைப் பார்த்துட்டுப் போவோம்'' என்றார் டீச்சர்.

''அதென்ன பறவையா?'' என்று கேட்டாள் கயல்.

டீச்சர் பதில் சொல்லவில்லை. மந்திரக் கம்பளம் கடலுக்கு மேலே பறந்தது. சற்று தொலைவில் அவர்கள் கண்ட காட்சியில் பிரமித்துப் போனார்கள். கடலின் ஒரு பகுதியில் சுழல் வடிவில் நீர் மேலே எழும்பி, வான் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

''இதென்ன மாயாஜாலம்! மேலே இருந்து யாரோ  அரக்கன் தண்ணீரை உறிஞ்சுறானா?'' என்று கேட்டாள் ஷாலினி.

''தாரை தாரையாக நீர் ஆவியாகும் நிகழ்ச்சி. அதுதான் நீர்த்தாரைகள். இதை, ஆங்கிலத்தில் டோர்னடோ (ஜிஷீக்ஷீஸீணீபீஷீ) என்பார்கள். கடலின் மேல் பகுதியில் வீசும் காற்று குளிர்ந்தும், கடலில் வீசும் காற்று வெப்பமாகவும் இருக்கும். அப்போ, சில நிமிடங்களுக்கு நீர் வேகமாக ஆவியாகும். காற்றின் தன்மை மாறியதும் இப்படி நீர் உறிஞ்சப்படுவது நின்றுவிடும். ஐரோப்பிய கடல் பகுதியில் இந்த மாதிரி அடிக்கடி நிகழும். இங்கேயும் கடலூர் பகுதியில் நிகழ்ந்திருக்கு'' என்றார் டீச்சர்.

''இந்தக் காட்சியை மறக்கவே மாட்டேன். அதைவிட நீர்த்தாரை என்கிற அழகான தமிழ்ப் பெயரை மறக்க மாட்டேன்'' என்றான் அருண்.

''கடலுக்குக்கூட தமிழில் நிறைய அழகான பெயர்கள் இருக்கின்றன. அரலை, ஆழி, ஈண்டுநீர், உவரி, ஓதவனம், கார்கோள், தாமி, நீரகம், நெடுநீர், பாரி, வாரி, வேழாழி... இப்படிச் சொல்லிக்கிட்டே... போகலாம்'' என்று மாயா டீச்சர் சொல்ல, மந்திரக் கம்பளம் வீட்டை நோக்கிப் பறந்தது.