மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஷன் ஓவியம் : பிள்ளை

கயலின் வீட்டுக்கு வந்த ஷாலினி, ''பாட்டி, கயல் எங்கே?'' என்று கேட்டாள்.

''மொட்டைமாடியில் இருக்கா'' என்றார் பாட்டி.

மொட்டைமாடியில், பாட்டி வடாம் பிழிந்திருந்தார். ஒரு கையில் புத்தகம், இன்னொரு கையில் கறுப்புத் துணியுடன் அங்கே உலவிக்கொண்டிருந்தாள் கயல்.

''என்ன கயல், காக்கா ஓட்டுறியா?'' என்று சிரிப்புடன் கேட்டாள் ஷாலினி.

''என்ன செய்றது? 'இன்னிக்கி லீவுதானே. நீதான் காவலுக்கு இருக்கணும். இல்லைன்னா, உனக்கு சாப்பாட்டுக்கு வத்தல் கிடையாது’னு பாட்டி கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்க'' என்றாள் கயல்.

''அப்போ, டீச்சர் வீட்டுக்கு வரலியா? ஹோம் மேட் ஐஸ்க்ரீம் செஞ்சு வெச்சிருக்காங்க. அருணும் கதிரும்  அங்கே போய்ட்டாங்க'' என்றாள் ஷாலினி.

''ஆகா, ஐஸ்க்ரீம்! நானும் வர்றேன். வத்தல் வறுக்கும்போது, பாட்டிக்கு ஒரு முத்தம் கொடுத்தாப்  போதும். ஐஸ்க்ரீமா உருகி, எனக்கும்  குடுத்துருவாங்க'' என்றாள் கயல்.

அவர்கள் மாயா டீச்சர் வீட்டுக்கு வந்தபோது, டைனிங் டேபிளில் ஐஸ்க்ரீம் தயாராக இருந்தது. ''ஆகா... கழுகு மாதிரி கரெக்ட்டா வந்துட்டீங்களே...'' என்றான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''காக்கா விரட்டுற வேலைக்கு டேக்கா கொடுத்துட்டு வந்திருக்கோம்'' என்றாள் கயல்.

''என்ன காக்கா டேக்கா?'' என்று கேட்டவாறு  ஐஸ்க்ரீம் துண்டுகளைப் பகிர்ந்துகொடுத்தார் டீச்சர். ஷாலினி, நடந்ததைச் சொன்னாள்.

''ஒண்ணு தெரியுமா? டேக்கா கொடுக்கிறதில் காக்கையும் கில்லாடி. பிற பறவைகளைவிட புத்திசாலி'' என்றார் டீச்சர்.

''என்னது, காகம் புத்திசாலியா?'' என்று கேலியாகச் சிரித்தான் அருண்.

''ஏன் சிரிக்கிறே அருண்? கறுப்பு நிறம், மோசமான குரல், நாம் போடும் மிச்ச உணவைச் சாப்பிடுவது, ஆளைப் பார்த்ததும் பயந்து ஓடுவது... இதையெல்லாம் பார்த்து, காக்கையைச் சாதாரணமா நினைச்சுக்காதே. 'பறவைகளின் மூளை சொற்களஞ்சியக் கூட்டமைப்பு’ என்று (Avian Brain Nomenclature Consortium) ஒன்று இருக்கிறது. உலகப் பறவைகளின் நடவடிக்கைகள், பழக்கவழக்கங்களை, அவற்றின் மூளையின் தன்மையைக்கொண்டு ஆராயும் குழு. அவர்களின் ஆராய்ச்சியின்படி, பறவைகளின் அறிவுப்பூர்வமான செயல்பாட்டுக்கு அவற்றின் மூளையில், நிடோபலியம் (Nidopallium) என்ற பகுதி இருக்கிறது. மற்ற பறவைகளைவிட காகத்தின் மூளையில், இந்தப் பகுதி சிறப்பாக இருக்கிறது. அதாவது, மனிதன் மற்றும் சிம்பன்ஸியின் மூளையில் இருக்கும், நியோகார்டெக்ஸ் (Neocortex) என்ற பகுதியின் செயல்திறனுக்குச் சமமாக இருக்கிறதாம்'' என்றார் டீச்சர்.

''ஒரு மனிதனுக்கும் இன்னொரு மனிதனுக்கும் உள்ள உருவ வேறுபாட்டை, ஒரு காகத்தால் சுலபமாக அடையாளம் காணமுடியும்னு படிச்சிருக்கேன் டீச்சர்'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அது மட்டுமா? கிளி, புறாவைப்போல காகத்தைப்  பழக்கப்படுத்தினால், மனிதர்களைப்போல சில வார்த்தைகளைப் பேசவைக்கலாம். சில இடங்களுக்கு அனுப்பவும் முடியும். காகத்தைப் பழக்கப்படுத்தி, சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுத்த முடியும் என்பதால்,  'காகத்தை வளர்க்கக் கூடாது’ என்று சில நாடுகளில் சட்டமே இருக்கிறது'' என்றார் டீச்சர்.

''என்ன டீச்சர், ஹாலிவுட் த்ரில் மூவி மாதிரி சொல்லிட்டே... போறீங்க'' என்று கேட்டாள் கயல்.

''நான் சொல்றது நிஜம்தான். காகங்களில் உள்ள வகைகள், அவற்றைப் பற்றிய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்துவந்தார்.

''காகங்கள், நம் சுற்றுச்சூழலுக்கு உதவியாக இருக்கின்றனதானே டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''ஆமா ஷாலினி. மனிதர்கள் ஒதுக்கும் உணவுக் கழிவுகள், இறந்த சிறு பிராணிகளைச் சாப்பிட்டு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக்கும். வயல்வெளிகளில் எலிகளைப் பிடித்துத் தின்று, விவசாயிகளின் தோழனாக இருக்கு. நம்மைப்போலவே, ஆஸ்திரேலியப் பழங்குடியினரும் காக்கையை மூதாதையராக நினைக்கிறாங்க. திபெத் நாட்டில், கடவுள் அவதாரங்களில் ஒன்றாகக் காகம் கருதப்படுகிறது'' என்றார் டீச்சர்.

அவர்கள், மொட்டை மாடிக்கு வந்தார்கள். ''வெயிலில் சுற்றாமல் எல்லாக் காகங்களையும் இங்கேயே வர வைப்போம். நம் ஊர்களில் பார்ப்பது, வீட்டுக் காகம். இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் போன்ற ஆசிய நாடுகளில் இவை அதிகம் இருக்கும்'' என்ற டீச்சர், கம்பளத்தை விரித்தார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

அதில் இருந்து ஒரு காகம் வெளியே பறந்தது. ''காகங்கள் முதன்முதலில் தோன்றியது, கிழக்கு ஆசியப் பகுதிகளில்தான். இங்கிருந்து ஆப்பிரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்குப் பரவின. உலகம் முழுக்க 40 வகையான காகங்கள் இருக்கு. இவை, மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். சராசரியாக, 17 நாட்களில் குஞ்சு பொரிக்கும். ஐரோப்பாவில் காணப்படும்  'ஜேக்டா’ (Jackdaw) என்ற வகை, அதிகமான பரப்பளவில் உள்ள காகங்களில் முக்கியமானது. ஜேக்டா என்பதற்கு ஐரோப்பிய ஆங்கிலத்தில், சிறிய பறவை என்று அர்த்தம்'' என்றார் டீச்சர்.

கழுத்து மற்றும் தலையின் பின் பகுதி, வெள்ளை நிறத்திலும் மற்ற பாகங்களில் கறுப்பும் கொண்ட காகம் ஒன்று, மந்திரக் கம்பளத்தில் இருந்து வந்தது.

''காகங்கள் எத்தனை வயது வரை இருக்கும் டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''காகங்களின் ஆயுள் காலம் சராசரியாக 20 வருடங்கள். அமெரிக்கக் காடுகளில் வாழும் ஒரு காக்கை இனம், 30 வருடங்கள் வாழ்கின்றன. அமெரிக்கக் காகங்கள், 50 சென்டிமீட்டர் வரை இருக்கும். இவற்றில் சிறியது, 'ஃபிஷ் க்ரோ’ எனப்படுவது. நம் ஊர் அண்டங்காக்கைபோல முழுக் கறுப்பாக இருக்கும். தண்ணீரில் உள்ள முட்டைகள், சிறிய பூச்சிகள், புழுக்களைப் பிடித்து உண்ணும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

இப்போது, மந்திரக் கம்பளத்தில் இருந்து அந்தக் காக்கை பறந்து வந்தது. ''வெள்ளைக்காரர்கள் தேசத்திலும் இவ்வளவு கறுப்பாக, காகத்தால் மட்டுமே இருக்க முடியும். சபாஷ்'' என்றான் அருண்.

''காக்கைகளை மேலோட்டமாகப் பார்த்து, அவற்றைக் கறுப்பு என நினைக்கிறோம். ஐரோப்பா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படும் 'கேரியன் காகம்’ பச்சை, ஊதா கலந்த நிறங்களில் இருக்கும். நியூஸிலாந்து, அயர்லாந்து. பிரிட்டன் போன்ற நாடுகளில் காணப்படும் ரூக் (Rook) என்ற வகையும் ஊதா கலந்த நிறத்தில் இருக்கும்'' என்றதும், அந்தக் காக்கைகள் மந்திரக் கம்பளத்தில் இருந்து வந்தன.

'ஊதா... கலரு காக்கா, உனக்கு யா...ரு அக்கா?’ என்று பாடினான் கதிர்.

''உடலில் அதிக வெள்ளை நிறம்கொண்ட காகமும் இருக்கு கதிர். அதன் பெயர் ஹுடட் க்ரோ (Hooded Crow). இதன் தலை, கழுத்து, இறகு மற்றும் கால்கள் தவிர, மற்றப் பகுதிகள் வெள்ளையாக இருக்கும். பிரிட்டன், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி போன்ற நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் காணப்படும். நத்தை, நண்டுகள் இவற்றின் முக்கிய உணவு'' என்று டீச்சர் சொன்னதும், வாயில் ஒரு நண்டைக் கவ்வியபடி வந்தது அந்தக் காகம்.

''நான் ஏதாவது புது விஷயத்தைச் சொன்னால், 'கொஞ்சம் ஏமாந்தா, வெள்ளைக் காகம் பறக்குதுனு சொல்வியே’னு என் ஃப்ரெண்டு கிண்டல் செய்வா. அவள் இந்த நேரத்தில் இங்கே இல்லாமல் போய்ட்டாளே...'' என்றாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

அந்தக் காகம், நண்டின் ஓட்டை உடைத்துத் தின்ன ஆரம்பித்தது. ''பார்த்தீங்களா... எவ்வளவு பொறுமையா, பதமா உடைத்துச் சாப்பிடுதுனு. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், ஒரு வகை விஷத் தவளைகள் இருக்கு. அங்கே இருக்கும் காக்கைகள், விஷத் தவளையைப் பிடித்துத் தொண்டையைக் கிழிக்கும். அங்கே இருக்கும் நஞ்சைக் கவனமாக எடுத்துவிட்டு, இரையை உண்ணும். அந்த அளவுக்கு புத்திசாலித்தனமாகச் செயல்படும்'' என்றார் டீச்சர்.

''இதுவரை, காகம் என்றதும் பாட்டி சுட்ட வடையைத் திருடின கதை மட்டும்தான் ஞாபகம் வந்துட்டு இருந்துச்சு. இன்னிக்கு, காகம் பற்றி நிறையத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்றான் அருண்.

''பிற பறவைகளின் முட்டைகளைத் திருடிச் சாப்பிடுவது, மனிதர்களுக்கு சில தொல்லைகளை உண்டாக்குவது என, காகங்களிடம் சில நெகட்டிவ் விஷயங்கள் இருந்தாலும் காகமும் இந்த உலகின் சுற்றுச்சூழலுக்கு அவசியமான ஒரு பறவை. பிற பறவை இனங்களைப்போலவே காகங்களிலும் சில இனங்கள் அழிவுப் பாதையில் இருக்கு. ஹவாய் தீவில் வாழ்ந்த ஹவாயன் (Hawaiian Crow)மற்றும் மரியானா (Mariana Crow) என்ற இனங்கள், இப்போது முற்றிலும் அழிந்துவிட்டன. இருக்கும் இனங்களைப் பாதுகாப்பது முக்கியம்'' என்றார் டீச்சர்.

சற்று நேரத்துக்குள், மொட்டைமாடியில் பல்வேறு வகையான காகங்கள் சேர்ந்துவிட்டன. 'கா... கா’, 'அர்க்... அர்க்’ 'நு... நு’, 'பவுக்... பவுக்’ என விதவிதமான சப்தங்கள்.

''அடடா... காகங்கள் இத்தனை வகையாகக் குரல் கொடுக்குமா... இவற்றை எல்லாம், இப்போ கயல் வீட்டு மொட்டைமாடிக்கு அனுப்பினால்?'' என்றாள் ஷாலினி.

''ஏன் உனக்கு இவ்வளவு கொலை வெறி?'' என்றாள் கயல்.