மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !
கே.கணேசன்
மாயா டீச்சரும் சுட்டிகளும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர். உலகின் ஏதோ ஓர் இடத்தில் வெடிகுண்டு வெடித்ததைப் பற்றி காட்சி ஓடிக்கொண்டிருந்தது.
''இப்படி பாம் வைக்கிறது எல்லாம் ரொம்ப தப்புதானே டீச்சர்?'' என்றான் பிரசன்னா.
''ஆமாம்! இதனால் ஏகப்பட்ட பொருள் சேதமும், உயிர் சேதமும் ஏற்படுகிறது'' என்று கவலையுடன் சொன்னார் மாயா டீச்சர்.

##~## |
''பாம், வெடிகுண்டு இதை எல்லாம் கண்டுபிடிக்காமலேயே இருந்திருக்கலாமே டீச்சர்.'' என்றாள் மது.
''மனிதகுலத்தின் வளர்ச்சியில் இதை எல்லாம் தவிர்க்க முடியாது. விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகள் நன்மைக்கே பயன்படுத்தப்படும் என நினைக்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகள் என்பது எப்போதுமே மக்களின் வளர்ச்சிக்கே. ஆனால், சில சமயங்களில் இப்படி எதிர்மாறாக நடந்து விடுகிறது.'' என்றார் டீச்சர்.
அப்போது 'டமால்’ என்று ஒரு சத்தம் கேட்டது. எல்லாரும் பயத்தில் அதிர்ந்து விட்டார்கள். 'என்னடா’ என்று பார்த்தால்... கொஞ்சம் தூரத்தில் கணேஷ் ஊதிய பலூன் வெடித்திருந்தது. கணேஷ் பேயறைந்தது மாதிரி நின்றிருந்தான்.
''டேய் என்ன... பாம் வெடிச்ச மாதிரி பயந்து போயிட்டே?'' என்று கேட்டான் பிரசன்னா.
''டீச்சர், சின்ன பலூன் வெடிச்சதுக்கே இப்படி இருக்கே, வெடிகுண்டு வெடிச்சா என்ன ஆகறது?'' என்றாள் சரண்யா.
''சரி, இன்னிக்கு இதான் மேட்டர்'' என்று டீச்சர் பேசுவதற்குத் தயாரானார்.
''ஐயோ... வெடிகுண்டு எல்லாம் வேண்டாம் டீச்சர்'' என்று பயந்தாள் மது.
''இதைப் பத்தி தெரிஞ்சுக் கிறது தப்பில்லை. அதோட பாதிப்புகள் பத்தி தெரிஞ்சிக் கிட்டாதான் அதை நாம் தவிர்க்க முடியும். வெடிகுண்டுகளைப் பத்தி தெரிஞ்சுக்க, நாம பழங்கால சீனாவுக்கே போகலாம்.'' என்ற மாயா டீச்சர், மந்திரக் கம்பளத்தைத் தயார் செய்தார். சுட்டிகள் ஏறிக்கொள்ள, கம்பளம் பழங்கால சீனாவுக்குச் சென்றது. அங்கே ஒரு சீனர், ஒரு ராக்கெட்டைப் பற்றவைத்துக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்தபடியே மாயா டீச்சர் பேச ஆரம்பித்தார். ''சீனர்கள் கி.பி.850-களிலேயே வெடிமருந்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பொட்டாசியம் நைட்ரேட்டுடன் கரி, மற்றும் சல்பர் ஆகியவை சேர்ந்த கலவையை நெருப்பின் மூலம் தூண்டினால் வெடிக்கும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். வெடி மருந்தை இறுக்கமாக ஒரு குழாயில் அடைத்து, அதை நெருப்பின் மூலம் வெடிக்க வைத்தார்கள். எரியும் வெடிமருந்தில் இருந்து வெளியாகும் வெப்பக் காற்றினால், வெடிமருந்துக் குழாய் எதிர் திசையில் பயணிப்பதை உணர்ந்து, அதை ராக்கெட் டெக்னாலஜியாகப் பயன்படுத் தினார்கள். இவற்றைத் தயாரிப்பதற்காகவே ஏழு தொழிற்சாலைகளையும் அமைத்து இருந்தார்கள்.'' என்றார் டீச்சர்.
''ராக்கெட் தொழில்நுட்பம் என்பது, நியூட்டனின் மூன்றாம் விதிதானே, டீச்சர்?'' என்றாள் மது.
''அட்றா சக்கை... அட்றா சக்கை!'' என அவளைக் கிண்டல் செய்தான் பிரசன்னா.

''ஆமாம்! ஆனால் நாம் வெடிக்கும் பட்டாசுகள் கொஞ்சம் வீரியம் குறைந்தவை. சீனர்கள், ராக்கெட்டுகளை வேடிக்கையாகத் தான் பயன்படுத்தினார்கள். வெடிமருந்துகளை விழாக்களைக் கொண்டாடவும், கொடிய விலங்குகளைப் பயமுறுத்தி விரட்டவும் பயன்படுத்தினர். பிற்காலத்தில், மலைகளை உடைத்து சாலைகள் அமைத்தல், கிணறு தோண்டுதல் ஆகிய பணிகளுக்குப் பயன்படுத்தினர். ஆனால், இதே தொழில் நுட்பத்தைப் பிரிட்டிஷ் ராணுவம் 1800-களின் ஆரம்பத்தில் கோபன்ஹேகன் மற்றும் லிப்னிஸ் ஆகிய போர்க்களங்களில் பயன்படுத்தி போர் செய்தது.'' என்ற டீச்சர் தொடர்ந்து, ''இந்த தொழில்நுட்பத்தை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றவர் அமெரிக்காவின் எச்.கோடார்ட். இவர் நவீன ராக்கெட் தொழில்நுட்பத்தின் முன்னோடி எனப்படுகிறார். இரண்டாம் உலகப் போரில் இந்தத் தொழில்நுட்பம் உச்ச நிலையை அடைந்தது. வெடிபொருட்கள், வெடிமருந்தினை நாம் எவ்வளவு அழுத்தமாக வைக்கிறோம் என்பதைப் பொருத்துதான் அதனுடைய வெடிப்பு நிகழும். ஒரு பலூனில் அடைக்கப்பட்ட காற்றே இத்தனை வீரியமாக வெளிப்படும்போது, பல நூறு மடங்கு அழுத்தத்தில் வைக்கப்படும் வெடிமருந்து எப்படி வெடிக்கும் என்பதை யோசியுங்கள்.
சீனர்கள்தான் முதல் முதலில் கையெறி குண்டுகளையும்(detonation)பயன்படுத்தி இருக்கிறார்கள். இதில் இருக்கும் புல்லட்கள் மாதுளம் பழத்தின் உள்ளே இருக்கும் முத்துகளைப் போன்று இருப்பதால் மாதுளத்தைக் குறிக்கும் பிரெஞ்சுச் சொல்லான 'பொமகிரனேட்’ என்பதில் இருந்து இந்தப் பெயர் வந்ததாம். முதல் கிரனேட் சீனாவில் 'சுங் வம்ச’ ஆட்சியின்போது (கி.பி 960-1276) பயன்படுத்தப்பட்டது. சரி, நாம் நம்ம ஊருக்கே போய் பேசிக்கலாம்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை வீட்டுக்குத் திருப்பினார்.
இங்கே வந்து இறங்கியதும் சந்தேகத்தைக் கேட்டான் கணேஷ். ''ஆட்டோபாம் கூட அப்படித்தானா டீச்சர்?''
''ஐயையோ... ஆட்டோபாம் என்றாலே எனக்கு பயம். அதோட சவுண்டும், அதிர்வும் யப்பா!'' என்றாள் சரசு.
''தீபாவளியின்போது நாம் வெடிக்கும் சாதாரண வெடிக்கும், லக்ஷ்மி வெடிக்கும் இடையே வெளியாகும் ஒலி மற்றும் அதிர்வில் மிகப் பெரிய வித்யாசம் இருக்கும். அவற்றில் வெடிமருந்துக்குக் கொடுக்கப்படும் அழுத்தம் தான் காரணம்.'' என்றார் டீச்சர்.
''ஆமாம் டீச்சர். பக்கத்து வீட்டு வாலுப் பையன் ஆட்டோபாம் வெடிக்கும்போது அதன் மேல கொட்டாங்கச்சியை மூடிட்டு வெடிப்பான். கொட்டாங்கச்சி சில்லு சில்லா உடைஞ்சுபோய் பறக்கும்.'' என்றான் பிரசன்னா.
''வெடிமருந்துக் கலவை ஒன்றுதான். ஆனால், அதை இறுக்கி மிகவும் அழுத்தம் கொடுத்து வைத்திருப்பதால், அதில் இருந்து வெளியாகும் வெப்ப வாயுவின் அழுத்தம் ரொம்பவே அதிகம் ஆகும். அதனால்தான் ஆட்டோபாம் அத்தனை வீரியத்துடன் வெடிக்கிறது. இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம்... விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான். அவருடைய முக்கியமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா?'' என்றார் மாயா டீச்சர்.
E=MC2’ என்று கோரஸாக பதில் வந்தது.
''ஆமாம்! அவரது இந்த சார்பியல் தத்துவம் தான் அறிவியல் உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது. ஆற்றல் நிறையை ஆளுமை செய்யும். நிறையும் ஆற்றலுக்கு ஈடான ஆதாரமாக இருக்கும். இந்தக் கோட்பாடு என்ரிகோ ஃபெர்மி போன்ற வேதியியல் விஞ்ஞானிகளை செயலூக்கம் பெறவைத்து, பல்வேறு விதமான வெடிமருந்துகளைக் கண்டுபிடிக்கத் தூண்டியது. வெடிமருந்து என்பது கந்தகம், கரி, பொட்டாசியம் நைட்ரேட் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருள் கலவை என்பது தெரியும். இந்த வெடிமருந்து சிதைவடையும்போது... ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால், தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியிலும் கூடிய வேகம்கொண்ட அழுத்த அலைகளை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து, ஒலியிலும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலை களையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வாயுவின் அழுத்தம், துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது. அது வெடிப்பதற்கு டி.என்.டி எனப்படும் வெடிபொருளைப் பயன் படுத்துகிறார்கள்.
'ட்ரினிட்ரோடொலுய்ன்’தான் (Trinitrotoluene) சுருக்கமாக டி.என்.டி., என்றழைக்கப்படுகிறது. இதை 1863-ல் ஜெர்மனியின் ஜோசப் வில்பிராண்ட் கண்டுபிடித்தார். ஆனால், இதனுடைய முழு ஆற்றலை அவர் சில வருடங்கள் கழித்தே அறிந்துகொண்டார். இதை வெந்நீரிலும், வெப்ப ஆவியிலும் சுலபமாக இளகச் செய்து, ஷெல்களில் அடைத்துப் பயன்படுத்தலாம். இந்தவகை ஷெல்களைத்தான் அமெரிக்கா வியட்நாமுக்கு எதிராகப் பயன்படுத்தியது. மிகவும் குறைவான இடத்தில் பலமடங்கு அழுத்தத்தில் அடைக்கப்படும் வெடி மருந்து நெருப்பினால் தூண்டப்பட்டு, அதிவீரியத்துடன் வெப்ப வாயுவாக வெளியாகும்.
வெடிபொருளின் அடி மையம், இருபக்க சுற்றுச் சுவர்கள், வெடியூக்கியின் மையப் பகுதி ஆகிய நான்கும் சரியாக இருந்தால், அந்த வெடிபொருளின் பாதிப்பு மிகவும் பெரியதாகவே இருக்கும். அந்த வெடித்தலின் வடிவம் மிகப் பெரியதாக இருக்கும். மலைகளை உடைத்து சாலைகள் போடும் பணிகளுக்கு வெடிமருந்துகள் பயன்படுகின்றன. ஆனால், நவீன காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப நாடுகள், அவற்றை போரின்போது எதிரிகள் மீது பயன்படுத்தத் துணிந்தார்கள்.
ஃபெர்மியின் வழியில் ஓட்டோ வான், லீஸ் மெய்ட்னர், மாக்ஸ் பிளாங்க் என அவரவர் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். அணுகுண்டு என்பது அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் ஆயுதமாகும். இது மற்ற எந்தவொரு வெடிமருந்துகளைக் காட்டிலும் மிகவும் அதிக ஆற்றலும் ஆபத்து நிறைந்ததும் ஆகும். அணுக்கருப் பிளவு (Nuclear Fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும். இவ்வணுக்கருப் பிளவின்போது நியூட்ரான் களும், கதிர் இயக்க ஆற்றலும் பெருமளவில் வெளிப்படு கின்றன.
ஜப்பானியர்கள் ஹோன்சூ தீவில் இருந்து, இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ராட்சச நைட்ரஜன் பலூன்களில் வெடிகுண்டை இணைத்து, அமெரிக்கா மற்றும் கனடாவின் காடுகள், விளைநிலங்களை அழித்தார்களாம்.
ஸ்வீடனைச் சேர்ந்த வேதியியல் விஞ்ஞானியான ஆல்பிரட் நோபல், 1867-களில் டைனமைட்டைக் கண்டுபிடித்தார். இது களிமண், மரத்தூள், ஷெல் பவுடர் ஆகியவற்று டன் நைட்ரோக்ளிசரின் ஆகியவற்றைக் கொண்ட வேதிப்பொருள் கலவையை, மின்சாரப்பொறி மூலம் தூண்டி வெடிக்க வைக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். இது பொதுவாக 20 செ.மீ நீளமும் 3.2 செ.மீ விட்டமும்கொண்ட குழாயில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கும். இது டி.என்.டி. வெடி பொருளைவிட அறுபது சதவீதம் அதிக ஆற்றலைக் கொண்டது. ஆல்பிரெட் நோபல், தனது கண்டுபிடிப்பு ஆக்க வேலைக்குப் பயன்படாமல் அழிவுப் பணிகளுக்கே அதிகம் பயன்பட்டதால், மிகவும் மனக் கலக்கம் அடைந்தார். அதனை ஈடுகட்டுவதற்காகவே நோபல் பரிசுகளை அறிவித்தார்.
இவை எல்லாம் இருந்தாலும், 2003-ல் அமெரிக்க ஃப்ளோரிடாவின் எக்ளின் விமானப் படை மையத்தில் செய்த சோதனை வெடிப்புதான் எல்லா குண்டு களுக்கும் முதன்மையானது என்கிறார்கள். மிகவும் சக்தி வாய்ந்த நியூக்ளியர் இல்லாத குண்டுகளில் இதுதான் பெரியதாம். எனவே, இதை Mother of all bombs என்று சொல்கிறார்கள்.
அணுகுண்டுச் சோதனை இந்தியாவில் நடத்தப்பட்டது உட்பட, இரண்டாயிரம் தடவைகள் சோதனை களுக்காக பல்வேறு நாடுகளால் நடத்தப் பட்டிருக்கிறது. முதல் முதலாக அணுகுண்டு இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவால் ஜப்பானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இத்தனை வருடங்கள் கழித்தும் இன்னமும் இருப்பதாகச் சொல் கிறார்கள்.
பொதுவாக வெடிகுண்டுகள் என்றாலே ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுப்பின்போது பயன்படுத்தப்பட்டு வந்தாலும்... சமீப காலங்களில் அந்த நாட்டிலேயே இருக்கும் தீவிரவாதக் குழுக்களும் நாட்டின் அமைதிக்கு ஊறு செய்ய நினைப்பவர்களும், வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி மனித உயிர்களுக்குத் தீங்கு விளைவிக்கிறார்கள். இந்த நிலை மாறி எல்லோரும் சகோதரர்களாக அமைதியாக வாழ வேண்டும். அதுதான் நமக்குத் தேவை.'' என்றபடி மாயா டீச்சர், சுட்டிகளை அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.