மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மாம்பழமாம் மாம்பழம் 1000 வகை மாம்பழம் !கே.யுவராஜன் ஓவியம் : பிள்ளை

அருணின் தாத்தா, கிராமத்தில் இருந்து ஒரு கூடை நிறைய மாம்பழங்களை அனுப்பியிருந்தார். அதில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, மாயா டீச்சர் வீட்டுக்கு வந்தான் அருண்.

''முக்கனிகளில் முதல் கனியுடன் வரும் அன்புத் தம்பி அருணை ஆவலோடு வரவேற்கிறோம்'' என்றார் மாயா டீச்சர். கதிர், கயல், ஷாலினியும் அங்கே இருந்தார்கள்.

அருண், மாம்பழங்களை எடுத்துக்கொடுத்தான். மஞ்சளும் இளஞ்சிவப்பும் கலந்த நிறத்தில், பழுத்த மாம்பழங்கள் அவர்கள் கண்களை விரியவைத்தன. நாவில் நீர் சுரந்தது.

''இப்பவே ஜூஸ் போட்டுச் சாப்பிடலாமா டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''எதுக்கு ஜூஸ்? நல்லாக் கழுவிட்டு, ஸ்லைஸ் பண்ணிச் சாப்பிடுவோம். எந்தப் பழமாக இருந்தாலும் ஜூஸ் போட்டுக் குடிக்கிறதைவிட, அப்படியே சாப்பிடுறதுதான் நல்லது. ஜூஸ் போடும்போது, கூடுதலாகத் தண்ணீர், சர்க்கரை சேர்ப்போம். அதனால், உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாகும்.  இயற்கையான சில ஊட்டச்சத்துகளும் குறைஞ்சுடும்'' என்றார் டீச்சர்.

பிறகு, மாம்பழத் துண்டுகளுடன் பால்கனியில் அமர்ந்துகொண்டார்கள். ''மாம்பழத்தின் தாயகம் நம்ம இந்தியாதானே டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''ஆமாம் கயல். கி.மு.4,000 ஆண்டுகளிலேயே மாம்பழங்களை இந்தியர்கள் பயன்படுத்தியிருக்காங்க. ஆரம்பத்தில் தென் ஆசியாவில்தான் மாமரங்கள் இருந்தன. இங்கிருந்துதான் ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களுக்குப் பரவியது. மாமரம் நல்லா வளர, வெப்பமான சூழ்நிலை தேவை. உறைபனி அதிகம் உள்ள சில நாடுகளைத் தவிர, உலகம் முழுக்க மாமரங்கள் இருக்கு'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''இப்போ, மாம்பழம் அதிகம் விளைவது எங்கே?'' என்று கேட்டான் கதிர்.

''உலக அளவில், மாம்பழ உற்பத்தியில் இந்தியாதான்  முதல் இடத்தில் இருக்கு. அதாவது, ஒவ்வோர் ஆண்டும் விளையும் மொத்த மாம்பழங்களில், 50 சதவிகிதம் இந்தியாவில்தான் விளையுது. அடுத்த இடத்தில் இருப்பது, சீனா. மாங்காய் என்ற தமிழ்ச் சொல்தான், ஆங்கிலத்தில் மேங்கோ (Mango)என்று மாறியது. இந்திய வேதங்கள், புராணங்களில்... மாம்பழத்தைக் கடவுளின் உணவாகச் சொல்லி இருக்காங்க'' என்றார் டீச்சர்.

''தெரியுமே! 'ஞானப்பழம்’னு சொல்ற இந்த மாம்பழத்துக்குத்தானே விநாயகரும் முருகனும் சண்டை போட்டுக்கிட்டாங்க'' என்ற ஷாலினி, ''பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா...'' என்று பாட ஆரம்பித்தாள்.

''போதும் நிறுத்துங்க ஒளவையாரே! டீச்சர், மாம் பூக்கள் எப்படி இருக்கும்?'' என்று கேட்டாள் கயல்.

''நீ பார்த்தது இல்லையா? சரி வாங்க, ஒரு மாந்தோட்டத்துக்குப் போகலாம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் பால்கனிக்குப் பறந்துவந்தது. ''கம்பளமே, எங்களை மல்கோவா மாம்பழம் விளையும் தோட்டத்துக்கு அழைச்சுட்டுப் போ! அதுதானே ரொம்ப ஃபேமஸ்'' என்றான் அருண்.

கம்பளம் பறக்க ஆரம்பித்தது. ''டீச்சர், இந்த மாதிரி மாம்பழத்தில் எத்தனை வகைகள் இருக்கு?'' என்று கேட்டான் கதிர்.

''மாமரங்களில் 35 சிற்றினங்கள் இருக்கு. இந்தச் சிற்றினங்களில் இருந்து, ஒட்டு ரகம் மூலம் சுமார் 1,000 ரகங்களில் கன்றுகளை உருவாக்கி இருக்காங்க. ஒட்டு ரகம் என்றால் என்ன தெரியுமா?'' என்று கேட்டார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''தெரியுமே! விரைவாக வளரும் ஒரு வகையுடன், இன்னொரு வகையை இணைத்து, புதிய வகைத் தாவரத்தை உருவாக்குவது. இப்படி உருவாக்கும் தாவரங்களில் கிடைக்கும் பழமோ, காயோ புது மாதிரியான சுவையோடு இருக்கும்'' என்றாள் கயல்.

''சரியாச் சொன்னே கயல்'' என்ற  மாயா டீச்சர், ''மல்கோவா மாம்பழமும் அப்படி ஓர் ஒட்டு ரகம்தான். 1889-ல் மகாராஷ்டிரா மாநிலம், பூனாவில் உள்ள விவசாயக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவர், மார்ஷல் வுட்ரோவ் (Marshall Woodrow). இவர், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதற்காக உருவாக்கிய 12 ஒட்டு ரக மாங்கன்றுகளில் ஒன்றுதான், மல்கோவா. இன்னொரு ஃபேமஸ் ரகம், அல்போன்ஸா. இப்போது, இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஃபேமஸாக இந்த மாம்பழங்களே இருக்கு'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், ஒரு மாந்தோட்டத்தில் இறங்கியது. சரியான விளைச்சல் காலம் என்பதால், அந்தத் தோட்டம் முழுவதும் கமகம நறுமணம் சுண்டி இழுத்தது.

''சராசரியாக ஒரு மாமரம், 35 மீட்டர் உயரம் வளரும். கொளுந்து என்று சொல்கிற இளம் இலைகள், கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். கொஞ்ச நாளில் பச்சை நிறத்துக்கு மாறிவிடும். இலைகள் நறுமணத்தோடு இருக்கும். இந்த நறுமணத்துக்காகத்தான், வீட்டு விசேஷங்களில் வாசல்ல கட்டுறாங்க'' என்றார் டீச்சர்.

''கயல், அங்கே பார் மாம்பூக்கள். எவ்வளவு பொடிப் பொடியா இருக்கு பார்'' என்றாள் ஷாலினி.

பூக்கள் நிறைந்த அந்த மரத்தின் அருகே சென்றார்கள். ''இப்படித்தான் கிளை நுனியில் கொத்தாக பூக்கள் பூக்கும். ஒரு பூங்கொத்தில் சராசரியாக 4,000 சிறு பூக்கள் இருக்கும். இதில் ஆண் பூக்கள், இரு பால் உடைய பூக்கள் என்ற வேறுபாடு இருக்கு. இந்தப் பூக்கள் காயாகிப் பழமாக மாறுவதற்கு, அதன் ரகத்தைப் பொருத்து, மூன்று முதல் ஆறு மாதங்கள் ஆகும். மாமரம் சீக்கிரம் பூப்பதற்காக, பொட்டாசியம் நைட்ரேட், நாப்தலின், அசிட்டிக் ஆசிட் போன்ற வேதிப்பொருள்களைப் பயன்படுத்துவாங்க. மா, காயாக இருக்கும்போது பச்சை நிறத்திலும் பழமானதும் மஞ்சள் நிறத்துக்கும் மாறிடும்.'' என்றார் டீச்சர்.

''ஆனா, நிறையப் பழங்கள் மஞ்சளும் சிவப்பும் கலந்து இருக்கே...'' என்றான் அருண்.

''பொதுவாக, ரகத்தைப் பொருத்து இந்த நிறங்களில் மாறுபாடு இருக்கும். ஆனாலும், மரங்களில் இருக்கும்போது சூரிய ஒளி அதிகம் படும் பகுதிகள் சிவப்பாகவும் மற்ற பகுதிகள் மஞ்சளாகவும் மாறும். சில ரகங்களில், மேல் தோல் பச்சையாகவே இருந்தாலும் நல்லாப் பழுத்து இருக்கும். இனிப்பு மாம்பழங்களைத் 'தேமா’ என்றும் புளிப்பு மாங்காய்களைப் 'புளிமா’ என்றும் வகைப்படுத்துவாங்க. புளிப்பு மற்றும் அதிகமான நார்த்தன்மை ஏற்படுவதற்கு, மாமரம் இருக்கும் பகுதியின் மண், நீர் ஆகியவை காரணமாக அமையும்.'' என்றார் டீச்சர்.

''இவ்வளவு பழங்களையும் கையால்தான் பறிப்பாங்களா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''கையாலும் பறிப்பாங்க, தொரட்டியாலும் பறிப்பாங்க. எங்க தாத்தாவோட தோட்டத்தில் பார்த்திருக்கேன்'' என்றான் அருண்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''நன்கு பழுத்த பிறகு மாம்பழங்களைப் பறித்தால், கையும் கத்தியும் பட்டு, பழங்கள் சேதம் ஆகிடும். அதனால், பாதி அளவு பழமாக இருக்கும்போதே  பறிச்சுடுவாங்க. அதிலும் ஏற்றுமதிக்காகப் பறிக்கும் மாம்பழங்களைக் கிட்டத்தட்ட நான்கு அங்குலம் காம்பு விட்டுதான் பறிப்பாங்க. காம்பு விடாமல் பறித்தால், பால் கறை பழங்களில் படும். கறையோடு இருக்கும் பழத்தை மக்கள் விரும்ப மாட்டாங்க. பிறகு, தோலில் புள்ளிகள் இல்லாமல் இருப்பது, அளவு எனப் பல வகைகளில் தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்புவாங்க'' என்றார் டீச்சர்.

''பழத்தை, பாதி பழுத்திருக்கும்போதே பறிச்சிடுறதா சொன்னீங்க. அப்புறம், அதுவே முழுசா பழுத்துடுமா?'' என்று கேட்டாள் கயல்.

''வைக்கோல், இலைகளைப் போட்டு இயற்கையான முறையில் பழுக்கவைப்பதும் உண்டு. புகை போட்டும் பழுக்கவைப்பார்கள். ஓர் அறையில் மாம்பழங்களைக் குவிச்சு வெச்சுட்டு, எத்திலீன் வாயுவைச் செலுத்திப் பழுக்கவைப்பாங்க. ஆனால், சீக்கிரம் பழுக்க வேண்டும் என்பதற்காக சிலர், கார்பைடு கற்களைப் பழங்கள் மீது போட்டுவைப்பார்கள். இது ரொம்ப ஆபத்து. பழத்தின் தோல் மீது வெள்ளை வெள்ளையாகத் திட்டுகள் இருப்பதைப் பார்த்தே தெரிஞ்சுக்கலாம்'' என்றார் டீச்சர்.

தோட்டம் முழுவதும் மெதுவாக நடைபோட்டு, ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வந்ததும், மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது.

''மாம்பழத்தை வெறும் சுவைக்காகத்தான் சாப்பிடுறாங்களா டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''மாம்பழத்தில் 15 சதவிகிதம் சர்க்கரையும் ஒரு சதவிகிதம் புரதமும் இருக்கு. ஆனால், கால்சியம், பொட்டாசியம், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ போன்ற சத்துகளும் இருக்கு. குறிப்பாக, இதன் தோலில் வைட்டமின் சி சத்து இருக்கு. இது, உடலுக்கு மிகவும் நல்லது. அதாவது, இயற்கையான முறையில் பழுத்த பழங்களைத் தோலோடு சாப்பிடலாம். செயற்கையாகப் பழுக்கவைத்த மாம்பழத்தைச் சாப்பிடுவதால், உடல்நலக் குறைவு ஏற்படும். இன்றைய நிலையில் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுறதுதான் நல்லது.  இதயத்துக்கு இதம்தரும் பழம் இது. சுவையாக இருக்கிறது என்று அதிகமாகச் சாப்பிட்டாலும் தொந்தரவு. அளவோடு நிறுத்திக்கணும்'' என்றார் டீச்சர்.

''நல்லா கேட்டுக்க அருண். கூடை நிறைய இருக்குனு சாப்பிட்டுடாதே. இன்னைக்கு மாதிரியே தினமும் எங்களுக்குக் கொண்டுவந்து கொடுத்துடணும். புரிஞ்சதா?'' என்றான் கதிர்.