ஆயிஜா இரா.நடராசன் ஓவியம் : பாரதிராஜா
அந்த ரயில் தண்டவாளத்தின் அருகே தனது செல்ல நாய், 'பெட்’ உடன் வந்த வால்ட், ரயில் வருகிறதா என்று தன் காதைத் தண்டவாளத்தில் வைத்துக் கேட்டான்.
குட்டிப் பையன், குட்டி நாய் தவிர, வெகு தூரத்துக்கு வேறு யாருமே இல்லை. விரைவில் ரயில் வந்துவிட்டது. ரயில் இன்ஜின் டிரைவர், அவனுடைய மாமாதான். அவனைப் பார்த்ததும் ரயிலை நிறுத்தினார். வால்ட், தனது செல்ல நாயுடன் ரயிலில் ஏறிக்கொண்டான். அது, அவனுக்கு மிகவும் பிடித்த பயணமாக இருந்தது.
வால்ட்டின் அப்பா பெயர், எலியாஸ் டிஸ்னி. அவருக்கும் ரயில்வேயில்தான் வேலை. ஆனால், மாமாவிடம்தான் வால்ட் செல்லம். அன்று வீடு திரும்பிய மாமாவுக்கு ஆச்சரியம். ஓர் அறையின் சுவர் முழுவதும் பிரமாண்டமான ரயில் படத்தை வரைந்திருந்தான். சிறுவர்கள் அந்த அறையை மொய்த்திருந்தார்கள். இது நடந்தபோது, வால்ட்டுக்கு வயது நான்கு.

விரைவிலேயே எலியாஸ் டிஸ்னி, தனது குடும்பத்தை மிஸ்ஸுரிக்கு (Missouri) மாற்றினார். அங்கே, வீட்டின் அருகில் கிடைத்த சிவப்புக் களிமண்ணைப் பயன்படுத்தி, பொம்மைகள் செய்வான் வால்ட். மாலையில், அந்தப் பொம்மைகளைப் பேசவைப்பேன் என்பான். நண்பர்கள் கூட்டம் வரும். பொம்மைகளை வைத்துக்கொண்டு, குரலை மாற்றி மாற்றிப் பேசுவான். அப்போது அவன் வயது ஆறு.
ரயில்வே பணியின் காரணமாக, வால்ட்டின் தந்தை ஊருக்கு ஊர் மாறிக்கொண்டே இருந்தார். அப்படித்தான் ஆட்ஷிஸன் (Atchison) என்ற ஊருக்கும் வந்தார்கள். அது, விவசாயம் சார்ந்த நகர்ப் பகுதி. முயல் வளர்ப்பு, வெள்ளைப் பன்றிகள், கோழிப் பண்ணை, மாட்டுத் தொழுவம் என நிறைய விஷயங்கள் அங்கே இருந்தன. வால்ட், விதவிதமான விலங்குகளோடு நாள் முழுதும் கும்மாளம் அடித்தான். வாத்துகளுடன் குளக்கரையில் கழித்தான். வெள்ளை எலிகளைத் துரத்தி விளையாடினான். வீட்டில் நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு, சன்னல் வழியே விழும் சூரிய ஒளி மூலம், தனது கைகளால் சுவரில் விதவிதமான விலங்குகளை நிழலாகக் காட்டினான்.
பென்டன் நகரில் இருக்கும் பென்டன் கிராமர் ஸ்கூலில் (Benton Grammar School)சேர்க்கப்பட்டான் வால்ட். படிப்பில் ஈடுபாடு இருந்தாலும், மனம் லயிக்க மறுத்தது. அவனது வகுப்புத் தோழனாக பீஃபர் எனும் மாணவன் இருந்தான். அவனது தந்தை, சிறிய திரைப்பட அரங்கம் ஒன்றை வடிவமைத்து நடத்திவந்தார். வகுப்பறையைவிட அந்த அரங்கம் வால்ட்டை அதிகம் கவர்ந்தது. படம் பார்க்க அல்ல, படமாக எதையும் உருவாக்கும் கலை ஆர்வம் அவனிடம் இருந்தது. ஒரு நேரத்தில், அவனைப் பள்ளியில் தேடிக் கிடைக்காமல், அந்தத் தியேட்டரின் மோட்டார் புரொஜெக்டர் அறையில் பிடிபட்டபோது, அவனுக்கு வயது 10.

பள்ளி விடுமுறை நாட்களிலும் வீட்டில் இருந்து காணாமல்போவான் வால்ட். அவனது தந்தை மிகவும் பயந்தார். வால்ட் எங்கே போகிறான் என்பதைக் காண, பின்தொடர்ந்தார். பல மைல் தள்ளி, 'கன்சாஸ் (Kansas) சிட்டி ஆர்ட் இன்ஸ்டிட்யூட்’ என்ற ஓவியக் கல்வியகத்தில் அவன் ஓவியம் வரைவதைப் பார்த்தார். தன் மகனுக்கு எதில் ஆர்வம் என்பது விளங்கியது. விரைவிலேயே ஒரு தினசரி பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட் ஆனபோது, வால்ட்டின் வயது 13.
பிற்காலத்தில், குழந்தைகளை மகிழ்விக்கும் 'மிக்கி மவுஸ்’, 'டொனால்டு டக்’ என ஒரு கார்ட்டூன் உலகையே அறிமுகம் செய்து, வால்ட் டிஸ்னியாக உருவெடுத்த அந்தச் சிறுவன், நிச்சயம் நமது சுட்டி நாயகனே!