மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஜன் பிள்ளை

''ஹேய்... நான் ஒரு நண்டைப் பிடிச்சுட்டேன்... நான் ஒரு நண்டைப் பிடிச்சுட்டேன்'' என்று துள்ளலுடன் ஓடிவந்தான் கதிர். அவன் கையில் ஒரு குட்டி நண்டு.

அவர்கள் கடற்கரையில் இருந்தார்கள். சற்று முன்பு அந்தப் பகுதியைச் சேர்ந்த சில சிறுவர்கள், சிறு நண்டுகளைப் பிடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

''அது கடிக்காதா டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''அதன் கால்களை லாகவமாகப் பிடிச்சுட்டாப் பயம் இல்லை. அந்த மாதிரி நீங்க யாராவது பிடிச்சுட்டு வந்தால், ஐஸ்க்ரீம் ட்ரீட் தர்றேன்'' என்றார் மாயா டீச்சர்.

சவாலில் இறங்கினார்கள் நம்ம நண்பர்கள். நண்டுகளுடன் கபடி விளையாடுவது போல, அருகில் செல்வதும் பயந்து ஓடிவருவதுமாக இருந்தார்கள். எப்படியோ கதிர், ஒரு குட்டி நண்டைப் பிடித்துவிட்டான்.

''இந்தக் குட்டி நண்டைப் பிடிக்கவே இவ்வளவு அமர்க்களம். சரி, சரி அதை விட்டுருங்க'' என்றார் டீச்சர்.

மணலில் விட்டதும், குடுகுடுவென கடல் அலையை நோக்கி ஓடியது அந்தக் குட்டி நண்டு. ''என்ன ஓட்டம் ஓடுது'' என்று வியந்தாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''பின்னே, ரெண்டு கால்களோடு நாமே ஓடும்போது, 10 கால்கள் வெச்சுக்கிட்டு சும்மா இருக்குமா? தேள், பூரான் போன்ற கணுக்காலி வகையைச் சேர்ந்தவை இந்த நண்டுகள். கூட்டுக் கண்கள், தட்டையான ஓடு, ஐந்து ஜோடி கால்கள் இருக்கும். இதில் முன் பகுதி கால்கள், கவ்விகளாகச் செயல்படும். பாம்புகள் சட்டையை உறிக்கிற மாதிரி, நண்டுகளும் ஓடுகளைப் புதுப்பிக்கும்'' என்றார் டீச்சர்.

''நண்டுகள் எங்கெல்லாம் இருக்கு டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.

''உலகில் உள்ள எல்லாக் கடல்களிலும் நண்டுகள் இருக்கு. நன்னீரில் வாழும் நண்டுகளும் இருக்கு. சில மில்லி மீட்டரில் ஆரம்பிச்சு, நான்கு மீட்டர்  கால்களோடு பல வகைகளில் இருக்கு'' என்றார் டீச்சர்.

''என்னது நான்கு மீட்டரா? மனிதனைவிட உயரமாக இருக்குமே...!'' என்றான் கதிர் நம்பமுடியாத குரலில்.

''உண்மைதான் கதிர். அதைப் பார்க்க நாம ஜப்பான் கடல் பகுதிக்குப் போகணும்'' என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்தார்.

மந்திரக் கம்பளம், ஒரு பெரிய நண்டின் வடிவத்தைப் பெற்றது. அதன் மேலே ஏறிக்கொண்டதும், கடலுக்குள் பாய்ந்தது. நீர்மூழ்கிக் கப்பல் போல கடலுக்குள் விரைந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

டீச்சர் தொடர்ந்தார். ''உலக அளவில், கடல் வகை உணவுகளில் 20 சதவிகிதம் நண்டுகள் இருக்கு. ஆண்டுக்கு ஒன்றரை மில்லியன் (15 லட்சம்) டன் நண்டுகள் உணவாகின்றன. முன்பு இருந்த பல வகை நண்டுகள், இப்போ அழிவின் விளிம்பில் இருக்கு. ஜப்பானிய சிலந்தி நண்டு (Japanese spider crab) 160; அரிதான ஒரு வகைதான். இதன் அறிவியல் பெயர் Macrocheira kaempferi.பார்ப்பதற்கு சிலந்தி மாதிரி இருப்பதால், சிலந்தி நண்டு என்பார்கள். இது, ஜப்பானின் தெற்குக் கடல் பகுதியில் 2,000 அடி ஆழத்தில் இருக்கும். இவற்றின் கால்கள் மட்டுமே 12 அடி உயரம் இருக்கும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் நின்ற இடத்தில், அந்தப் பிரமாண்டமான நண்டுகளைப் பார்க்க முடிந்தது. குச்சிக் கால்களால் தண்ணீருக்குள் நீந்தியபடியும், பாறைகளில் ஊன்றி நடந்தபடியும் இருந்தன. வியப்புடன் அதன் கால்களுக்கு இடையே புகுந்து வந்தார்கள்.

''அடேங்கப்பா... ஒரு நண்டு எவ்வளவு கிலோ இருக்கும் டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''உடல் பகுதி அதிகபட்சம் 40 சென்டிமீட்டர்தான். அதனால், 19 கிலோ இருக்கும். மனிதர்களால் பிடிக்கப்படாமல் இருந்தால், இந்த நண்டுகள் 100 ஆண்டுகள் உயிர் வாழும்'' என்றார் டீச்சர்.

''அப்படினா, இந்த நண்டையும் சாப்பிடுவாங்களா?'' என்று கேட்டாள் ஷாலினி.

''மனிதன் எதைத்தான் விட்டுவெச்சான்.  சிலந்தியைப் பார்த்துட்டோம். அடுத்து, குதிரையைப் பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு, ஒரு யு டர்ன் அடித்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''ஒவ்வோர் உயிரினத்துக்கும் முன்னோர் உண்டு. நண்டு இனங்களில் முன்னோடி, குதிரைலாட நண்டுகள் (Horseshoe crab). இதை, அரச நண்டுகள் என்றும் சொல்வாங்க. 450 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இது தோன்றியிருக்கலாம். அதற்கான பாறைப் படிமங்கள் கிடைச்சு இருக்கு. 300 மில்லியன் ஆண்டுகளாக பெரிய அளவில் பரிணாம மாற்றம் ஏற்படாத நண்டு வகை இது. ஜப்பான் மற்றும் வட அமெரிக்காவில் காணப்படுகிறது'' என்றார் மாயா டீச்சர்.

மந்திரக் கம்பளம், சேற்றுப்பாங்கான ஓரிடத்துக்கு வந்தது. அங்கே, சேற்று நிறத்திலேயே காணப்பட்ட அந்த நண்டுகள், உடல் முழுவதும் ஓட்டினால் சூழப்பட்டிருந்தது. ஆமை, கூட்டுக்குள் ஒளிந்துகொள்வது போல, இவர்களின் வருகையால், தனது கால்களை ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டது. கொம்பு போல ஒரு பகுதி மட்டும் வெளியே நீண்டிருந்தது.

''இதை, நண்டின் வால் என்று சொல்வார்கள். புழுக்கள், பூச்சிகள், சிறுசிறு மீன்களைச் சாப்பிடும். இந்த நண்டுகளைப் பிடிக்கும் மீனவர்கள், தூண்டில் இரையாகப் பயன்படுத்தி, பெரிய மீன்களைப் பிடிப்பாங்க. இந்த நண்டு இனம் மிகவும் குறைந்து வருவதால், சில நாடுகளில் குறிப்பிட்ட காலங்களுக்குப் பிடிக்கத் தடை இருக்கு. நியூ ஜெர்சி போன்ற நாடுகளில் முழுக்கவே தடை இருக்கு'' என்றார் டீச்சர்.

''அங்கே பாருங்க. ஒரு நண்டின் மேல் ஓடு தனியாக வந்திருச்சு'' என்றான் அருண்.

''புது ஓடு உருவானதும் இப்படி பழைய ஓடு தனியாக வந்துவிடும். இப்படி ஒவ்வொரு முறையும் புதிய ஓடு தோன்றும்போது அது, பழைய ஓட்டைவிட 33 சதவிகிதம் பெரிதாக இருக்கும். இப்படியே தனது வாழ்நாளில் பல முறை ஓடு உறிச்சு, ஒரு மனிதனின் உள்ளங்கை அளவுக்கு வளரும்'' என்றார் டீச்சர்.

அடுத்து, மந்திரக் கம்பளம் சென்ற இடத்தில் அழகான வண்ணங்களில் சில நண்டுகளைப் பார்த்தார்கள். நத்தை, சிப்பி போன்றவற்றின் ஓடுகள் போலவே அவற்றின் மேல் ஓடுகள் விதவிதமாக இருந்தன.

''இது என்ன டீச்சர், நண்டுகள் மாறுவேடப் போட்டிகளில் கலந்துக்குதா?'' என்று சிரிப்புடன் கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''இவைதான் துறவி நண்டுகள் (Hermit crabs). இவற்றில் 1,100 சிற்றினங்கள் இருக்கு. ஒரு நண்டு கழற்றிப்போட்ட ஓட்டுக்குள் இன்னொரு நண்டு புகுந்துக்கும். அதே மாதிரி நத்தை, சிப்பி என எந்த ஓடு கிடைக்குதோ, அந்த ஓட்டில் தன்னை நுழைச்சுக்கும். அது மட்டும் இல்லை. கடல் சாமந்திகளை ஓட்டின் மேலே ஒட்டிக்கிட்டு, எதிரிகள் பக்கத்தில் வரும்போது ஆட்டும். அதைப் பார்த்து, எதிரிகள் பயந்து ஓடிடும்'' என்றார் டீச்சர்.

''புத்திசாலிதான்'' என்றாள் ஷாலினி.

''பார்க்க அழகா இருக்கிறதால், இதை சில நாடுகளில் தொட்டில் மீன் மாதிரி வீடுகளில் வளர்க்கிறாங்க. 32 வருடங்கள் உயிர் வாழக் கூடியது. இது தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒரு நண்டு வகை, தமிழ்நாடு மற்றும் இலங்கை போன்ற இடங்களில் இருக்கும் நீலக் கால் நண்டுகள். சுவையான நண்டுகளில் முக்கியமானது'' என்றார் மாயா டீச்சர்.

''நண்டுகள் எல்லாமே தண்ணீரில்தான் வாழுமா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''ஈரப்பாங்கான நிலத்தில் வாழும் நண்டுகளும் இருக்கு. வயல்களில் குழி தோண்டி, அதில் வசிக்கும் நண்டுகளைக் கிராமங்களில் பார்க்கலாம். தென்னை மரத்தில் ஏறி, அங்கே வசிக்கும் நண்டுகளும் இருக்கு'' என்றார் டீச்சர்.

''என்னது... தென்னை மரத்தில் நண்டா?'' எனக் கேட்டாள் கயல்.

''ஆமா கயல். தென்னை மரத்தில் தேள் மட்டும் கொட்டாது. நண்டும் கொட்டும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் கடலில் இருந்து தரைக்கு வந்தது. தென்னை மரங்கள் நிறைந்த கடற்கரைப் பகுதியில் நின்றிருந்தார்கள். ஒரு தென்னை மரத்தில் ஏறும் அந்த நண்டை ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.

''இதைத் தேங்காய் நண்டு (Coconut crab)என்பார்கள். இந்தியப் பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் மட்டுமே இருக்கும் அரிய வகை நண்டு இது. தனுஷ்கோடி, அந்தமான் போன்ற இடங்களில் பார்க்கலாம். 40 சென்டிமீட்டர் நீளமும் நான்கு கிலோ எடையும் இருக்கும். கடலில் முட்டையிடும். வெளியே வரும் குஞ்சுகள், சிப்பிகள் மற்றும் நத்தை ஓடுகளில் ஒட்டிக்கொண்டு வளரும். கொஞ்சம் வளர்ந்ததும் கரைக்கு வரும். நிலத்தில் குழியைத் தோண்டி, அதில் தேங்காய் நார்களைப் பரப்பி  வசிக்கும். இதுக்காக, மரத்தில் ஏறி, தேங்காய் நார்களைச் சேகரிக்கும். அப்போது, தேங்காய் பறிக்கிறதுக்காக மரத்தில் ஏறுபவர்கள், கொஞ்சம் அசந்தால், கிடுக்கிப் பிடி பிடிச்சுடும்'' என்றார் டீச்சர்.

''இனிமே வீட்டில் தேங்காய் உறிக்கிறப்ப, தள்ளியே நிற்கணும்ப்பா'' என்று சிரித்தான் அருண்.

மந்திரக் கம்பளம் வீடு நோக்கிப் பறந்தது.