ஆயிஷா இரா.நடராசன் படங்கள் : பாரதிராஜா
'கௌசல்யா சுப்ரஜா... ராம பூர்வா...’
நான்கே வயதான அந்த மழலையின் கொஞ்சும் குரல் கேட்க, ஒரு கூட்டமே கூடி இருந்தது. தினமும் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து, வீட்டுத் திண்ணையில் அமர்ந்து, ஊருக்கே பள்ளி எழுச்சி பாடுவாள் அந்தச் சிறுமி.
மதுரை நகரில், அதிகாலை பூஜைக்காக கோயிலுக்குப் போகிறவர்கள்... அங்கே நின்று, அந்தச் சிறுமியின் பாடலை பய பக்தியுடன் லயித்துக் கேட்பார்கள். மீனாட்சி அம்மனே குழந்தை வடிவில் வந்து பாடுவதாக மகிழ்வார்கள்.
சுப்புக்குட்டி, சுப்பி, சுப்பம்மா எனப் பல செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் அவளது பெயர் சுப்புலட்சுமி. சமஸ்கிருத சுலோகங்கள், தேவார திருவாசகப் பாடல்கள் என அந்த மழலை எதையும் விட்டுவைக்கவில்லை.
இசை, அவள் குடும்பத்துடன் ஒன்றியிருந்தது. அம்மா வீணை வாசிப்பில் வாணி. சுப்புவின் பாட்டி அக்கம்மா, வயலின் வாசிப்பில் புகழ்பெற்றவர். அந்தக் கருவிகளின் இனிய நாதத்தின் வழியே சொற்களை அவளால் மனதார உணர்ந்து பாட முடிந்தது.
அப்போது, சுப்புவுக்கு ஐந்து வயது. அப்போதெல்லாம் மீனாட்சி அம்மன் கோயிலில், ராஜ சபையில் பெரிய பாடகர்களின் கச்சேரி நடக்கும். ஒருநாள், அங்கே பாட வேண்டிய பெரிய பாகவதர் வரவில்லை. திடீரென எப்படி கச்சேரியை ரத்துசெய்வது என, கோயில் நிர்வாகிகள் திணறினார்கள்.
அப்போது, கூட்டத்தில் இருந்த சுப்பு தைரியமாக அவர்களிடம் சென்று, ''நான் பாடவா?'' என்று கேட்டாள். ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பாடி, தான் யார் என்பதை உலகுக்கே உணர்த்தினாள்.
அப்போதெல்லாம், பெண்கள் மேடையேறி பாடக் கூடாது எனும் விதி இருந்தது. ஆனால், சுப்புவின் திறனை அறிந்து, பெரிய கர்நாடக ஜாம்பவான்களான காரைக்குடி சாம்பசிவ அய்யர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் போன்றோர், வீடு தேடிவந்து சுப்புவுக்கு சங்கீதம் கற்றுத்தந்தனர். மழவராயனேந்தல் எனும் தொலைதூர ஊரில் இருந்து, சுப்புராம பாகவதர் என்பவர் வாரம் இருமுறை வந்து, சுப்புவுக்கு ராகங்களை ஸ்வரம் பிடிக்கப் போதித்தார். திருவையாறில், பஞ்சரத்ன கீர்த்தனைகளை மாமேதைகளுடன் சரிசமமாக உட்கார்ந்து பாடியபோது, சுப்புவுக்கு வயது ஏழு.

சுப்புவின் குரல் மேலும் மேலும் இனிமையானது. கடவுள் மீதான அவளது ஈர்ப்பு அதில் கலந்துருகி ஓடியது. அகில இந்திய வானொலி நிலையம், தன் அகில இந்திய சங்கீத சம்மேளன நிகழ்ச்சிக்கு, ஒரு மணி நேரம் கச்சேரி செய்ய அழைத்தது. நாடு முழுதும் சுப்புவின் குரல் பரவியபோது அவளது வயது 10.
திருச்சி மலைக்கோட்டை 100 கால் மண்டபத்தில், அந்தச் சிறுமி பாட அழைக்கப்பட்டாள். உலகப் பிரசித்தி பெற்ற சௌடையா, வயலின். மாமேதை தட்சிணாமூர்த்தி பிள்ளை, மிருதங்கம். பாடிய சுப்புவுக்கோ வயது 11. ஆனால், எந்தப் பயமோ பதற்றமோ இல்லாமல் பாடி அசத்தினாள் சுப்புலட்சுமி.
விரைவிலேயே, சென்னை மியூசிக் அகாடமியில் பாடும் வாய்ப்பு வந்தது. அந்தச் சிறுமிக்காக, மியூசிக் அகாடமி தனது விதிமுறைகள் பலவற்றை மாற்றி, அவரைப் பாட அழைத்தது. பெண்கள் மேடையேறிப் பாடக் கூடாது எனும் பழைய பஞ்சாங்கங்கள் தூக்கி எறியப்பட்டன.
அந்தச் சிறுமி சுப்பு, பின்நாட்களில் கர்நாடக சங்கீத மாமேதையாக மாறினார். ஐ.நா. சபை வரை சென்று, தமிழின் சங்கீதப் பாரம்பரியத்தை உலகறிய வைத்தார். விருதுகள் பல அவரைத் தேடிவந்தன. இந்தியாவின் உயர்ந்த 'பாரத ரத்னா’ விருதுபெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி, ஒரு சுட்டி நாயகியாக மிளிர்ந்தார்.