மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்

ஆயிஜா இரா.நடராசன் பாரதிராஷா

மைக்கேல் கிங்’ என்பது அந்தச் சிறுவன் பிறந்தபோது வைக்கப்பட்ட பெயர். ஆனால், சிறுவனின் தந்தை ஆல்பர்ட் வில்லியம் கிங், தனது மகனுக்கு மார்ட்டின் லூதரின் பெயரைச் சூட்டி, பெயர் மாற்றம் செய்ய விரும்பினார். அதற்குக் காரணம் இருந்தது.

சுட்டி நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்

அந்தக் காலத்தில், அமெரிக்காவில் நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்ட கறுப்பின மக்கள், கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். பள்ளிக்கூடம் போகக்கூட முடியாத நிலை. தினக்கூலி வேலை தவிர, அவர்களுக்கு எந்த வேலையுமே கிடைக்காது.  மைக்கேலின் அப்பா, ஒரு சர்ச் பாதிரியாராக இருந்ததால், அவ்வளவாக வறுமை கிடையாது.

மைக்கேல் மூன்று வயதாக இருந்தபோது நடந்த சம்பவம், முக்கியத் திருப்புமுனையாகும். மைக்கேல், தனது தந்தையுடன் வயல் வேலைக்குச் செல்வான். அங்கே, கறுப்பர்களுக்குச் சம்பளமாக பணம் தர மாட்டார்கள். பழைய உணவு, அழுகிய ஆப்பிள்களைத்தான் தருவார்கள். அதைக் கண்டு அந்த வெள்ளையர் முதலாளிகளிடம் 'இது முறையா?’ எனக் கேட்டு, அனைவரையும் அதிரவைத்தான்.

செருப்பு வாங்குவதற்கு அப்பாவுடன் ஒரு கடைக்குப் போனபோது, அடுத்த சம்பவம் நடந்தது. அங்கே வெள்ளையர்கள் சிலர், செருப்பு வாங்கிக் கொண்டிருந்தார்கள். வெள்ளைக்காரச் சிப்பந்தி, தன்னையும் தந்தையையும் அங்கே கைகட்டி நிற்கச் சொன்னபோது, அந்த நான்கு வயதில் பெரும்கோபம் வந்தது. எதிர்ப்புத் தெரிவித்து பெருங்கூச்சலிட்டு, ''எனக்கு செருப்பு வேண்டாம் அப்பா'' எனச் சொல்லிவிட்டு வெளியேறினான்.

மைக்கேலுக்கு ஒரு தம்பியும் ஒரு அக்காவும் இருந்தார்கள். தேவாலயத்துக்காக வாங்கப்பட்ட ஒரு காரில், முழுக் குடும்பமும் ஒருமுறை பயணப்பட்டது. தந்தையே வண்டியை ஓட்டிச் சென்றார். வழியில், காரை ஒரு வெள்ளைக்கார போலீஸ் நிறுத்தினார். கறுப்பர் என்பதால், காரில் இருந்து இறங்குமாறு போலீஸ்காரர் உத்தரவிட்டார்.

சுட்டி நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்

தனது தந்தையை, 'இறங்க வேண்டாம்’ என்றான் ஆறு வயது மைக்கேல். அவன், அப்போது புக்கர் வாஷிங்டன் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தான். தனது அடையாள அட்டையைக் காட்டி, ''நான்  அமெரிக்கப் பிரஜை. உங்கள் உடம்பில் ஓடும் அதே ரத்தம்தான் என் உடம்பிலும் ஓடுகிறது'' என்றான். அந்த காரை போலீஸ் உடனடியாக விடுவித்தது.

ஜெர்மனியில், ஒரு பெரிய பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள 10 வயதில் தந்தையுடன் சென்றான். அங்கே பெயர் மாற்றம் செய்யப்பட்டு, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் என்று அழைக்கப்பட்டான். அங்கே ஒரு புத்தகக் கடையில், ''எந்தப் புத்தகம் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்'' என்று தந்தை கூறியபோது அவன்  வாங்கிய புத்தகம், மகாத்மா காந்தி எழுதிய சத்திய சோதனை.

காந்திய வழியில் அஹிம்சை முறையை ஏற்று, பள்ளியில் நண்பர்கள் கூட்டத்திலும் பொது இடங்களிலும்  காந்தியடிகளைப் பற்றி பேசத் தொடங்கினான்.

மைக்கேல் படிப்பிலும் சுட்டியாக இருந்தான். எட்டாம் வகுப்பில் அபாரமாகப் படித்ததால், நேரடியாக பத்தாம் வகுப்புக்கு அனுப்பப்பட்டான். அற்புதமாகப் பாடுவான். பேச்சாற்றாலும் இருந்தது. கேள்விகள் கேட்டு, பதிலைப் பெற்று உரையாடல் போலவே அவன் உரை நிகழ்த்தினான்.

எதிர்காலத்தில் 'எனக்கு ஒரு கனவு இருந்தது’ என முழங்கி, அமெரிக்க நீக்ரோ இன எழுச்சிப் போரை காந்திய வழியில் நடத்திக் காட்டிய மார்ட்டின் லூதர் கிங், ஒரு சுட்டி நாயகனே.