மணமும் இருக்கு... மருத்துவ குணமும் இருக்கு! கே.யுவராஜன், பிள்ளை
''காபி... காபி... சுக்குக் காபி...''
அந்தக் கோயில் திருவிழாவுக்கு சுட்டிகளுடன் வந்திருந்த மாயா டீச்சர், சுக்குக் காபி விற்றபடி சென்றவரை நிறுத்தினார். ''யார் யாருக்கு சுக்குக் காபி வேணும்?'' என்று கேட்டார்.
''ஐயையோ... சுக்குக் காபியா?'' என்று அலறியபடி பின்னால் நகர்ந்தான் கதிர்.
''நான் சாமியைப் பார்க்கப்போறேன்'' என்றபடி நழுவினாள், கயல். அருணும் ஷாலினியும் காதிலேயே விழாததுபோல சுற்றிலும் வேடிக்கை பார்த்தார்கள்.
டீச்சர், தனக்கு மட்டும் ஒரு சுக்குக் காபியை வாங்கிக்கொண்டார். ''ம்... நல்ல விஷயம்னா, நாலு கால் பாய்ச்சலில் ஓடுறீங்க. இந்த ஒரு கப் சுக்குக் காபி, உடம்புக்குள்ளே எத்தனை வேலை செய்யும் தெரியுமா?'' என்றார்.
''எனக்கு இந்த வாடையே பிடிக்காது டீச்சர். இதை எதில் தயாரிக்கிறாங்க?'' என்று கேட்டான் கதிர்.
''காய்ந்த இஞ்சியைத்தான் சுக்கு என்பார்கள். இப்பவும் பல கிராமங்களில் தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம்னு எது வந்தாலும் சுக்குக் கஷாயம் குடிப்பாங்க. 'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியம் இல்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய சாமியும் இல்லை’னு பழமொழி சொல்வாங்க.

'காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் சாப்பிட
கோலூன்றி நடந்தவன் கோலை வீசி
நடப்பான் மிடுக்காய்’
இப்படி ஒரு பழைமையான பாடலும் இருக்கு'' என்றார் டீச்சர்.
''எல்லாம் சரிதான். அம்மா, சமையலில் இஞ்சித் துண்டைப் போடுவாங்க. தெரியாமல் வாய்ல வெச்சுட்டாப் போச்சு. நாக்கு, உச்சி மண்டை வரைக்கும் உறைக்கும்'' என்றாள் ஷாலினி.
''கறிவேப்பிலை மாதிரியே சாப்பாட்டில் இருக்கிற இஞ்சித் துண்டையும் எடுத்துப் போட்டுடுறோம். ஆனால், அதைச் சாப்பிடுறது ரொம்ப நல்லது ஷாலினி. இஞ்சியின் சிறப்பு என்ன தெரியுமா? அது வாயில் இருக்கும்போது, உமிழ்நீரைச் சுரக்கவைக்கும். இதனால், பசியைத் தூண்டி நிறையச் சாப்பிடவைக்கும். அதே நேரம், உடம்புக்குள் போனதும், உணவைச் செரிக்கவைக்க உதவும். அஜீரணம், வாயுத் தொந்தரவு, மூட்டு வலி எனப் பலவற்றுக்கும் நிவாரணியாக இஞ்சி இருக்கு. எலுமிச்சைச் சாறுடன் இஞ்சிச் சாறைக் கலந்து குடித்தால், உடம்புக்குள் ரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும்'' என்றார் டீச்சர்.
அவர்கள் பேசிக்கொண்டே, கோயிலின் பின்பக்கம் இருந்த இடத்துக்கு வந்திருந்தார்கள்.
''டீச்சர், இஞ்சி மண்ணுக்குக் கீழேதானே விளையும்?'' என்று கேட்டான் அருண்.

''ஆமாம் அருண். நீங்க இஞ்சியைக் கடையில்தான் பார்த்திருப்பீங்க. அது, பயிராகும் இடத்துக்குப் போய்வரலாமா?'' என்று கேட்டார் டீச்சர்.
''ஓ... இஞ்சி, இளம் மஞ்சள் நிறத்தில் பார்க்கிறதுக்கு ரொம்பவே பிடிக்கும்'' என்றாள் கயல்.
மந்திரக் கம்பளத்தை விரித்தார்கள். அது, கமகம மணத்துடன் அவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது. டீச்சர் சொல்ல ஆரம்பித்தார்.
''இஞ்சுதல் என்றால், நீரை உள்ளிழுத்தல் என்று பொருள். இஞ்சியில் சாறு அதிகம் இருக்கு. இது, பூக்கும் செடி, கொடி வகையைச் சேர்ந்த ஒரு தாவரக் குடும்பம். இந்தக் குடும்பம் ரொம்பப் பெருசு. இதில் 52 பேரினங்களும் 1,300 சிற்றினங்களும் இருக்கு. நறுமணமும் மருத்துவக் குணமும் இந்தக் குடும்பத்தின் சிறப்புக் குணங்கள். ஏலக்காய், மஞ்சள் எல்லாம் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்ததுதான். ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற கண்டங்களில் விளையுது'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் தரை இறங்கியது. அவர்கள், ஒரு விவசாய நிலத்தின் வரப்பில் நடக்க ஆரம்பித்தார்கள். அங்கே, விவசாயப் பணியாளர்கள் மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருந்தார்கள். சீரான இடைவெளியில், குழிகளைத் தோண்டி, இஞ்சிக் கிழங்குகளை விதைத்துக் கொண்டிருந்தார்கள்.
''இப்பதான் பயிர் நடக்குதா டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''ஆமாம். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்தான் இஞ்சி விதைப்பு நடக்கும். ஏக்கருக்கு சுமார் 900 கிலோ இஞ்சிக் கிழங்குகளை 15 கிராம் துண்டுகளாக நடுவார்கள். அறுவடை செய்ய எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகும். ஏக்கருக்கு ஏழு டன் விளைச்சல் கிடைக்கும். இஞ்சியின் இலையும் தண்டும் நல்ல நறுமணம் வீசும். இதன் பூக்களும் பார்க்க ரொம்ப அழகாக இருக்கும்'' என்றார் மாயா டீச்சர்.
''இங்கே, இப்போதானே பயிர் நடக்குது. பூக்களை எப்படிப் பார்க்கிறது?'' என்று கேட்டாள் ஷாலினி.
மந்திரக் கம்பளம், அவர்களை அப்படியே சுருட்டி மூடிக்கொண்டது. அது மீண்டும் திறந்தபோது, நன்கு வளர்ந்திருந்த நிலத்துக்கு வந்திருந்தார்கள். அங்கே, செடிகள் முழுவதும் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்திருந்தன.
''வாவ்... ரொம்ப அழகா இருக்கு'' என்றான் கதிர்.
''இஞ்சியின் வகைகளைப் பொருத்து, பூக்களிலும் பல வகைகள் இருக்கு. சிவப்பு, ஆரஞ்சு, கருநீலம், வெண்மை எனப் பல வண்ணங்களில் இருக்கும். வடிவங்களிலும் வேறுபாடு இருக்கும்'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளத்தின் உதவியால், இஞ்சியின் பல வகைப் பூக்களையும் பார்த்து ரசித்தார்கள். ''மஞ்சளும் இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்ததுனு சொன்னீங்களே...'' என்றான் அருண்.
''ஆமாம். அதையும் பார்த்துடுவோம்'' என்றார் டீச்சர்.
அவர்களை, மஞ்சள் விளையும் நிலத்துக்கு தூக்கிச் சென்று இறக்கியது மந்திரக் கம்பளம். ''மஞ்சள், இஞ்சிக் குடும்பத்தில் பூண்டுச்செடி வகையைச் சேர்ந்தது. வெப்ப மண்டலமான இடத்தில் விளையும். 60 முதல் 90 சென்டிமீட்டர் உயரத்துக்கு செடி வளரும். மே மற்றும் ஜூன் மாதத்தில் விதைப்பு நடக்கும். நிலத்தை மூன்று அல்லது நான்கு முறை நன்றாக உழுதுவிட்டு, மட்கிய தொழு உரத்தைப் போடுவாங்க. அப்புறம், குழிகளைத் தோண்டி விதைப்பாங்க. மஞ்சள் பூ, ஊதா நிறத்தில் இருக்கும். நன்கு விளைந்து காய்ந்த மஞ்சளை ஒடிக்கும்போது, கணீர் என உலோக ஓசை கேட்கும்'' என்றார் டீச்சர்.
''மஞ்சள், சிறந்த கிருமிநாசினிதானே டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''ஆமாம் கயல். மஞ்சளை ஆரம்பத்தில் வண்ணச் சாயங்கள் தயாரிக்கத்தான் பயன்படுத்தினாங்க. அப்புறம்தான் அதில் இருக்கும் மருத்துவ குணம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில், முன்னோடிகள் நாம்தான்.தமிழ்நாட்டில் 1,000 வருடங்களுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் மஞ்சளைப் பயன்படுத்தி இருக்காங்க. இந்துக்களின் பண்பாட்டில், தெய்வீகப் பொருளாகவும் மஞ்சள் இருக்கு'' என்றார் டீச்சர்.
''தெரியும் டீச்சர். பொங்கல் பண்டிகையின்போது செடியோடு மஞ்சளை வாங்கிவந்து படைப்போம். வீட்டு விசேஷங்களிலும் பயன்படுத்துவோம்'' என்றாள் கயல்.
''சமையலுக்குப் பயன்படுத்துறதும் சாமிக்குப் பயன்படுத்துறதும் ஒரே மஞ்சள்தானா?'' என்று கேட்டான் கதிர்.
''இல்லை கதிர். முட்டா மஞ்சள், கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், நாக மஞ்சள், கரிமஞ்சள், ஆலப்புழை மஞ்சள் என மஞ்சளில் பல வகைகள், இருக்கு. உருண்டையாக இருப்பது முட்டா மஞ்சள். இதைத்தான், பெண்கள் முகத்தில் பூசிப்பாங்க. விரலி மஞ்சள் என்பது நீளமாக இருக்கும். இதைதான் மஞ்சள் தூளாக உணவுக்குப் பயன்படுத்துவாங்க. இதன் நறுமணம், சுவைக்கு மட்டும் இல்லாமல், உணவு சீக்கிரம் கெடாமல் இருக்கவும் பயன்படுகிறது. முக்கியமாக, இறைச்சியைக் கெடாமல் பாதுகாக்கும் குணம் மஞ்சளுக்கு இருக்கு. இது தவிர, மஞ்சளில் இருந்து எண்ணெய் எடுக்கிறாங்க. நிறம், நறுமணம், மருத்துவக் குணம் அடிப்படையில் மஞ்சளின் தரம் பிரிக்கப்படுகிறது. உலகிலேயே சிறந்த மஞ்சள், ஆலப்புழை மஞ்சள். இப்போ, நாம இருக்கிறது ஆலப்புழையில்தான்'' என்றார் டீச்சர்.
அங்கே, வேருடன் பிடுங்கி அடுக்கிவைக்கப்பட்டிருந்த மஞ்சளை எடுத்து நுகர்ந்து பார்த்தார்கள். ''அருமையா இருக்கு. மஞ்சளைப் பயன்படுத்தி, வெடிகுண்டு இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கலாம்னு நான் ஒரு செய்தி படிச்சேன். அது நிஜமா?'' என்று கேட்டாள் ஷாலினி.
''ஆமாம். வெடிகுண்டில் இருக்கும் டி.என்.டி. மூலக்கூறுகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. வெடிகுண்டு இருக்கும் இடத்தில் இருந்து வெளிப்படும் வாயுவை, மஞ்சள் தூள் மூலம் கண்டுபிடிக்கலாம். மஞ்சள் தூளை, திரவ நிலையில் பயன்படுத்தும்போது, ஒரு நிறத்தை வெளிப்படுத்துமாம். சரி போகலாமா?'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளத்தில் பறக்கும்போது, அருண் நினைவுவந்தவனாக, ''ஏலக்காயும் இஞ்சிக் குடும்பத்தைச் சேர்ந்ததுனு சொன்னீங்க. மஞ்சளும் இஞ்சியும் பூமிக்குக் கீழே விளையுது. ஆனால், ஏலக்காய் செடியில் வளர்வதைப் பார்த்திருக்கேனே?'' என்று கேட்டான்.
''நீ பார்த்தது சரிதான் அருண். இஞ்சிக் குடும்பத்தில், எலெட்டாரியா Elettaria , அமோமம் (Amomum) என மணம் மிக்க இரண்டு பேரினங்கள் இருக்கு. அந்தப் பிரிவில்தான் ஏலக்காய் வருது. இந்திய அளவில் கேரளாவில்தான் ஏலக்காய் அதிகம் விளையுது. தமிழ்நாடு, மூன்றாவது இடத்தில் இருக்கு. இதுவும் நறுமணத்துக்கு மட்டும் இல்லாமல், மருத்துவப் பயன்பாட்டில் முக்கிய இடத்தில் இருக்கு. பல், குரல் வளை, தோல் சம்பந்தமான நோய்களுக்கு இதைப் பயன்படுத்துறாங்க. 'நாங்க வெளியே வாசனையை மட்டும் வெச்சுக்கிட்டு இல்லே. உள்ளே, நிறைய விஷயங்களையும் வெச்சிருக்கோம்’னு இவை சொல்லுது'' என்றார் டீச்சர்.
அப்போது, அவர்களை மந்திரக் கம்பளம் மீண்டும் கோயிலுக்கு அழைத்துவந்திருந்தது.
''புரியுது டீச்சர்! அதோ சுக்குக் காபி விற்கிறவர். வாங்க, ஆளுக்கு ஒரு சுக்குக் காபி வாங்கிக் குடிப்போம்'' என்றான் கதிர்.