ஆயிஜா இரா.நடராசன் படங்கள் :பாரதிராஷா
என்னதான் குடும்பப் பெயர் பேடன் என்றிருந்தாலும் அந்தச் சுட்டியை எல்லாரும் ஸ்டீவ் பவுல் என்றே அழைத்தார்கள். அந்த நான்கு வயதிலேயே அதிகாலையில், குதிரையில் கிளம்பிவிடுவான். கம்பீரமாக ஊரை வலம்வந்து அதிரவைப்பான்.
அவனது அப்பா, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் வரைபட இயல் பேராசிரியராக இருந்தார். ஸ்டீவ் மூன்று வயதாக இருந்தபோது, திடீரென்று இறந்துவிட்டார். ஸ்டீவின் ஆறு சகோதர்களும் அப்பாவின் மறைவில் துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தபோது, ஸ்டீவ் மட்டும் அம்மாவுக்கு உதவியாக, ஓடியாடி வேலைகள் செய்து, வியக்கவைத்தான்.

ஸ்டீவின் தாத்தா வில்லியம் ஹென்றி ஸ்மித், பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்தார். சகோதரர்களைவிட, தாத்தாதான் ஸ்டீவின் பெரிய தோஸ்த். அவருடன் நிறைய நேரம் செலவழிப்பான். லண்டனில் அப்போது, ரோஸ் ஹில்ஸ் என்ற பள்ளி மிகவும் பிரபலம். அங்கே ஸ்டீவ் சேர்க்கப்பட்டான். ஆனால், அவனது கவனமெல்லாம் சாகசங்களின் மேல்தான். பக்கத்தில் இருந்த வனப் பகுதி அவனை ஈர்த்தது. பள்ளியிலிருந்து அடிக்கடி காணாமல்போவான்.
காட்டு எலிகள், முயல் குட்டிகளைத் துரத்திப் பிடிப்பது, விலங்குகளின் காலடித் தடத்தை மறைந்திருந்து பின் தொடர்வது போன்ற விஷயங்களில் சூரப்புலியாக இருந்தான். 5 வயதில், அடர் காட்டுக்குள் துணிச்சலுடன் செல்வான். செல்லும் வழியை மறக்காமல் இருக்க, ஒரு யுக்தியை கையாண்டான். மரங்களில் சமிக்கைகளைத் தனக்குப் புரியும்படி வரைந்து, வழிகளை அறிந்துகொள்வான்.
காட்டின் மீது எந்த அளவுக்கு ஆர்வம் இருந்ததோ, அதேபோல படிப்பிலும் ஸ்டீவ் கில்லாடி. அவனது பக்கத்து ஊரில், சாட்டர் ஹவுஸ் பப்ளிக் ஸ்கூல் என்ற பிரமாண்ட பள்ளி இருந்தது. அதில் சேருவதற்காக, ஸ்டீவ் உட்பட பலரும் நுழைவுத் தேர்வு எழுதினார்கள். ஸ்டீவ், உதவித் தொகை பெற்றுக் கல்வி கற்கும் தகுதியோடு தேர்ச்சி அடைந்தான். அந்தப் பள்ளியின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும், எப்படியாவது சகோதர்கள் மற்றும் சகாக்களுடன் காட்டுக்குச் சென்றுவிடுவான். அங்கே கூட்டாஞ்சோறு சமைத்துச் சாப்பிட்டு விளையாடியபோது அவனது வயது 8.

ஸ்டீவ் கண்டுபிடித்த மற்றொரு விளையாட்டு, முகாமிடல். காடு, ஆற்றங்கரை, மலையடிவாரம் எனத் தேர்வுசெய்து, அங்கே சென்று தங்குவதற்கு நண்பர்களைத் தேர்வுசெய்வான். கூடாரம், மரத்தின் மீது பரண்கள் அமைப்பது, கயிறு ஏணி என கச்சிதமாக முகாம்களை அமைப்பது, அவனுக்குக் கைவந்த கலை. 9 வயதில் தன்னந்தனியே எங்கும் செல்லும் தைரியசாலியாக இருந்தான்.
ஒருநாள், பள்ளிவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தான் ஸ்டீவ். அப்போது, சாலையில் பெரிய ஓசையுடன் ஒரு ராணுவ ஜீப்பும், மோட்டார் பைக்கும் மோதிக்கொண்டன. பைக்கில் வந்தவர் கீழே விழுந்து, ரத்தமும் வலியுமாகத் துடித்தார். அந்தப் பக்கமாக வந்தவர்கள் எல்லோரும் கூடி நின்று வேடிக்கை மட்டுமே பார்த்தனர். ஸ்டீவ் ஓடிச்சென்று அவரைத் தூக்கினான். தனது கைக்குட்டையால், அடிபட்டவரின் எலும்பு முறிவுக்குக் கட்டுப் போட்டான். பிறகு, அங்கே வந்த மருத்துவர்கள், அவனைப் பாராட்டினர். முதலுதவி செய்வது பற்றித் தெரிந்துகொள்ள, அவனை தங்கள் இடத்துக்கு வரச்சொல்லி, பயிற்சி தந்தார்கள். அப்போது ஸ்டீவ் வயது 10.
அந்த வயதில் நீச்சல், படகுப் போட்டி, குதிரை சவாரி என அனைத்திலும் அசத்தினான். படிப்பிலும் பாராட்டுகள் பெற்ற ஸ்டீவ் பவல், பிற்காலத்தில் பள்ளி மாணவர்களுக்கான குடிமப் பயிற்சியாக சாரணர் இயக்கத்தைக் கண்டுபிடித்து, சாரணர் தந்தையாக உயர்ந்தார் பேடன் பவுல்.