மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

வண்ணத்துப்பூச்சியோடு வலசை போகலாம் !கே.யுவராஷன் படங்கள் : பிள்ளை

''டீச்சர், இந்த வண்ணத்துப்பூச்சியைப் பாருங்களேன் வித்தியாசமா இருக்கு''

மாலை நேரம். அவர்கள் பூங்காவில் இருந்தார்கள். ஒரு செடியின் மீது அமர்ந்திருந்த மஞ்சளும் சாம்பலும் கலந்த பூச்சியைப் பார்த்துவிட்டு சொன்னாள் கயல்.

''இது, வண்ணத்துப்பூச்சி கிடையாது கயல். விட்டில்பூச்சி. அந்துப்பூச்சினும் சொல்வாங்க. ஆங்கிலத்தில் விஷீtலீ'' என்றார் டீச்சர்.

''வண்ணத்துப்பூச்சி மாதிரியே இருக்கே'' என்றான் கதிர்.

''இரண்டுமே லெப்பிடோப்டெரா (Lepidoptera)  வகையைச் சேர்ந்தவை. லெப்பி என்றால், செதில். ப்டெரான் என்றால், இறகு. செதிலிறகு என்று பொருள். வண்ணத்துப்பூச்சிக்கும் இதற்கும் சில வித்தியாசங்கள் இருக்கு. அதைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளத்தை எடுத்து, அந்தச் செடியின் மீது வீசினார் டீச்சர். அடுத்த நொடி, அங்கே சில வண்ணத்துப்பூச்சிகள் தோன்றின. கூடவே, விட்டில்பூச்சிகளும். டீச்சர் ஒரு இரண்டு பூச்சிகளையும் உள்ளங்கைகளில் எடுத்துக்கொண்டார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''வலது கையில் இருக்கிறது, வண்ணத்துப்பூச்சி. இடது கையில் இருக்கிறது விட்டில்பூச்சி. இரண்டையும் கவனிச்சு, தெரியும் வித்தியாசங்களைச் சொல்லுங்க பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

''வண்ணத்துப்பூச்சியின் இறகுகளின் நிறம் பளிச் என இருக்கு. விட்டில்பூச்சி நிறம், கொஞ்சம் டல்லா இருக்கு'' என்றாள் ஷாலினி.

''அதோடு, வண்ணத்துப்பூச்சியின் இறகுகள், நிமிர்ந்த நிலையில் மேல் நோக்கி இருக்கு. விட்டில்பூச்சியின் இறகுகள், பக்கவாட்டில் சாய்ந்த மாதிரி இருக்கு'' என்றான் அருண்.

''வெரிகுட், இரண்டின் உடல் பகுதியைக் கவனிங்க. வண்ணத்துப்பூச்சியின் உடல், மெலிந்து இருக்கும். விட்டில்பூச்சி கொஞ்சம் பெருத்து இருக்கும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''நான் இன்னொரு விஷயத்தைக் கவனிச்சுட்டேன். வண்ணத்துப்பூச்சியின் உணர்வுக் கொம்புகள், இரண்டும் ஒரே மாதிரி இருக்கு. விட்டில்பூச்சிக்கு வேறுபட்டு இருக்கு'' என்றாள் கயல்.

''இதோடு ஒரு முக்கியமான வேறுபாடு, வண்ணத்துப்பூச்சிகள் பகல் உலாவிகள். விட்டில்பூச்சி, மாலை மற்றும் இரவு உலாவிகள்'' என்றார் டீச்சர்.

''இந்த விட்டில்பூச்சிதானே விளக்கைத் தேடிப்போய் மாட்டிக்கும்?'' என்று கேட்டான் கதிர்.

''ஆமாம். விட்டில்பூச்சிகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் சிற்றினங்கள் இருக்கு. இதில் பலவற்றுக்குப் பெயரே வைக்கப்பட வில்லை. விட்டில்பூச்சி பட்டு உற்பத்திக்குப் பயன்படும்'' என்றார் டீச்சர்.

''ஓஹோ... பட்டுப்புழு வளர்ப்பு என்பது இதுதானா?'' என்று கேட்டாள் ஷாலினி.

''ஆமாம். வண்ணத்துப்பூச்சி மாதிரியே இதுவும் முட்டைப் பருவம், லார்வா என்கிற புழுப்பருவம், பியூபா (PUPA) என்கிற கூட்டுப்புழு பருவம், இறக்கைகள் முளைத்த முழு பருவம் என நான்கு நிலைகளை அடையும். ஒரு பட்டுப்புழு வளர்ப்பு பண்ணைக்குப் போய் அதைப் பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளத்தில் ஏறி உட்கார, கம்பளம் கைக்குட்டை அளவுக்கு மாறியது. அவர்கள், பூச்சியைப் போல குட்டியாக மாறினார்கள். கம்பளம் பறந்து சென்று ஒரு பண்ணைக்குள் நுழைந்தது.

அங்கிருந்த இலைகளின் மீது புள்ளி, புள்ளிகளாக இருந்தன. ''இதோ விட்டில்பூச்சிகளின் முட்டைகள். அதிகமாக, மல்பெரி என்ற இலைகளைதான் பயன்படுத்துவாங்க. முட்டைகள் பொரிந்து வெளியே வரும் புழுக்கள், அந்த இலைகளையே சாப்பிட்டு, கூட்டுப்புழு நிலையை அடையும். இதை 'ககூன்’ என்பார்கள். இதைதான் அறுவடை செஞ்சு, வெந்நீரில் போட்டு, நூலிழைகளை எடுப்பாங்க. ஒரு ஏக்கர் தோட்டத்தில் ஆண்டுக்கு 900 கிலோ கூடுகளை உருவாக்கலாம்'' என்றார் டீச்சர்.

''வண்ணத்துப்பூச்சியும் இந்த மாதிரிதான் உருவாகுமா டீச்சர்?'' எனக் கேட்டான் அருண்.

''ஆமாம். ஒரு வண்ணத்துப்பூச்சி உருவாவதையும் பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் பறந்தது. ''வண்ணத்துப்பூச்சிகளில் 20 ஆயிரம் வகைகள் இருக்கு. இமயமலையின் குளிர்ந்த இடங்களிலும் இருக்கும். வெப்பமான பாலைவனங் களிலும் வசிக்கும். பொதுவாகப் பார்த்தால்,  வெப்ப மண்டலப் பகுதிகளில்தான் அதிகம் இருக்கும்'' என்றார் டீச்சர்.

இப்போது, அவர்கள் ஒரு தோட்டத்தில் இருந்தார்கள். அங்கே பல வண்னங்களில் நூற்றுக்கணக்கான வண்ணத்துப்பூச்சிகள் சுற்றிக்கொண்டிருந்தன.

''அங்கே பாருங்க, ரெண்டு பூச்சிகள் முத்தம் கொடுத்துக்குது'' என்றான் அருண்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அதில் ஒன்று ஆண். இன்னொன்று பெண். ஒரு ஆண் அல்லது பெண் வண்ணத்துப்பூச்சி தனது இணையைத் தேடும்போது, இறக்கையில் இருந்து மணம் பரப்பும் குறிப்பை வெளிப்படுத்தும். தூரத்தில் இருந்தாலும் இந்த மணத்தை இன்னொரு வண்ணத்துப்பூச்சி உணரும். தனது இணையைத் தேடி வரும். இறக்கையின் செதில்களை அசைத்தும் குறிப்புகளை வெளிப்படுத்தும். இரண்டும் சேர்ந்த கொஞ்ச நேரத்தில் பெரும்பாலான ஆண் பூச்சி இறந்துவிடும். பெண் பூச்சி தகுந்த இடத்தைத் தேடிப்போய் முட்டைகளை இடும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் ஒரு இலையின் அருகே சென்றது. ''இதோ... முட்டைகள் இருக்கு'' என்றான் கதிர்.

''வண்ணத்துப்பூச்சியின் முட்டைகள், வகையைப் பொருத்து, பல நிறங்களில், வடிவங்களில் இருக்கும். கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ அளவு முதல் 2.5 மில்லிமீட்டர் வரை இருக்கும். நூற்றுக்கணக்கில் இருக்கும் முட்டைகளில் இருந்து பொரித்து வெளிவரும் புழுக்கள், முதலில் அங்கிருக்கும் பொரிக்காத முட்டைகளையே சாப்பிடும். பிறகு, இலைகளைச் சாப்பிடும். இந்தப் புழுக்களின் பசி, சாதாரண பசி கிடையாது. 3 கிலோ இருக்கும் ஒரு பிறந்த குழந்தை, 3 கிலோ உணவைச் சாப்பிட்டால் எப்படி இருக்கும்? அந்த மாதிரி, ஒரே நாளில் தன் உடல் எடையைவிட அதிகம் சாப்பிடும்'' என்றார் டீச்சர்.

இன்னொரு இலையில் இருந்த புழுக்கள், சாப்பிடும் வேகத்தைப் பார்த்து வியந்தார்கள். ''டீச்சர், இதைப் பார்க்க கம்பளிப்பூச்சி மாதிரியே இருக்கு'' என்று  ஷாலினி ஓர் இலையில் இருந்த புழுவைச் சுட்டிக்காட்டினாள்.

''மாதிரி கிடையாது. கம்பளிபூச்சியேதான். வண்ணத்துப்பூச்சி வகைகளில் இதுவும் ஒன்று, உடலில் மெல்லிய முட்களுடன் இருக்கும். இதை, கம்பளி பூச்சி, பச்சைப்புழு, முசுக்கட்டை என்று பல பெயர்களில் சொல்வாங்க. பல ஆயிரம் வகை வண்ணத்துப்பூச்சிகள் இருந்தாலும், புழு நிலையில் பச்சை அல்லது பழுப்பு நிறத்தில்தான் அதிகம் இருக்கு'' என்ற டீச்சர், ஒரு புழுவைக் குச்சியில் எடுத்தார்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

மந்திரக் கம்பளம் கொடுத்த பூதக் கண்ணாடியில் அதைப் பார்த்தார்கள். ''உடம்பு 14 மடிப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கு. தலையில் ஒரு பக்கத்துக்கு 6 கண்கள் என 12 கண்கள் இருக்கு'' என்றாள் கயல்.

''இந்தக் கண்களால் உருவங்களைப் பார்க்க முடியாது. ஆனால், வெளிச்சத்தையும் இருட்டையும் உணர முடியும். பெரும்பாலான புழுக்களுக்கு ஆறு கால்கள். சில வகை புழுக்களில் எட்டு கால்கள் இருக்கும். இதை போலிக் கால்கள் என்பார்கள்'' என்றார் டீச்சர்.

''இவ்வளவு சின்னப்புழு எப்படி சுவாசிக்கும்?'' என்று கேட்டாள் கயல்.

''அதுக்கு இயற்கை வழி செய்திருக்கு. புழுவின் உடலில் இரண்டு பக்கமும் மூச்சுத்துளை என்ற துளைகள் இருக்கு. இதன் மூலம் சுவாசிக்கும். புழுவின் வாய்ப் பகுதியை கவனிங்க. கொக்கி மாதிரி ஓர் உறுப்பு இருக்கு. இதை, கோந்துவிழி என்பார்கள். இதன் வழியாக பசை போன்ற நீர்மத்தை உமிழும். அதை அடையாளமாக்கி, ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்குப் போகும்'' என்றார் டீச்சர்.

''இந்தப் புழு நிலை எத்தனை நாட்கள் இருக்கும்?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''இரண்டு வாரங்கள். இந்த நேரத்தில் இவற்றின் ஒரே வேலை, சாப்பிடுவது... சாப்பிடுவது... சாப்பிடுவது. அதனால், உடல் அதிகமாகப் பெருத்து, மேல் தோல் விரிவடைந்து பிளந்துகொள்ளும். இதைப் புற எலும்புறை (Exoskeleton) என்பார்கள். உள்ளே இருக்கும் எலும்புறை இளகி இருக்கும். அது உறுதியாகும் வரை இடத்தைவிட்டு அசையாமல் இருக்கும்'' என்றார் டீச்சர்.

டீச்சர், மற்றொரு இலையில் இருந்த புழுவைச் சுட்டிக்காட்டினார். ''நான்கு முறை இப்படி எலும்புறையை மாற்றிய பின், வாயில் இருந்து கோந்து மாதிரி நீரை உமிழ்ந்து, தன்னைச் சுற்றி கூடு கட்டிக்கொள்ளும்'' என்றார்.

சற்றுத் தள்ளி மெல்லிய தண்டுகளில் தொங்கிக்கொண்டிருந்த கூட்டினை நெருங்கினார்கள். ''இதுதான் கூட்டுப்புழு நிலை இந்த நிலையில் சில நாட்கள், வாரங்கள் இருக்கும். ஒரு சில வகைகளில், இந்த கூட்டுப்புழு நிலை ஓர் ஆண்டுக்கு நீடிக்கும். இந்த நிலையில்தான் உள்ளே இருக்கும் பூச்சிக்கு இறக்கைகள் முளைக்கும். வண்ணமயமானபூச்சியாக, கூட்டைப் பிளந்துக்கிட்டு வெளியே வரும். புழுவாக இருக்கும்போது, அதன் உடம்பு 14 பகுதிகளாக இருந்ததைப் பார்த்தோம். வண்ணத்துப்பூச்சியாக முழு வளர்ச்சி அடைந்ததும் தலை, மார்பு, வயிறு என மூன்று பாகங்களாக மாறி இருக்கும். 12 கண்களும், கூட்டுக் கண்களாக மாறி இருக்கும். வெளியே வந்த ஒரு மணி நேரத்தில், பறக்க ஆரம்பிச்சுடும். நீளமான ஆறு கால்கள், உணர்வுக்கொம்புகள், நான்கு இறக்கைகள் என அமர்க்களமாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

அவ்வாறு வண்ணத்துப்பூச்சிகளாக மாறி, பறந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பூச்சிகளை ஓடிப் பிடிக்க முயன்றார்கள்.

''வண்ணத்துப்பூச்சிகளாக மாறிய ஒரு சில நாட்களில் இறந்துவிடுமா டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''பெரும்பாலான வகைகள் அப்படித்தான். சில வண்ணத்துப்பூச்சிகள் ஓர் ஆண்டு முதல் ஒன்றரை ஆண்டுகள் வாழும். பறவைகள் மாதிரி ஓர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்துக்கு வலசை செல்லும் வண்ணத்துப்பூச்சிகளும் இருக்கும். வட அமெரிக்காவில் வாழும் மோனார்க் (Monarch Butterly)  கிட்டத்தட்ட 3,000 கிலோமீட்டர் வலசை செல்லும். பப்புவா நியூகினியா நாட்டில் இருக்கும் குயின் அலெக்சாண்ட்ரா என்ற வண்ணத்துப்பூச்சிதான் உலகிலேயே மிகப் பெரியது. இறக்கைகளை விரித்த நிலையில் 28 செ.மீ இருக்கும்'' என்றார் டீச்சர்.

பல வகையான வண்ணத்துப்பூச்சிகளைக் கண்டு ரசித்த பின், மந்திரக் கம்பளம் அவர்களையும் வண்ணத்துப்பூச்சிகளாக மாற்றியது. கம்பளம் முன்னால் செல்ல, பின் தொடர்ந்தவாறு வீடு நோக்கி வலசை போனார்கள் சுட்டி வண்ணத்துப்பூச்சிகள்.