மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஷன் ஓவியம் : பிள்ளை

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

அருண் வீட்டுக்கு வந்திருந்தார்கள், மாயா டீச்சரும் மற்ற தோழர்களும்.

''முதுகு வலியாமே... என்ன ஆச்சு அருண்?'' என்று கேட்டார் டீச்சர்.

''சொன்ன பேச்சைக் கேட்டாத்தானே... பக்கத்து வீட்டு மாடியிலே பந்து விழுந்திருச்சுனு சுவர் மேலே ஏறி ஏடாகூடமாத் தாவிக் குதிச்சான்'' என்றார் அருணின் அம்மா.

''அம்மா, மிச்சத்தை நான் சொல்லிக்கிறேன். நீ சாப்பிட ஏதாவது கொண்டுவா'' என்று அம்மாவை விரட்டிய அருண், அவர்களைத் தனது அறைக்கு அழைத்துச்சென்றான்.

''டாக்டர் என்ன சொன்னார் அருண்?'' என்று கேட்டாள் ஷாலினி.

''ஸ்கேன் எடுத்தார். சுவரில் பலமாக உராய்ந்ததில், முதுகுத்தண்டில் லேசான சிராய்ப்பாம். சரியாப் போயிடும்னு சொன்னார்'' என்றான் அருண்.

''டீச்சர், முதுகுத்தண்டு விஷயத்தில் ரொம்பக் கவனமா இருக்கணும். அதில் அடிபட்டால் மூளைக்கே பாதிப்பு ஏற்படும்னு டி.வி.யில ஒரு டாக்டர் சொன்னார்'' என்றாள் கயல்.

''ஆமாம் கயல். நம் உடம்பின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று, ஸ்பைனல் கார்டு (Spinal cord) என்கிற முதுகுத்தண்டு வடம். மூளையின் பின் பக்கத்தில் ஆரம்பிச்சு, இடுப்புக்குக் கொஞ்சம் கீழே, கூம்பு வடிவில் முடியும். இதை, உடலின் தேசிய நெடுஞ்சாலை எனச் சொல்லலாம். மூளைதான் தலைநகர். உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் நரம்புகள், ஏதாவது ஒரு வகையில் முதுகுத்தண்டு என்கிற நெடுஞ்சாலையை வந்தடையும். அங்கிருந்து மூளைக்குச் செல்லும். வயிற்றில் பசி, தொடையில் கிள்ளினதால் உண்டான வலி என எல்லாச் செய்திகளையும் எடுத்துச்செல்லும் நரம்புகளுக்கு, முதுகுத்தண்டுதான் பாதை'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''ஆ...'' என்று அலறினான் அருண்.

''என்ன முதுகு வலியா?'' என்று கேட்டாள் ஷாலினி.

''இல்லே... இவனோட நெடுஞ்சாலையில் டிராஃபிக் ஜாம் ஆகாமல் இருக்கான்னு தெரிஞ்சுக்க, நான்தான் தொடையில் கிள்ளினேன்'' என்றான் கதிர்.

''அவனே முதுகுவலியில் இருக்கான். நாம வேணும்னா, அருணின் முதுகுத்தண்டுக்குள் போவோம். அதன் அமைப்பு, செயல்பாடுகளைப் பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

''நல்ல கதையா இருக்கே... அப்போ நான் எப்படி பார்க்கிறது? ஒரு ஐடியா சொல்றேன். அம்மாவுக்குத் தெரியாமல் அவங்க முதுகுத்தண்டைப் பார்ப்போம். என்னைத் திட்டினாங்களே... அவங்க சின்ன வயசுல ஏடாகூடமா ஏதாவது செய்து அடிபட்டிருக்கலாம். அந்த ஹிஸ்ட்ரியை கலெக்ட் பண்ணிட்டு வருவோம். எனக்கு யூஸ் ஆகும்'' என்றான் அருண்.

சிரித்த டீச்சர், ''சரி, போய்ப் பார்க்கலாம்'' என்று மந்திரக் கம்பளத்தை எடுத்தார்.

அவர்கள், கட்டிலில் அமர்ந்துகொண்டார்கள். ஜலதோஷத்துக்கு ஆவி பிடிப்பது போல அனைவரின் மீதும் கம்பளத்தைப் போர்த்திய டீச்சர், ''ரெடி... ஒன்... டூ... த்ரீ'' என்றார்.

அடுத்த சில நொடிகளில் எறும்பு போன்ற குட்டி உருவங்களாக ஓர் இடத்தில் இருந்தார்கள். ''இதுதான் முதுகுத்தண்டா டீச்சர்?'' எனக் கேட்டான் அருண்.

''ஆமாம். முகுதுத்தண்டு பற்றி விரிவாகச் சொல்லணும்னா, ரொம்ப போர் அடிக்கும். மருத்துவ ரீதியாக நிறைய உள் பாகங்கள் இருக்கு. நாம சுருக்கமாகப் பார்ப்போம். முதுகுத்தண்டு, ஆண்களுக்கு 45 சென்டிமீட்டரும் பெண்களுக்கு 43 சென்டிமீட்டரும் இருக்கும்'' என்றார் டீச்சர்.

''டீச்சர், ஒரு டவுட்! இங்கே ரெண்டு குழாய்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து இருக்கிற மாதிரி தெரியுதே... இதில் எது முதுகுத்தண்டு?'' என்று கேட்டாள் கயல்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''வெரிகுட் கயல், ரொம்ப நுணுக்கமாக் கவனிச்சிருக்கே. ஒரு விஷயத்தை சரியாப் புரிஞ்சுக்கங்க. ஸ்பைனல் கார்டு என்கிற முள்ளந்தண்டு வடம் வேற. முள்ளெலும்பு என்கிற முதுகெலும்பு வேற. இரண்டுமே நீளமான குழாய் போன்றதுதான். முகுதுத்தண்டைவிட முள்ளெலும்புகளின் நீளம் கொஞ்சம் அதிகம். முள்ளெலும்பின் வேலை, மார்பு எலும்புகளை இணைச்சுப் பிடிச்சுக்கிறது. நரம்புகளின் செய்திகளைக் கடத்துவது முதுகுத்தண்டு'' என்றார் டீச்சர்.

இப்போது அவர்கள், மூளைக்கு அருகே இருந்தார்கள். அங்கிருந்து ஏராளமான நரம்புகள் உடல் முழுவதும் சென்றுகொண்டிருந்தன.

''இங்கேதான் நம்ம நெடுஞ்சாலை ஆரம்பிக்குது.வாங்க, கீழே போய்க்கிட்டே பேசுவோம். இங்கே ஆரம்பிக்கும் முதுகுத்தண்டு, இடுப்பு முள்ளெலும்பு வரைக்கும் போகும். அது முடிகிற இடத்தை, இழை முனை என்பார்கள். இந்த முதுகுத்தண்டு, முதுகுப் பகுதியில் இருந்து வயிற்றுப்புறம் அழுத்தப்பட்ட மாதிரி இருக்கும். இந்த முதுகுத்தண்டை மூன்று சவ்வு அடுக்குகள் பாதுகாக்கும். இதோ, வெளிப்புறம் இருக்கும் இந்தச் சவுக்கு 'வன்றாயி’ என்று பெயர்'' என்றார் டீச்சர்.

ஷாலினி அதைத் தொட்டுப் பார்த்தாள். ''நல்லா ஸ்ட்ராங்கா இருக்கு'' என்றாள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''முதுகுத்தண்டுக்கு புல்லட் ப்ரூஃப் இதுதான். இதற்கும் முள்ளெலும்புக்கும் இடையே சின்னச் சின்ன இடைவெளி இருக்கு பாருங்க. இதை, எபிடியூரல் (Epidural)  என்பார்கள். இங்கே, கொழுப்பு இழைகள் பசை மாதிரி இருக்கும். ரயில் பெட்டிகளை ஒன்றோடு ஒன்று இணைக்கும் கொக்கி மாதிரி'' என்றார் டீச்சர்.

அவர்கள் வன்றாயி சவ்வை ஊடுருவிக்கொண்டு உள்ளே சென்றார்கள். ''ஆகா... அம்மா முதுகெலும்புக்கு வேலையே கொடுக்கிறது இல்லை போலிருக்கு. இங்கே பாருங்க, சிலந்தி கூடு கட்டி இருக்கு'' என்றான் அருண்.

''ஜிம்னாஸ்டிக்ல கோல்டு மெடல் வாங்கினவங்களுக்கும் இந்த சிலந்தி வலை இருக்கும் அருண். வன்றாயிக்கு அடுத்த அடுக்கு சவ்வு இதுதான். இதன் இழைகள், சிலந்தி வலை மாதிரி இருப்பதால், சிலந்தி வலை உரு என்றே பெயர். இங்கே சுரக்கும் CSF என்ற திரவம், முதுகுத்தண்டின் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதுக்கும் உள்ளே இருக்கும்  சவ்வு மிகவும் மென்மையானது. மென்றாயி எனப்படும் அது, முதுகுத்தண்டுடன் ஒட்டியிருக்கும்'' என்றார் டீச்சர்.

''டீச்சர், இந்த முதுகுத்தண்டு ரயில் பெட்டிகளில்  அன்ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் எது?'' என்று சிரித்தபடிக் கேட்டாள் ஷாலினி.

''எல்லாமே ரிசர்வ்டுதான். ஒவ்வொரு பெட்டியிலும் நரம்பின் வேர்கள், இழைகள் இருக்கு. இது, உடல் உறுப்புகளின் உணர்ச்சிகளை இங்கே இருந்தபடி மூளைக்குக் கடத்த உதவுது. ஓப்பன் டிக்கெட் வாங்கிட்டு யாரும் இதில் ஏறிட முடியாது'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

''அப்படின்னா இந்த முதுகுத்தண்டுக்கு எதுவுமே ஆகாதா?'' என்று கேட்டான் அருண்.

''அது எப்படி? தினமும் நூற்றுக்கணக்கான ரயில்கள் நல்லபடியாகத்தான் போயிட்டுவருது. ஆனாலும், ஒரு சிறு கவனக்குறைவு ஏற்படும்போது விபத்து நடக்குது இல்லையா? அந்த மாதிரி முதுகுத்தண்டுக்கும் ஏற்படும். மதில் சுவரைத் தாண்டினப்ப உனக்கு ஏற்பட்டது சிறு உராய்வுதான். அதைப் பாதுகாப்பு சவ்வுகளே சமாளிச்சிடுச்சு. பெரிய விபத்துகளில் சிக்குபவர்களுக்கு முதுகுத்தண்டில் ஏற்படும் பாதிப்பு, பல விளைவுகளை ஏற்படுத்தும். கோமா நிலைக்குச் சென்றவர்கள், இடுப்புக்குக் கீழே உணர்வே இல்லாமல் போனவர்கள் பற்றி கேள்விப்பட்டிருப்பீங்க. அதற்கெல்லாம் காரணம், இந்த முதுகுத்தண்டின் வழியே மூளைக்குச் செல்ல வேண்டிய குறிப்பிட்ட நரம்புகளுக்கு ஏற்படும் பாதிப்புதான்'' என்றார் டீச்சர்.

''சிலருக்கு விபத்து எதுவும் நடக்காமலும் உணர்வு இழந்துடுறாங்க... பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயல் இழந்துடுறாங்களே... அது எப்படி?'' என்று கேட்டாள் ஷாலினி.

''அது, உடலுக்குள் ஏற்படும் நோய்க் குறைபாடுகளால் நடப்பது. திடீர் அதிர்ச்சியின் காரணமாக சிலருக்கு தற்காலிகமாக மயக்கம் ஏற்படும். அதுக்குக் காரணம், குறிப்பிட்ட உணர்வு நரம்பு, திடீர் எனத் தனது மெசேஜ் அனுப்பும் செயல்பாட்டில் திணறிவிடுவதுதான். இதை, முதுகுத்தண்டில் சுரக்கும் குறிப்பிட்ட திரவம்  சரிசெய்துவிடும். பக்கவாதம் ஏற்பட்டவங்களுக்குச் சரியான தொடர் சிகிச்சை அளிப்பதன் மூலம் அந்த நரம்பைச் சரிசெய்து குணப்படுத்த முடியும்'' என்றார் டீச்சர்.

''இது மாதிரியான பாதிப்புகளைத் தவிர்க்கவே முடியாதா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''கார், ரயில்களில் போகும்போது விபத்தினால் ஏற்படும் முதுகுத்தண்டுப் பாதிப்புகளை நம்மால் தவிர்க்க முடியாது.  வாகனங்களில் போகும்போதும், விளையாடும்போதும் எச்சரிக்கையாக இருந்து விபத்தைத் தவிர்க்கலாம். நோயினால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்ப்பது நம்மிடம்தான் இருக்கு. சரியான உணவுப் பழக்கம், நோய்க்கான ஆரம்ப அறிகுறிகளைத் தெரிஞ்சுக்கிட்டு சரியான சிகிச்சை எடுத்துக்கிறது மூலம் பக்கவாதம், முடக்குவாதம் போன்ற விஷயங்களைத் தவிர்க்கலாம். சரியான வகையில் அமர்வதும் படுப்பதும்கூட முதுகுவலியைத் தவிர்க்கும்'' என்றார் டீச்சர்.

''போதும் டீச்சர், அருணின் அம்மா தேடப்போறாங்க. வாங்க போகலாம்'' என்றாள் கயல்.

அவர்கள் அம்மாவின் முதுகுத்தண்டில் இருந்து வெளியே வந்து, அருணின் அறைக்குள் நுழைந்தார்கள்.

''டீச்சர்... விஷயங்களைத் தெரிஞ்சுக்கும் ஆர்வத்தில் அம்மாவின் முதுகுத்தண்டின் கண்டிஷனைத் தெரிஞ்சுக்க மறந்துட்டேனே'' என்றான் அருண்.

''உன் அம்மா, தினமும் யோகா, உடற்பயிற்சிகளைச் செய்வாங்க போலிருக்கு அருண். அவங்க முதுகுத்தண்டும், முள்ளெலும்பும் பிரச்னை இல்லாமல் நல்லாவே இருக்கு. அதனால், நீ அம்மாவை எதுவும் பேச முடியாது. அம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு, ஒழுங்கா நடந்துக்க'' என்றார் டீச்சர்.

அப்போது, பிஸ்கட் மற்றும் காபி கோப்பைகளுடன் உள்ளே வந்த அருணின் அம்மா, ''எல்லோரும் எங்கே போனீங்க? கொஞ்சம் முன்னாடி பார்த்தப்ப யாரையும் காணோமே'' என்று திகைப்புடன் கேட்டார்.

''நீங்க சரியா பார்க்கலை ஆன்ட்டி. நாங்க உங்க முதுகுக்குப் பின்னாடியேதான் இருந்தோம்'' என்று சொல்லிச் சிரித்தாள் ஷாலினி.