ஆயிஜா இரா.நடராசன் படங்கள் :பாரதிராஷா
அந்த ஊரின் பெயர், எட்டயபுரம். அங்குள்ள அரண்மனை புகழ் பெற்றது. எட்டயபுரம் மகாராஜா அனைவராலும் நன்கு அறியப்பட்டிருந்தார். அந்த அரண்மனையின் பொறியாளராகவும் கணித மேதையாகவும் திகழ்ந்தவர், சின்னசாமி. அவருக்கு ஒரு மகன். சின்னசாமியைவிட அவரது மகன் சுப்பையா பிரபலம்.
அப்போது அவனுக்கு வயது மூன்று. அவனைக் காணவில்லை என்று எல்லோரும் தேடிக்கொண்டிருந்தனர். அவனது தாய், ஏற்கெனவே நோய்வாய்பட்டவர். மகனை நினைத்து மிகவும் கவலைப்பட்டார். ஒரு வழியாக, மாலை நேரத்தில் சுப்பையாவை ஆற்றின் படுகையில் கண்டனர். அங்கே ஒரு பாறை மீது அமர்ந்து, தமிழிசையில் குமரகுருபரர் பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தான். அவனுக்கு யாரும் பாடல்களைக் கற்றுக்கொடுக்கவில்லை. கேள்வி ஞானத்திலேயே பாடும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது.

அப்போது, எட்டயபுரம் அரண்மனைக்கு பெரிய பெரிய புலவர்கள், கவிஞர்கள் வருவார்கள். தத்துவமும் பாடலும் புனைந்து வந்து, விவாதத்தில் ஈடுபடுவார்கள். மகாராஜா அவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார். மகாராஜாவுக்கு ஆங்கிலத்திலும் புலமை உண்டு. ஒருநாள், அவைக்கு வந்த பெரும் புலவர் ஒருவரோடு தத்துவ விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மகாராஜா. அப்போது, அப்பாவுடன் அங்கே இருந்த சுப்பையா எழுந்தான். அந்தப் பாடலில் இருந்த பிழைகளைச் சுட்டிக்காட்டினான். வெண்பாவுக்கு இலக்கண விளக்கம் அளித்தான். அனைவரும் அசந்துபோனார்கள். அப்போது அவன் வயது நான்கு.
தன் மகன் ஆங்கிலப் பள்ளியில் கற்று, தன்னைப் போல பொறியாளராக வேண்டும் என்பது சின்னசாமியின் ஆசை. உள்ளூரில் ஒரு ஆங்கிலோ இந்தியப் பள்ளி இருந்தது. அதில் சுப்பையாவைச் சேர்த்தும் வகுப்பில் அவனை உட்காரவைக்க முடியவில்லை. நான்கு சுவர்களுக்குள் கொடுக்கப்பட்ட பாடங்களை இயந்திரம் போல மனப்பாடம் செய்ய சுப்பையாவுக்கு விருப்பம் இல்லை. மலை, காடு, ஆற்றுப்படுகைகளில் சுற்றித் திரிவதையே விரும்பினான். அந்த ஆறு வயதில், அவன் கால் படாத இடமே அந்த ஊரில் கிடையாது. கணீர்க் குரலில் பிரமாதமாகப் பாடுவான்.

ஒருநாள், எட்டயபுர மகாராஜா அவனை அழைத்தார். ''இப்படியே சுற்றித் திரிந்தால் ஏதும் தெரியாதவனாக ஆகிவிடுவாய்'' என்றார். உடனே அவன், '' உங்களுக்கு என்ன தெரிய வேண்டும் கேளுங்கள் சொல்கிறேன்'' என்றான். சிலப்பதிகாரம், ராமாயணம் எனத் தொடங்கி, இலக்கிய அருவியாகக் கொட்டினான். பெருங்கூட்டமே கூடிவிட்டது.
அன்று முதல் அரண்மனையின் இளைய கவியாக நியமிக்கப்பட்டான் சுப்பையா. தினமும் அவனது நாவில் இருந்து அருவிபோல் கவிதைகள் கொட்டியபடியே இருக்கும்.
11 வயதில் எட்டுத் திக்கும் அவனது கவிதைகள், புயலாக வீசத் தொடங்கின. எட்டயபுரம் மகாசபை அவனுக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கியது. பிற்காலத்தில் மகாகவி பாரதியாராக, நாட்டு விடுதலைக்காக எழுச்சிக் கவிதைகளைப் படைத்த அந்தச் சிறுவன் சுப்பையா, ஒரு சுட்டி நாயகனே.