ஆயிஜா இரா.நடராசன் ஓவியம் : பாரதிராஜா
அந்தச் சிறுவனை எல்லோரும் 'குஞ்சப்பா’ என்று அழைத்தார்கள். காரணம், அவன் மிகவும் மெலிந்து காணப்பட்டான். அவர்கள், சகோதரர்கள் ஆறு பேர். குஞ்சப்பாவின் அப்பா, பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர். அவனது அம்மா மிகவும் உடல்நலம் குன்றி இருந்ததால், அவன் பாட்டி வீட்டில் விடப்பட்டான். அப்பாவும் அம்மாவும் வசித்தது சென்னையில். பாட்டி வீடு, ராசிபுரத்தில் இருந்தது.
பார்வதி பாட்டிக்குத் தெரியாததே இல்லை. கணக்கு, வரலாறு, புராணம், இதிகாசம் என எல்லாம் குஞ்சப்பாவுக்கு சொல்லிக்கொடுத்தார். சிறுவன் குஞ்சப்பா தனியாகவே விளையாடுவான். அவனுக்கு அபாரமான கற்பனைத்திறன் இருந்தது. விதவிதமான பெரிய சைஸ் கற்களை வட்டமாக வைத்து, ''இதுதான் ராஜ தர்பார், நான்தான் மகாராஜா'' என்பான். மகாராஜா விளையாட்டு தொடங்கிவிடும்.

அதே கற்களை ஒன்றன்பின் ஒன்றாக வைப்பான். ''இதுதான் ராணுவம், நான்தான் தளபதி'' என்பான். பள்ளிக்கூடம், சந்தை, ரயில் எனக் கற்களில் பல விளையாட்டுகளை மூன்று வயதிலேயே உருவாக்கி, கற்பனைத்திறனை வெளிக்காட்டினான்.
குஞ்சப்பாவின் நண்பர்கள் யார் தெரியுமா? பார்வதி பாட்டியின் வீட்டுத் தோட்டத்தில் ஒரு மயில் இருந்தது. அது தினமும் இரை தேடி எங்கே பறந்தாலும், மதியம் குஞ்சப்பாவைத் தேடி வந்துவிடும். மாமரங்கள் காய்த்துக் குலுங்கிய அந்த இடம் தேடி அவ்வப்போது வந்துபோனது ஒரு குரங்கு. அதுவும் குஞ்சப்பாவின் நண்பனானது. தினமும் மயிலோடும் குரங்கோடும் தனது கற்பனை விளையாட்டுகளை நடத்தினான் குஞ்சப்பா.
விரைவில், அவனை சென்னைக்கு அழைத்து வந்து, பள்ளியில் முதல் வகுப்பில் சேர்த்தார் அப்பா. பாட்டி கொடுத்த பயிற்சிகளினால் ஒரு பழக்கம் அவனோடு ஒட்டிக்கொண்டது. அந்த நான்கு வயதிலேயே பாட்டிக்கு புத்தகங்களைச் சத்தமாகப் படித்துக் காட்டுவான். ராமாயணம், மகாபாரதம், கந்தபுராணம் என அவனது கற்பனைக்கு அந்தப் பழக்கம் தீனிபோட்டது. சென்னைப் பள்ளிக்கூடத்திலும் அவனுக்குப் பிடித்த இடம் நூலகம்தான்.

ஆங்கிலத்தில் இருந்த வாசிப்பும் நேசிப்பும் அவனை பிரபல கிறிஸ்துவக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்க இடம் கொடுத்து உயர்த்தியது. அங்கே, சார்லஸ் டிக்கன்ஸ், உட் ஹவுஸ் எனப் பலரது புத்தகங்களை வாசித்தான். தனது ரஃப் நோட்டிலேயே ஒரு கையெழுத்து இதழைத் தயாரித்து நடத்தி, வகுப்பில் சுற்றுக்குவிட்டு அசத்தினான்.
அவனது தந்தைக்கு, மைசூருக்கு பணி மாறுதல் கிடைத்தது. மைசூர் மகாராஜா கல்லூரி உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு சேர்க்கப்பட்டான். அங்கே பிரமாண்டமான நூலகம் இருந்தது. தனது வாசிப்பு வேட்டையை அங்கே தொடர்ந்தான். கையெழுத்து மாதப் பத்திரிகையும் தொடர்ந்தது. அவனது ஆங்கிலப் பாடப் பரீட்சை விடைத்தாள்கூட, ஆசிரியர்கள் மிகவும் ரசிக்கும்படி பல புதுமைகளைக்கொண்டிருந்தது.
ஒருமுறை பள்ளி - கல்லூரி அளவில், ஆங்கிலப் படைப்பாக்கப் போட்டி ஒன்றை அறிவித்தார், மைசூர் மகாராஜா. கல்லூரி மாணவர்களும் பள்ளியில் 11-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களும் கலந்துகொண்ட அந்தப் பிரமாண்டமான போட்டியில், குஞ்சப்பாவுக்கு முதல் பரிசு கிடைத்த அப்போது அவனுக்கு வயது எட்டுதான்!
பிற்காலத்தில் ஆர்.கே.நாராயண் என மாபெரும் ஆங்கில எழுத்தாளராக உயர்ந்த குஞ்சப்பா, ஒரு சுட்டி நாயகனே.