இவங்க வேற மாதிரி !கே.யுவராஷன் படங்கள்: பிள்ளை
''கிலோ 30 ரூபாய்... கிலோ 30 ரூபாய்!''
''அரை கிலோ 10 ரூபாய்... அரை கிலோ 10 ரூபாய்!''
அந்தக் காய்கறி மார்க்கெட், விதவிதமான கூவல்கள், பேரங்கள், பேச்சுக்களால் நிறைந்திருந்தது. சுட்டிகளுடன் வந்திருந்த மாயா டீச்சர், தனக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டிருந்தார்.
''இது என்ன டீச்சர், கத்தரிக்காய் கொஞ்சம் இளைச்ச பரங்கிக்காய் மாதிரி இருக்கு'' என்றபடி ஒரு காயை கையில் எடுத்தாள் கயல்.
''இது, கலப்பினம் மூலம் உருவாக்கப்பட்ட கத்தரிக்காய். அப்படித்தான் இருக்கும்'' என்றார் டீச்சர்.
''டீச்சர், 'இப்ப எல்லாம் கடுகுகூட கலப்பினமாப் போயிடுச்சு. எதைத்தான் சாப்பிடுறதுனு தெரியலை’னு என் அப்பா வருத்தப்பட்டார்'' என்றான் கதிர்.
''உண்மைதான் கதிர். ஆரம்பத்தில் முக்கியமான சில பழங்கள், அத்தியாவசியத் தானியங்கள், காய்களைக் கலப்பினம் மூலம் உருவாக்கினாங்க. மக்கள்தொகை அதிகரிக்க அதிகரிக்க, இயற்கையாக விளையும் உணவுப் பொருள்கள் போதுமானதாக இல்லை. இன்னைக்கி, அரிசியில் தொடங்கி நாம் சாப்பிடுகிற எல்லாமே கலப்பினம்தான்'' என்றார் டீச்சர்.

ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டார்கள். ''கலப்பினம் என்றால் என்ன டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.
''மரபணு மாற்றம். தாவரமாக இருந்தாலும் விலங்காக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மரபணுதான் அடிப்படையான விஷயம். அதுதான் ஓர் உயிரின் உடல் அமைப்பு, செயல்திறன், தனித்தன்மை மிக்க ஆற்றல் ஆகியவற்றைத் தீர்மானிக்குது. இப்போ, நம்ம ஊர் அரிசி வகையில் ஒன்று, ரொம்ப மெல்லியதாவும் சுவையாவும் இருக்கும். ஆனால், முழுமையாக வளர ஆறு மாதங்கள் ஆகும்னு வெச்சுக்கங்க. அதேசமயம், ஆப்பிரிக்காவில் ஓர் அரிசி வகை, மூன்று மாதங்களில் விளையும், பெரியதாவும் இருக்கும். நம் அரிசியின் மெல்லிய தன்மைக்கான மரபணுவையும் ஆப்பிரிக்க அரிசியின் வேகத்துக்குக் காரணமான மரபணுவையும் எடுத்து, புதிய அரிசியை உருவாக்குவாங்க. இதுக்குப் பெயர்தான் கலப்பினம் (Hybrid). அப்படி உருவாக்கிய அரிசி, மெல்லியதாகவும் இருக்கும், விரைவாகவும் வளரும். இதன் மூலம், 100 மூட்டைகள் விளையும் பரப்பளவில், 150 மூட்டைகள் கிடைக்கும்'' என்றார் டீச்சர்.
''அதாவது, ஆறு மாதங்களுக்கு 300 மூட்டைகள் கிடைக்கும். இப்படி கிடைக்கிற உணவுப் பொருளைச் சாப்பிடுறது நல்லதா கெட்டதா?'' என்று கேட்டான் அருண்.

ஆட்டோ, மாயா டீச்சரின் வீட்டு வாசலில் வந்து நின்றது. பணத்தைக் கொடுத்துவிட்டு வீட்டுக்குள் வந்தார்கள். ''அதைத் தவிர்க்கும் காலத்தை நாம் எப்போதோ தாண்டிவிட்டோம். இப்போ இருக்கிற உலக மக்கள்தொகைக்கு, கலப்பின உணவுப் பொருள்கள்தான் தீர்வாக இருக்கு. உதாரணமாக, குழந்தைகளுக்குப் பால் முக்கியத் தேவை. ஆனால், ஒரு நாட்டுப் பசுவால், ஒரு பகுதியில் இருக்கிற நூற்றுக்கணக்கான குழந்தைகளின் தேவையை நிறைவேற்ற முடியாதே! எனவே, ஐரோப்பிய இனமான ஃப்ரிஸியன் (Friesian) மாட்டுடன், நம் ஊர் பசுவைளீ கலப்பினம் செய்து பிறந்த பசுக்கள், அதிகமாக பால் கொடுக்கின்றன. இப்படி, கலப்பினம் மூலம் உருவாகும் உணவுப் பொருள்களில் இயற்கையான வைட்டமின், மினரல்ஸ் குறைவுதான்'' என்றார் டீச்சர்.
''தாவரங்கள், பாலுக்காக பசு, இறைச்சிக்காக ஆடு, கோழிகளில் கலப்பினம் செய்வது சரி. காட்டு விலங்குகளில் கலப்பினம் செய்வது ஏன்?'' என்று கேட்டாள் கயல்.
''மனிதனுக்கு இரண்டு வகைப் பசி இருக்கு. ஒன்று, வயிற்றுப் பசி. இன்னொன்று, அறிவுப் பசி. காட்டில் வாழும் சிங்கம், புலி தொடங்கி, தண்ணீரில் வாழும் டால்ஃபின், பாலைவனத்தில் வசிக்கும் ஒட்டகம் என எதையும் விடவில்லை. ஆராய்ச்சி என்கிற பெயரில் எல்லா உயிரினங்களிலும் கலப்பினம் நடக்குது. நாம முக்கியமான சில கலப்பின உயிர்களைப் பார்த்துட்டு வரலாமா?'' என்று கேட்டார் டீச்சர்.
''நாங்க ரெடி'' என்ற ஷாலினி, மந்திரக் கம்பளத்தை விரித்தாள். அது அவர்களைச் சுமந்துகொண்டு கிளம்பியது.
''கலப்பினம் சில வகைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கு. ஒன்று, ஒரே துணை இனத்தில் இருக்கும் இரண்டு வகை உயிரினங்களுக்கு இடையே நடக்கும் கலப்பினம். இதை, இன்ட்ராஸ்பெசிஃபிக் (intraspecific) என்பார்கள். உதாரணம், வங்கப்புலி மற்றும் சைபீரியன் புலி இரண்டையும் இணைத்து, புதிய உயிரை உண்டாக்குவது. ஒரே இனத்தில் நடக்கும் கலப்பினத்தை இன்டர்ஸ்பெசிஃபிக் (interspecific) என்பார்கள். உதாரணமாக, பூனை இனத்தைச் சார்ந்த புலி மற்றும் சிங்கத்துக்கு இடையே கலப்பினம் செய்து லைகர், டைகன் என உருவாக்குவது. பேரினங்கள் இடையே நடைபெறும் கலப்பினத்தை, இன்டர்ஜெனிக் (intergenic) என்பார்கள். அபூர்வமாக, வெவ்வேறு குடும்பங்களுக்கு இடையே நடைபெறுவதை, 'இன்டர்ஃபேமிலியல்’ (interfamilial) என்று சொல்வார்கள். இயற்கையால் மட்டும்தான் புதிய உயிர்களை உருவாக்க முடியுமா... தன் அறிவாற்றல் மூலமும் புதிய உயிர்களை உருவாக்க முடியும் என நிரூபிக்க, இப்படி உருவாக்குகிறார்கள். ஆனால், இவ்வாறு உருவாகும் புதிய உயிரினங்கள், பெரும்பாலும் மலட்டுத் தன்மையுடன்தான் இருக்கும். இவற்றுக்கு குட்டிகள் பிறக்காது. சிலவற்றுக்கு மட்டும் கருவுறும் தன்மை உண்டாகும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் ஒரு விலங்கியல் பூங்காவில் இறங்கியது. அங்கே, ஒரு கூண்டில் உலாவிக்கொண்டிருந்த ஒரு குட்டியைப் பார்த்ததும், ''வாவ்... இது 'லைகர்’ குட்டிதானே?'' என்று உற்சாகமாகக் குதித்தான் கதிர்.
''இல்லை கதிர். லைகர், டைகான் இரண்டுக்கும் என்ன வித்தியாசம்னு சொல்லுங்க. அப்புறம் இது என்ன குட்டி என்று தெரியும்'' என்றார் டீச்சர்.
''ஆண் சிங்கத்துக்கும் பெண் புலிக்கும் பிறந்தால், அது, லைகர் (Liger). ஆண் புலியும் பெண் சிங்கமும் இணைந்து உருவாவது, டைகான் (Tigon). பூனை இனத்தில் லைகர்தான் உருவில் மிகப் பெரியது. இதில் ஒரு லைகர், கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிச்சிருக்கு'' என்றாள் கயல்.
''கரெக்ட்! புலி மற்றும் சிங்கத்தைக் காட்டிலும் டைகான் மிக வேகமாக வளரும். காரணம், அவற்றுக்குள் இருக்கும் புதிய மரபணு. லைகர் நல்லா நீச்சல் அடிக்கும். இது, புலியின் குணம். அதே சமயம், கூடிப் பழகும் தன்மையோடு இருக்கும். இது, சிங்கத்தின் குணம். நாம் வந்திருப்பது ரஷ்யாவின் நோவோஸிபிர்ஸ் விலங்கியல் பூங்கா (Novosibirsk Zoo). அந்தத் தாய் விலங்கைப் பாருங்க. அதுதான் லைகர். அதனுடன் ஓர் ஆண் சிங்கம் இணைந்து, செப்டம்பர் 2012-ல் பிறந்ததுதான் இந்தக் குட்டி. இப்படிப் பிறக்கும் குட்டியை லிலிகர் (Liliger) என்பார்கள்'' என்றார் டீச்சர்.

அங்கே இருந்த அறிவிப்பு பலகையைப் பார்த்த ஷாலினி, ''இந்த லிலிகர் குட்டிக்கு, 'சியாரா’ என்று பெயர் வெச்சிருக்காங்க டீச்சர். 'தி லயன் கிங்-2’ படத்தில் வரும் சிங்க இளவரசியின் பெயர் இது'' என்றாள்.
''லைகர் மாதிரி டைகானுக்குப் பிறக்கும் குட்டியை லிட்டிகன் (Litigon) என்பார்கள். கலப்பினங்களுக்குப் பிறந்த குட்டியும் வளர்ந்து, குட்டியை ஈனுவது மிக மிக அபூர்வம். அந்த அபூர்வம், நம் இந்தியாவில் நடந்திருக்கு. 1971-ல், கொல்கத்தா அருகில் உள்ள அலிபூர் விலங்கியல் பூங்காவில் பிறந்த ருத்ராணி என்ற பெண் லிட்டிகான், ஏழு குட்டிகளை ஈன்றிருக்கு'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் அவர்களை வேறு பல இடங்களுக்கும் அழைத்துச்சென்றது. குதிரைக்கும் கழுதைக்கும் பிறந்த கோவேறு கழுதை, ஒட்டகம் மற்றும் லாமா கலப்பினமான காமா (Cama), டால்பின் மற்றும் திமிங்கிலத்தின் கலப்பினமான வோல்பின் (Wholpin), மயில் கலப்பினமான கினிக்கோழி எனப் பல்வேறு கலப்பின உயிரினங்களைப் பார்த்துவிட்டு, வீடு நோக்கி வந்தார்கள்.

''இப்படி உருவாக்கி, அதைக் கூண்டுக்குள் அடைத்து, வேடிக்கை பார்ப்பதைவிட, உயிரினங்களை அதன் போக்கிலேயே விடுவதுதான் நல்லது'' என்றான் கதிர்.
''இந்தச் சிந்தனை, உன்னை மாதிரி இளைய தலைமுறைச் சிறுவர், சிறுமிகளிடம் தோன்றி, இயற்கையை நேசிக்க ஆரம்பித்தால், சந்தோஷம்'' என்றார் டீச்சர்.