மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகி - ஆங் சான் சூகி

ஆயிஜா இரா.நடராசன் படங்கள் :பாரதிராஜா

உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு வலதுபுறம் இந்துமகா சமுத்திரம் அருகே, செடிக்கு பாத்தி கட்டியதுபோல  ஒரு குட்டி நாடு இருக்கும். அதுதான் பர்மா. இந்தியாவைப் போலவே பர்மாவையும் பிரிட்டிஷ்காரர்கள்  ஆண்டார்கள். பர்மாவின் விடுதலைக்காக அயராது உழைத்த ராணுவத் தளபதி, ஆங் சான் கின் என்பவருக்கு ஒரு மகள். சூகி என்ற அவளது பாட்டியின் பெயரையே அவளுக்கும் வைத்திருந்தார் அப்பா.

சுட்டி நாயகி - ஆங் சான் சூகி

பர்மாவின் விடுதலைப் போரில் முக்கியப் பங்காற்றினார் ஆங் சான் கின். ஆனால், விடுதலை பெற்ற அதே வருடம், ராணுவத்துக்கு எதிரான அணியால், திட்டமிட்டு சுடப்பட்டார். வீட்டுக்கு வந்து, ரத்த வெள்ளத்தில் மகளை மடியில் வைத்தபடி, அவர் உயிர் பிரிந்தது. அப்போது சூகியின் வயது இரண்டு.

அவளது அம்மா, கின் சூகி, மகா தைரியசாலியாக இருந்தார். குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, நாட்டுக்கான சேவையைத் தொடர்ந்தார். குட்டி சுட்டியான சூகிக்கு இரண்டு அண்ணன்கள்.  மூவரும் வீட்டின் பிரமாண்ட தோட்டத்தில் விளையாடுவார்கள். அங்கே சின்னதாக ஒரு ஏரி இருந்தது. அதில், சேற்றைப் பூசிக்கொண்டு விளையாடுவது அவர்களுக்கு குதூகலமாக இருக்கும்.

ஒருநாள், அண்ணன்கள் ஏரித் தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டாள் சூகி. உடனடியாக ஏரியில் குதித்து, ஓர் அண்ணன் தலையைப் பிடித்து இழுத்துக் கரை சேர்த்தாள். இன்னோர் அண்ணனையும் மீட்கப் பெரும் பாடுபட்டாள். அந்தத் துயரச் சம்பவத்தில், பெரிய அண்ணனை இழந்தபோது, சூகியின் வயது ஐந்து, அன்று அவளது சாகசம் பற்றி எல்லோரும் பேசினார்கள்.

சூகியின் குடும்பம் இடம் மாறியது. ரங்கூனில் (இப்போது யாங்கூன் என அழைக்கப்படுகிறது) ஏழைகள் வசித்த சேரிகளில், சூகி தனது மாலைப் பொழுதுகளைக் கழிப்பாள். பலவிதமான கலாசாரம், மத நம்பிக்கைகள் கொண்ட மக்களிடையே, தானும் ஒருத்தியாகப்  பழகினாள். கிறிஸ்துவ மக்களோடு ஈஸ்டர் கொண்டாடுவாள். இஸ்லாமியர்களுடன் ரமலான் நோன்பு இருப்பாள். பௌத்தர்களுடன் சேர்ந்து புத்த பூர்ணிமா விரதம் இருப்பாள். அப்போது, சூகியின் வயது ஏழு.

சுட்டி நாயகி - ஆங் சான் சூகி

ஆறு மொழிகளில் பரீட்சைகள் எழுதி, ஆசிரியர்களை ஆச்சர்யப்படவைத்தாள். மொழி ஆசிரியர்களுக்கு உதவியாக இருந்து, படிப்பில் பின்தங்கிய மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தபோது, அவளது வயது எட்டு.

சூகியின் அம்மா நடத்திய அரசியல் போராட்டங்களை ஒடுக்க நினைத்த ராணுவ அரசு, அவரை பர்மாவின் இந்தியத் தூதராக்கி, டெல்லிக்கு அனுப்பியது. அம்மாவுடன் இந்தியா வந்தாள் சுட்டி சூகி. அவளது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை இந்தியாவில்தான் கழிந்தது.

இந்தி, குஜராத்தி மொழிகளை எளிதில் கற்ற சூகி, தனது இனிய பொழுதுபோக்கான புத்தக வாசிப்பை, டெல்லி நூலகங்களில் தொடர்ந்தாள். மகாத்மா காந்தியின் 'சத்திய சோதனை,’ அவளது வாழ்க்கையை மாற்றியது. அகிம்சைப் போராட்டம் மீது அவளுக்குப் பெரும் நம்பிக்கை ஏற்பட்டது.  

லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு நகரில் உள்ள செயின்ட் ஹூக்ஸ் கல்லூரியில் அரசியலில் பட்டம் பெற்று, மேற்படிப்பை முடித்தார். ஐ.நா.சபையில் பணியாற்றினார். அன்பான கணவர், அழகான குழந்தைகள் என இருந்தபோதுதான், பர்மாவில் இருந்த சூகியின் அம்மாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரைப் பார்க்க நாடு திரும்பினார். நாட்டின் வறுமையும் ராணுவ ஆட்சியின் கொடுமையும் அவரை உலுக்கியது. பர்மாவிலேயே தங்கி, காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை கையில் எடுத்தார்.

'ஜனநாயக லீக் கட்சி’ என்ற கட்சியைத் தொடங்கினார். சூகிக்கு மக்கள் ஆதரவு பெருகுவதைக் கண்ட ராணுவ அரசு, அவரை வீட்டுச் சிறையில் அடைத்தது. 20 ஆண்டுகள் சிறைவாசம். ஆனாலும் சூகி, பின்வாங்கவில்லை. 2010-ம் ஆண்டு விடுதலை ஆனபோது, அவரது வயது 65.

அமைதிக்கான நோபல் பரிசு, தேர்தலில் வெற்றி என பர்மாவின் எழுச்சி நாயகியாக இன்று வலம்வருகிறார் ஆங் சான் சூகி.