மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகி - பி.டி.உஷா

ஆயிஜா இரா.நடராசன் ஓவியம் : பாரதிராஜா

அந்தச் சிறுமி பிறந்தது, கேரளாவின் கோழிக்கோடு எனும் மாவட்டத்தில் உள்ள பையோலி. அது, ஒரு விவசாய கிராமம். 1960 - களில் அங்கே பள்ளிக்கூடம் கிடையாது.  விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெரும்பாலும் வயல்வெளியில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஊரில், ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து வயதானதும் அந்தச் சிறுமியை பள்ளியில் சேர்த்தார்கள். விடியற்காலையில் அம்மாவுடன் கொஞ்ச நேரம் வயல் வேலைகள் பார்க்கும் அவள், 25 கிலோமீட்டர் தூரத்தையும் ஓடியே  பள்ளிக்குப் போய்விடுவாள். அவளது பெயர், உஷா.

மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இடையே சிறார்களைத் தேர்வுசெய்து, பந்தயங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மைதானம் ஒன்று, உஷா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இருந்தது. ஒருநாள், அங்கே ஒரு கூட்டத்தைக் கண்டாள். அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்கள், கால் சராயும் ஷ§வும் அணிந்திருந்தார்கள். கூட்டமாக ஓடி பயிற்சி செய்தார்கள்.

மறுநாள், தனது ஊரில் இருந்து பள்ளிக்கு ஓடும்போது, அவர்களைப் போலவே பாவனை செய்துகொண்டு ஓடினாள். 'நானும் ஒருநாள், அவர்களைப் போல பயிற்சிபெறும் மாணவி ஆவேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டபோது, உஷாவின் வயது ஆறு.

சுட்டி நாயகி - பி.டி.உஷா

நாட்கள் ஓடின. ஒருநாள், அந்த மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடப்பதைக் கண்டாள். பள்ளிக்குப் போக வேண்டும் என்றது கடமை. ஓட்டப்பந்தயம் பார்க்க வேண்டும் என்றது ஆர்வம். இந்த மனப் போராட்டத்தில் ஓட்டப்பந்தயமே ஜெயித்தது. அவள் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாள். பிறகு, அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. திடீரென, 'யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்’ என்றார்கள். ஏழு வயது சிறுமியான உஷா, அந்தப் போட்டியில் கலந்துகொண்டு, மற்ற மாணவிகளைவிட வேகமாக ஓடி, முதல் இடம் பிடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள்.

உஷா நினைத்தது நிறைவேறியது. 'ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தயங்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதைப் புரிந்துகொண்டாள். பிறகு, அவளது அப்பா, உஷாவை அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.

காலில் ரப்பர் ஷ§வுடன் தனது கனவு வாழ்க்கையை நோக்கி ஓடத் தொடங்கினாள். வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், விளையாட்டுத் திறன் மிகுந்த குழந்தைகளை ஊக்கப்படுத்த, கேரள அரசு 250 ரூபாய் உதவித்தொகை கொடுத்துவந்தது. அதைப் பெற்றபோது, உஷாவின் வயது எட்டு.

மாவட்டம், மாநிலம் என, சப் ஜுனியர் பந்தயங்களில் அவளுக்கே முதல் இடம். மாநிலத்தில் தலைசிறந்த விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி, கண்ணூர் எனும் நகரில் இருந்தது. அங்கே, பயிற்சியோடு கல்வியும் பெறத் தேர்வு பெற்றாள் உஷா.

அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையில் ஒவ்வொரு வருடமும் நேஷனல் ஸ்கூல் கேம்ஸ் நடக்கும். 1979-ல், தனது 13-வது வயதில் அதில் கலந்துகொண்டாள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்ற அவளை, உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார், தனது கனவுகளின் ஆதர்ச மாணவியாகப் பெற்றார்.

ஒரே வருடம்தான். மிகக் கடுமையான பயிற்சியில், மிகச் சிறப்பாக உயர்ந்த அவளது அதிவேக ஓட்டத்தை வியக்காதவரே இல்லை. 1980-ல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தேசிய சாதனை. 1982-ல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கி, அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் 102 பதக்கங்களை வென்று, இந்தியாவின் தங்கத் தாரகையாக மிளிர்ந்தார் பி.டி. உஷா. 'பையோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

''நான், பையோலியில் இருந்து என் பள்ளிக்கு ரயிலைவிட வேகமாக ஓடி, என் வாழ்க்கையைத் தொடங்கினேன்'' என்று சொல்லும் தங்கத் தாரகை பி.டி. உஷா, நம் அனைவருக்கும் உதாரணமாக விளங்கும் சுட்டி நாயகியே.