கே.யுவராஷன் ஓவியம் : பிள்ளை
''டீச்சர், நாளைக்கு எங்க ஸ்கூலில் பவளவிழா நடக்குது. நான் ஒரு டிராமாவில் நடிக்கிறேன். நீங்க வரணும்'' என்றாள் கயல்.
''அதென்ன பவள ஆண்டு?'' என்று கேட்டாள் ஷாலினி.
''தெரியாதா உனக்கு? ஒரு நிறுவனமோ, அமைப்போ தொடங்கப்பட்டு 25-வது வருடம் ஆனதும் வெள்ளி விழா ஆண்டு என்றும் 50-வது வருடத்தை பொன் விழா ஆண்டு என்றும் கொண்டாடுவாங்க. அப்படி 75-வது ஆண்டை பவள ஆண்டு என்று கொண்டாடுவாங்க'' என்றான் கதிர்.
''இந்தப் பவளம் என்பது விலங்கா, தாவரமா டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.
''விலங்கினம்தான். நிடேரியா (cnidaria) என்ற தொகுதியைச் சேர்ந்தது. குழியுடலி என்பார்கள். ஜெல்லி மீன் தெரியுமில்லையா? அந்த வகையில் வரும். தாவரங்களில், சல்லி வேர்கள் இருக்கிற மாதிரி, ஏராளமான கால்களோடு இருக்கும் கடல்வாழ் பூச்சிதான் பவளம்'' என்றார் டீச்சர்.
''ஆனால், போட்டோக்களில் பார்க்கிறப்ப, பாறை மாதிரியே இருக்கே'' என்றாள் கயல்.

''நீ பார்த்தது பல பவளப்பூச்சிகள் ஒன்று சேர்ந்து இறுகிப்போன நிலை. இவை, ஒரே இடத்தில் கூட்டமாகச் சேர்ந்து வாழும். அப்படி ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது, ஒரு பாறையைப் போலவோ, மலர்களைப் போலவோ, வேறு பல வடிவங்களிலோ தோற்றம் அளிக்கும். நேரில் பார்த்தால், உங்களுக்கு இன்னும் சுலபமாகப் புரியும்'' என்றார் டீச்சர்.
''கடல் பயணம் போக நாங்க ரெடி'' என்ற கதிர், மந்திரக் கம்பளத்தை எடுத்து வந்தான்.
அவர்கள் அமர்ந்துகொண்டதும் கம்பளம் பறந்தது. கடலை நெருங்கியதும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் போல உருமாறி, கடலின் ஆழப் பகுதியில் இறங்கியது.
''பவளங்கள் எல்லாக் கடல்களிலும் உருவாகிவிடாது. 24 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில், சூரிய ஒளி ஆழமாகப் பரவக்கூடிய தெளிவான கடல் நீரில்தான் பவளப்பூச்சிகளால் வாழ முடியும். பொதுவாக, 40 மீட்டர் முதல் 50 மீட்டர் ஆழத்தில் இருக்கும். அது வாழும் பகுதியில், கடல் நீர் உப்பின் அளவு, லிட்டருக்கு 35 கிராமுக்கு மேலே இருக்கக் கூடாது. பசிபிக் கடல், இந்தியப் பெருங்கடலில் பவளங்கள் அதிகமாக இருக்கு. இந்தியா, அந்தமான், லட்சத் தீவுகள் போன்ற கடல் பகுதிகள், பவளங்களுக்கான சிறந்த இடங்கள்'' என்றார் டீச்சர்.
நீர்மூழ்கிக் கப்பலின் கதவு திறப்பது போல, மந்திரக் கம்பளம் திறந்துகொண்டது. அவர்கள் வெளியே வந்தார்கள். பூந்தோட்டத்துக்குள் வந்ததைப் போல அவர்களைச் சுற்றி அழகிய வண்ணங்களில், பவளப்பூச்சிகள் மிதந்துகொண்டிருந்தன.

''இதைப் பார்க்க செடிகள் மாதிரியே இருக்கே டீச்சர்'' என்றாள் ஷாலினி.
''இவை, கடல் நீரில் உள்ள உப்பு, சுண்ணாம்புச் சத்துகளை உறிஞ்சி, கால்சியம் கார்பனேட்டைச் சுரக்கும். அதுதான், இவற்றுக்கு இதுபோன்ற உருவத்தைக் கொடுக்கும். இதற்கு பவளக் கொடிகள் என்று பெயர். நாளடைவில் இந்தப் பவளக் கொடிகள் ஒன்றோடு ஒன்று சேர்ந்து, பாறை போல இறுகும். அதை, பவளப் பாறைகள் (Coral reefs) என்பார்கள். பல பவளப் பாறைகள் ஒன்றாகும்போது, அந்தப் பகுதியே தீவு போல மாறிடும். அதுவே பவளத் திட்டுகள், பவளத் தீவுகள்'' என்றார் டீச்சர்.
அவர்கள் ஒரு பவளப் பாறைத் துண்டை கையில் எடுத்துப் பார்த்தார்கள். ''இதன் உணவு என்ன டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.
''ஆல்காக் என்ற கடல் உயிரி மூலம் தமக்குத் தேவையான ஊட்டச்சத்தை உணவாக எடுத்துக்கொள்ளும். அதே சமயம், பவளங்கள் வெளியிடும் நைட்ரஜனை இந்த ஆல்காக்கள் உணவாகப் பயன்படுத்தும். இப்படி கொடுத்து வாங்கும் முறையில் இவை உயிர் வாழும். இவை, தொகுப்பு உயிரிகளாகச் சேர்ந்து வாழ்வதால், ஒன்றுக்கு கிடைக்கும் உணவே, மற்ற பவளங்களுக்கும் பரவும். ஆனால், ஆல்காக்கை நம்பி மட்டுமே எல்லாப் பவளப்பூச்சிகளும் இல்லை. சிறிய மீன்கள், மிதவை வாழ்விகளை இரையாகப் பயன்படுத்தும் பவளங்களும் இருக்கு. அந்த வகை பவளப்பூச்சிகள், கடலில் இன்னும் ஆழமான பகுதிகளில் இருக்கும்'' என்றார் டீச்சர்.
இப்போது அவர்கள் வேறு இடத்துக்கு வந்திருந்தார்கள். அங்கிருந்த பவளப்பூச்சிகள், மஞ்சள் மற்றும் சிவப்பு வண்ணங்களில் இருந்தன.
''இந்தப் பவளப்பூச்சிகளில் ஆண், பெண்ணை எப்படி கண்டுபிடிப்பது?'' என்று கேட்டாள் கயல்.

''இவற்றில் பெரும்பாலும் பாலின வேறுபாடு கிடையாது. இவை, பாலிப் (Polyp) என்ற விழுதுகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும். ஒன்றிலிருந்து இன்னொன்று எனப் பெருகிக்கொண்டே போகும். சில பவளப்பூச்சிகள் 'புணரிகள்’ என்ற அமைப்பைக் கடல் நீரில் வெளியேற்றி, இனப்பெருக்கம் செய்யும்'' என்றார் மாயா டீச்சர்.
''இந்தப் பவளப்பூச்சி வடிவங்களில் சில, ரொம்ப வித்தியாசமாக இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன்'' என்றாள் ஷாலினி.
''ஆமாம். தேன்கூடு, இதயம், மலர்கள் வடிவங்களில் இருக்கு. மனித மூளையைப் போன்று இருக்கும் பவளப்பூச்சிகளும் உண்டு'' என்றார் டீச்சர்.
அப்படி ஒரு பவளத் தொகுப்பு இருக்கும் இடத்துக்கு மந்திரக் கம்பளம் அழைத்துச் சென்றது. அதைச் சுற்றிச் சுற்றி வந்து, தொட்டுப் பார்த்தார்கள்.
''இதில் இருந்துதான் பவள நகைகள் தயாரிப்பாங்களா?'' என்று கேட்டான் அருண்.
''ஆமாம். பவளம் சேகரிப்பவர்கள், கடலின் ஆழப் பகுதியில் வலையை விரித்து இதைப் பிடிப்பார்கள். உடைந்த துண்டுகளாகக் கிடைப்பதைச் சுத்தப்படுத்தி, வழுவழுப்பாக்கி, அணிகலன்களாக விற்பார்கள். வேறு பல விஷயங்களுக்கும் இந்தப் பவளங்கள் பயன்படுகின்றன. நாட்டு மருத்துவத்தில், பவள பஸ்பம் செய்வார்கள். இது, இதய நோய்க்கு சிறந்தது. இந்தப் பாறைகளில் இருந்து எடுக்கும் கால்சியம் கார்பனேட்டை, பற்பசை, சலவைத்தூள், ரப்பர், எழுதும் மை, காகிதம் எனப் பலவற்றில் சேர்ப்பார்கள். பீங்கான் மற்றும் அழகு சாதனப் பொருள்களையும் செய்வார்கள். சில கிருமி நாசினிகள், பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கவும் பவளம் உதவுது'' என்றார் டீச்சர்.
''இந்தப் பவளங்கள் அழிவு நிலையில் இருக்கிறதா சொல்றாங்களே...''
''ஆமாம். பவளப் பாறைகளை மனிதர்கள் வெட்டி எடுத்துட்டே இருக்காங்க. புவி வெப்பமயம், கடல் நீரில் அமிலத்தன்மை அதிகமாதல் போன்றவற்றால், புதிய பவளங்கள் உருவாவது குறைஞ்சுட்டே போகுது. இதனால், கடலில் உயிரினச் சமச்சீர் மாறுது. இதைத் தடுக்க அரசு பல முயற்சிகள் செய்யுது. ஆனாலும் மனிதர்களின் சுயநலம், இந்தப் பவளங்களை வேகமாக அழிச்சுக்கிட்டே இருக்கு. இன்னும் பல ஆண்டுகள் கழித்து இதே இடத்துக்கு வரும்போது, இப்படி ஒரு அழகைப் பார்க்க முடியாது'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு கிளம்பியது.