மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஷன்

அன்று ஞாயிற்றுக்கிழமை. மாயா டீச்சருடன் மாமல்லபுரம் சென்றுவிட்டு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்கள் சுட்டிகள்.

''டீச்சர், போற வழியில முதலைப் பண்ணையைப் பார்த்துட்டுப் போகலாமே. நாலு வருஷத்துக்கு முன்னாடி பார்த்தது'' என்றாள் ஷாலினி.

''வேணாம்... வேணாம். கம்பி வலைக்குப் பின்னாடி சோம்பலா பொம்மை மாதிரி ஆடாம அசையாமப் படுத்திருக்கிற முதலைகளை எத்தனை முறைதான் பார்க்கிறது? செம போர்'' என்றான் அருண்.

''உனக்கு த்ரில் வேணும் அவ்வளவுதானே! கம்பி வலைக்கு உள்ளேயே போய்ப் பார்க்கலாம். அதோடு, உலகத்தின் பெரிய முதலைப் பண்ணைக்கும்        ஒரு விசிட் போகலாம்'' என்றார் டீச்சர்.

''அப்படினா, டபுள் ஓகே'' என்றார்கள் நான்கு பேரும்.

முதலைப் பண்ணைக்கு வெளியே காரை நிறுத்திய டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்தார். அதைப்   போர்த்திக்கொண்டதும், அவர்கள் குட்டி உருவங்களாக மாறினார்கள். வெங்காயச் சருகுபோல பறந்த கம்பளம், முதலைப் பண்ணைக்குள் நுழைந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''டிக்கெட் வாங்காமலேயே நுழைஞ்சிட்டோமே. நம்மால் கவன்மென்ட்டுக்கு லாஸ்'' என்றான் கதிர்.

''இது, அரசுப் பண்ணை இல்லை கதிர். ரோமுலஸ் விட்டேகர் (Romulus whitaker) என்ற இந்திய உயிரியல் விஞ்ஞானிக்குச் சொந்தமான பண்ணை. இதை 1976-ல் உருவாக்கினார். ஊர்வன விலங்குகள் பற்றி நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கார். இப்போ, அவருக்கு 71 வயது. நான் அவரை சில முறை சந்திச்சு இருக்கேன். என்னை அவருக்குத் தெரியும். அப்புறமா நேரில் பார்த்து விஷயத்தைச் சொல்லிக்கிறேன்'' என்றார் டீச்சர்.

''இந்த மாதிரி பண்ணைகளை எல்லாம் எதுக்காக டீச்சர் நடத்துறாங்க?'' என்று கேட்டாள் கயல்.

''குறிப்பிட்ட உயிரினங்களைப் பாதுகாக்கவும் இனப்பெருக்கம் செய்யவும்தான். சுற்றுலாரீதியாக மக்களைச் கவரவும் இது மாதிரி பண்ணைகள் உருவாக்கப்படுகின்றன. பாம்பு, முதலை போன்றவற்றை சாதாரணமா வீதிகளில் பார்த்துட முடியுமா? இந்த மாதிரி இடங்களில்தானே பார்க்க முடியும். சில நாடுகளில், கோழிப் பண்ணை மாதிரி இறைச்சிக்காகவும், வேறு சில உபயோகங்களுக்காகவும் முதலைப் பண்ணைகளை உருவாக்கி வெச்சிருக்காங்க'' என்றார் டீச்சர்.

''இந்த மாதிரி பண்ணையை முதன்முதலா எப்போ ஆரம்பிச்சாங்க?'' என்று கேட்டாள் ஷாலினி.

''உலகின் முதல் முதலைப் பண்ணை, 1893-ல் ஃப்ளோரிடா மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்ட செயின்ட் அகஸ்டியன் அலிகேட்டர் ஃபார்ம் ( St. Augustine Alligator Farm ) இறைச்சிக்காகவும், முதலையின் தோலில் பொருள்கள் தயாரிக்கவும் இந்தப் பண்ணையை உருவாக்கினாங்க. பல முதலைப் பண்ணைகள் தனியாருக்குச் சொந்தமானதாக இருக்கு'' என்றார் டீச்சர்.

''முதலைனு சொன்னதும் ஸ்டீவ் இர்வின்தான் ஞாபகம் வர்றார். அவரை மாதிரி நானும் சாகசம் செய்யணும்'' என்ற அருண், தும்மல் போன்ற சத்தத்தைக் கேட்டு, தலையை உயர்த்திப் பார்த்தான்.

மந்திரக் கம்பளம் பறந்துவந்து முதலைகளுக்கு அருகே இறங்கியிருப்பதை அப்போதுதான் கவனித்தான். ஒரு முதலையின் காலடியில் அவர்கள் இருந்தார்கள்.

''இப்பவே சாகசம் செய்ய வாய்ப்பு வந்துடுச்சு அருண். ரெடியா?'' என்று சிரித்தார் டீச்சர்.

''எவ்வளவு பெருசு! ஒருவேளை நாம குட்டியா மாறினதால இப்படித் தெரியுதா?'' என்று கேட்டாள் கயல்.

''இல்லை கயல். நிஜமாகவே, பெரிய முதலைக்குப் பக்கத்தில்தான் நிற்கிறோம். ஊர்வன வகையில், நன்கு வளர்ச்சி பெற்றது முதலைகள்தான். 'ஊர்வன இனத்தின் ராஜா’ என்று சொல்லலாம். இதன் சராசரியான நீளமே 5 அடி. சில முதலைகள் 15 அடி நீளமும் 1,200 கிலோ எடையும் இருக்கும். அதாவது, முதலைகள் எழுந்து நின்றால், நம்மைவிட உயரமாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

''முதலைகளில் எத்தனை வகைகள் இருக்கு டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

''பொதுவாக, நன்னீர் முதலை மற்றும் உப்பு நீர் முதலை என இரண்டு பிரிவாகப் பிரிப்பாங்க. இதில் பல வகை இருக்கு. ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற கண்டங்கள் முழுவதும் பரவி இருக்கு. நல்ல குளம் மற்றும் ஆறுகளில் இருப்பவை, நன்னீர் முதலைகள். உவர்ப்பான ஏரிகள், நிலப் பகுதிகளில் வசிப்பவை, உப்பு நீர் முதலைகள். நன்னீர் முதலைகளைவிட, உப்பு நீர் முதலைகள் பெரியதாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இது, எத்தனை வருஷம் உயிர் வாழும்?'' என்றாள் ஷாலினி ஆர்வத்துடன்.

''முதலைகளின் சராசரி ஆயுள் 70 வருடங்கள். சில முதலைகள் 100 வருடங்கள்கூட வாழும். ஆஸ்திரேலிய உயிரியல் பூங்காவில் ஒரு முதலை 130 வருடங்கள் வாழ்ந்திருக்கு. மீன்கள் மற்றும் தண்ணீர் குடிக்க வரும் உயிரினங்களை வேட்டையாடிச் சாப்பிடும்.

காட்டுப் பகுதியின் ஆற்றங்கரையில் வாழும் முதலைகள், சில சமயம் காட்டு எருதுகளையும் வேட்டையாடி விழுங்கும். அதே சமயம், உணவு இல்லாமலே மாதக்கணக்கில் இருக்கவும் செய்யும். முதலைகளின் ஜீரண சக்தி அபாரமானது. எலும்பு, கற்களையும்கூட இதன் ஜீரண சுரப்பியில் சுரக்கும் அமிலம் கரைச்சிடும்'' என்றார் டீச்சர்.

கம்பளம், அவர்களை ஒவ்வொரு பகுதியாக அழைத்துச் சென்றது. ஊசி போன்ற நீண்ட மூக்கு முதலை, மூக்கு எது, வாய் எது? என்றே தெரியாத உடல் பருத்த முதலை, சாம்பல் நிற முதலை என ஒவ்வொன்றையும் மிக அருகில் பார்த்தார்கள்.

''பற்களைப் பார்த்தால்தான் பகீர்னு இருக்கு. அது மட்டும் இல்லைனா, தூக்கிவெச்சுக் கொஞ்சலாம்'' என்றாள் கயல்.

''பொதுவாக, முதலைகளுக்கு 68 பற்கள் இருக்கும். வலுவான தாடையும் பற்களும்தான் இதன் சிறப்பு. 75 வயசு வரைக்கும் வாழும் ஒரு முதலைக்கு, இந்தப் பற்கள் பல முறை விழுந்து வளரும். சில பறவைகள்தான் முதலையின் பல் டாக்டர்கள். பற்களில் சிக்கி இருக்கும் இறைச்சித் துணுக்குகளைக் கொத்தி எடுத்து சுத்தம் செய்யும். அந்தத் துணுக்குகள்தான் பறவைகளுக்கு டாக்டர் ஃபீஸ்'' என்றார் டீச்சர்.

''பெரிய முதலைப் பண்ணைக்குப் போகலாம்னு சொன்னீங்களே...'' என்று ஞாபகப்படுத்தினாள் ஷாலினி.

''போகலாமே உலகின் பெரிய முதலைப் பண்ணை, தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் இருக்கும் சமுத்ப்ரகான் முதலைப் பண்ணை (Samutprakarn Crocodile Farm). இங்கே, கிட்டத்தட்ட ஒரு லட்சம் முதலைகள் இருக்கு. டால்ஃபின் ஷோ மாதிரி, முதலையை வெச்சு இங்கே நடத்தும் ஷோ, ரொம்ப ஃபேமஸ். முதலை வாய்க்குள் தலையை நுழைச்சு, அதிரவைப்பாங்க'' என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

மந்திரக் கம்பளம், அவர்களை அந்த முதலைப் பண்ணைக்கு அழைத்து வந்தது. அங்கே அந்தக் கண்காட்சி நடந்துகொண்டிருந்தது. கன்றுக்குட்டிபோல முதலைகளைக் கையாண்டார்கள்.

''இங்கே இருக்கிற 'யாய்’ (Yai) என்ற முதலை, கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிச்சிருக்கு.  20 அடி நீளமும் 1,118 கிலோ எடையும் உள்ள இந்த முதலை, 1972-ல் பிறந்தது'' என்றார் டீச்சர்.

அந்த முதலையையும் பார்த்துவிட்டு மந்திரக் கம்பளத்தில் கிளம்பினார்கள்.

''பூங்காவிலேயே பார்க்கிறோமே. இயற்கைச் சூழலோடு பார்த்தால் இன்னும் த்ரில்லா இருக்கும்'' என்றாள் கயல்.

''அப்படினா, மேற்கு ஆப்பிரிக்கப் பகுதிக்குப் போவோமா? 'கருமுதலை’ என்ற ட்வார்ஃப் முதலை (Dwarf crocodile), நைல் நதி முதலைகளைப் பார்த்துட்டு வருவோம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களை ஒரு காட்டுப் பகுதியின் ஆற்றங்கரையில் இறக்கியது. கறுப்பு நிற முதலை ஒன்று, அந்த ஆற்றங்கரையில் ஒரு குழிக்குள் இருந்து வெளியேறியது. அவர்கள், குழிக்குள் எட்டிப் பார்த்தார்கள். இலைகள், புற்களுக்கு நடுவே முட்டைகள் இருந்தன.

''இந்தக் கருமுதலைகள் பருமன் குறைந்தவை. இது, அதிகமாக இரவில்தான் வேட்டையாடும். பகலில் மண் குழிக்குள் இருக்கும் அல்லது மரத்தின் வேர்களுக்குள்ளே பதுங்கி இருக்கும்.

பெண் முதலைகள், 10 முதல் 20 முட்டைகள் இடும். இந்த முட்டைகளில் இருந்து குட்டிகள் வெளியே வர, 85 முதல் 105 நாட்கள் வரை ஆகும். பறவைகள், சில விலங்குகளிடம் இந்த முதலைக் குட்டிகள் கிடைத்தால் அவ்வளவுதான். முட்டைகளை அடைகாத்து, வெளியே வந்த குட்டிகள் ஓரளவு வளரும் வரை, தாய் முதலை கவனமாகப் பாதுகாக்கும்'' என்றார் டீச்சர்.

''அதோ, முதலைக் குட்டிகள்!'' என்றான் கதிர். அவன் சுட்டிக்காட்டிய இடத்தில் தாய் முதலையுடன் குடுகுடு என ஓடிய முதலைக் குட்டிகள் தண்ணீரில் பாய்ந்தன.

''அடுத்து, நைல் முதலையைப் பார்ப்போம்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களை இன்னோர் இடத்துக்கு அழைத்துவந்தது. முதலில் பார்த்த கருமுதலைக்கு மாறாக இருந்தது நைல் முதலையின் உருவம்.

''உப்புநீர் முதலைகளில் நைல் முதலை மிகப் பெரியது. 16 அடி நீளமும் 1,000  கிலோ எடை வரையும் இருக்கும்'' என்றார் டீச்சர்.

கியூபா முதலை, அமெரிக்க முதலை... என மேலும் சில முதலை வகைகளைப் பார்த்துவிட்டு, பழையபடி சென்னை முதலைப் பண்ணை வாசலுக்கு வந்தபோது, பார்வையாளர்கள் நேரம் முடிந்து, சிலர் வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.

''அடுத்த முறை இந்தப் பண்ணைக்கு வர்றப்ப, முதலைகள் நம்மை அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு ஹலோ சொன்னாலும் சொல்லும்'' என்றான் அருண்.