ஆயிஜா இரா.நடராசன் பாரதிராஜா
அந்தச் சிறுவனின் பெயர் லியாண்டர். கொல்கத்தாவில் வசித்த அவனது குடும்பம் விளையாட்டில் புகழ்பெற்றது. லியாண்டரின் அப்பா, விஸி பயஸ் இந்திய ஹாக்கி அணியில் விளையாடிவந்தார். அம்மா, கூடைப்பந்து வீராங்கனை. வீட்டில், எப்போதும் விளையாட்டுப் பயிற்சியும் விளையாட்டைப் பற்றிய பேச்சும்தான்.

லியாண்டர் பிறப்பதற்கு ஒரு வருடம் முன், 1972-ல் மியூனிச் ஒலிம்பிக் போட்டிக்கு சென்ற இந்திய ஹாக்கி அணி, வெண்கலப் பதக்கம் வென்றது. எனவே, லியாண்டரின் பெற்றோர் தமது மகனையும் ஹாக்கி விளையாட்டு வீரனாக்க விரும்பினர். ஆனால், லியாண்டர் நான்கு வயதில் நண்பர்களுடன் முதலில் விளையாடியது டென்னிஸ்.
இந்திய கூடைப்பந்து மகளிர் அணியின் கேப்டனாக, ஆசிய கூடைப்பந்துப் போட்டியில் கலந்துகொண்ட அம்மா ஜெனிபர் பயஸ், எங்கே விளையாடச் சென்றாலும் லியாண்டரும் செல்வான். ஒருமுறை மும்பை ஸ்டேடியத்தில் அம்மா கூடைப்பந்து விளையாடும்போது, லியாண்டர் காணாமல்போனான். காவல் துறை தீவிரமாகத் தேடியபோது, அருகே இருந்த நேரு விளையாட்டு அரங்கத்தின் டென்னிஸ் மைதானத்தில், பந்துகளைப் பொறுக்கிப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது, அவனது வயது 6.
பள்ளியிலிருந்து பெற்றோரைப் பார்க்கவந்த விளையாட்டு ஆசிரியர்கள், அம்மாவையும் அப்பாவையும் சம்மதிக்கவைத்து, லியாண்டரை டென்னிஸ் பயிற்சியில் சேர்த்தார்கள். அப்பாவும் அம்மாவும் விளையாட்டுப் பயிற்சிகளுக்காக காலை 4 மணிக்கே மைதானத்துக்குக் கிளம்புவது வழக்கம். அப்படி ஒருநாள், அலாரம் அடித்து அவர்கள் எழுந்தபோது, ஜன்னல் வழியே பார்த்த காட்சி... சுவரில் பந்தை அடித்துத் தீவிர டென்னிஸ் பயிற்சியில் இருந்தான் லியாண்டர். நள்ளிரவில் இருந்து பயிற்சியில் இருந்திருக்கிறான், அந்த 8 வயது சுட்டி.

13 வயதுக்கு உட்பட்டோர் டென்னிஸ் போட்டிகளில் மேற்குவங்க மாநில அளவில் முதல் இடம் பிடித்தபோது, அவனது வயது 10. லியாண்டர், இந்தியா முழுவதும் சென்று டென்னிஸ் போட்டிகளில் கலந்துகொண்டதால், அவனுக்கு துணையாக செல்ல அப்பா முடிவுசெய்தார். ஹாக்கி வீரரான அப்பாவை, தனது டென்னிஸ் விளையாட்டுத் திறமையால் வென்றான் லியாண்டர்.
சென்னை அமிர்தராஜ் டென்னிஸ் அகாடமியில் சேர்ந்த லியாண்டரின் திறமையைப் பார்த்து, டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன், டேவ் ஓ மேரா லியாண்டருக்குப் பயிற்சியாளர் ஆனார். 16 வயதில் விம்பிள்டன் ஜுனியர் டென்னிஸ் விளையாட, லண்டன் செல்லத் தேர்வானபோது, ''கலந்துகொள்வதே பெரிய கனவு'' என்றார் அப்பா. ''முதல் கட்டத்திலாவது நீ வெற்றி பெற வேண்டும்'' என்றார் அம்மா.
இறுதி வரை போராடி, 17 வீரர்களை அடுத்தடுத்து தோற்கடித்து, 1990-ம் வருடத்தின் விம்பிள்டன் ஜுனியர் சாம்பியன் பட்டம் வென்றார் லியாண்டர். உலக ஜுனியர் நம்பர் 1 வீரனாக இந்தியா திரும்பினார். கடும் பயிற்சி எடுத்து, உலக அளவில் 200 போட்டிகளில் வென்றார். 'கிராண்ட்ஸ்லாம் இரட்டையர் போட்டிகளில் அதிக முறை வென்ற வீரர்’ என உலக சாதனை படைத்த லியாண்டர் பயஸ் ஒரு சுட்டி நாயகனே!
