மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

கே.யுவராஷன் பிள்ளை

மாயா டீச்சர் வீட்டுக்கு சுட்டிகள் வந்தபோது, அவர் டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தார். ஒரு கிண்ணம் நிறைய நெல்லிக்காய்கள் இருந்தன.

''வாங்க பசங்களா, நெல்லிக்காய் சாப்பிடுறீங்களா?'' என்று கேட்டார்.

''ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை என வெரைட்டியா  சாப்பிடலாம்னு வந்தா, நெல்லிக்காயைக் கொடுக்கறீங்களே'' என்றாள் கயல்.

''நெல்லிக்காய் என்ன சாதாரணமா? 'மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லியும் முன்னாள் கசக்கும்; பின்னாள் இனிக்கும்’னு பழமொழி இருக்கு. தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டால், டாக்டர்கிட்டேயே போக வேணாம்னு எங்க தாத்தா சொல்வார்'' என்றான் அருண்.

''நம்மில் பலர் மற்ற பழங்களைப் போல நெல்லிக்காயைச் சாப்பிடுறது இல்லை. மற்ற பழங்களில் இருக்கும் சத்துக்கள் நெல்லிக்காயிலும் இருக்கு'' என்றார் டீச்சர்.

''அப்படி என்ன சத்துக்கள் இருக்கு?'' என்று கேட்டான் கதிர்.

''அதை, ஒரு நெல்லிக்காயின் உள்ளேயே போய்ப் பார்க்கலாம். மந்திரக் கம்பளத்தை எடுத்துட்டு வாங்க'' என்றார் டீச்சர்.

ஷாலினி, மந்திரக் கம்பளத்தை எடுத்துவந்து தரையில் விரித்தாள். நெல்லிக்காயை அதன் மீது வைத்ததும், மெகா உருண்டையாக மாறியது. வாசனை, கமகம என மூக்கைத் துளைத்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''நெல்லிக்காயின் அறிவியல் பெயர், பிளான்தஸ் எம்ப்லிகா (Phyllanthus emblica). இது, பூக்கும் தாவர வகையில் பிளான்தஸியா (Phyllanthaceae)   என்ற பெரிய குடும்பத்தைச் சேர்ந்தது. கூஸ்பெரி (Gooseberry) என்ற பெயரும் இருக்கு. இளம் மஞ்சள் அல்லது வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும். இதில், அருநெல்லி, கருநெல்லி என இரண்டு பிரிவுகள் இருக்கு. வீட்டுத் தோட்டங்களில் காய்ப்பது சிறிய வகை அருநெல்லி. பெரிய தோப்புகளில் காய்க்கும் நெல்லியை, கருநெல்லி அல்லது காட்டு நெல்லி என்பார்கள். மலைகளில் நெல்லிக்காய் நன்றாக விளையும். வடக்கே, இமாலயப் பகுதிகளிலும் தென்னிந்தியாவில், தமிழகத்திலும் அதிகம் விளைகிறது. சதைப் பற்றோடு ஆறு பிரிவுகள் சேர்ந்த உருண்டையாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

அவர்கள், கைகளைக் கோத்தபடி நெல்லிக்காயை நெருங்க, 'குபுக்’கென உள்ளே இழுத்துக்கொண்டது.

''30 ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் சத்து, ஒரு நெல்லியில் இருப்பதாகப் படிச்சிருக்கேன். அது உண்மையா டீச்சர்?'' என்று கேட்டாள் கயல்.

''ஆமாம் கயல். குறிப்பாக, வைட்டமின் சி சத்து இதில் அதிகம். அதாவது, 100 கிராம் ஆரஞ்சுப் பழத்தில் இருக்கும் வைட்டமின் சி சத்து, 53.2 மில்லிகிராம். 100 கிராம் ஆப்பிளில் இருக்கும் வைட்டமின் சி, வெறும் 4.6 மில்லிகிராம். ஆனால், நெல்லிக்காயில் 720 மில்லிகிராம் இருக்கு. தவிர, பாஸ்பரஸ், அயர்ன், கால்சியம் எனப் பல்வேறு சத்துக்கள் இந்தச் சிறிய நெல்லிக்காயில் இருக்கு. இன்னொரு விஷயம், மற்ற பழங்கள் காய்ந்துபோனால்,  சத்து நீங்கிடும். பழச்சாறு செய்தாலும் சத்து குறையும். ஆனால், நெல்லிக்காய் காய்ந்தாலும், சாறாக மாற்றினாலும் சத்து குறையாது'' என்றார் டீச்சர்.

அவர்கள், அந்த நெல்லிக்காயின் சதைப் பற்றைக் கடந்து, விதையின் அருகே வந்தார்கள். ''நெல்லிக்காயில் ஒற்றை விதைதான் இருக்குமா டீச்சர்?'' என்று கேட்டான் அருண்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆமாம். இந்த விதை, மூன்று கோணங்களாக இருக்கும். நெல்லியை விதை மற்றும் ஒட்டு ரகம் என இரண்டு வகைகளாகப் பயிரிடுவாங்க'' என்றார் டீச்சர்.

திடீர் என இருள் சூழ்ந்தது போல இருந்தது. ''என்ன ஆச்சு?'' என்று கேட்டாள் ஷாலினி.

''இப்போது பூமிக்குக் கீழே ஒரு நெல்லி விதையில் இருக்கிறோம். ஒட்டு ரகம் மூலம் வளரும் ஒரு நெல்லி மரம், முழுமையாக வளர்ந்து காய்கள் உருவாக, 3 வருடங்கள் ஆகும். விதை ரக மரங்கள், 6 வருடங்களில் முழுமை அடையும். ஒரு நெல்லி மரம், சராசரியாக 5 மீட்டர் உயரம் வளரும்'' என்றார் டீச்சர்.

விதை, கிளை, தண்டு, வேர்கள் வழியே புறப்பட்டு பூமிக்கு வெளியே வந்தார்கள். அது ஒரு நெல்லித் தோப்பு. நெல்லிக்காய்கள் தரையில் சிதறிக்கிடந்தன.

''நெல்லிக்காய்களுக்கு சீஸன் இருக்கா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''ஆமாம். கோடைக் காலத்தில்தான் நெல்லிக்காய்கள் அதிகம் காய்க்கும். ஆண் பூக்கள், பெண் பூக்கள் என இரண்டு வகையான பூக்கள் பூக்கும். இதில், எவை ஆண் பூக்கள், எவை பெண் பூக்கள் என்பதைக் கண்டு பிடிக்க ஒரு வழி இருக்கு. வாங்க பார்க்கலாம்'' என்றார் டீச்சர்.

கம்பளம், அவர்களை மரத்தின் மேலே அழைத்துச்சென்றது. ஒரு கிளையில், நீளமான இலைகளை ஒட்டிய காம்புப் பகுதிகளில்... மேலும் கீழும் கொத்துக்கொத்தாக வெள்ளை நிறப் பூக்கள் பூத்திருந்தன. ஒவ்வொரு பூவும் ஆறு இதழ்களுடன் இருந்தன.

''இதில், இலைகளுக்கு மேலே இருப்பவை எல்லாம் ஆண் பூக்கள். இலைகளின் கீழ்ப் பகுதியில் இருப்பவை பெண் பூக்கள். எப்பவுமே பெண் பூக்களைவிட ஆண் பூக்கள் அதிகமாக இருக்கும்'' என்றார் டீச்சர்.

அருண், ஒரு நெல்லிக்காயை எடுத்துக் கடித்தான். புளிப்புச் சுவை, பற்களை கூசச்செய்தது. ''எல்லா நெல்லிக்காய்களுமே இப்படித்தான் புளிக்குமா டீச்சர்?'' என்று கேட்டான்.

''புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு எல்லாம் சேர்ந்த கலவைதான் நெல்லிக்காயின் சுவை. இதில் சுரக்கும் அமிலங்களின் தன்மையைப் பொறுத்து, சுவையின் அளவு மாறும். சில நெல்லி வகைகள், அதிக இனிப்புச் சுவையோடு இருக்கும். கோடைக் காலத்தில் நெல்லிக்காயைச் சாப்பிடுவது ரொம்ப நல்லது. உடல் வெப்பத்தைக் குறைக்கும். தாகத்தைத் தணிக்கும். மூளைக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும். ஞாபகசக்தியை அதிகமாக்கும். ஆயுளை அதிகரிக்கும் திறனும் நெல்லிக்காய்க்கு இருக்கு. அதனால்தான், அதியமான், ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்தார்'' என்றார் டீச்சர்.

எல்லோரும் சில நெல்லிக்காய்களைப் பறித்துக்கொண்டார்கள். மந்திரக் கம்பளம் அவர்களைச் சுமந்துகொண்டு பறந்தது.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !

''இதில், காய் மட்டும்தான் பயன்படுமா?'' என்று கேட்டாள் கயல்.

''இலை, பூ, வேர் என எல்லாவற்றையுமே மருத்துவத்தில் பயன்படுத்துறாங்க. இந்த இலையின் சாற்றைப் புண்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தினால், காயம் விரைவாக ஆறும். இலைச் சாற்றோடு, வெங்காயத்தைச் சேர்த்துப் பயன்படுத்தினால், வயிற்றுப் போக்கு சரியாகும். இதன் மலர்களுக்கு குளிர்ச்சித் தன்மை அதிகம் இருப்பதால், தைலம் போன்றவற்றில் சேர்ப்பாங்க. நெல்லிக்காயில் தயாரிக்கும் தலைச் சாயம் தலைமுடிக்கு எந்தவித பக்கவிளைவையும் ஏற்படுத்தாமல், முடியைக் கருமையாக்கும். நெல்லிக்காய் வற்றலைத் தூளாக்கி, அதோடு சர்க்கரையைச் சேர்த்து தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டால், பித்தம் நீங்கும். ஜீரணச் சுரப்பி நல்லா வேலைசெய்யும். நரம்புகளுக்கும் உறுதி கிடைக்கும்'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களை மாயா டீச்சர் வீட்டுக்கு அழைத்துவந்து டைனிங் ஹாலில் இறக்கியது.

''ஆளைப் பார்த்து சாதாரணமா எடை போடக் கூடாதுனு சொல்லுவாங்க. இந்தச் சின்ன நெல்லிக்காயில் இத்தனை விஷயங்கள் இருப்பது இதுவரை தெரியாமலே இருந்துட்டோம். இனி, பழங்கள் வாங்கப்போனா, நெல்லிக்காயும் சேர்த்து வாங்கிவரச் சொல்லணும்'' என்றாள் ஷாலினி.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம் !