மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சுட்டி நாயகன் - பராக் ஒபாமா

ஆயிஜா இரா.நடராசன் படங்கள் : பாரதிராஜா

ஹவாய் தீவில் இருந்த அந்த ஊரின் பெயர், ஹோனலூலூ (Honolulu). அங்கேதான் பராக் என்ற அந்தச் சிறுவன் பிறந்தான். அவன் பிறந்த ஆறே மாதத்தில், அம்மாவை விட்டு அப்பா பிரிந்தார். அம்மா ஸ்டான்லி ஆனி, வேலை முடிந்து மாலையில் சோர்வுடன் திரும்புவார். மூன்று வயதே ஆன பராக், ஊரில் உள்ள குழந்தைகளைத் திரட்டி, மேஜையை மேடையாகப் போட்டு, பேச்சாளர் போல பேசிக்கொண்டிருப்பான். அப்போது அவனுக்கு, தன் தந்தை இல்லையே என்ற வருத்தம் இருந்தது.

விரைவில், இந்தோனேஷியாவுக்கு இடம் மாறினான். அங்கே, வளர்ப்புத் தந்தை மூலம் செயின்ட் ஃப்ரான்சிஸ் ஆஃப் அஸிஸி எனும் பள்ளியில் சேர்க்கப்பட்டான். பள்ளியில் எல்லோருமே வெள்ளைக்கார மற்றும் ஆசிய சிறுவர்கள். பராக் மட்டுமே நீக்ரோ மாணவன். பலரும் கேலியாகப் பேசினாலும் பராக் கவலைப்பட்டது இல்லை.

சுட்டி நாயகன் - பராக் ஒபாமா

ஒருநாள், கடவுள் வணக்கக் கூட்டத்தில் செய்திகள் வாசிக்க வேண்டிய பெரிய வகுப்பு மாணவன் வரவில்லை. மேடையில் செய்தி வாசிக்க வேறு ஆள் தேடினார்கள். ஆசிரியர்களே தயங்கியபோது, ''இதோ, நான் இருக்கிறேன்'' என்று மேடைக்கு வந்தான் பராக். தனது கணீர் குரலில் அற்புதமாக செய்தி வாசித்தான். அப்போது அவனுக்கு வயது, 6.

சுட்டி நாயகன் - பராக் ஒபாமா

பிறகு, பெசுகி பப்ளிக் ஸ்கூல் (Besuki Public School) என்ற பள்ளிக்கு மாற்றப்பட்டான். அங்கே, அவனது படிப்பின் மேதைமை பளிச்சிட்டது. சுயமாகவே விடைகளைப் படைத்து, வகுப்பில் முதல் இடம் பிடித்தான். ஆனாலும், கறுப்பர் இன மாணவனான பராக்கை, சில ஆசிரியர்கள் அவமதித்தார்கள். அவனோடு உணவு அருந்தவும் சிலர் மறுத்தனர். பராக் அதற்கெல்லாம் துவண்டுபோகவில்லை. பள்ளி அளவில் நடந்த பேச்சுப் போட்டியில் பங்கேற்றான். இனப் பாகுபாடு காட்டியவர்களைத் தனது பேச்சாற்றலால் வெட்கித் தலை குனியவைத்தான். அப்போது அவனுக்கு வயது, எட்டு.

10 வயதில் தனது தாத்தா, பாட்டியோடு மீண்டும் ஹவாய் தீவுக்கே திரும்பினான். கல்வியில் சிறந்த மாணவனான அவன், புனாஹோ பள்ளி (Punahou School)எனும் கல்லூரி தயாரிப்புப் பள்ளியில் சேர்ந்தான். பேச்சாற்றல் மூலம் பல பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றான். கறுப்பர் இன அடிமை முறைக்கு எதிரான குழுவில் இடம்பெற்று, சமூக விடுதலைப் போராளியாக அறியப்பட்டபோது, பராக்கின் வயது 12.

பள்ளி இறுதி ஆண்டில் பராக் பெற்ற மதிப்பெண்களும் மதிப்புகளும்  சர்வதேசக் கல்வி உதவித்தொகையைப் பெற்றுத்தந்தது. உயர் கல்விக்காக அமெரிக்கப் பிரஜையாக அந்த நாட்டுக்குள் காலடிவைத்தான்.

ஒப்பற்ற  பேச்சாற்றல், சிறந்த கல்வி, நுணுக்கமான அரசியல் மற்றும் சமூகப் பார்வை ஆகியவற்றில் சிறந்து விளங்கிய அவர்தான், அமெரிக்காவின் முதல் கறுப்பின ஜனாதிபதி, பராக் ஒபாமா. அவரே, அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றார்.