கே.யுவராஜன், படங்கள்: பிள்ளை
''இதோ, இந்தப் பக்கமா ஓடிச்சு.''
''இல்லே, கட்டிலுக்குக் கீழே போச்சு. கதிர், அந்த எக்ஸாம் அட்டையை எடு.''
''அடிக்கப்போறியா அருண். வேணாம்டா பாவம்.''
கமகம என மணம் வீசும் சுண்டலை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அறைக்குள் வந்த மாயா டீச்சர், அங்கே நடக்கும் களேபரத்தைப் பார்த்துத் திகைத்து, ''என்ன ஆச்சு?'' என்று கேட்டார்.
''டீச்சர், உங்க ரூம்ல ஒரு எலி இருக்கு. என் கால் மேலே ஏறிப்போச்சு'' என்ற கயலின் உடல், பயத்தில் மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது.
''பக்கத்துல இருக்கிற பழைய வீட்டை இடிச்சுக் கட்ட ஆரம்பிச்சதுல இருந்து, நிறைய எலி நண்பர்கள் வந்துபோறாங்க. அவங்களுக்கும் சேர்த்துதான் இந்தச் சுண்டலை செய்திருக்கேன்'' என்று சிரித்தார் டீச்சர்.

அப்போது, கட்டிலுக்குக் கீழே டார்ச் அடித்துப் பார்த்துக்கொண்டிருந்த அருண், 'சடார்’ என எழுந்துகொண்டான். அவனைவிட வேகமாக வெளியேவந்த அந்தக் குட்டி உருவம், 'கீச்... கீச்’ என்று கத்தியவாறு, ஜன்னலை ஒட்டிய மேஜை மீது ஏறி, வெளியே ஓடிவிட்டது.
''ஒரு மூஞ்சூறுக்கு இவ்வளவு அமர்க்களமா? அது, உங்களைப் பார்த்து ஓடினா, நீங்க அதைப் பார்த்துப் பதர்றீங்க. பயத்தைவிட்டுட்டு சுண்டல் சாப்பிடுங்க சூரப்புலிகளா'' என்று மீண்டும் சிரித்தார் டீச்சர்.
சுண்டலை கையில் அள்ளி, கொறிக்க ஆரம்பித்தார்கள். ''ஓடிப்போன எலிக்கு மந்திரக் கம்பளத்தில் போய், சுண்டல் கொடுத்துட்டு வரலாமா டீச்சர்?'' என்று கேட்டாள் ஷாலினி.
''செய்வோமே... அப்படியே சில எலி வகைகளையும் பார்த்துட்டு வரலாம். ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா போன்ற கண்டங்கள்தான் உலகில் முதலில் தோன்றியவை. இதைப் பழைய உலகம் என்பார்கள். அப்போதே எலிகள் தோன்றிவிட்டன. பாலூட்டிகளில் கொரிணி பிரிவில், முராய்டே (Muroidea) என்ற பெரிய குடும்பத்தில் 1,300 வகைகள் இருக்கு. அதில் வருபவைதான் எலிகள்'' என்றார் மாயா டீச்சர்.
அவர்கள் மந்திரக் கம்பளத்தில் அமர்ந்ததும், புகை போல மறைந்தது. 'ஜஸ்ட் மிஸ். தப்பிச்சோம்டா சாமி’ என்பது போல பக்கத்தில் இருந்த கட்டடத்தின் ஒரு மூலையில் ஒண்டிக்கொண்டிருந்தது மூஞ்சூறு. குட்டி உருவங்களாக அதன் எதிரே இறங்கினார்கள்.

''நாம பார்க்கும் இந்த மூஞ்சூறு, வீட்டு எலி வகையைச் சேர்ந்தது. தலைப் பகுதி கூராகவும், வால் குட்டையாகவும் இருக்கும். தனக்கு ஆபத்து வர்ற மாதிரித் தெரிந்தால், 'கீச் கீச்’ எனக் கத்திக்கிட்டே ஓடும். பெண் குரலில் கூச்சல் போடுற மாதிரி இருக்கிறதால, ஆங்கிலத்தில் இதை ஷ்ரூ (Shrew) என்று சொல்வாங்க. அதாவது, சண்டைக்காரி. உண்மையில், மற்ற எலிகளைக் காட்டிலும் நல்ல எலி. வீட்டில் ஆங்காங்கே சிந்தி இருக்கிற உணவுத் துகள்களைத்தான் சாப்பிடும்'' என்றார்.
''ஒரு மாதிரி நாற்றம் அடிக்குதே'' என்றாள் கயல்.
''ஆமாம். இதன் உடம்பில் இருந்து எப்பவும் அந்த மெல்லிய நாற்றம் வீசும். மேற்கிந்திய மூஞ்சூறு, மர மூஞ்சூறு என இதிலும் வகைகள் இருக்கு'' என்றார்.
ஷாலினி தனது கையில் இருந்த சுண்டல் கிண்ணத்தில் இருந்து இரண்டை எடுத்து வீசினாள். மூஞ்சூறு திகைத்துப் பார்த்து, பிறகு கவ்விக்கொண்டது.
''மூஞ்சூறும் சுண்டெலியும் ஒன்றுதானா டீச்சர்?'' என்று கேட்டான் கதிர்.
''இல்லை கதிர். சுண்டெலிகள், தோட்டப் பகுதியில் வளை தோண்டி வாழ்பவை. சுண்டெலிக்கு வால் நீளமாக இருக்கும். சராசரியாக, 20 சென்டிமீட்டர். உடம்பில் வால் மட்டுமே 10 சென்டிமீட்டர் இருக்கும். காதுகள் கொஞ்சம் வட்ட வடிவில் இருக்கும். பெரும்பாலும் தோட்டப் பகுதிகளில் வசிக்கும். பருந்து, கழுகு போன்ற பறவைகளிடம் இருந்து காத்துக்கொள்ள, வீடுகளில் அடைக்கலமாகும். ஆங்கிலத்தில் மௌஸ் எனச் சொல்வாங்க'' என்றார் டீச்சர்.
''வால்ட் டிஸ்னியின் ஹீரோ'' என்றாள் கயல்.
அவர்கள் இப்போது, ஒரு தோட்டத்தில் இருந்தார்கள். குட்டி உருவங்களாக அங்கிருந்த எலி வளைக்குள் எட்டிப் பார்க்க, ஒரு சுண்டெலி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தது.
''இந்தச் சுண்டெலிகள் சராசரியா 30 சென்டிமீட்டர் நீளத்துக்கு வலையைத் தோண்டி, அதில் வசிக்கும். தோட்ட எலி வகைகளில் இன்னொரு எலி, வெள்ளெலி. அதன் வளை இன்னும் பெருசா இருக்கும். உடலின் அடிப்பாகம், வெளுத்தும் மேல் பாகம், பழுப்பு நிறமாகவும் இருக்கும் இதை, சிலர் உணவாகச் சாப்பிடுவாங்க'' என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், அவர்களை இன்னொரு பகுதிக்கு அழைத்துச்சென்றது. ''புதர்கள், மரத்தின் அடிப்பகுதி, வேலியோரம் எனப் பல இடங்களில் நீளமான வளையைத் தோண்டி வசிப்பவை வெள்ளெலி. சுரங்கப்பாதை மாதிரி ஒரு வளைக்கும் இன்னொரு வளைக்கும் இணைப்புக் கொடுக்கும். அதில் உணவையும் சேமித்துவைக்கும்'' என்றார் டீச்சர்.
அப்படியான ஒரு வளைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தார்கள். திடீரென ஓர் இடத்தில் பாதை அடைக்கப்பட்டது போல மண் மூடி இருந்தது. டீச்சர், ஒரு குச்சியால் குத்தியதும் மண் உதிர்ந்து வழி ஏற்பட்டது. அங்கும் இங்குமாகத் திரிந்து கொண்டிருந்த எலிகளைப் பார்த்தார்கள்.
''இந்த எலிகள், இரவில்தான் இரையைத் தேடிப்போகும். பகலில் வளைக்குள் வந்துட்டு, இப்படி மண்ணால் கதவு மாதிரி மூடிவெச்சுடும். இப்போ நாம வந்த மாதிரி, பாம்பு போன்ற விரோதிகளும் மண்ணைத் தள்ளிட்டு வரும். அப்போ, பஸ்ஸில் இருக்கிற எமர்ஜென்ஸி கண்ணாடிக் கதவு மாதிரி, வளையின் நடுவில், பூமியின் மேல் நோக்கி மண்ணைத் தோண்டி, இலகுவாக வெச்சிருக்கும். மெயின் வாசல் வழியா ஆபத்து வர்ற மாதிரி இருந்தால், எமர்ஜென்ஸி வழியை உடைச்சுக்கிட்டு ஓடிடும்'' என்றார் டீச்சர்.
ஷாலினி அங்கும் சுண்டலைப் போட்டாள். ''பார்த்தீங்களா எலிகளே, உங்க வீட்டுக்கு நாங்க விருந்தாளியா வந்துட்டு, உங்களுக்கு விருந்து கொடுக்கிறோம்'' என்றாள்.
''ஒரு குட்டி எலியைக்கூட பார்க்க முடியலையே. எல்லாம் ஸ்கூலுக்குப் போயிடுச்சோ'' என்றான் அருண்.
''குட்டிகளைப் பார்க்கணும்னா, வேற வளைக்குப் போகணும்'' என்றார் டீச்சர்.
அந்த இடத்தைவிட்டு வெளியேறி, இன்னொரு இடத்துக்கு வந்தார்கள். ''கூட்டமாக வசிக்கும் எலிகளில்... ஒரு பெண் எலி கருவுற்றதுமே, தன் ஆண் எலியோடு தனியா வந்து வேற இடத்தில் வளையை உருவாக்கும். அங்கே குட்டிகளை ஈனும். மற்ற பெரிய எலிகளால் தனது குட்டிகளுக்கு எந்தத் தொந்தரவும் ஏற்படக் கூடாதுனு தனிச்சு வந்துடும். இதோ பாருங்க...'' என்றார்.
அங்கே ஓர் இடத்தில் மண்ணை லேசாகக் கிளறியதும், வளை தெரிந்தது. உள்ளே நிறையக் குட்டிகள், கண்கள் திறக்காத நிலையில் இருந்தன. ''பெரிய எலிகள் வசிக்கும் வளைகளில் கொஞ்சம் உள்ளே போனதும் மண் அடைக்கப்பட்டிருக்கும். ஆனா, இது மாதிரி குட்டிகள் உள்ள இடத்தில், வளையே தெரியாத மாதிரி ஆரம்பத்திலேயே மண்ணைப் போட்டு அடைச்சுடும். தனது குட்டிகளைப் பாதுகாக்க தாய் எலி செய்யும் தற்காப்பு வேலை இது. கல்லெலி என ஒரு வகை இருக்கு. இந்த எலி, மண்ணுக்குப் பதிலா, சிறு சிறு கற்களால் வளையை மூடிவைக்கும். இது, சுண்டெலியைவிட கொஞ்சம் பெருசா இருக்கும்'' என்றார் டீச்சர்.
''எலிகள், மரத்தில்கூட வசிக்கும்னு என் தாத்தா சொல்லியிருக்காரே...'' என்றான் கதிர்.
''ஆமாம். தென்னை, பனை, ஈச்சை போன்ற மரங்களில் கூடு போல உருவாக்கி வாழும்'' என்றார் டீச்சர்.

அவர்கள், அங்கிருந்த ஒரு பனை மரத்தில் ஏறினார்கள். இலைகள் மற்றும் நார்களால் உருவாக்கப்பட்ட கூட்டில் இருந்த எலியைப் பார்த்தார்கள். ஷாலினி, அங்கேயும் சில சுண்டல்களைப் போட்டாள்.
''எலிகளை விவசாயிகளின் பகைவன் எனச் சொல்வாங்களே...'' என்றாள் கயல்.
''நிஜம்தான். இப்போ பார்த்த எலிகள் எல்லாமே, புன்செய் நிலப் பகுதியில் வசிப்பவை. நெல் போன்ற தானியங்கள் விளையும் நன்செய் நிலங்களில் வசிப்பவை, வயல் எலிகள். பயிர் நல்லா வளரும் சமயத்தில் கடிச்சு சேதம் ஏற்படுத்திடும். கொத்தாக கதிர்களைக் கடிச்சு, வளைக்குக் கொண்டுபோயிடும். விவசாயிகளுக்கு ரொம்பவே தொல்லைகொடுக்கும்'' என்றார் டீச்சர்.
அடுத்து அவர்கள் பார்த்தது, பெருச்சாளி. ''மக்கள் வாழும் இடங்களுக்கு அருகே தோட்டம், வைக்கோல்போர், கற்குவியல், புதர்கள், சாக்கடை போன்ற இடங்களில் வளை உருவாக்கி வசிக்கும். கிழங்குகள், தானியங்கள், மனிதர்கள் வீசும் குப்பைக் கழிவுகளைச் சாப்பிடும்'' என்றார் டீச்சர்.
மந்திரக் கம்பளம் அவர்களை வீட்டுக்கு அழைத்துவந்தது. ''கறுப்பு எலி, முழுமையான வெள்ளை எலி, செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் ஃபேன்ஸி எலிகள் என உலகம் முழுக்க இருக்கு. நாய், பூனையைப் போல எலிகளையும் செல்லமாக வளர்த்தால், மனிதர்களோடு நல்லா ஒட்டிக்கும். அது மட்டுமா? எலிகளின் மரபணுக்கள், மனிதர்களின் மரபணுக்களோடு பல வகையில் ஒத்துப்போகும். அதனால்தான், மருத்துவ ஆய்வகங்களில் அதிகமாக எலிகளைப் பரிசோதனை செய்றாங்க. மனிதர்களின் பல நோய்களுக்கு இன்று மருந்து கிடைக்குதுனா, அதுக்குப் பின்னாடி லட்சக்கணக்கான எலிகளின் உயிர்த் தியாகம் இருக்கு'' என்றார் டீச்சர்.