மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

கே.யுவராஜன் ஓவியம் : பிள்ளை

அன்று விஜயதசமி. கோயிலுக்கு வந்திருந்த மாயா டீச்சரும் சுட்டிகளும், கோயில் குளத்தின் படிக்கட்டுகளில் அமர்ந்து, மீன்களுக்கு பொரி போட்டுக்கொண்டிருந்தார்கள்.  சின்னஞ்சிறு வாயைத் திறந்து சாப்பிடும் மீன்களைப் பார்க்கவே அழகாக இருந்தன.

“ஏன் டீச்சர், நிலத்தில் தாவர உண்ணி, ஊன் உண்ணி என இருக்கிற மாதிரி மீன்களில், சைவ மீன்கள் இருக்கா?” என்று கேட்டான் கதிர்.

“அப்படி எதுவும் கிடையாது கதிர். மீன்கள், நண்டு, இறால், ஆமை என எல்லாமே அசைவ உண்ணிகள்தான். முத்துச் சிப்பிகள்கூட புழு, பூச்சிகளைச் சாப்பிடும். நிலத்தில் இருக்கிற மாதிரி, தாவரத்தை மட்டுமே உண்டு வாழும் சூழ்நிலை நீரில் இல்லை” என்றார் டீச்சர்.

“மீன்களில், திமிங்கிலம் பாலூட்டியாக இருப்பது எப்படி டீச்சர்?” என்று கேட்டாள் கயல்.

“டால்ஃபின், நீர்நாய் போன்றவையும் பாலூட்டிகள்தான். அதைவிட முக்கியமான ஒரு வித்தியாசம் இருக்கு. பொதுவாக, நீர்வாழ்விகளில் இருந்து பரிணாமம் பெற்றவையே நீர்நில வாழ்விகள், நிலவாழ் உயிரினங்கள். திமிங்கிலத்தில் இது ரிவர்ஸாக நடந்திருக்கு. 54 மில்லியன் வருடங்களுக்கு முன்பு திமிங்கிலம், நிலத்தில்தான் இருந்தது. பசு மாதிரி உலவிய விலங்கு. பிறகு, ஆமை மாதிரி நீர்நில வாழ்வியாக இருந்து, 10 மில்லியன் ஆண்டுகளுக்குள்தான் முழுமையான நீர்வாழ்வியாக மாறிச்சு” என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“என்னது... திமிங்கிலம் நிலத்தில் திரிஞ்சிட்டு இருந்துச்சா? அந்தக் காட்சியைப் பார்க்கணுமே” என்ற ஷாலினியின் குரலில் பயங்கர ஆவல்.
“பார்த்துடுவோம்” என்ற டீச்சர், மந்திரக் கம்பளத்தை எடுத்தார். மலரின் இதழ்களைப் போல அது மூடித் திறந்ததும், அவர்கள் வேறு இடத்தில் இருந்தார்கள்.

நீளமான முகம், பசு போன்ற பெருத்த உடல், டைனோசர் போன்ற வால் என விநோதமான உருவம் ஒன்று, அவர்களுக்கு அருகே சென்றுகொண்டிருந்தது.

“வாவ்... இதுதான் நிலத்தில் வாழ்ந்த திமிங்கிலமா?” என்று குஷியில் குதித்தான் அருண்.

“50 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய நில அமைப்பில் இருக்கோம். இந்த இடம்தான் இப்போதைய பாகிஸ்தான். அதாவது, நாடுகள் எதுவும் உருவாகாமல், கண்டங்கள் மட்டுமே இருந்த காலம். 1993-ல் கண்டெடுத்த ஒரு புதைப் படிமம் மூலம் இந்த நிலவாழ் திமிங்கிலம் பற்றி தெரியவந்துச்சு. இத்தாலியில் பைசா நகரம் அருகே இருக்கிற ஒரு மியூஸியத்தில் இந்தத் திமிங்கிலத்தின் எலும்புக்கூடு இருக்கு” என்றார் டீச்சர்.

சில மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, நீர்நில வாழ்வியாக மாறிய திமிங்கிலத்தையும் பார்த்தார்கள்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“இப்படி நிலத்தில் இருந்து போனதாலதான் நிலத்தில் வாழும் பாலூட்டிகளுக்கான பல குணங்கள் இதனிடம் இருக்கா?” என்று கேட்டான் கதிர்.
“ஆமா, மனிதர்கள் மாதிரி இதன் இதயமும் நான்கு அறைகளால் ஆனது. மற்ற மீன்கள் செவுள் வழியே சுவாசிக்கும். திமிங்கிலங்கள், நுரையீரல் மூலம் சுவாசிக்கும். இதன் தலைப் பகுதியில் துளை இருக்கும்.

சில வகைத் திமிங்கிலங்களுக்கு இரண்டு துளைகள் இருக்கும். நீர்ப் பரப்புக்கு மேலே வந்து, துளை வழியே காற்றை ஆழமா சுவாசிச்சிட்டு, திரும்பவும் கடலுக்குள் போய்டும். நாம் எல்லாம் ஒருமுறை காற்றை சுவாசிக்கும்போது, அதில் இருந்து 15 சதவிகித ஆக்ஸிஜனைத்தான் நுரையீரல் எடுத்துக்கும். ஆனால், திமிங்கிலத்தின் நுரையீரல் விசேஷமானது. அது 90 சதவிகித ஆக்ஸிஜனை எடுத்துக்கும்.

அதனால், திமிங்கிலம் ஒருமுறை காற்றை சுவாசிச்சிட்டு, கிட்டத்தட்ட 7,000 அடி ஆழத்துக்குப் போய் நீண்ட நேரம் தங்கினாலும், நுரையீரலில் ஆக்ஸிஜன் இருக்கும். கடலுக்குக் கீழே எவ்வளவு இருட்டில் இருந்தாலும் எதிரொலியைப் பயன்படுத்தி, தனக்கான இரை இருக்கும் இடங்களைக் கண்டுபிடிக்கும்” என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம் ஒரு படகாக மாறி, அவர்களை கடலுக்குள் அழைத்துச்சென்றது. டீச்சர் தொடர்ந்தார்.

“திமிங்கிலங்களில் 75 வகைகள் இருக்கு. கில்லர் திமிங்கிலம், ஸ்பெர்ம் திமிங்கிலம் என சிலவற்றைத் தவிர, பெரும்பாலானவை ரொம்பவே சாது. நீலத் திமிங்கிலம் பற்றி நிறையவே கேள்விப்பட்டிருப்பீங்க. உலகிலேயே பெரிய உயிரினம். 150 டன் எடை, 100 அடி நீளம் இருக்கிற இந்த கடல் ராஜா, ரொம்ப ரொம்பச் சாதுவானது” என்றார்.

“இவ்வளவு வெயிட்டா இருந்தா அப்படி இப்படி அசையக்கூட முடியாதே” என்றாள் கயல்.

“அதான் இல்லை. எல்லாத் திமிங்கிலங்களுமே  வேகமாக நீந்தும். சராசரியாக மணிக்கு 50 கிலோமீட்டர் வேகம். தான் வசிக்கும் பகுதியில் கடுமையான வெப்பம் ஏற்படும் காலத்தில், துருவக் கடல் வரை வலசை போய்வரும். ஸ்பெர்ம் என்ற திமிங்கிலம், பிறந்தது முதல் இறப்பது வரை, தான் வாழும் கடல் பகுதியிலேயே சுத்திட்டு இருக்கும். அப்படிச் சுற்றுவதைக் கணக்கு எடுத்தால், உலகையே சுற்றி வந்த தொலைவு வரும்” என்றார் டீச்சர்.

“திமிங்கிலங்கள் எத்தனை வருஷம் வாழும்?” என்று கேட்டாள் ஷாலினி்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

“சராசரியாக 70 ஆண்டுகள் வாழும். இதன் மூக்குப் பகுதியில் சிறப்பான அமைப்பு இருக்கு. அதன் மூலம், கடலுக்குள் ஒலி எழுப்பி, தொலைவில் உள்ள மற்ற திமிங்கிலங்களோடு தகவல்தொடர்பு ஏற்படுத்திக்கும். இனப்பெருக்க காலத்தில், ஆண் திமிங்கிலங்கள் இசையைப் போல ஒலி எழுப்பி, பெண் திமிங்கிலங்களைக் கவர்ந்து வரவைக்கும். பெண் திமிங்கிலங்களின் கர்ப்ப காலம், அதன் வகையைப் பொருத்து 12 முதல் 17 மாதங்கள். இப்போ, ஒரு தாய்த் திமிங்கிலம் குட்டியை ஈனும் காட்சியைப் பார்க்கலாம். ரொம்ப நெகிழ்ச்சியா, சென்டிமென்ட் நிறைஞ்சதா இருக்கும்” என்றார் டீச்சர்.

மந்திரக் கம்பளம், நீர்மூழ்கிக் கப்பல் போல கடலின் ஆழத்துக்குச் சென்றது. ஒரு பெரிய திமிங்கிலத்தைச் சுற்றி இன்னும் சில திமிங்கிலங்கள் இருந்தன.

“நடுவில் இருக்கிற பெண் திமிங்கிலத்துக்கு குட்டி பிறக்கப்போகுது. இந்தச் சமயத்தில், செவிலித் தாய் மாதிரி நிறையப் பெண் திமிங்கிலங்கள் உதவிக்கு வந்துடும். குட்டி பிறந்ததுமே செவிலித் திமிங்கிலங்கள், கடல் பரப்புக்கு மேலே அதைத் தூக்கிட்டுப்போய் முதல் சுவாசத்தை ஏற்படுத்தும். அந்த முதல் சுவாசத்தை வாங்கியதுமே, குட்டித் திமிங்கிலம் நீந்த ஆரம்பிச்சுடும். கடலின் ஆழத்துக்குப் போய், தன் அம்மாவிடம் பால் குடிக்கும்” என்றார் டீச்சர்.

மாயா டீச்சரின் மந்திரக் கம்பளம்!

அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, நடுவில் இருந்த திமிங்கிலம் குட்டியை ஈன்றது. மூன்று திமிங்கிலங்கள் பாதுகாப்பாக மேலே தூக்கிச்சென்றன.

“ஒரு குட்டிதான் போடுமா டீச்சர்?” என்று கேட்டான் அருண்.

“ஆமா... மூன்று, நான்கு வருடங்களுக்கு ஒரு முறை  குட்டி பிறக்கிறதால, மற்ற மீன்களைவிட திமிங்கிலங்களின் இனப்பெருக்க வேகம் குறைவுதான். மனிதர்களும் அடிக்கடி வேட்டையாடுவதால், இவற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைஞ்சுட்டே வருது.  திமிங்கிலங்களில் இருந்து எடுக்கும் கொழுப்பு எண்ணெய் பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. 

திமிங்கிலங்களைப் பிடிக்க நிறையக் கட்டுபாடுகள் போடப்பட்டிருக்கு. சில வகைத் திமிங்கிலங்களைப் பிடிக்கக் கூடாதுனு தடையும் இருக்கு. ஆனாலும் மறைமுகமாகத் திமிங்கில வேட்டை நடந்துட்டுதான் இருக்கு. இந்த நிலை மாறணும். இல்லைனா, வருங்காலத்தி்ல் திமிங்கில இனமே அழிஞ்சுடும்” என்றார் டீச்சர்.

அவர்களை, மந்திரக் கம்பளம் மீண்டும் கோயில் குளக்கரைக்கு அழைத்துவந்து இறக்கியது.