ஆயிஷா.இரா.நடராசன் படங்கள் : பாரதிராஜா
காரல் என்று தனது சகோதரிகளால் அழைக்கப்பட்ட அந்தச் சுட்டிப் பையனுக்கு, அப்போது நான்கு வயது. காரலின் தந்தை ஹென்ரிச் மார்க்ஸ், ஒரு வழக்கறிஞர். காரலுக்கு மொத்தம் ஆறு சகோதரிகள்.
காரல், பெரும்பாலும் தாத்தாவோடு இருப்பான். தாத்தா, யூதர்கள் வழிபடும் சைனகாக் தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து ஓய்வு பெற்றவர். பரம்பரையாகச் செய்துவரும் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்த காரலின் அப்பா, மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார்.

காரலின் நான்காவது பிறந்தநாளை, யூதர் ஆலயத்தில் கொண்டாட தாத்தா திட்டமிட்டிருந்தார். அப்பாவோ, தனது பாணியில் கொண்டாட நண்பர்களை வீட்டுக்கு அழைத்திருந்தார். ஆனால், காரலை எங்கே தேடியும் காணவில்லை. சில மணி நேரங்கள் கழித்து, நான்கு தெருக்கள் தள்ளி, வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகளுடன் நட்போடு பேசிக்கொண்டே, அவர்களின் வேலையில் உதவிக்கொண்டிருந்த காரலைக் கண்டுபிடித்தார்கள்.
சாலைப் பணியாளர்கள், கட்டட வேலை செய்பவர்கள் எனப் பலவகைத் தொழிலாளர்களிடம் பேசுவதை காரல், இயல்பாக வளர்த்துக்கொண்டான். கடை வியாபாரிகள், உதவியாளர்கள் எனப் பலரிடம் நட்புக் கொண்டான். மகன் மீது உயிரையே வைத்திருந்த அவன் அம்மா, அவனை வெளியே போகவிடாமல் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள நினைப்பார். ஆனால், எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் காரல், அம்மாவை ஏமாற்றிவிட்டு வெளியே சென்றுவிடுவான்.
காரல், அப்படி என்னதான் செய்கிறான் என்று தெரிந்துகொள்ள, அம்மா அவனைக் கண்காணித்தார். காரல், முதிர்ந்த தொழிலாளர் சிலருடன் மதம், சமூகம் பற்றி விவாதிப்பதைக் கண்டு வியந்துபோனார்.
காரலின் தந்தை, தன் மகனை வீட்டிலேயே கல்வி கற்கவைத்தார். அப்பாவின் வழக்கு மேஜையைச் சுற்றி இருக்கும் புத்தகங்களால் கவரப்பட்டான். அவற்றைப் படிக்க ஆரம்பித்தான். எப்போதும் புத்தகங்களுடனே இருப்பான்.

சிறு வயதிலிருந்தே காரலுக்கு அடிக்கடி நெஞ்சு வலி ஏற்படும். அதனால், அவனை மிகுந்த தயக்கத்துடனே பள்ளியில் சேர்த்தனர். டிரையர் ஹைஸ் ஸ்கூலில் படித்தான். அங்கே, மாணவர்களோடு ஆசிரியர்களையும் அவன் புத்தக விரும்பிகளாக மாற்றினான்.
அப்போது, லூயி மன்னரின் ஆட்சிக்குக் கீழே ஜெர்மனி இருந்தது. பள்ளியில் கவிஞர்கள் சங்கம் ஒன்றை காரல் அமைத்தான். மாணவர்களும் ஆசிரியர்களும் எழுச்சிக் கீதங்களை உருவாக்கினார்கள். இதை அறிந்த காவல் துறை, மன்னருக்கு எதிராக சதி செய்வதாக, பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டது.
காரலும் பள்ளித் தலைமை ஆசிரியரும் காவல் துறையை எதிர்த்தனர். இலக்கியமும் தத்துவமும் பகிர்ந்துகொள்ளப்படும் பள்ளிக்கூட மாணவர் அமைப்பைத் தடுக்க முடியாது என அமைதிவழியில் வாதிட்டார்கள்.
மற்றவர்கள், 19 வயதில் பல்கலைக்கழகம் சென்ற போது, காரல் தனது 16 வயதிலேயே பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் இலக்கியம் கற்கத் தேர்வுபெற்றான்.
காரல், பல்வேறு தத்துவ சாரங்களைக் கரைத்துக் குடித்து, பின்னாளில் ‘மூலதனம்’ என்ற நூலை எழுதி, உலகுக்கே சோஷலிஸத் தத்துவத்தை முன்மொழிந்த காரல் மார்க்ஸாக உயர்ந்து நின்றார்.